பெயர் மட்டும் முக்கியமல்ல!
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 27
– ராமச்சந்திர வைத்தியநாத்
எழுத்தாளர் சாவியின் சிறப்பான புதினங்களில் ஒன்றான வாஷிங்டனில் திருமணத்தில் இசை நிகழ்ச்சியை அரியக்குடி- லால்குடி-பாலக்காடு நடத்தவிருப்பதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருக்கும். பெயரினைக் காட்டிலும் ஊர் பெயரின் அடிப்படையில் கர்நாடக இசைக் கலைஞர்களை அழைப்பது காலங்காலமாக வழக்கமாக இருந்து வந்ததன் தொடர்ச்சி அது. அத்துறைக் கலைஞர்களுக்கு அவரவர் ஊர்களே அடையாளமாக இருந்து வருவதோடு அடைமொழியாக இருப்பதும் இன்னமும் தொடர்கிறது.
இன்னும் செம்மங்குடி, உமையாள்புரம், சூலமங்கலம், நாமகிரிப்பேட்டை, திருவாடுதுறை என்பதைக் கடந்து மதுரை மணி அய்யர், சீர்காழி கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன், உமையாள்புரம் சிவராமன், மாவேலிக்கரை கிருஷ்ணன் குட்டி நாயர், கத்ரி கோபால்நாத் போன்று பெரும் எண்ணிக்கையிலான கலைஞர்கள் ஊர்ப் பெயருடன் சேர்த்தும் அழைக்கப்பட்டு வருகிறார்கள். இதன் தொடர்ச்சிதான் பின்னர் தமிழ்த்திரையுலகிலும் வெளிப்பட்டது.
என்னதான் பிரிட்டிஷ் ஹாலிவுட் படங்களின் பாதிப்பில் நமது பாதை அமைந்திருந்த போதிலும் இந்த அடைமொழி என்பது தமிழ் நாட்டிற்கே உரியதொரு அம்சமாகிவிட்டது. முன் குறிப்பிட்ட ஊர்ப் பெயர்களைத் தவிர்த்து வெவ்வேறு அலங்காரமான பட்டப் பெயர்களும் வேறு அடையாளப் பெயர்களும் பல்வேறு கலைஞர்களின் பெயருக்கு முன்னே பயன்படுத்தப்பட்டு வருவது வேறு எந்த இந்திய மொழித் திரையுலகிலும் இல்லாத தனித்துவம் வாய்ந்த பண்பாகும். திரைப்படங்களைப் போன்றே தமிழ் நாடக உலகிலும் இத்தகைய அடைமொழி அடையாளம் மிகவும் பரவலாக இருந்து வருகிறது.
அவரவர் ஊர், புகழ் பெற்ற நாடகப் பாத்திரம், பேசிய வசனம் போன்றவற்றின் அடிப்படையில் கலைஞர்கள் அழைக்கப்பட்டு வருகிறார்கள். தோட்டக்கார விஸ்வநாதன், சாம்பு நடராஜன், கிரேசி மோகன், அடாடா மனோகர், டைப்பிஸ்ட் கோபு மேனேஜர் சீனா, கரூர் ரங்கராஜன், மணக்கால் மணி, போன்றோர் இவ்வரிசையில் வந்தவர்களாவர். தமிழ்த் திரையுலகின் துவக்ககால பாடலாசிரியரான பாபநாசம் சிவனில் துவங்கி உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமைய்யாதாஸ், கொத்தமங்கலம் சுப்பு, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், உளுந்தூர்பேட்டை சண்முகம், குருவிக்கரம்பை சண்முகம், அவிநாசி மணி, ஆலங்குடி சோமு போன்றோர் ஊர்ப்பெயருடன் புகழ்வாய்ந்தவராக விளங்கினர்.
கதை வசன கர்த்தாக்களில் ஆரூர்தாஸ், துறையூர் மூர்த்தி, காரைக்குடி நாராயணன் ஆகியோர் பற்றி குறிப்பிடத் தேவையில்லை. இவ்வரிசையில் தனது வெற்றிப் படத்தை முன்னொட்டாக கொண்டு வியட்நாம் வீடு சுந்தரம் விளங்குகிறார். நாற்பதுகளிலிருந்து இன்று வரை ஏராளமான நடிகர்கள் இத்தகைய அடையாளங்களோடு இருந்து வந்திருக்கின்றனர். இவ்வரிசையில் ஆழ்வார் குப்புசாமி, ஜாவர் சீதாராமன், காக்கா ராதாக்ருஷ்ணன், டணால் தங்கவேலு, சாண்டோ சின்னப்பா தேவர், மேஜர் சுந்தரராஜன், என்னெத்த கன்னையா, ஐயா தெரியாதையா ராமாராவ், கல்லாப்பெட்டி சிங்காரம், தேங்காய் சீனிவாசன், தயிர்வடை தேசிகன், பக்கோடா காதர், போண்டா மணி, கொடுக்காப்புளி செல்வராஜ், இடிச்சபுளி செல்வராஜ், ஓமக்குச்சி நரசிம்மன், சிசர் மனோகர், பயில்வான் ரங்கனாதன், பரோட்டா சூரி, நல்லெண்ணை சித்ரா, அச்சச்சோ சித்ரா, படாஃபட் ஜெயலட்சுமி, சிலுக்கு ஸ்மிதா, குட்டி பத்மினி, சித்ராலயா கோபு போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். பின்னாளில் வெறும் நாகேஷாக பவனி வந்தாலும் துவக்க காலங்களில் டைடில் கார்டில் தாய் நாகேஷ் என்றே காணமுடியும்.
இதே போன்று ஊர்ப் பெயரின் அடிப்படையில் டில்லி கணேஷ், உசிலை மணி, கரிக்கோல் ராஜு, கோவை செந்தில், கோவை சரளா போன்றோர் புகழ் வாய்ந்தவர்களாக இருந்து வருகின்றனர். தவிர அவரவர்களின் அறிமுகப் படத்தின் அடிப்படையில் சௌகார் ஜானகி, குலதெய்வம் ராஜகோபால், ஒரு விரல் கிருஷ்ணா ராவ், நிழல்கள் ரவி, பசி சத்யா, வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோரும் அழைக்கப்பட்டு வந்திருக்கின்றனர். புகழ்பெற்ற கோரியோகிராபர் புலியூர் சரோஜாவை அறிந்திடாத இத்தலைமுறையினர் இருக்க முடியாது.
துவக்ககாலத்தில் இதே போன்று வழுவூர் ராமையா பிள்ளை அந்நாளில் புகழ் பெற்ற நட்சத்திரங்களின் நடன ஆசிரியராக இருந்திருக்கிறார். திருவாரூர் தாஸ், ஸ்டண்ட் சோமு, ஜூடோ ரத்னம், சூப்பர் சுப்பராயன், ராக்கி ராஜேஷ், விக்ரம் தர்மா போன்ற சண்டைக் காட்சிகளை வடிவமைப்போருக்கு இசைக் கலைஞர்களைப் போன்று அடைமொழி அவசியமான அடையாளமாக உள்ளது. இது தவிர புரட்சி நடிகர், புரட்சிக் கலைஞர், நடிகர் திலகம், நடிகையர் திலகம், அபிநய சரஸ்வதி, உலக நாயகன், நவரச நாயகன், சூப்பர் ஸ்டார், சூப்ரீம் ஸ்டார், என்ற பட்டப் பெயர்களும் பரவலாக இருந்து வருகின்றன. இது தவிர தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த கலைஞர்களாக விளங்கிய இரு கணேசன்களும் முன்னடையின் அடிப்படையில்தான் அடையாளப்படுத்தப்பட்டனர் என்பது இதன் உச்சமாகும்.
எழுதியவர் :
ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

