கண ஷத்ரு
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 9
உலகின் எந்தவொரு சமூகத்திலும் வழிபாட்டு முறைகளுக்கும் அவற்றையொட்டிய வழிமுறைகளுக்கும் பஞ்சமே இருக்காது. இவை அனைத்துமே அறிவியலுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்து வருவதுண்டு. காலங்காலமாய் இருந்து வரக்கூடிய பிரச்னைகளுக்கு மட்டுமின்றி, நோய் நொடி ஆகியவற்றுக்கான தீர்வும் இத்தகைய வழிபாட்டு முறையில்தான் இருக்கிறது என்று ஏராளமான மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் தெய்வத்தின் மீது அபரிமிதமான பற்றுறுதி கொண்ட பெரும்பாலானோர் நோய்க்கு தீர்வு காண நேராக ஆலயத்திற்கு செல்வதில்லை.
மாறாக நோய்க்கு தீர்வு கண்ட பின்னர் வேண்டுதலை நிறைவேற்றுவதாக உறுதி கொள்வதுதான் தற்போது வழக்கத்தில் இருந்து வருகிறது. இது சார்ந்த மூடப்பழக்க வழக்கங்களை அறிவியல் அடிப்படையில் அணுகி படிப்படியாக நவீனத்துவத்தின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்வதில்தான் சமூகத்தின் வெற்றியே அடங்கிக் கிடக்கிறது. பல்வேறு நோய்களினால் பீடிக்கப்பட்ட சமூகம் திக்கித்திணறுகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய ஆய்வுகளின் அடிப்படையில் வெகுஜன சமூகத்தையே கடந்த காலங்களில் பெரிதும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த பெரியம்மை, யானைக்கால், இளம்பிள்ளைவாதம், காசநோய், சமீபத்திய கொரோனா போன்றவற்றுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது என்பது இவை குறித்து வெகுவாக அறிந்திடாத அடுத்தடுத்த தலைமுறையினரிடத்தில் அறிவியல் அடிப்படையில் ஆழப் பதிந்திடவில்லை.

மற்றொரு புறத்தில் அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை பரப்புவதில் இன்றைய தினம் அரசும் ஊடகங்களும் முக்கியப் பங்கினை கொண்டு வருகிறது. டார்வினின் கோட்பாட்டினை பாடப்புத்தகத்திலிருந்து அகற்றுவதும், புராண இதிகாச கதைகளுக்கு அறிவியல் அடிப்படையில் விளக்கமளிப்பதும் இதன் ஒரு பகுதியே. காஞ்சி மடத்தின் அதிபதியாக இருந்த சந்திரசேகரர் உயிரோடு இருக்கும் போதே அவரது உரையாடல் தெய்வத்தின் குரலாக தொகுக்கப்பட்டதை நாம் அறிவோம்.
இன்றைய தினம் அவரையும் இன்னும் பலரையும் கடவுளாக சித்தரித்து உண்மைக்கு மாறான கட்டுக் கதைகளை பல்வேறு ஊடகங்கள் உற்பத்தி செய்து வருகிறது. இவை மரபினை மேன்மை படுத்துவதாக தோன்றினாலும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு சமூகத்தை பின்னுக்கு தள்ளக்கூடிய செயல்களே. இவற்றின் ஒரு பகுதியாக இதிகாச புராண கதைகளை திரைப்படமாக்குவதைக் கடந்து பக்திப் படம் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை பரவலாக தூவிடும் இத்தகைய கட்டுக் கதைகள் ஏராளமாக வந்து கொண்டு இருக்கின்றன. இவற்றில் ஒன்று மட்டுமல்ல முக்கியத்துவம் வாய்ந்ததுதான் எழுபதுகளில் வெளிவந்த நம்ம வீட்டு தெய்வம்.

இதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சத்யஜித் ராயின் தேவி என்றொரு படம் வெளிவந்தது. இளம் மருமகளை கடவுளின் அவதாரமாக கருதிய மாமனார் காளிகிங்கர் சௌத்ரி அவளை பூசிக்கத் தொடங்குகின்றார். மூத்த மகனுக்கும் மருமகளுக்கும் அவள் தங்களைப் போன்றவள் என்பதை அறிந்த போதிலும் அதைத் தடுத்திட இயலா நிலையில் உள்ளனர். நோயினால் துவண்ட தன் மகனைத் தோளில் சுமந்து கிராமத்திலிருந்து ஒருவன் வருகிறான். பெரியவர் தேவியின் பாததூளியை குழந்தைக்குப் புகட்டுகிறார். குழந்தை கண் விழிக்கிறான். அண்டை அயல் கிராமங்களிலிருந்து மக்கள் சாரி சரியாக வரத் தொடங்குகின்றனர்.
(இக்காட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்) தன் இளமைக்குரிய வாழ்முறையை இழந்த போதிலும் படிப்படியாக வழிபடுதலுக்குரியவளாக இருப்பதை விரும்புவளாக மாற்றமடைகிறாள். மூத்த மகனின் மகன் நோய் வாய்ப்படுகிறான். மருமகள் மருத்துவ மனைக்குச் செல்ல விரும்புகிறாள். பெரியவர் தேவியின் பாதங்களில் அவனைக் கிடத்தி துதிப் பாடல்களை பாடுகின்றார். மனைவியை மீட்டு அழைத்துச் செல்ல வந்த இளைய மகன் குழந்தையின் இறப்பையும் தந்தையின் இறையுணர்வின் உச்சத்தையும் நேரில் காண்கிறான். குடும்பமே அதிர்ச்சியடைகிறது. இறையங்கியை போர்த்தியிருந்த தேவி அதிலிருந்து வெளிப்பட்டு தப்பியோடுகிறாள்.

ஆனாலும் இன்றும் இந்தியாவெங்கிலும் ஒவ்வோரு மாகாணத்திலும் தேவியும் சௌத்ரியும் இருந்து வருவதை அவ்வப்போது நாம் அறிந்து வருகிறோம். அதே தருணத்தில் சக மனிதனை நேசிப்பதற்கு பதில் இறையுருவாக பூசிப்பது மூடத்தனம் மட்டுமின்றி, சமூகத்தின் குறுக்கு வெட்டையே மாற்றிடுவதாக இருந்து விடும் என்பதை அறியத் தவறுகிறோம். ஊர் மக்கள் நோய் வாய்ப்படுகையில் ஆலய அபிடேக நீரே அதற்கு காரணம் என்பதை நிரூபணம் செய்த மருத்துவர் ஒருவர் அதற்கு எதிராக மக்களிடம் செல்கிறார். ஆனால் அவர் கண ஷத்ருவாக சித்தரிக்கப்படுகிறார். எண்பதுகளின் இறுதியில் வெளிவந்த இதுவும் ரேயின் பிந்திய படங்களில் ஒன்றாகும்.
எழுதியவர் :
ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.