எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 8
இரும்புத் திரை
தமிழ்ப் படங்களுக்கு பெயர் சூட்டுவதில் சிக்கல் சென்ற நூற்றாண்டிலிருந்தே இருந்து காண முடிகிறது. ஒரே பெயரிலும் அதனை ஒத்திருக்கும் படங்களுக்கு இங்கே பஞ்சமில்லை. துவக்ககாலங்களில் சுபத்ரா பரிணயம், பாமா பரிணயம், கௌசல்யா பரிணயம், திரௌபதி வஸ்த்ராபஹரணம், சீதா பஹரணம் என்று மணிப்பிரவாள நடையில் பெயரிடப்பட்ட படங்கள் வெளியாகியிருக்கின்றன. இவையன்றி டேஞ்சர் சிக்னல், டூபான் குவின், சம்சார நௌகா, சௌ சௌ என்ற படங்களும் தமிழ்ப்பட ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றன. இப்போக்கு ஐம்பதுகள்வரை பரவலாக இருந்து வந்திருக்கிறது.
எழுபதுகளின் இறுதியில் தலைநகர் டில்லியில் பதின்பருவத்தில் உள்ள சகோதரி மற்றும் சகோதரனைக் கடத்திய இரு நபர்கள், சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு இருவரையும் கொலை செய்து புதரில் வீசிச் சென்றனர். எண்பதுகளின் துவக்கத்தில் வழக்கு முடிந்து இருவரும் தூக்கிலிடப்பட்டனர். அந்த நபர்களின் பெயர்தான் பில்லா, ரங்கா என்பது. தேசமே பரபரப்புடன் நோக்கிய வழக்கு மட்டுமல்ல, பதின்பருவ குழந்தைகளுக்கு நேர்ந்த கதியை கண்டு துயரத்தில் இருந்த நேரம். அத்தருணத்தில்தான் பில்லா, ரங்கா என்ற பெயரில் இரு தமிழ்ப் படங்கள் சுடச்சுட வெளியாகின. வழக்கு நடக்கும் போதே அவசர அவசரமாக பில்லா என்ற பெயரில் பாலாஜியின் திரைப்படம் வெளிவந்தது. இருவரையும் தூக்கிலிட்ட பின்னர் தேவர் பிலிம்ஸின் ரங்கா திரைப்படம் வெளியானது. இரண்டிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் நாயகனாக நடித்திருந்தார்.

பில்லா, ரங்கா என்ற பெயர் கொலையாளிகளுக்கு மட்டுமே உரியதல்ல. தேசத்தில் ஆயிரக்கணக்கானோர் இப்பெயர்களை கொண்டிருக்கையில் படங்களுக்கு அந்த அடிப்படையில் பெயர் சூட்டியதில் சர்ச்சைக்கிடமில்லை என்று பில்லா தயாரிப்பாளர் பாலாஜி அன்றைய தினம் மறுத்துரைத்தார். அதில் நியாயம் இருக்கலாம். ஆனால் பில்லா, ரங்கா என்போர் கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களாக தேசமே உறைந்து போன நிலையில் கண்டு வருகின்ற நேரத்தில் அப்பெயர்களை போற்றும் விதத்தில், அச்சூழலை தங்கள் கல்லாவை நிரப்பும் உத்தியாக கொள்கையில் அவர்களை என்னவென்று சொல்வது. இப்படங்கள் வெளியானபோதே நடிகர் ஜெயசங்கர் மட்டுமே இப்போக்கினை கண்டித்த ஞாபகம் உள்ளது. மற்றவர்கள் இதை பொருட்படுத்தவில்லை அல்லது வாய்ப்பு கிடைக்காதிருக்கலாம்.

அத்தோடு இக்கதை முடியவில்லை. இந்த நூற்றாண்டிலும் பில்லாவின் தொடர்ச்சியாக இரண்டு படங்கள் வெளிவந்திருக்கின்றன. இதில் அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமார் நடித்திருந்தார். இவரும் ரஜினியைப் போன்று சமூகப் பொறுப்புடன் செயல்பட்டு வருபவர் என்று ஊடகங்கள் விலாவாரியாக எழுதிவருகின்றன. அதே தருணத்தில் ரங்காவை ஏனோ விட்டு வைத்திருப்பதற்கு தமிழ்த் திரையுலகிற்கு நிச்சயம் நன்றி சொல்லதான் வேண்டும். ஆனால் இருவர் பெயரையும் இணைத்து “கேடி பில்லா, கில்லாடி ரங்கா” என்ற பெயரில் பாண்டியராஜ் திரைப்படமொன்றை இயக்கி வெளியிட்டார். இவரும் சமூகத்தின்பால் அக்கறை உள்ளவராக சித்தரிக்கப்பட்டு வருபவர்தான். ரஜினியின் படமொன்றிலே மீண்டும் இப்படங்கள் நினைவு கூறப்பட்டதுதான் மகா விசேஷமாகும். அதுவும் ஏவிஎம் தயாரிப்பில்.
“அவன் பில்லா ரங்கா பாஷாதான், இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான்” என்ற வாலி, அவர்களை உயர்த்திப் பிடிக்கையில் வக்ரத்தைத்தான் காண முடிந்தது.
இதே மாதிரி குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி படமெடுக்கும் போக்கு இங்கே நிறையவே இருந்து வருகிறது. தற்பொழுது “தக் லைஃப்” என்று பெயரில் படமொன்று வரவிருப்பதை சீரழிவின் உச்சமாகவே கொள்ளலாம். சீவலப்பேரி பாண்டி, மலையூர் மம்பட்டியான் போன்றவர்களை ராபின் ஹுட்களாக சித்தரித்து வருகிறார்கள். நல்லவேளை இன்னும் பாக்ஸர் வடிவேலு, அயோத்திக்குப்பம் வீரமணி, வியாசர்பாடி தொண்டைராஜ், ஆட்டோ சங்கர் என்றெல்லாம் படங்கள் வெளியாகாது புலியூரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் வடபழனியான்தான் தமிழ்ச் சமூகத்தை காத்துவருகிறார்.

முந்தைய காலங்களில் தமிழில் பெயரிடப்பட்ட படங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டதன் பேரில் தமிழில் பெயர் வைக்கப்பட்டு வந்தாலும் வேறுபல நோக்கங்களின் பேரில் வேற்று மொழியை பயன்படுத்துவதும் இருந்து வந்திருக்கிறது. வாக்வார்டர் கட்டிங், விஎஸ்ஓபி என்ற பெயரில் வெளி வந்த அச்சு அசலான தமிழ்ப் படங்களையும் நாம் கண்டிருக்கிறோம். எள்ளவும் சமூகப் பொறுப்பும் அக்கறையும் இல்லாதிருப்பதன் வெளிப்பாடே இத்தகைய செயல்பாடுகள். மேற்கத்திய படங்கள் என்றோ கைவிட்ட பாணியை இன்றைய தினம் நாம் இந்த அம்சத்தில் நெருக்கமாக கொண்டு வருவது ஆரோக்யமான திரையுலகையோ, சமூகத்தையோ உருவாக்குவதற்கு பயன்படாது என்பதை அவர்கள் அறியத் தவறுகின்றனர்.
இவற்றுக்கெல்லாம் முன்னதாக சென்ற நூற்றாண்டில் ஒரு வித்தியாசமான செயல்பாடும் இருந்து வந்திருப்பது யதேச்சையாக கண்ணில் பட்டது. தமிழ்ப்படங்களுக்கு ஆங்கில மொழி மாற்றம் செய்து ஆங்கிலப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதுதான் அது. செய்தவர்கள் புரட்சிதாசனோ, ஆதிநாராயணனோ அல்ல. வாழ்க்கை, கண்கள், இரும்புத்திரை போன்ற படங்களின் விளம்பரங்கள் ஜெமினி மற்றும் ஏவி எம் பட நிறுவனங்களின் திருகுதாளம் வேலையை வெளிப்படுத்துகின்றன. இவ்வழி தொடர்ந்திருக்குமாயின் சம்சாரம் அது மின்சாரத்தையும், மின்சாரக் கனவையும் எப்படி முழி பெயர்த்திருப்பார்கள்?
எழுதியவர் :
ராமச்சந்திர வைத்தியநாத்Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

