எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் – நூல் அறிமுகம்
“சூழலியலையும், சூழலியல் தரும் வாழ்வியலையும் அனுபவித்து உணர்ந்தவர்களே மகிழ்ச்சியான மனிதர்கள்!”
புழு பூச்சிகளை கண்டதுமே ஒரு வித அருவருப்பும் பயமும் ஏதோ காணக்கூடாத ஒன்றை கண்டது போன்ற உணர்வும் நம்மில் பலருக்கு தோன்றும். இன்னும் சிலரோ அதனை அடித்துக் கொள்ளாமல் விடமாட்டார்கள். ஆனால் சூழலியல் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் அவர்களுடைய இந்த “எனைத் தேடி வந்த சிற்றுயிர்” என்ற நூலை ஒருமுறை வாசித்து விட்டீர்கள் எனில் எந்த பூச்சிகளையும் கண்டு அருவருப்பும் பயமும் தோன்றாது. அடித்துக் கொள்ளவும் மாட்டோம். மாறாக பூச்சிகளின் அருகில் அமர்ந்து அதனை கூர்ந்துக் கவனிப்போம்! அதன் அழகை ரசிப்போம்! ஏன்? கைப்பேசியை எடுத்துக் கொண்டு வித விதமாக புகைப்படம் எடுக்க தொடங்கி விடுவோம்.
நம் வீடுகளில் தற்செயலாகவோ இல்லை தினமுமோ வந்து கொண்டிருக்கக் கூடிய பூச்சிகளை ஒரு உயிராகக் கூட நாம் நினைத்திருக்க மாட்டோம். ஆனால், இந்நூலின் ஆசிரியர் அவருடைய வீட்டில் மற்றும் பொது இடங்களில் கண்ட பூச்சிகளை அழகாக புகைப்படம் எடுத்து அதனைப் பற்றிய தகவல்களை தெரிந்துக் கொண்டு அழகிய நூலாக உருவாக்கியுள்ளார். இப்படி நம்மைச் சுற்றியிருக்கும் அழகானவற்றை கவனிக்காமல் விடுவதால் தான், தேவையில்லா சுமைகளை நம் தலையில் சுமந்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த இயற்கையை, இயற்கை கொடுத்த உயிர்களை ரசிக்கத் தொடங்கி விட்டோமெனில் இப்பூவுலகில் மகிழ்வாக வாழலாம்.
“ஓரிடத்தை அழகாகவும் உயிருள்ளதாகவும் மாற்றிவிடும் இயற்கை, கிடைக்கும் இண்டு இடுக்குகளில் கூட தலை காட்டவே முயற்சிக்கிறது. இயற்கையின் இத்தகைய பண்பு, இவ்வுலகில் கடினமான சூழலிலும் வாழ்வதற்கான வழிகளை நமக்கு சொல்லிக் கொடுக்கின்றது.”
பெரியது சிறியது, கருப்பு சிவப்பு என பலவகையான சிலந்திகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் அதன் பெயர், பண்புகளை நிச்சயமாக இதுவரை அறிந்திருக்க மாட்டோம். அப்படி ஒரு சிறிய அளவிலான தாவித்தாவி ஓடும் சிலந்தியை அனைவரும் வீடுகளில் பார்த்திருப்போம். பார்த்தாலும் கடந்து மட்டுமே சென்றிருப்போம். ஆனால் அது “குதிக்கும் சிலந்தி” எனவும், அந்த சிலந்தி வகை வலை பின்னுவதில்லை எனவும், சிறு சிறு பூச்சிகளை வேட்டையாடி உண்பதாகவும் அறிய பல தகவல்களை சேகரித்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.
மழைக்காலங்களில் சிறுசிறு கருப்பு நிற மரவட்டையை பார்த்தாலே அருவருப்பின் உச்சத்திற்கே சென்றுவிடுவர் சிலர். காரணம்? அதன் தோற்றம் மற்றும் அருகே சென்றதும் வெளிவரும் நாற்றம். அத்தகைய நாற்றத்திற்கு காரணம் மரவட்டை தன்னுடைய பாதுகாப்பிற்காக “ஹைட்ரஜன் சயனைடு” என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது. இன்று தென்னிந்தியாவெங்கும் மிக மிக சாதாரணமாக பரவலாக தென்பட்டாலும் அவை வட அமெரிக்காவின் பசுபிக் கடற்கரை பகுதியில் இருந்து நம் பகுதிக்கு பரவியது என்பது அரிதான தகவல்கள்.
நான், வெகு நாட்களாக அட்டைப்பூச்சி என்று நினைத்துக் கொண்டிருந்தது “ஓடு கழன்ற நத்தை” என்பதை இந்நூலை படித்து அறிந்துக் கொண்டேன். கூடுதல் சிறப்பாக இந்த ஓடு கழன்ற நத்தை (BLACK GARDEN SLUG) எங்கெல்லாம் காணப்படுகிறதோ அந்த பகுதி மோசமாக சீரழியாமலும், அதிக தொந்தரவு இல்லாத பகுதியாக இருப்பதையும் உறுதி செய்து கொள்ள முடியும்.
சிறுவயதில் ராஜா, ராணி, ராட்சசன் என பலவகையான தட்டான்கள் பார்த்திருந்தாலும் முழுவதும் நீல நிறத்தில் அழகான தோற்றத்தில் இருந்த தட்டானை இருபது வருடத்திற்கு மேலாகியும் எனது சுற்றுப்புறத்தில் மீண்டும் எங்கேயும் பார்க்கவே முடிவதில்லை. நான் ரசித்த அந்த நீலத் தட்டானை என் பிள்ளைகள் ஒரு முறை கூட பார்த்ததில்லை. எங்களைப் போன்று துரத்திப் பிடித்து விளையாடியதும் இல்லை என்ற வருத்தத்தை நினைவூட்டியது இந்நூலில் உள்ள ஊசி தட்டான், தேன் தட்டான் போன்றவைகள்.
முக்கால் சிலந்தி, குதிக்கும் சிலந்தி, தலையை திருப்பும் சிலந்தி, வலையில் சிக்காத சிலந்தி என வகை வகையான சிலந்திகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இரையை பிடிப்பதற்கு சிலந்தி வலைப்பின்னும், இருந்தாலும் அது மட்டும் எப்படி வலையில் சிக்காமல் செல்கிறது என்ற ஐயத்திற்கு விளக்கமாக அவை பின்னும் எல்லா இழைகளுமே ஒட்டக்கூடியவை அல்ல; இரைப்பிடிக்கும் இழை ஒட்டக்கூடியதாகவும், அதற்கு அடுத்த இழை சிலந்தி செல்வதற்கு உதவியாக ஒட்டாத இழையாக இருப்பதாகவும் இருப்பதால் சிலந்தி எப்பொழுதும் ஒட்டாத இழையிலேயே கால் வைத்து மிகவும் கவனமாக செல்லும் என்பது வியப்பிலும் வியப்பு.
மேலும் பழுப்பு நிற வசீகரன், மயில் வசீகரன், மஞ்சள் புல் வெளியான், வயல்துள்ளி போன்ற வண்ணத்துப்பூச்சிகளின் அழகினை இயற்கையால் மட்டுமே வழங்க முடியும். அத்தகைய இயற்கை அளித்த புழு பூச்சிகளை அறிமுகப்படுத்தி பூச்சிகளைப் பற்றிய புரிதலையும், அவற்றை அழியாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தும் புத்தகமாக அமைந்துள்ளது.
அத்துடன் பூச்சிகள் மனித இனம் தோன்றுவதற்கு நாற்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. பூச்சி இனம் இல்லை என்றால் இந்த உலகில் மனித இனம் உயிர் வாழ முடியாது. இவ்வுலகில் ஒரு நபருக்கு இணையாக 140 கோடி பூச்சிகள் வாழ்கின்றன. நாம் உண்ணும் தாவர உணவு தொடங்கி கழிவுகளை மட்கச் செய்யும் வரை அனைத்திற்கும் பூச்சிகளே முதன்மையான காரணமாக இருக்கின்றன என்பவை விளக்கமாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே புழுக்களையும் பூச்சிகளையும் இந்நூலை வாசித்த யாவரும் இனி ரசிக்கத் தொடங்கி விடுவார்கள்.
சூழலியலில் முக்கிய அங்கமாக பரிணமிக்கும் பூச்சிகளையும் அதன் செயல்பாடுகளையும் கண்காணித்து, அதனை அழிவிலிருந்து காக்க நாமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
நூலின் தகவல்கள் :
நூல் : எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Enaith Thedi Vantha Sitruyirkal)
ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்
வெளியீடு : எதிர் வெளியீடு
விலை :ரூ. 180
பக்கங்கள் : 72
நூல் அறிமுகம் ஏழுதியவர் :
தீபா ராஜ்மோகன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

