எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 12 (Enakku Cinema Konjam Pidikkum) - பொழுதைக் கழித்திட மினர்வா தியேட்டர் போய் வருவோம்! | வீணை எஸ்.பாலசந்தர் (Veena S Balachander)

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 12 : பொழுதைக் கழித்திட மினர்வா தியேட்டர் போய் வருவோம்!

பொழுதைக் கழித்திட மினர்வா தியேட்டர் போய் வருவோம்!

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 12

– ராமச்சந்திர வைத்தியநாத்

தமிழ்த் திரைத்துறையில் கே. பாலசந்தருக்கு முன்னர் அதே பெயரைக் கொண்டிட்ட இன்னொருவர் அதகளம் செய்திருக்கிறார். அவர்தான் எஸ். பாலசந்தர். வீணை எஸ்.பாலசந்தர் என்றால் சட்டென்று பலருக்கும் புரிந்து விடும். திரைத்துறையில் கால்பதியும் முன்னர் இசைக் கலைஞராக புகழ்பெற்றிருந்தார். அவரது நாற்பத்தைந்து ராக ஆலாபனை நிகழ்வு இசைத்துறையில் புரட்சிகரமானதாகும். கிட்டத்தட்ட கலைக்குடும்பச் சூழலில் உருவான பாலசந்தர் பன்முகக் கலைஞராகவே பரிமளித்திருக்கிறார். அதே நேரத்தில் அதிகார பீடத்திற்கு எதிரான செயல்பாடுகளை கொண்டவராகவே தன் வாழ்நாள் முழுவதும் திகழ்ந்திருக்கிறார்.

எந்த ஒரு இசைக்கலைஞர் மட்டுமின்றி இசை விமரிசகர்களும் விமர்சிக்கத் தயங்குகின்ற சென்னை மியூசிக் அக்காதமிக்கு எதிராக அவர் போர்க்குரலை எழுப்பியிருக்கிறார். வாய்ப்ப்பாட்டு கலைஞர்களை மட்டுமே அது ஊக்குவிப்பதாகவும் இதர இசைத்துறைகளை புறக்கணிப்பதாகவும் குற்றஞ்சாட்டிய அவர் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் மறுத்திருப்பது ஆச்சரியமானதாகும். இசையின் பாரம்பரியத்தை பேணிக் காத்திடுவதில் அக்கறைமிக்கவராக செயற்பட்டதன் மூலம் பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கி இசைத் துறையின் பகிஷ்கரிப்புக்கு ஆளாகியிருக்கிறார். இசைக் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா தான் ஒரு ராகத்தை உருவாக்கியதாக சொல்லிக் கொண்டதையும் அதனை அக்காதமி அங்கீகரித்ததையும் எதிர்த்து வல்லுநர்கள் குழுவினை உருவாக்க நிர்ப்பந்தித்து அதன் வாயிலாக அக்கூற்றில் மெய்யில்லை என்பதை உலகிற்கு அறியச் செய்தவர் அவர். இதனை அடுத்து உருவானதுதான் சுவாதித் திருநாள் சர்ச்சையாகும்.

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 12 (Enakku Cinema Konjam Pidikkum) - பொழுதைக் கழித்திட மினர்வா தியேட்டர் போய் வருவோம்! | வீணை எஸ்.பாலசந்தர் (Veena S Balachander)
வீணை எஸ்.பாலசந்தர் (Veena S.Balachander)

திருவிதாங்கூர் மன்னர்களை போஷகர்களாகக் கொண்ட இசைக் கலைஞர் செம்மங்குடி சீனிவாசய்யர் அவர்கள் நேஷனல் புக் டிரஸ்டுக்காக சுவாதித் திருநாளின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருந்தார். சுவாதித் திருநாள் என்றொரு மன்னர் இல்லவே இல்லையென்றும் தஞ்சை சிவாநந்தம் சகோதரர்கள் இயற்றிய இசைப்பாடல்களே சுவாதித் திருநாள் பெயரில் வெளிவந்திருப்பதாகவும் வரலாற்றை செம்மங்குடியும் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆதரவில் இயங்கக்கூடிய சென்னை மியூசிக் அக்காதமியும் நேஷனல் புக் டிரஸ்டும் திருத்துவதாகவும் வீணை எஸ்.பாலசந்தர் கடுமையாக விமர்சித்ததோடு இதனை நீதி மன்றத்திற்கும் எடுத்துச் சென்றார். இதனால் சக இசைக் கலைஞர்களின் பரிகசிப்புக்கும் பகிஷ்கரிப்புக்கும் ஆளானார். ஆயினும் வரலாற்றை திருத்தலாகாது என்பதில் அவர் உறுதிபட இறுதி வரை நின்றார்.

இத்தகைய போராளி இது நிஜமா என்ற படந்தொடங்கி கைதி, பாடல்களே இடம் பெறாத அந்த நாள், எது நிஜம், அவன் அமரன், அவனா இவன், பொம்மை, நடு இரவில் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் இயக்குனர், திரைக்கதை, பாடல்கள், இசை போன்ற பொறுப்புகளை கொண்டிருக்கிறார். இப்படங்கள் யாவுமே வித்தியாசமான கதையமைப்புக்காகவும், இசைக்காகவும், இயக்கிய விதத்திற்காகவும் பாராட்டுகளைப் பெற்றதோடு வர்த்தக ரீதியாக வெற்றிப் படங்களாகவும் அமைந்திருந்தன.

ஆயின் இவை அனைத்துமே பல்வேறு ஆங்கில, ஜப்பானிய, பிரெஞ்சுப் படங்களைக் தழுவி குறிப்பாக ஹிட்ச்காக், குரசோவா போன்றோரின் படங்களிலிருந்து களவாடப்பட்டது. கதை மட்டுமின்றி பாடல் காட்சிகளும் இப்படித்தான் அமைந்திருந்தன. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த அந்த நாளில் கூட குரசோவாவின் கதையைத் தழுவியது என்று வரிகூட டைட்டில் கார்டில் காணப்படவில்லை.

ஒரு துறையில் வரலாற்றைத் திருத்துவதற்காக பெரும் இழப்பு ஏற்பட்ட நிலையில் போராட்டத்தை மேற்கொண்ட ஒருவர், தான் ஈடுபட்ட மற்றொன்றில் களவினையே அல்லது தழுவுவதையே தொழிலாக கொள்வது என்பது தமிழ் திரையுலகின் வரலாற்று வினோதங்களில் ஒன்று.

“விஜயன் இதோ பாரும்/ சோப்பு, சீப்பு, டூத் பேஸ்டு/ பவுடர், சேஃப்டி ரேசர், ஷேவிங் கிட்/டாம்கோ ஆயில், டாய்லெட் செட் எல்லாம் உங்களுக்குத்தான்/ ஷோல்டர் 16, பாடி சுற்றளவு 26, காலர் 18, நீளம் கரெக்ட் 38”. இது அவரது படத்தில் இடம் பெற்ற பாடல் வரியேதான். இதன் தலைப்பும் அவரது மற்றொரு பாடல் வரிதான். இவை யாவும் ஐம்பதுகளின் முற்பகுதியில் வெளிவந்தது என்பது நினைவு கூறத்தக்கது. உண்மையில் அவர்கள் ஒன்றும் மூடர் கூடமல்ல.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *