யாதோன் கி பாராத்
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 26
– ராமச்சந்திர வைத்தியநாத்
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இந்தியை தேசிய மொழியாக்க வேண்டுமென்று தீவிரமாக செயல்பட்டவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்றால் சேத் கோவிந்ததாஸை குறிப்பிடாது இருக்க முடியாது. ஜபல்பூரிலிருந்து தொடர்ச்சியாக காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுவந்தவர் அவர். தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்கவிதத்தில் இந்திப் படங்கள் தயாரிக்கப்படுவதோடு, பெரியஅளவில் இந்திப்படங்கள் வெற்றி பெறுவதையும் சுட்டிக்காட்டிய அவர், அதே தருணத்தில் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாடு இருந்து வருவதைக் கண்டு வியந்திருக்கிறார். இதை பல்வேறு தருணங்களில் பாராட்டவும் அவர் தயங்கியதில்லை.
எண்பதுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டு தயாரிப்பாளர்களின் இந்தித் திரைப்படங்கள் என்பது முந்திய காலங்களைப் போல் அமைந்திடவில்லை. எனினும் அதே தருணத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு இந்தி திரைப்படங்கள் மட்டுமின்றி பிற இந்திய மொழிப்படங்களும் நேரடியாக மொழிமாற்றம் செய்யப்படாது வெற்றிகரமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தி திரைப்பட பாடல்களும் வெகு மக்களிடையே பெருத்த வரவேற்பினையும் பெற்று வந்திருக்கின்றன. அன்னாளில் மேரா நாம் ஜோக்கரில் இடம் பெற்ற “ஜீனா யஹான் மர்னா யஹான்”, ஆராதனாவில் இடம் பெற்ற “ரூப் தேரா மஸ்தானா” போன்ற பாடல்கள் தமிழ்நாடெங்கிலும் பரிச்சயமானவையாக இருந்தன.
மாகாணத்தில் தேசிய மொழியாக இந்தி ஊடுறுவுதை அனுமதிக்காத தமிழ்ச் சமூகம், பண்பாட்டுக் களத்தில் அதை மட்டுமின்றி இதர மொழிப்படங்களையும் பண்பாட்டியலின் இதர வடிவங்களையும் போற்றிக் கொண்டாடி வருவதை விந்தியத்திற்கு அப்பால் உள்ள மொழித்திணிப்பாளர்கள் மட்டுமின்றி அவர்களின் பொருட்டு இங்கே தங்கள் அடையாளங்களை இழந்தோரும் அறியத் தவறுகிறார்கள். பால் தாக்கரே அல்லது வாட்டல் நாகராஜ் போன்ற பேர்வழிகளுக்கு இங்கே எக்காலத்திலும் இடமளிக்கப்படவில்லை என்ற நிதரிசனத்தை அங்கீகரிக்க மறுத்த தமிழகத்தின் இணக்கமான சூழலை இவர்கள் எள்ளி நகையாடி வருகிறார்கள்.
மொழி இன பேதத்திற்கு அப்பாற்பட்டதாகவே தமிழ் திரையுலகு உருவானதோடன்றி, பிற மாகாணத்தவரை மட்டுமின்றி பிற தேசத்தவைரையுமே தன்பால் வசீகரித்து வந்திருப்பதும் பெருமைக்குரியது. என்.எஸ்.கிருஷ்ணனும், கே.சுப்ரமணியமும் இதில் மகத்தான பங்களிப்பினை கொண்டிருக்கின்றனர். இத்தகைய பாரம்பரியம்தான் பார்வையாளர்கள் மத்தியிலும் தொடர்ந்து வருகிறது.
அறுபதுகளுக்கு முன்னரே பெரும்பாலான சென்னை நகரத் திரையரங்குகளில் இந்திப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. பெரும்பாலான இந்திப்படங்களின் வெளியீட்டாளராக இருந்து வந்த ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் அலுவலகம் மவுண்ட் ரோடில் ராயலா வளாகத்தில் அமைந்திருந்தது. என்னாளும் திருவிழாக் கூட்டமாகவே அங்கிருப்பதை கண்டதுண்டு. அக்பரும், மதர் இந்தியாவும், கைடும் தமிழ்நாட்டில் பெரிதும் சிலாகிக்கப்பட்ட படங்களாகவே இருந்திருக்கின்றன. பீமல்ராய், சாந்தாராம், ராஜ்கபூர், திலீப்குமார், தேவ்ஆனந்த் போன்றோரின் படங்கள் பெருத்த வரவேற்பினை பெற்று வந்திருக்கின்றன. சக்தி சமந்தாவின் ஆராதனா திரைப்படம் சென்னை நகரில் புதிய வரலாற்றை உருவாக்கியது என்பது இப்போக்கின் தொடர்ச்சிதான்.

அடுத்த கட்டத்தில் கமால் அம்ரோஹி இயக்கிய மீனாகுமாரியின் பகீஸா, நசீர் ஹுசைனின் யாதோன் கி பாராத், சூரஜ் பர்ஜாத்யாவின் ஹம் ஆப்கே ஹைன் கௌன், ரமேஷ் சிப்பியின் ஷோலே போன்ற படங்கள் மிகுந்த வரவேற்பினை பெற்றிருக்கிறது. இந்திப் படங்கள் மட்டுமின்றி பிற இந்திய மொழிப் படங்களும் இங்கே வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன. நிர்மால்யம், செம்மீன், ஓடையில்நின்னு, துலாபாரம் போன்ற படங்களை மொழியை அறியாதவர்களும் ரசித்திருக்கின்றனர். சங்கராபரணம் மொழிமாற்றம் செய்யப்படாமல் சத்யம் திரையரங்கில் சாதனை படைத்தது. இத்தனைக்கும் பத்திருபது ஆண்டுகளுக்குப் பின்னரே விஸ்வநாத்தின் இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது என்ற செய்தி ஆச்சரிமளிக்கக்கூடியதாகும். இப்படத்தின் பாடல்கள் சாஸ்த்ரீய இசையில் பரிச்சயம் இல்லாதவர்களையும் அவற்றை ஏற்கச் செய்தது மொழி பேதத்திற்கு அப்பாற்பட்ட தமிழகத்தை இனங்காட்டியது.
ஒரு கட்டத்தில் இந்தி உள்ளிட்ட இந்திய மொழிப் படங்கள் பரவலாக சென்னையில் திரையிடப்பட்ட காலங்களில், தமிழ்ப் படங்கள் திரையிடப்படும் அரங்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்தன. இதனால் இங்கேயே தயாரிக்கப்படும் படங்களுக்கு அரங்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. அத்தருணத்தில்தான் ஒவ்வொரு அரங்கிலும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தமிழ்ப்படங்கள் திரையிடப்பட வேண்டும் எனும் ஆணை தமிழக அரசினால் பிறப்பிக்கப்பட்டது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
இந்திய திரைப்படங்களில் ஒப்பற்ற படங்களில் ஒன்றாக இன்றும் இருந்து வரக்கூடிய திரைப்படம் மதுமதி. பீமல்ராய் தயாரித்து இயக்கி திலீப் குமாரும் வைஜயந்திமாலாவும் பிரதான பாத்திரங்களில் நடித்த இப்படத்தில் ரித்விக் கடக், ராஜிந்தர் சிங் பேடி, ஹிரிகேஷ் முகர்ஜி, சலீல் சவுத்ரி போன்ற திரையுலகின் மிகப் பெரும் ஆளுமைகள் பங்கேற்பினை கொண்டிருந்தனர். பூர்வ ஜென்மம் குறித்த கதையாக இருப்பினும் சலீல் சவுத்ரியின் இசை இதை மகத்தான வெற்றிப்படமாக்கியது. முகேஷ் பாடிய “சுஹானா சபர்” எனும் பாடலையும் லதா பாடிய “ஆஜா ரே பர்தேசி” எனும் பாடலையும் இன்றும் எவராலும் கேட்க முடியும். (பின்னாளில் கதையம்சத்துடன் இசைக்காகவும் பெரிதும் சிலாகிக்கப்பட்ட செம்மீனுக்கு இசைக்கோர்வையை அளித்தவர் இதே சலீல் சவுத்ரிதான். வாயலாரின் “மானச மையின் வரு/மதுரம் நுல்லி தரு” என்ற முகேஷ் பாடியதை லேசில் மறந்துவிட முடியாது.) இதே மதுமதி 25 வாரங்களுக்கு மேலாக ராஜகுமாரி அரங்கில் ஓடியிருக்கிறது.
இன்றும் ஆராதனாதான் அதிக காலம் சென்னையில் ஓடிய படமாக பலரும் கருதக்கூடும், ஆயின் வெள்ளி விழாவைக் கடந்து மதுமதி திரைப்படம் ஓடியதென்பது சாதாரணமானதல்ல. சுதந்திர இந்தியாவின் நிலப்பிரச்னை குறித்து இதே பீமல்ராய் பால்ராஜ் சஹானி, நிருபமா ராய் நடிப்பில் தோ பீகா ஸமீன் என்றொரு படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். இத்திரைப்படமும் 53ல் இதே ராஜகுமாரி அரங்கில் ஆறேழு வாரங்களுக்கு மேலாக திரையிடப்பட்டிருக்கிறது. 50களின் இறுதியில் தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக மக்களின் எழுச்சி பெரிய அளவில் இருந்தது. ஒரு கொந்தளிப்பான சூழல் மாகாணமெங்கிலும் நிலவி வந்தது. அத்தருணத்தில் 59களின் துவக்கத்தில் இப்படம் 25வாரங்களைக் கடந்துள்ளது என்பது தமிழ்நாட்டின் ஆணிவேராய் இருந்துவரும் மொழி இன நல்லிணக்கத்தின் அடையாளமாகும்.
எழுதியவர் :
ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
