என்னதான் முடிவு?
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 27
– ராமச்சந்திர வைத்தியநாத்
மவுனப்படங்களிலிருந்து படங்கள் பேசுத்துவங்கியதும் புராண இதிகாச கதைகளே துவக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சமகால இலக்கியத்தை படமாக்குவது என்பது தமிழ் திரையுலகில் 1930களின் மத்தியில்தான் துவங்கியிருக்கிறது. வடுவூர் துரைசாமி அய்யங்காரின் புதினம் மேனகா என்ற பெயரிலும், அதே காலத்தில் ஜே.ஆர்.ரங்கராஜூவின் புதினம் ராஜாம்பாள் என்ற பெயரிலும் திரைப்படமாக வெளிவந்திருக்கின்றன.

ராஜா சாண்டோவின் இயக்கத்தில் வெளிவந்த மேனகாதான் தமிழின் முதல் சமூகப் படம் என்றும் சொல்லப்படுகிறது. இதன் பின்னர் வை.மு.கோதைநாயகி அம்மாள், கல்கி, சுத்தானந்த பாரதியார், தேவன், அண்ணா துரை, ஆசைத்தம்பி, கருணாநிதி, மு.வ, ராகி ரங்கராஜன், லக்ஷ்மி, மகரிஷி, ஜெயகாந்தன், மணியன், கொத்தமங்கலம் சுப்பு, புஷ்பா தங்கதுரை, சுஜாதா, உமாசந்திரன், தாமரை மணாளன், அனுராதா ரமணன், சிவசங்கரி, டி செல்வராஜ், வாசந்தி, தங்கர் பச்சான், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, நாஞ்சில் நாடன், விந்தன், தேவன் போன்றோரின் பல படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன.
அதே போன்றுதான் சரத்சந்திர சாட்டர்ஜி, கேசவதேவ் போன்ற பிற இந்திய படைப்பாளிகள் மட்டுமின்றி டூமாஸ், ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ், பெர்னாட் ஷா, ஜேன் ஆஸ்டின் போன்ற மேலை இலக்கியகர்த்தாக்களின் படைப்புகள் பெயர் குறிப்பிடப்பட்டும் படாமலும் தமிழில் திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன. இதில் ஆச்சரியமானதொன்று டால்ஸ்டாயின் புகழ் பெற்ற புதினம் அன்னா கரீனா திரைப்படமாக தமிழில் வெளிவந்ததுதான். எம்.ஜி.ராமச்சந்திரனும் டி.ஆர்.ராஜகுமாரியும் நடித்த இப்படத்தை (பணமா பாசமா கேஎஸ்ஜி அல்ல) ஜெமினி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். தற்போது இப்படம் காணக்கிடைக்காத படப் பட்டியலில் இருந்து வருவது துக்ககரமானது.

இவை மட்டுமின்றி மேடையில் வெற்றி பெற்ற பல்வேறு நாடகங்களும் பின்னாளில் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன. பராசக்தி, மனோகரா, ரத்தக்கண்ணீர் போன்ற தமிழ் உரையாடலில் புதியதொரு பாதையை உருவாக்கிய படங்களெல்லாம் வெற்றி பெற்ற மேடை நாடகங்களே. சிவாஜி நாடக மன்றம், எம்ஜிஆர் நாடக மன்றம், ராகினி ரிக்ரியேஷன்ஸ், சேவா ஸ்டேஜ், டிகேஎஸ் நாடகக்குழு போன்ற தொழில் முறை நாடகக்குழுவின் படைப்புகள் மட்டுமின்றி விவேகா ஃபைன் ஆர்ட்ஸ், யுஏஏ, பூர்ணம் தியேட்டர்ஸ், கோமல் தியேட்டர்ஸ், கிரேசி குழுவினர் போன்ற குழுக்களின் நாடகங்களும் பின்னாளில் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன. பழமைக்கு எதிராக கச்சை கட்டி நின்று, பெண்கள்பால் அரவணைப்பினை கொண்டிருக்கும் விசுவின் பல்வேறு நாடகங்களும் இப்படித்தான் பின்னாளில் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன.
இருந்த போதிலும் இலக்கியப் படைப்பாளிகளின் படைப்புகளை படமாக்குவதில் தமிழ்த்திரையுலகு கேரளம், வங்கம், மஹாராஷ்டிரம் போன்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பின்னேதான் நாம் இருந்து வருகிறோம். இத்தனைக்கும் ஜனரஞ்சக படைப்பாளிகளுக்கும் இலக்கிய படைப்பாளிகளுக்கும் தமிழ்நாட்டில் பஞ்சமே கிடையாது.
தொடராக பல்வேறு கட்டங்களில் வெளியிடப்பட்டு மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினை பெற்ற நிலையில் திரைப்படமாக்குவதற்கு திரையுலகிற்கு ஆர்வம் இருந்த போதிலும் அவர்களுக்கே உரிய ஐயங்களும் தயக்கமும் மட்டுமின்றி இலக்கியம் குறித்த முழுமையான உள்வாங்கலின்மையும்தான் பொன்னியின் செல்வன் படமாக்கப்படுவதை எழுபது ஆண்டுகள் தள்ளிப் போட்டிருக்கிறது.
சிவசங்கரி, புதுமைப்பித்தன் போன்றோரின் இலக்கியப்படைப்புகளை திரைக்கேற்ப மாற்றங்களைச் செய்த மகேந்திரனின் திரைப்படங்கள் இன்றும் கதையம்சத்தில் பெரிதும் பேசப்படுவதாய் இருந்து வருகிறது. இந்த அம்சத்தில் தங்கர் பச்சான் பாய்ச்சல் பொருந்தியவராகத்தான் வெளிப்படுகிறார். சமீப காலங்களில் சந்திரகுமார், பூமணி போன்றோரின் படைப்புகளை வெற்றிமாறன் திரைப்படமாக்கியிருந்தார். வாசிப்பில் இருந்த வெக்கையை திரையில் உணரமுடியாத போதிலும் இவற்றை புதிய முயற்சியாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது. செல்லப்பாவின் வாடிவாசலையும் அவர் படமாக்கவிருக்கிறார் என்பது மகிழ்வுக்குரியது. அதே நேரத்தில் பயமும் மனசுக்குள் இருந்து வருகிறது.

பெரும் புதினங்களை ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் காட்சிப்படுத்துவது என்பது பயிற்சியினால் மட்டும் வந்து விடுவதில்லை. சத்யஜித் ராயும், மிருணாள் சென்னும் புகழ்பெற்ற சிறுகதைகள் மற்றும் புதினங்களின் அடிப்படையில், அவற்றின் கருவினை ஜீவனோடு தங்களின் திரைப்படங்களில் கையாண்டிருக்கின்றனர் என்பதை அவற்றை வாசிக்கையில்தான் உணர்ந்திட முடிகிறது. ராமு காரியத்தின் இயக்கத்தில் வெளிவந்த தகழியின் செம்மீனிலும், சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான கேசவதேவின் ஓடையில் நின்னு திரைப்படத்திலும் வாசிப்பு அனுபவத்தை மேன்மைப்படுத்தும் வகையில் காட்சிப் படுத்தல் அமைந்திருந்தது. தமிழில் பாவை விளக்கிலிருந்து பொன்னியின் செல்வன் வரையில் இதுவரை இத்தகைய அனுபவம் நிச்சயம் முழுமையாக கிடைத்ததில்லை. இனியாவது கிடைக்குமா?
எழுதியவர் :
ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

