எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 4
– ராமச்சந்திர வைத்தியநாத்
தேச விடுதலைக்குப் பின்னர் ஆகஸ்ட் பதினைந்தை சுதந்திர தினமாக கொண்டாடி வருவது நமது மரபில் கலந்து விட்டது. ஆயின் சிற்சில ஆண்டுகளாக அதற்கு முந்திய நாளை பிரிவினை துயர் தினமாக, தேச விடுதலையில் துரும்பளவு பங்கினைக்கூட கொண்டிராத இயக்கத்தவர் பின்பற்றி வருவது சந்தடியின்றி நிகழ்ந்து வருகிறது. பிரிவினைத் துயரில் ஏதோ ஒரு பகுதி மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக சித்தரிக்கும் முயற்சியே இது. தேசம் பாகிஸ்தான், இந்தியா என்று பிரிக்கப்பட்டு புதிய எல்லைக் கோடுகள் வகுக்கப்பட்டவுடன் இரு பகுதியிலும் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டதுதான் வரலாறு. பாகிஸ்தானிலிருந்து இந்தியர்கள் பெரும் எண்ணிக்கையில் இடம் பெயர்ந்ததைப் போன்று, இங்கிருந்தும் பாகிஸ்தானை நோக்கிய இடப் பெயர்வு பல்வேறு காரணங்களில் பேரில் அமைந்தது. ஆயினும் பெரும் பகுதி இஸ்லாமியர்கள் எங்கள் தாய் மண் இதுதான் என்று உறுதியுடன் இருந்தனர்.
அத்தருணத்தில் குடும்பத்திலிருந்து ஓரிருவர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்றாலோ அல்லது அங்கிருந்து இங்கு வந்தாலோ அவரது பெயரில் நிலம் நீச்சோ அல்லது வேறுவிதமான சொத்தோ இருப்பின் அது சட்டத்தின் வாயிலாக இடம் பெயர்ந்தவர் சொத்தாக தீர்மானிக்கப்பட்டு அரசால் ஏலம் விடப்பட்டது. இந்த மண்ணிலேயே தங்கிவிட்ட குடும்பத்தின் மற்றைய உறுப்பினர்கள் நிர்க்கதியாய் வீதிக்கு வந்தனர். இது இருபுறமும் நிகழ்ந்தது.
எல்லைக்கருகாமையில் மட்டும் இது நிகழ்ந்து விடவில்லை. தேசமெங்கிலும் பரவலாக இப்போக்கு இருந்தது.
சென்னை அண்ணா சாலையில் இருந்த கலீலி மாளிகைக்கு சொந்தக்காரராக இருந்த காசிம் கலீலி பாகிஸ்தான் சென்றபடியால் இடம் பெயர்ந்தோர் சொத்தாகி, அகர்சந்த் கைக்கு மாறியது. அம்மாளிகையில் இருந்த வசதிமிக்க ஏராளமான கலீலியின் குடும்பத்தினர் அனைத்தையும் இழந்து மீர்சாஹிப் பேட்டை, ராயப்பேட்டை போன்ற இடங்களில் குடிசைவாசிகளாக இருந்து வருவதை நேரிடையாக கண்டதுண்டு. இத்தகையோர் எதிர்கொண்ட பிரச்னையை சித்தரிக்கக்கூடிய படைப்புகளும், திரைப்படங்களும் ஏராளமாக இந்திய மொழிகளில் வெளிவந்திருக்கிறது. இவற்றில் ஒன்றுதான் கரம் ஹவா எனும் சத்யூவின் திரைப்படம்.

கூட்டுக் குடும்பத்தின் மூத்தவர் பாகிஸ்தானுக்குச் சென்றவுடன் மிச்சம் மீதியுள்ள மிர்சா குடும்பத்தினர் வெளியேறியவர் சொத்தாக அறிவிக்கப்பட்ட பாரம்பரியமிக்க ஹவேலியிலிருந்து நிர்ப்பந்தமாக வெளியேற வேண்டியிருக்கிறது. கண்டா முண்டா பொருட்கள் டோங்காவில் ஏற்றப்படுகையில் தேச ஒற்றுமைக்காக பேசி வந்த ஆசாத் படம் தலைகீழாக காட்சியளிப்பது நிலைமையை பளிச்சென்று உணர்த்துகிறது. காலங்காலமாக இஸ்லாமியர்கள் மேற்கொண்டு வந்த செருப்பு தயாரிக்கும் தொழில் மார்வாரிகளின் நுழைவிற்குப்பின் மாற்றத்திற்கு உள்ளாகிறது. கந்துவட்டிக்காரர் கூட இஸ்லாமியருக்கு கடன் தரத் தயங்குகின்றனர். எட்டணா வாடகைக்கு ஜட்கா ஓட்டியவன் தற்போது இரண்டு ரூபாய் கேட்கிறான். மிர்சாவின் டோங்கா யதேச்சையாக தக்காளி வண்டியில் மோதுகையில் மதக் கலவரம் வெடித்து ஊரே பற்றியெறிகிறது. ஏதாவது பேரம் பேசினால் பாகிஸ்தான் போகச் சொல்கிறார்கள். மிர்சாவின் மகன் வேலைக்கான நேர்காணலுக்குச் செல்கையில் அங்கும் பாகிஸ்தான் போகச் சொல்லி அறிவுரை பகிரப்படுகிறது. கூட்டுக்குடும்பத்தில் பத்துப் பதினைந்து பேர் சேர்ந்து உண்ட நிலை மாறி மூன்றே பேர்தான் மிஞ்சுகின்றனர். “நான் பிறந்த மண் இதுதான், வேறு எதுவும் தெரியாது, கிடையாது” என்று சொல்லிவந்த மிர்சா திக்கற்ற நிலையில் கராச்சி ரயிலைப் பிடிக்க டோங்காவில் புறப்படுகிறார்.
வேலையற்ற இளைஞர்கள் செம்பதாகையின் கீழ் “வேலை வாய்ப்பற்ற இளைஞனுக்கு மதமில்லை சாதியில்லை” என்ற கோரிக்கை முழக்கங்களை எழுப்பி அணி வகுத்துச் செல்கின்றனர். டோங்கா சற்றே நிற்கிறது. மகனின் தோளில் தட்டிய மிர்சா அதுதான் உன் பாதை என்று கூறுவதோடன்றி நில்லாமல் மனைவியிடம் சாவியைக் கொடுத்து வீட்டிற்கு திரும்பிச் செல் என்றபடி ஊர்வலத்தின் பின்னால் மெதுவாக நடந்து செல்கிறார். அவர்களின் பயணம் தொடர வேண்டியதை நம்பிக்கையுடன் உணர்த்துவதாக இருக்கிறது.
மக்கள் மனதில் இருக்கக்கூடிய சந்தேகத்தை ஊசலாட்டத்தை ஊக்குவிப்பதில்தான் மதவாத அரசியல் சக்திகள் வெற்றி பெற்று வந்திருக்கின்றன. இதற்கு எதிராக அனைத்து மக்களின் ஒன்றுபட்ட இயக்கம் மிக அவசியம் என்பதை நாசூக்காக அதுவே தீர்வாக கரம் ஹவா கூறுகிறது. தேச விடுதலைக்குப் பின்னர் அனல் காற்று வீசிய சூழலை சித்தரிக்கும் இப்படம் சூறைக்காற்று வீசும் இன்றைய தருணத்தில் பொருத்தப்பாடு மிக்கதாகவே இருந்து வருகிறது.
எழுதியவர் :
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

