எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 22 (Enakku Cinema Konjam Pidikkum) - நிழல் யுத்தம் | தமிழ் திரைப்பட விமரிசனங்கள் | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 22: நிழல் யுத்தம் – ராமச்சந்திர வைத்தியநாத்

நிழல் யுத்தம் 

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 22

– ராமச்சந்திர வைத்தியநாத்

சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படத்தை சமூக ஊடகங்கள் போட்டுத் தள்ளிவிட்டதாக அதன் நாயகனின் மனைவி ஆதங்கப்பட்டிருந்தார். அப்படியெனில் படத்தின் வெற்றி தோல்வியில் விமரிசனங்களுக்கு பங்கிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஊடக விமரிசனங்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியும் என்பதை ஊடகவியலாளர்களே ஏற்கமாட்டார்கள். கிட்டத்தட்ட தேர்தல் கருத்துக் கணிப்புப் போன்றதுதான் இந்த விமரிசனங்களும். பெரும்பாலான விமரிசனங்கள் படத்தைவிட சுவாரசியமாகவும், அதற்கான முன்னோட்டமாகவும் அமைந்து விடுகின்றன. இன்னொரு பக்கம் விமரிசனங்களை குறிப்பாக நேர்மறையானவற்றை தினத்தந்தியில் முழுப்பக்க படவிளம்பரத்தில் பயன்படுத்துவதும் வழக்கமாக இருந்து வந்திருக்கின்றன.

மவுனப்படங்கள் “டாக்கி”யானவுடனேயே பெரும்பாலான தினசரி, வார, மாத இதழ்களில் திரை விமரிசனங்கள் துவங்கிவிட்டன. விமரிசனம் என்பதைக் காட்டிலும் விளம்பரம் என்ற அம்சமே அன்றைய தினம் மேலோங்கியிருந்திருக்கிறது. பிந்திய காலங்களில் விமரிசனங்கள் வெவ்வேறு ரூபத்தை எடுக்கத் துவங்கின. ஆனந்த விகடனில் படத்தின் தரத்தைப் பொறுத்து முனுசாமி-மாணிக்கம், சேகர்-சந்தர், சண்முகம் பிள்ளை-மீனாட்சி அம்மாள் ஆகியோரின் உரையாடல் வடிவில் விமரிசனங்கள் இருந்து வந்தன.

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 22 (Enakku Cinema Konjam Pidikkum) - நிழல் யுத்தம்  | தமிழ் திரைப்பட விமரிசனங்கள் | www.bookday.in

பின்னரே அவர்கள் பள்ளிக்கூட வாத்தியார்களாக மாறி மார்க் போடும் பழக்கத்தை துவக்கினர். சில பத்திரிகைகளில் நட்சத்திரங்களின் அடிப்படையில் அரை, கால், அரைக்கால், வீசம், மாகாணி என்றெல்லாம் மதிப்பிடுவது இன்றும் இருந்து வருகிறது. எண்பதுகளில் கல்கி, குமுதம் பத்திரிகைகளில் வெளியான விமரிசனங்கள் படத்தின் தராதரத்தை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் தங்களின் எழுத்துத் திறனை அறிவிக்கும் வழிமுறையாகவே இருந்து வந்தன. நீதிக்குப் பின் பாசம் படத்தை பாதிக்குப் பின் மோசம் என்றும், எல்லாப் படங்களிலும் சௌகார் ஜானகியை வைதவ்ய கோலத்தில் காட்டுகையில் மாறுபட்டு பார் மகளே பார் இருப்பதாக எழுதியதும் அவற்றின் ஒரு பகுதிதான். இதே காலங்களில் ஆங்கில பத்திரிகைகளில் வெளியான விமரிசனங்களும் கிட்டத்தட்ட இதே பாணியில்தான் இருந்து வந்திருக்கின்றன. ஹிந்துவில் ஜலக், எக்ஸ்பிரஸ்ஸில் மாலினி மன்னத், ஸ்போர்ட் அண்ட் பாஸ்டைமில் ராமச்சந்திரன் ஆகியோரின் விமரிசனங்கள் அந்தந்த பத்திரிகைகளின் வைதீக மனப்பாங்கினையே பிரதிபலித்தது என்றும் கூறலாம்.

எப்படிப் பார்த்தாலும் தமிழில் திரைவிமரிசனப் போரை நாற்பதுகளிலேயே துவக்கியவர் என்பது கல்கியையே சாரும். பிற்காலத்தில் தானும் திரைத்துறையில் இறங்குவோம் என்று கருதியிருப்பின் அவர் நிச்சயமாக வ.ரா கதை வசனம் எழுதி சங்கு சுப்பிரமணியம், என்.ராமரத்தினம் போன்ற முழுக்க முழுக்க தினமணி பத்திரிகையாளர்கள் சம்பந்தப்பட்ட ஸ்ரீராமானுஜர் படம் குறித்த தரந்தாழ்ந்த விமரிசனத்தை அவர் ஆனந்தவிகடனில் வெளியிட்டிருக்க மாட்டார். பி.யு.சின்னப்பா நடித்த மனோன்மணி, ஜெமினி தயாரிப்பில் வந்த மங்கம்மா சபதம், சம்சாரம், பக்த நந்தனார் போன்ற படங்களுக்கு பின்னாளில் அவர் கல்கி பத்திரிகையில் அதிரடியாகவே விமரிசனம் செய்திருந்தார்.

