எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 6 | ஜெய் ஹிந்த்!
அரசுகள்தான் தேசங்களை உருவாக்குகிறதேயொழிய தேசங்கள் அரசுகளை உருவாக்குவதில்லை. முதலாவது உலகப் போருக்குப் பிந்திய காலத்தில் ஜனநாயகம், மதபீடங்கள், சோசலிசம், அமைதிவாதம், மனிதாபிமானம், சர்வதேசியம், போன்றவற்றுக்கு எதிராக மக்களை திரட்ட வேண்டிய அவசியம் அரசுகளுக்கு இருந்து வந்ததோடு ராணுவஞ்சார்ந்த உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய வலுவான சொற்கோவையுடன் கூடிய செயல்பாடும் தேவைப்பட்டது. அதுதான் தேசப்பற்றும், தேசியக் கொடியை வேகமாக ஆட்டுவதும். இது அவர்களே எதிர்பாராவண்ணம் புதிய மதமாக மாறியதோடன்றி மக்களை ஒன்றிணைக்கவும் செய்தது.
இப்பின்னணியில் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட மூன்றாவது உலக நாடுகளின் அரசுகள் தேசத்தின் மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றை அளிப்பதற்கு தரக்கூடிய முக்கியத்துவத்தை காட்டிலும் விடுதலை தினம், அரசமைப்பு தினம் போன்றவை வெகு விமரிசையாக கொண்டாடி மக்களிடையே தேசப்பற்றை அபரிமிதமாகவே அளித்து வருகிறது.
இந்த அடிப்படையில்தான் அண்டை அயல் நாடுகளோடு ஒரு பதற்றமான சூழலை நிரந்தரமாகவே வளர்ந்த நாடுகள் மட்டுமின்றி நம்மைப் போன்ற வளர்ந்து வரக்கூடிய நாடுகளும் கொண்டிருக்கின்றன. இது எதிர்ப்புகளை ஓரங்கட்டி, மக்களை தேசப்பற்று என்ற பெயரால் இறுகக்கட்டிவைப்பதோடு, யுத்த முஸ்தீபுகளின் வாயிலாக நிறுவனங்களும் கல்லாகட்ட வகைசெய்கிறது.

அறுபதுகளில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் மட்டுமின்றி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலும் மோதல் உருவானபோது இவற்றின் பாதிப்புகளை ஓரளவு நேரடியாக கண்டதுண்டு. மோதல் வேண்டாம் பேச்சு வார்த்தை வாயிலாக இவற்றுக்கு தீர்வு காணமுடியும் என்று சொன்னவர்கள் தேசத் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இவர்கள்தான் இதற்கு இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னரும் காலனிய ஆட்சியாளர்களால் தேச விரோதிகள் என்று முத்திரையிடப்பட்டு வாழ்நாளின் கணிசமான பகுதியை சிறையில் கழித்தவர்கள்.
ஏற்கனவே இரண்டாவது உலகப் போரின் போது அன்றைய பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பிரிட்டிஷ் மகாராணியின் புகழ்பாடி யுத்தப் பிரச்சாரப் படங்களை தயாரித்து தேசப்பற்றை அக்காலத்திலேயே அடிமை இந்தியர்களுக்கு ஊட்டிய அனுபவம் இந்திய திரையுலகிற்கு உண்டு. இப்பின்னணியில் நாட்டுப்பற்றை மக்களிடையே ஊக்குவிக்கும் பொருட்டு அன்றைய மாகாண முதல்வர் காமராஜர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தாதாமிராசியின் இயக்கத்தில் கண்ணதாசன் கதை வசனம் பாடல்களை எழுத இரத்தத்திலகம் எனும் படம் வெளிவந்தது. தேசப்பற்றை ஊக்குவிக்கும் இப்படத்தை பள்ளிக் குழந்தைகள் காணவேண்டும் என்பதற்காக இலவச காட்சியாக திரையிடப்பட்டது. சிவாஜி படத்தை தாண்டியதாக அது இல்லை என்பது மற்றொரு அம்சமாகும். இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு ஒரு முறை அண்டை அயலாருடன் மோதல் ஏற்பட்ட தருணங்களிலெல்லாம் விமானப்படையின் எஃப் 56 அல்லது புஷ்பக்கின் டேக் ஆஃப்க்கு முன்னரே திரைப்படங்களில் தேசியக் கொடியை ஆட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் வர்த்தக நலன்களும் அடங்கியுள்ளது என்பதை சொல்லாமலேயே நாம் அறிய முடியும்.

இதற்குப் பின் வெளியான தாயின் மடியில், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்றவை தேசப்பற்றுக்கு தமிழ்த்திரையுலகு அளித்த எளிய காணிக்கைளாகும். தொண்ணூறுகளில் குறிப்பாக கார்கில் யுத்தத்திற்குப் பின்னர் வேறுவகையிலான தேசப்பற்றுப் படங்கள் நிறையவே வந்து கொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் தீவிரவாதிகள், குண்டு வெடிப்பு, மாகாண அதிகாரிகளின் சர்வதேச எல்லைப் பிரவேசம் போன்றவற்றை மையமாக கொண்ட படங்கள் விஜயகாந்த், அர்ஜுன் போன்றவர்களின் சந்தை மதிப்பை வெகுவாய் உயர்த்தியிருக்கின்றன.
இஸ்லாமிய இந்து அதிகாரிகள் இணைந்து பயங்கரவாதத்தை முறியடிப்பதாககூட அர்ஜுன் படம் எடுத்திருப்பது ஆச்சரியமானது. பெரிதும் பேசப்படுகின்ற மணிரத்தினத்தின் படங்கள் சிறுபான்மை மக்கள் மீது கேள்விகளை எழுப்புவதாக இருந்து வருகிறது. தேசப்பற்றினை எடுத்துக்கூறும் இப்படங்கள் எதுவுமே போருக்கு எதிரான மக்கள் ஒற்றுமையை முன் வைத்ததில்லை. போர்க்கால மக்களின் அன்றாட பிரச்னைகளை பேசுவதில்லை. மாறாக வெற்று உணர்ச்சித் தூண்டலே இவற்றில் முழுமையாக அடங்கியுள்ளது.
முத்தம் தர ஏற்ற இடம்/ முகத்தில் எந்த இடம்/ கிச்சு கிச்சு மூட்ட எது ஏற்ற இடம்/ காதலுக்கு எது நல்ல உடை/ போன்ற நுணுக்கமான ராணுவம் சம்பந்தப்பட்ட ஐயங்களை கொண்டுள்ள உயர் காவல்துறை அதிகாரி பாலின வன்முறைக்கு ஆளாகும் பெண்ணுக்கு உதவியளித்திட ஓடோடிச் செல்லாது தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துவது கொடி அசைப்பின் உச்சகட்டமாகவே சொல்ல முடியும். கிட்டத்தட்ட இதேபோன்றதொரு காட்சி மணிரத்னம் படத்திலும் இடம் பெற்றிருந்தது. தாயகம் காத்திடுவது ஒரு பக்கம் இருப்பினும், தன்னலம் பேணிட இவர்கள் நம்மைத்தான் ஜெய் ஹிந்த் என்று முழங்கச் சொல்லுகிறார்கள்.
எழுதியவர் :
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

