எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 11 (Enakku Cinema Konjam Pidikkum) - கடவுள்களே இப்படித்தானா? - புராணக்கதைகளை கொண்ட தமிழ் திரைப்படம்

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 11 : கடவுள்களே இப்படித்தானா?

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 11

கடவுள்களே இப்படித்தானா?

சமீப காலங்களில் இந்த மண்ணில் உள்ள எம்மதத்தவரும் தத்தம் மதக்கடவுளரை நேரில் கண்டு உரையாடியதாகக் கூறுவதில்லை, கேட்டதுமில்லை. இதில் விதிவிலக்காக ஒரு வேளை டி.ஜி.எஸ் தினகரன் இருந்திருக்கக்கூடும். எப்படியிருப்பினும் கற்பனையில் கடவுள் அன்பும் கருணையும் கொண்டவராகவும், மானுட குணாம்சங்களை மீறிய செயல்பாட்டினை கொண்டிருப்பவராகவும் சித்தரிக்கப்படுவதை கவிஞர்களின் கற்பனைகளிலும் காவியங்களிலும் மட்டுமின்றி திரைப்படங்களிலும் காண முடியும். இதுவே கடவுள் பற்றிய பொதுவான சித்திரமாக அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது. ஆயின் இதிலிருந்து மாறுபட்டு முரண்பட்ட விதத்தில் திரைப்படமொன்றில் கடவுள் சித்தரிக்கப்பட்டிருப்பினும், சகல தரப்பு மக்களின் பாராட்டினையும் பெற்றிருந்தது என்பது தமிழ்ப்படவுலகின் திருவிளையாடல்களில் ஒன்றாகும். அன்னாளில் திரைப்படப் பாடல்களுக்கு நிகராக ஒலிபரப்பப்பட்டு வந்தவற்றில் திருவிளையாடலில் இடம் பெற்றிட்ட தருமி – சிவபெருமான் வசனக் காட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இன்றும் பெரும் எண்ணிக்கையில் ஆர்வமுடன் கேட்கக்கூடியதாகவும், சிலாகித்து பேசக்கூடியதாகவும் இருந்து வருகிறது.

படம் சொல்லும் கதை - 56 வருடங்களை நிறைவு செய்த திருவிளையாடல்! - News18 தமிழ்

தனது மனைவியின் தலைமயிருக்கு இயற்கையாகவே மணமுண்டா எனும் கேள்விக்கு தமிழ்ச் சங்கப் புலவர்கள் பதிலளிக்காத நிலையில், தக்க பதிலை அளிப்போருக்கு ஆயிரம் பொற்காசுகளை பரிசளிப்பதாக செண்பகப் பாண்டிய மன்னனின் அறிவிப்பினைக் கேட்டு ஏழ்மையில் வாடும் தமிழ்ப் புலவன் தருமி தந்நிலை மறந்து புலம்பிக் கொண்டிருக்கையில், சொற்சுவை பொருட்சுவை அனைத்தையும் கூட்டி சுந்தரத் தமிழில் பாட்டிசைத்து செந்தமிழ் கவிபாடும் கலைஞனாக இறைவன் அவனிடத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். புரிந்தது புரியாதது தெரிந்தது தெரியாதது பிறந்தது பிறவாதது அனைத்தும் அறிந்த அவன், தான் எழுதிய பாட்டினை தருமியிடம் கொடுத்தனுப்புவதும், அரசவையில் அதில் பிழை இருப்பதாக தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரன் கூறியவுடன், இறைவன் சீற்றம் கொண்டு “குற்றம் கூறியவன் எவன்? ஆணவத்திலே குறை கண்டீரோ?” என்ற கேள்வியை எழுப்ப பின்னர் ஈசனின் திருவிளையாடலில் இதுவும் ஒன்று என்று அனைவரும் அறிந்து கைகூப்பி தொழுது நிற்பதும்தான் இக்காட்சியமைப்பு. இப்படத்தின் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் சிறார் நாடகக் குழுவில் உருவானவர். ஏற்கனவே பல்வேறு சமூக இதிகாச புராணப் படத் தயாரிப்புகளுடன் சம்பந்தப்பட்டவர்.

ஏ.பி.நாகராஜன் ஒரு பிரமாண்ட இயக்குனர்... ஏப்ரல் மாதம் காலமான அவர் நினைவாக ஒரு ரீவைண்டு | A Small Rewind About Tamil Cinema Director AP Nagarajan - Tamil Filmibeat

மக்களைப் பெற்ற மகராசி, சம்பூர்ண ராமாயணம், பாவை விளக்கு போன்ற வெற்றிப் படங்களில் பங்களிப்பினை கொண்டிருந்தவர். மேலும் புராணக் கதைகளை படமாக்குவதில் ஒரு புதிய வகைமாதிரியை உருவாக்கி வெற்றி பெற்றவரும்கூட. வெறும் புராணக்கதைகளை விவரணம் செய்வதோடு நின்று விடாது அத்தோடு இறைநம்பிக்கை கொண்ட சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் முன்வைத்தது இவரது படங்கள். இந்த வரிசையில் திருவிளையாடல் முதல் படமாகும். பின்னாளில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் மற்றும் ராவ்பகதூர் சிங்காரம் போன்ற நிலப்பிரபுத்துவ பண்பாட்டியலின் பின்னணியில் வெளியான புதினங்களையும் திரைப்படமாக்கியிருக்கிறார். தமிழ்ப் புலவர் எனில் வளைந்து கொடுக்காதவர் சீற்றம் பொருந்தியவர் தன்மானம் மிக்கவர் என்ற பார்வைதான் பொதுவாக இச்சமூகத்தில் இருந்து வருகிறது. அவ்வாறே இறைவன் கருணையும் தயாபரனாய் அன்புடன் அரவணைத்துச் செல்பவராக காலங்காலமாய் கதைகளிலும் பக்தி இலக்கியங்களிலும் சித்தரிக்கப்பட்டு வருகிறது.

நினைவோ ஒரு பறவை - 02 ஏ.பி.நாகராஜன் - யாவரும்.காம்

ஆயின் தருமி – இறைவன் காட்சி இவற்றையெல்லாம் உடைத்து நொறுக்குவதாகவே அமைந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. ஆயிரம் பொற்காசு என்றவுடன் தருமி ஆலாய் பறப்பது – வளைந்து கொடுப்பதன் உச்சத்திற்கே செல்வது – அறிமுகமற்றவன் பாடலை தனது பாடல் என்று கூச்ச நாச்சமின்றி அரசவைக்கு எடுத்துச் செல்வது – இவற்றைக் காட்டிலும் தமிழ்ப் புலவர்களை வேறு எவருமே எள்ள முடியாதென்று தோன்றுகிறது. அவ்வாறே இறைவனும் நெஞ்சினை உயர்த்தி தன்னகங்காரத்துடன் அறிவுக்கு “தான்” என்று அறிவித்துக் கொள்வதோடன்றி தன் பாட்டிலே குற்றம் கண்டறியப்பட்டது என்றவுடன் முற்றும் கடந்த முக்காலமும் அறிந்த அவன் சபைக்குச் சென்று தமிழ்ச் சங்கத்து தலைமைப் புலவனை “யார் அந்தக் கிழவன்?” என்ற கேள்வியை எழுப்புவது தமிழுலகிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. மற்றொன்று இறைவன் சிவபெருமானே பிளகாரிசத்தை இப்புவியில் அறிமுகப்படுத்தும் முதல் நபராக சித்தரிக்கப்படுவது. இதனால்தானோ என்னவோ பின்னாளில் ஏபிஎன்னே புதுமைப்பித்தனின் ஸ்கிரிப்டையும் களவாடியிருக்கிறார் போலும். எப்படியோ, “வருத்தத்திற்குள்ளானான் புலவன் எனில் யாப்பிலொரு கவி பாடச் சொன்னால் போச்சு” என்ற ஞானக்கூத்தனின் வரிதான் நினைவிற்கு வருகிறது.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *