அச்சு அசலான நகைச்சுவைப் படம்
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 13
– ராமச்சந்திர வைத்தியநாத்
தமிழ்த் திரைப்படங்கள் அவ்வப்போது நகைப்புக்குரியவையாக இருந்த போதிலும், துவக்க காலந்தொட்டே நகையுணர்வுமிக்கதாகவே இருந்து வந்திருக்கிறது. கதாநாயகர்களுக்கும் நாயகிகளுக்கும் இணையாக நகைச்சுவை நடிகர்களும் நடிகைகளும் திறன்வாய்ந்தவர்களாக புகழ் பெற்றிருக்கின்றனர். இன்னும் கூடுதலாக சொல்லப் போனால் படத்தை தூக்கி நிறுத்திட நகைச்சுவை நடிகர்கள் நடிகைகளை இடையில் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்ற படங்கள் எண்ணிக்கையில் அடங்காது.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் (N.S.Krishnan), காளி என்.ரத்தினம் (Kali N.Rathnam), டி.எஸ்.துரைராஜ், காகா ராதாகிருஷ்ணன், ஜே.பி.சந்திரபாபு, தங்கவேலு, ராமா ராவ், கிருஷ்ணா ராவ், நாகேஷ், வெண்ணிறஆடை மூர்த்தி, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, போன்ற எண்ணற்ற நடிகர்களும், அங்கமுத்து, மதுரம், சி.டி.ராஜகாந்தம், சுந்தரிபாய், எம்.சரோஜா, டி.பி.முத்துலட்சுமி, மனோரமா, சச்சு, ரமாபிரபா, கோவை சரளா போன்ற எண்ணிக்கைக்குள் அடக்கமுடியாத நடிகைகளும் தமிழ்த் திரையுலகில் மகத்தான பங்களிப்பைக் கொண்டிருக்கின்றனர்.
பிரதான படங்களில் நகைச்சுவைக் காட்சிகள் என்பதைக் கடந்து நகைச்சுவையை பிரதான அம்சமாக கொண்ட படங்களும் தமிழில் ஏராளமாக வெளி வந்து வெற்றி பெற்றிருக்கின்றன. நகையுணர்வுடன் சமூகத்திற்கான செய்தியை கொண்டு செல்லும் என்.எஸ்.கிருஷ்ணன் (N.S.Krishnan) பாணியிலான படங்களின் எண்ணிக்கை அரிதாகவே வருகின்றன. ஆனாலும் காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், தில்லு முல்லு, குரு சிஷ்யன், 23ம் புலிகேசி போன்ற மற்றொரு வகைப்படங்கள் கூடுதலாகவே வந்து கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் முன்னோடிப்படமாக மட்டுமின்றி அனைத்து அம்சங்களிலும் சிறப்பு வாய்ந்த படமாக திகழக்கூடியது சபாபதி (Sabhaapathy) திரைப்படமாகும். ராவ் சாகிப் பம்மல் சம்பந்த முதலியாரின் கைவண்ணத்தில் உருவான அதே பெயரிலான நாடகமே பின்னாளில் திரைப்படமாக மாற்றமடைந்தது.
ஒரு செல்வந்தரின் பரீட்சையில் தேர்வு பெறாத செல்லப் பிள்ளை சபாபதி, அதே பெயரிலான அவனது வெள்ளந்தி வேலைக்காரன் ஆகிய இருவரின் செயல்பாடுகள்தான் சபாபதி (Sabhaapathy) திரைப்படமாகும். படிப்பு ஏறாத சபாபதிக்கு பெண் பார்த்து திருமணம் செய்த வைப்பது, பின்னர் சேவகன் சபாபதி அதே வீட்டில் வேலை செய்யும் பெண்ணையும் விரும்பி தூங்கிக் கொண்டிருக்கையில் தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்கிறான். கொட்டமடிக்கும் சபாபதிகளை அவரவர் மனைவிமார்கள் முறைப்படுத்தி கல்வி கற்பிக்கிறார்கள். செல்லப் பிள்ளை சபாபதியும் தேர்வில் தேர்ச்சி பெற்று மனைவியுடன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திட தயாராகிறான். நாற்பதுகளில் துவக்கத்தில் இத்தகைய கருவினைக் கொண்டதொரு படம் வந்திருப்பது என்பது ஆச்சரியமானது.
வகுப்பறையில் மாணவர்கள் ஆசிரியரைக் கேலி செய்வதிலிருந்து படம் தொடங்குகிறது. நடத்த வேண்டிய பாடம் திருஞானசம்பந்தரின் திருமணப் படலம் என்பதை சபாபதி திருஞானசம்பந்தரின் திருமரணப் படலம் என்று கூறுவதிலிருந்து அதகளம் ஆரம்பமாகிறது. தமிழ்ப் பண்டிதன் வயிற்றெரிச்சல் தாயின் வயிற்றெரிச்சலைவிட மோசமானது என்று தமிழாசிரியர் சாபமிடுவது, பதினெட்டு பக்க இருப்பு பாதை வியாசத்தில் விஸ்தாரமாக மதராஸில் உள்ள ரயில்வேக்களை விவரித்து விட்டு வண்டி போவதாக குப் குப் என்று பல பக்கங்களில் எழுதிவிட்டு பாலத்தில் செல்கையில் பட பட கட கட என்றும் அவ்வாறே எழுதியிருப்பது, சபாபதி (Sabhaapathy) பரீட்சையில் தோல்வியுற்ற போது கல்யாணமும் ஆயிடுச்சு பரீட்சையும் ஃபணால் ஆயிடுச்சு என்று சேவகன் சபாபதி கூறுவது, தூக்கு போட்டுக் கொள்வதாக சபாபதி (Sabhaapathy) நாடகம் ஆடுகையில் அப்பா தூக்கம் போடறாரு என்று சேவகன் கூவுவது, காசு கொடுத்து அரையணாவிற்கு பாதாம் அல்வாவும் அரையணாவிற்கு மிக்சரும் வாங்கி வரும்படி சொல்கையில் எந்த காசிற்கு எதை வாங்கி வரவேண்டுமென்று சேவகன் சபாபதி வினவுவது போன்ற காட்சிகளால் மையக் கதை பாய்ந்து செல்கிறது.

டி.ஆர்.ராமச்சந்திரன் (T.R.Ramachandran) செல்லப் பிள்ளையாகவும், காளி என்.ரத்தினம் (Kali N.Rathnam) சேவகனாகவும் நடித்திருக்கிறார்கள். மற்றவர்களை சிறுமைப்படுத்துவதோ உருவத்தை எள்ளி நகையாடுவதோ பெரிய அளவில் இன்றி இருவரின் பாசாங்கற்ற பேச்சும் செயல்முறையும் சிரிப்பை உண்டாக்குகிறது. இவையே இப்படத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். டி.ஆர்.ராமச்சந்திரனின் இயல்பான நடிப்பும் காளி என்.ரத்தினத்தின் உடல் மொழியும் அவர் பாடிய பாடல்களும் சம்பந்த முதலியாரின் வசனமும் படத்திற்கு மேலும் வலுவூட்டுவதாகவே உள்ளது. இப்படத்தைப் பார்த்த பின்னர் சமூகத்திற்கான செய்தியுடன், நகைச்சுவைமிக்க காட்சிகளைக் கொண்ட வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்தை திரைப்படமாக்கும் முயற்சியினை ஏன் எவரும் இன்றுவரை கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது.
எழுதியவர் :
ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.