மங்கம்மா சபதத்தில் நாயகன் பெண்களுடன் பச்சைக்குதிரை விளையாடுவதை ஆபாசத்தின் எல்லை என்றும், சம்சாரத்தில் பிச்சை எடுக்கும் பொருட்டு அம்மா தன் குழந்தைகளுக்கு பாட்டு கற்றுக்கொடுப்பதை இனிமையாய் இருக்கிறது என்று பத்திரிகையொன்றில் எழுதப்பட்டிருப்பதை குறிப்பிட்டு இனிமையின் தலையில் இடி விழ என்றும் சீற்றத்துடன் எழுதியிருக்கிறார். பக்த நந்தனாரில் இடம் பெற்றுள்ள காட்சியை குறிப்பிட்டு ஓர் எலி பார்க்குமேயாகில் அதுகூட அவமானம் பொறுக்காமல் தற்கொலை செய்து கொண்டு சாகும் என்று சாடுகிறார். இன்றுவரை அந்த அளவில் எவரும் திரைவிமரிசனங்களை எழுதவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 22 (Enakku Cinema Konjam Pidikkum) - நிழல் யுத்தம்  | தமிழ் திரைப்பட விமரிசனங்கள் | www.bookday.in

ஆனந்தவிகடனில் அவர் தொடராக எழுதும்போதே படம்பிடிக்கப்பட்ட தியாக பூமி 1939ல் வெளிவந்தது. இன்றும் விடுதலைப் போர்க்களப் பின்னணியில் மாறுபட்ட படமாக கருதப்படும் தியாக பூமியை ஹிந்து, மெட்ராஸ் மெயில், இண்டியன் எக்ஸ்பிரஸ், தினமணி, சுதேசமித்திரன் மற்றுமுள்ள வாரப் பத்திரிகைகள் சினிமா சஞ்சிகைகள் ஒரு முகமாக சேர்ந்து எதிர்மறையாக விமரிசனம் செய்தது ஆச்சரியமளிக்கிறது. அத்தருணத்தில் மணிக்கொடி பத்திரிகை நின்றுவிட்டதனால் கல்கி ஓரளவிற்கு தலைதப்பினார் என்றுதான் சொல்ல வேண்டும். “பெரிய ஏமாற்றம்”, “மகா மோசம்”, “சகிக்க முடியவில்லை”, “பூர்வ ஜன்ம பாவத்தினால்தான் இந்த டாக்கியைப் பார்க்க நேர்ந்தது”, “விமரிசனம் எழுத வேண்டிய கடமை தலையில் சுமந்திராவிட்டால் பார்க்க வேண்டியதேயில்லை. பார்க்காமலே மோசம் என்று சொல்லிவிடலாம்” என்று இவை எழுதியிருப்பதாக கல்கியே குறிப்பிடுகிறார். நவசக்தியும். பாரதமணியும்கூட சுமாராக இருப்பதாகத்தான் எழுதியிருக்கின்றன.

பல்வேறு பத்திரிகைகளில் வெளியான தியாகபூமியின் விமரிசனங்களுக்கு பிரத்யேகமாக பதிலளிக்கும் வகையில் கல்கி நாலைந்து வாரங்கள் வரிந்து கட்டிக் கொண்டு ஆனந்தவிகடனில் எழுதியிருக்கிறார். ஃபிலிம் இந்தியாவில் பாபுராவ் பட்டேல் எழுதியது, பாம்பே கிராணிகல்லின் வெளிவந்தது ஆகியவற்றை எடுத்துவைத்து தான் சம்பந்தப்பட்ட படம் சிறப்பானது என்று நிறுவ முயற்சிக்கிறார். விமரிசனப் போரின் இறுதிக் கட்டுரையில் தியாக பூமி சம்பந்தமான கட்டுரைகள். கடிதங்களிலிருந்து சில முக்கியமான பகுதிகளைத் திரட்டி புஸ்தகமாக வெளியிட உத்தேசம் என்றும் இது இலக்கிய சம்பந்தமான விவாதங்களில் ருசியுள்ளவர்களுக்கு மிகவும் உபயோகமாயிருக்குமென்றும் நம்புவதாக எடுத்துரைத்து நிறைவு செய்கிறார்.

அவரது எதிர்பார்ப்பு அன்றைய தினம் நிறைவேறவில்லை. அறுபது வருடங்களுக்கு பின்னரே நிரந்தரமான ஸ்வரூபம் கிடைத்திருக்கிறது. தவிர அது அக்கப்போரேயொழிய இலக்கிய சம்பந்தமான விவாதமாகவும் இல்லை. இந்த அம்சம்தான் பெரும்பாலும் இன்றும் திரை விமரிசனமாக அச்சு ஊடகங்களிலாகட்டும் சமூக ஊடகங்களிலாகட்டும் தொடர்ந்து வருகிறது. அந்த அடிப்படையில் ஜோதிகாவின் ஆதங்கம் நியாயமானதுதான்.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *