எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 10 : மொழி பேதத்திற்கு அப்பாற்பட்ட தமிழ் திரையுலகு (Tamil film industry beyond language barriers) தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ்

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 10 : மொழி பேதத்திற்கு அப்பாற்பட்ட தமிழ் திரையுலகு

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 10

மொழி பேதத்திற்கு அப்பாற்பட்ட தமிழ் திரையுலகு

1918ல் தமிழின் முதல் மவுனப்படமாக கீசகவதம், நடராஜ முதலியார் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் 1931ல்தான் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியாகியது. இத்தனைக்கும் பலமொழிக் கலைஞர்கள் அவரவர் மொழியில் பேசி நடித்திருந்தார்கள் என்று ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாற்றில் எழுதியுள்ளார். இப்படத்தினை ஆர்.திஷிர் இரானியின் தயாரிப்பில் எச்.எம்.ரெட்டி இயக்கியிருந்தார்.

Film Heritage Foundation - The first Tamil talkie 'Kalidasa' (1931) was made amidst a flurry of activity by Imperial Movietone in the wake of 'Alam Ara' (1931). H.M. Reddy, the chief assistant

அன்றைய மதராஸ் மாகாணம் என்பது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம் மற்றும் கேரளம், கர்நாடகம், ஒடிசா போன்ற மாநிலங்களின் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தமையால் மதராஸ் திரையுலகம் என்பது இப்பகுதிகளைச் சார்ந்தவர்களை மட்டுமின்றி மகாராஷ்டிரம், வங்கம் போன்ற மாநிலங்களைச் சார்ந்தவர்களின் இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டு தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பினையும் கொண்டதாக, மொழி பேதத்திற்கு அப்பாற்பட்டதாகவே உருவாகியது. இதன் வெளிப்பாடுதான் முதல் பேசும்படம். மொழிவாரி மாநிலங்கள் பிரிவினைக்குப் பின்னரும் கிட்டத்தட்ட இந்த நூற்றாண்டின் துவக்கம் வரை இப்போக்கு இருந்து வந்திருக்கிறது என்பதை திரைப்படங்களின் டைட்டில் கார்டை சாதாரணமாக பார்த்தாலே தெரியவரும். இவை மட்டுமின்றி பல்வேறு மராத்திய வங்க திரைப்பட தொழிற்நுட்ப கலைஞர்களை தமிழ்த் திரையுலகிற்கு என்.எஸ்.கிருஷ்ணனும் கே.சுப்பிரமணியமும் அழைத்து வந்திருக்கிறார்கள் என்ற செய்தியும் வியப்புக்குரியதாகும்.

ஏ.கே.சேகர், ஆர்.பிரகாஷ், மார்க்கஸ் பார்ட்லே, ராம்நாத், பி.வி.ராவ், எச்.எம்.ரெட்டி, போன்ற அண்டை அயல் தொழிற்நுட்ப கலைஞர்கள் துவக்க கட்டத்தில் தமிழ்த் திரையுலகு விரிவான அளவில் தடம் பதிப்பதற்கு பெரும் பங்காற்றியிருக்கின்றனர். இவர்களின் தொடர்ச்சியாக பின்னாளில் நாகி ரெட்டி, சக்ரபாணி (மாயா பஜார்), புல்லையா (அன்னையின் ஆணை), விக்ரம், எல்.வி.பிரசாத் (மனோகரா), கே.எஸ்.பிரகாஷ்ராவ் (வசந்த மாளிகை), டி.பிரகாஷ்ராவ் (உத்தமபுத்திரன், அமரதீபம், படகோட்டி) போன்று ஏராளமானவர்கள் தமிழ்த் திரையுலகில் செயல்பாட்டினை கொண்டிருக்கின்றனர்.

தமிழ் திரையில் போற்றப்படும் பாசமலர் கொட்டாராக்கராவின் கதை என்பதை பலரும் அறிந்திடார். இதைப் போன்றே இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த அசோக் சென், சி.எஸ்.இரானி, கமல் கோஷ், சாந்தாராம், சுந்தர் ராவ் நட்கர்னி, சைலேன் போஸ், எம்.எல்.டாண்டன், தீன்ஷா இரானி, எஸ்.தொடானி, பாலி மிஸ்திரி, பொம்மன் டி.இரானி, ஜித்தன் பானர்ஜி, ஹோமி வாடியா, போன்ற எண்ணற்ற கலைஞர்கள் தங்கள் பங்களிப்பினைக் கொண்டிருக்கின்றனர். டாண்டனும் நட்கர்னியும் பேரும் புகழும் வாய்ந்த பெரிதும் விரும்பப்பட்ட இயக்குநர்களாக இருந்திருக்கின்றனர். அந்நாளிலேயே கே.பி.சுந்தரம்பாளுக்கு உச்சத் தொகையை அளித்து அசன்தாஸ் தயாரிப்பில் உருவான நந்தனாரை இயக்ககியவர் இதே டாண்டன்தான். தியாகராஜ பாகவதரை சூப்பர் ஸ்டாராக்கிய சிவகவியை இயக்கியவர் சுந்தர்ராவ் நட்கர்னி ஆவார்.

காளிதாஸ் History of KALIDAS First Tamil talkie movie முதல் தமிழ் பேசும் திரைபடம். 1931.10.31 - YouTube

இவர்கள் மட்டுமின்றி எல்லீஸ் ஆர் டங்கன், டி குருஸ், பால் பிரிக்கப், பிரிகெட் ஜேம்ஸ், பில்மேயர் பர்க்லெட், மைகேல் ஓமலேவ், , இ.ரோட்ஜர், ருஸ்தம் மேயர் போன்ற இந்தியர்கள் அல்லாதவர்களும் தமிழ்த் திரையுலகில் மகத்தான பங்களிப்பினை கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். இதில் எல்லீஸ் ஆர் டங்கன் பற்றி விசேடமாக குறிப்பிட வேண்டியுள்ளது. தமிழில் இன்றளவும் தொழில் நுட்ப ரீதியாக சிறப்பு வாய்ந்த படங்களான அம்பிகாபதி, சகுந்தலை, மீரா, பொன்முடி போன்ற படங்களை இயக்கியதோடு தமிழ்த் திரைப்படங்களுக்கு புதிய பரிமாணத்தை அளித்தவர் அவர். பாரதிதாசனின் வசனத்தில் வெளியான பொன்முடி காட்சிப் படுத்துவதற்கும் இசைக்கும் எடுத்துக் காட்டாய் விளங்கக்கூடியதோடு அவர் இயக்கிய படங்களிலேயே சிறப்பு வாய்ந்த திரைப்படமாகும் அது. அம்பிகாபதியிலும் சகுந்தலையிலும் அவரது குளோசப் காட்சி அமைப்பினை பிற்கால இந்தியத் திரையுலகு சுவீகரித்துக் கொண்டது என்பது மிகையன்று. இத்தனைக்கும் அவரது படத்திற்கு வசனம் எழுதியவர்கள் அனைவருமே அத்துறையின் மிகப்பெரும் ஆகிருதிகள் ஆவர்.

அண்டை மாநிலமான கேரளம் மலையாள திரையுலகிற்கு முன்னோடியாக விளங்கக்கூடிய தமிழரான ஜே.சி.டேனியல் பெயரில் ஆண்டு தோறும் பரிசளித்து அவர் நினைவைப் போற்றி வருகிறது. டங்கன் விஷயத்தில் அரசோ அல்லது தமிழ்த்திரையுலகோ ஏன் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது?

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *