எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் (Enakku Cinema Konjam Pidikkum) - 7 |  குனிய வேண்டியது யாரு ? - ராமச்சந்திர வைத்தியநாத் - https://bookday.in/

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 7| குனிய வேண்டியது யாரு ?- ராமச்சந்திர வைத்தியநாத்

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும்….7

குனிய வேண்டியது யாரு ?

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாய்மொழிக் கதைகள் காலங்காலமாய் இருந்து வருகிறது. இதில் காமரசம்மிக்க சரசசல்லாபக் கதைகள் மக்களிடையே அதீத வரவேற்பைப் பெற்றதாக இருந்து வருகிறது. இத்தாலியின் டெக்காமரான், அரேபியாவின் ஆயிரத்து ஓரு இரவுகள், நம் நாட்டின் விக்கிரமாதித்தன் கதைகள் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

இதிலும் ஒவ்வொரு பிராந்தியத்துக்கு தக்கபடி கதைகளில் நீக்கமும், சேர்க்கையும் இருந்து வருகிறது. எப்படியிருப்பினும் கற்பனை வளமிக்கதாய், மந்திர தந்திரங்கள் பாலுணர்வு சம்பந்தப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய இவை பெண்களை சிறுமைப்படுத்துவதை அடிப்படையாய் கொண்டிருப்பதை பளிச்சென்று அறிந்திடலாம். விக்கிரமாதித்தன் கதைகளில் இடம் பெற்றுள்ள கிளிமைனாக் கதையும், ஒன்பதாவது கதையான ஆட்டுக்கிடாக் கதையிலும் பெண் சிறுமைப்படுத்தப்படுவது உச்சநிலையில் அமைந்துள்ளது. இக்கதைகளைத் தவிர ஜகதலப் பிரதாபன், ஆரவல்லி சூரவல்லி போன்ற ரகக் கதைகளும் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.

பெண்ணடிமைத்தனம் நிலவிவந்த ஒரு சமூகத்தில் தோன்றிய இக்கதைகள் காலமாற்றத்திற்குப் பின்னரும் பெருமளவில் வாசிக்கப்பட்டு வருவதற்கு இதில் உள்ள பாலுணர்வுத் தூண்டலும் ஒரு காரணமாகும்.

எனவேதான் திரைப்படங்களின் துவக்க காலங்களில் இக்கதைகளின் பேரிலான தமிழ்ப் படங்கள் நிறையவே வெளிவந்திருப்பதோடு வெற்றிப் படங்களாகவும் இருந்திருக்கின்றன. புராண இதிகாச சரித்திரப்படங்களுக்கான மவுசு குறைந்து சமூகப் படங்கள் பெருமளவில் வரத் துவங்கிய சூழல் உருவானதும் பரணிலிருந்து தட்டி எடுக்கப்பட்ட சரச சல்லாபக் கதைகளின் அடிப்படையில் சமூகக் கதைப்படங்கள் பல வெளிவரத் தொடங்கின.

எப்படியிருந்தாலும் பெண்கள் தங்களின் தனித்துவமின்றி போகத்திற்கான பொருளாக கருதும் போக்கும், உயர்நிலையிலான ஆணாதிக்கமும் இவற்றில் உச்சஸ்தாயியில் இருந்தன. இவற்றில் ஒன்றுதான் தமிழகத்தின் பெரும் வெற்றிப்படங்களில் ஒன்றான சின்ன தம்பி, சின்னத் தம்பி அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்
ஜோதிடத்தின் அடிப்படையில் ஆண்வாடையின்றி தனது தங்கையை வளர்க்கக்கூடிய மூன்று சகோதரர்கள் பள்ளிக்குச் செல்வதிலிருந்து தடுக்கப்பட்டவனும் வெள்ளுடை அணிந்த (நல்ல வேளை மொட்டையடிக்கப்படவில்லை) ஒரு விததைத் தாயின் ரெண்டாங்கெட்டான் ஆனால் எசப்பாட்டு பாடக்கூடிய பையனை மட்டும் மாளிகைக்குள்ளே அனுமதிக்கிறார்கள்.

JioSaavn - Listen to New & Old Indian & English Songs. Anywhere, Anytime.

பிறந்த பெண் சிசுவை தூளியில் போட்டவுடனேயே, தூளியிலே ஆடவந்த வானத்து மின் விளக்கே / ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனைமுத்தே / தொட்டில் மேலே முத்து மாலை வண்ணப் / பூவா விளையாட / என்று அந்தப் பையன் நடன அசைவுகளுடன் தன் எசப்பாட்டைத் துவக்குகிறான். அவள் பூப்படைந்ததும், பூவடி அவ பொன்னடி / அதை தேடிப்போகும் தேனீ/ தேனடி அந்த திருவடி / அவ தேவலோக ராணி / என்று தொடர்கிறான்.

அடுத்த கட்டத்தில் அவர்கள் பூலோகம் எங்கிலும் ஊர்கோலத்துக்கு கிளம்பி, கற்பனையில் மெதந்து / கண்டதையும் ரசித்து / இதில் சுகம் காண்பதோடு/ நின்று விடவில்லை. தாலி என்பதன் பொருளை அறிந்திடாத, உலகந் தெரியாத சின்ன தம்பி தாலி கட்டுகிறான். தன் தங்கை ஆண்களை பார்ப்பது மட்டுமில்லை நினைப்பதே குற்றமென கருதும் சகோதரர்கள் சும்மா இருந்து விடுவார்களா?

இந்த நவீனத்துவம் வாய்ந்த நூற்றாண்டிலும் ஜோதிடத்தின் அடிப்படையில் பெண்ணை அந்தப்புரத்திற்குள் அடைத்து வைப்பது, அவளை பார்க்கக்கூடிய ஆண்களை மொட்டையடித்து அரை மீசையை சிரைப்பது, சின்ன தம்பியை பள்ளி செல்லாமல் தடுப்பது, ஆம்பிள்ளை காலைத் தொட்டு கும்பிடுவதோடு புருஷன் சாப்பிட்ட எச்சில் இலையில் பொண்டாட்டி சாப்பிடுவதை பெண்மையின் பெருமையாக போற்றுவது, விதவையெனில் வெள்ளுடை தரிக்க வேண்டும் என்று ஒரு சமூகத்தவர் பின்பற்றி வருவதை பொது விதியாக்கியதோடு அவள் மகனை தண்டிக்கும் பொருட்டு பெண்ணை பொதுவிடத்தில் கட்டிவைத்து அவளுக்கு பொட்டிட்டு பூவிட்டு வெள்ளுடையில் வண்ணக் கலவையை ஊற்றி இழிவு செய்வது, மாலைக் கண் நோய் பற்றி அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களைப் பரப்பியது போன்று பெண்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் தள்ளிச் செல்லும் அழுத்தமான காட்சிகள் பலவற்றை இயக்குனர் வாசு அள்ளித் தெளித்திருக்கிறார். இதன் பொருட்டு தலை குனிய வேண்டியது யார்?

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *