எது தேசிய கீதம்?
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 5
– ராமச்சந்திர வைத்தியநாத்
ஜீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது என்று துவங்கும் வள்ளலார் பசியின் அவத்தையை விரிவாகவே எடுத்துரைக்கிறார். புத்தி கெடுகின்றது, கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது, காது கும்மென்று செவிடு படுகின்றது, நா உலர்ந்து வறளுகின்றது, நாசி குழைந்து அழல்கின்றது, தோல் மெலிந்து ஸ்மரணை கெடுக்கின்றது என்று விரிவாகவே எடுத்துரைக்கும் அவர் பசியின் இத்தனை அவத்தைகளும் ஜீவர்களுக்கெல்லாம் பொதுவாகவே இருக்கின்றது என்கிறார்.
இதுவே பச்சிளம் குழந்தைகளை பாதிக்கையில் விளைவு எப்படி இருக்கும் என்பதை யோசிக்கையில் திகைக்கச் செய்வதாகவே உள்ளது. இக்கருத்தின் பேரில்தான் பஞ்சமர் பள்ளிக்கு வரக்கூடிய ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் குடும்ப நிலைமையை கருத்தில் கொண்ட கர்னல் ஆல்காட் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அக்குடும்பத்தினருக்கு சமைப்பதற்கேற்ற தானியங்களை அவ்வப்போது வழங்குவதை துவக்கியிருக்கிறார். குழந்தைகளின் பசிப்பிணிக்கு எதிரான தமிழகத்தின் ஏன் இந்தியாவின் முதல் போர்க்குரல் இது என்று கூறினாலும் தப்பில்லை என்றே படுகிறது.
சமீப காலங்களில் வெளியிடப்பட்டு வரக்கூடிய உலகின் பசிப் பட்டியல் கவலை கொள்ளத்தக்கதாகவே இருந்து வருகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டசத்து குறைபாடு, உயரம், எடை மற்றும் இறப்பு விகிதத்தின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. சென்ற ஆண்டுத் தரவுகளின் அடிப்படையில் இந்தியா 121வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் யார் நமக்கு முன்னே அல்லது பின்னே என்பது முக்கியமல்ல. சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளுக்குப் பின்னரும் உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடுகளில் ஒன்றாக இருக்கக்கூடிய நிலையில் இத்தகைய அவலநிலை நீடிப்பது நாம் பெருமை கொள்ளத்தக்கதாக இல்லை.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16 உலக உணவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பசியை உலகிலிருந்து விரட்டுவதே இதன் அடிப்படை. ஆயின் 71 விழுக்காட்டு இந்தியர் நாள் தோறும் இரவு உணவின்றி பட்டினி கிடப்பதாகவும், இதனால் பட்டினிச் சாவு விகிதம் உயர்ந்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கிறது.
நடைமுறையில் வீதிகளிலும், சுற்றுலாத் தலங்களிலும், சர்வ மத வழிபாட்டு இடங்களைச் சுற்றிலும் மட்டுமின்றி போக்குவரத்து சந்திப்புகளிலும் ரயில் பயணத்திலும் அன்றாடம் பசியைத் தணித்திட குடும்பம் குடும்பமாய் மக்கள் கையேந்தி நிற்பதை கண்டு வருகிறோம். பசியும் பட்டினியும் நீடித்து வந்தாலும், விதேச விருந்தாளிகள் வந்தாலும் வராவிட்டாலும் பிச்சை எடுப்பவர்களை அகற்றுவதில்தான் அரசுகள் குறியாக உள்ளன.
ஒரு கட்டத்தில் திரைப்படமொன்றில் பசிக்குதே பிச்சையிடுங்கள் என்று கூறுவதை அல்லது பாடுவதை தவிர்த்திட அறிவுறுத்தப்பட்டது என்பது ஆச்சரியமளிக்ககூடியதாகவே இருக்கும். ஆம் தெலுங்கில் வெளியான சம்சாரம் எனும் திரைப்படத்தைத் தழுவி அதே பெயரில் ஜெமினி பிக்சர்ஸ் தயாரித்த திரைப்படத்தில் பிச்சை கேட்டு சிறுவனும் சிறுமியும் பாடும் பாட்டு அன்றைய தினம் பிரபலமாகியிருக்கிறது. பசிக் கொடுமையால் பிச்சை கேட்டு அலைவது நடைமுறை யதார்த்தமாக இருக்கையில் இப்பாடல் தேசத்திற்கு அவப் பெயரைத் தரக்கூடிய செயலாக பலரும் கருதி கண்டனம் செய்திருக்கின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கல்கி அவர்களும் இப்பாடலை கடுமையாக சாடியிருப்பதுதான். இனி இப்பாடலைக் காண்போம்.
அம்மா பசிக்குதே / தாயே பசிக்குதே / ஆண்டவன் எங்களை மறந்தது போல் / எங்களை நீ மறவாதே வேண்டியதெல்லாம் ஒரு பிடி சோறு / வெறும் சோறாகிலும் போதும். வீதியில் பிச்சை எடுக்கும் பச்சைக் குழந்தையை பாராய் / ஒரு பிடி சாதம் ஒரு பிடி அரிசி ஒரு முழம் கந்தை தாராய்
பாலும் பழமும் வேண்டாம் தாயே / பசிக்கு சோறு கிடைத்தால் போதும் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் எழுதப்பட்ட இப்பாடல் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் நடைமுறை சமூகத்தோடு பொருத்தப்பாடு மிக்கதாக இருக்கும் என்பது தெரியவில்லை.
எழுதியவர் :
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.