ஜென்ம சாபல்யம்
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 29
– ராமச்சந்திர வைத்தியநாத்
அறுபதுகளின் இறுதியில் பெரும் பரபரப்புடன் அடிமைப்பெண் வெளியானதோடு வெகுவாகவும் பேசப்பட்டது. அத்தருணத்தில் நாலைந்து நாட்கள் தொடர்ச்சியாக கல்லூரி நண்பர் ஒருவருடன் மேகலா திரையரங்கிற்கு சென்றது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.
குனிந்து கைகைளை அகட்டி விரித்து மலங்க மலங்க விழிக்கும் எம்ஜிஆரின் பிரம்மாண்டமான கட் அவுட் மட்டுமின்றி, அதற்கு சற்றே குறைவான உயரத்தில் அசோகன், சந்திரபாபு, ஜெயலலிதா போன்றோரின் கட்அவுட்களையும் பிரம்மாண்டமான ஜோடனைகளையும், ஆவலுடன் படம் பார்க்க விழைவோரையும், அலுத்து சிறுத்து பார்த்து வருவோரையும் மட்டுமே பார்க்க முடிந்ததேயொழிய திரையைக் காண முடியவில்லை.
இத்தனைக்கும் இடையில் ஒரு நாள் மிட்லண்ட் தியேட்டருக்கும் நூர்ஜஹானுக்கும்கூட சென்று வந்தோம். அங்கேயும் தேர்த்திருவிழா கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் என் நண்பருக்கு இப்படத்தினை இப்பிறவியில் கண்டிடமுடியுமோ என்ற சந்தேகமே வந்துவிட்டது. ஆனால் எனக்கு அத்தகைய வாய்ப்பு வாய்த்தது என்பது என் முற்பிறவிப் பலனே.

என் வயோதிக பாட்டியை சென்னையிலிருந்து சிதம்பரத்தில் விட்டுவிட்டு வரவேண்டிய நிலை உருவாயிற்று. ஸ்டேஷனில் இறங்கி மாட்டு வண்டியில் தெற்கு ரத வீதியை நோக்கி சென்று கொண்டிருந்தோம். வலதுபுறம் ஒரு சினிமா தியேட்டரில் பெருங்கூட்டம். எட்டிப் பார்த்தேன். மேகலாவில் வைக்கப்பட்டிருந்ததைப் போன்றே எம்ஜிஆரின் கட்அவுட். “என்ன பார்க்கறே?” என்ற பாட்டியின் கேள்விக்கு ஒரு வாரமாய் அலைந்து வருவதை சொன்னேன். “அதுக்கென்ன பக்கத்தாத்து ஜெயராமய்யர்கிட்ட சொன்னாப் போறது” என்றாள்.
பாட்டி என்னை அழைத்துப் போனதுமே நாற்காலியில் உட்கார்ந்து இந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஜெயராமய்யர் நிமிர்ந்து “என்ன பாட்டி, பேரன் சினிமா பார்க்கணுமா?” என்றார். பாட்டி சிரித்தாள். “பேஷாய் பார்க்கலாம்” என்று பதிலளித்த அவர் என்னிடம் ஒரு pass என்று அச்சடிக்கப்பட்ட அட்டையைக் கொடுத்து “அம்பி பதினோரு மணிக்கு தியேட்டர் ஆஃபிஸுக்கு போய் மேனேஜரைப் பார்த்து இதைக் கொடு” என்று சொன்னார்.
புற்றிலிருந்து வரும் எறும்புகளைப் போன்று கட்டண கவுண்டர்களிலிருந்து பெண்களும் ஆண்களும் வந்து கொண்டிருந்தனர் – நசுங்கிப் போய், ஆனால் உற்சாகம் மிக்கவர்களாய் கையை உயர்த்தி டிக்கட்டை காட்டிபடி. என்னை மாதிரி பத்திருபதுபேர் ஆஃபீஸ் ரூம் வாசலில் – மேனேஜரைப் பார்க்க. எனக்கு முன்னால் இரண்டு மூன்று பேருக்கு அப்பால் நின்று கொண்டிருந்தவர்களின் பேச்சுக்குரல் பரிச்சயமானதாக தோன்றியது. நெருங்கினேன்.
இருவருமே கோனேரிராஜபுரம் நண்பர்கள் சாமாவும் சங்கரும். அதுமட்டுமில்லை அதே தெற்கு ரத வீதியில் எங்கள் எதிர்வீட்டுக்காரர் மில் மணி ஐயரின் பேரன்களும் கூட. சாமாதான் சொன்னான் “ஒரு ஷோவுக்கு இருபது பேரை இந்த வரிசையிலேந்து விடுவாளாம்?”. பரபரப்பு அடங்கவில்லை. கட்டை குட்டையாய் வெள்ளை சட்டை வேட்டியில் மேனேஜர் வெளியில் வந்தார். “இப்போ ஒங்களை அனுப்பறேன். சீட்லே உக்காரக்கூடாது. ஓரமாய் மத்தவாளுக்கு தொந்தரவு இல்லாம சந்தோஷமா சினிமாப் பாருங்கோ” என்றார். வரிசைக்காரர்களுக்கு உத்சாகம் அதிகரித்தது. சாமாவும் சங்கரும் என் முன்னும் பின்னுமாய் நின்று கொண்டனர்.
தியேட்டர் உள்ளே திரைப்படம் துவங்கி விட்டதை எவராலும் உணர முடியும். எங்களுக்கோ இன்னும் படபடப்பு அதிகரித்தது. வழக்கமான கட்டண வரிசை நுழைவு முடியவில்லை. ஒருவழியாக Pass அட்டையையும் ஒரு ரூபாயையும் வாங்கிக் கொண்டு டிக்கட் வழங்காது நேரடியாகவே உள்ளே விட்டார்கள். பரபரப்புடன் உள்ளே நுழைந்தோம். தியேட்டரில் ஏகக்கூச்சல். டார்ச் வைத்திருந்த ஆசாமிகள் சுவரோரமாய் எங்களை சாய்த்து வைத்தார்கள். திரையில் முதியவர் ஒருவர் தண்ணீரில் மிதந்தபடி கட்டையில் ஒருவரை வைத்து நீந்தி வந்து கொண்டிருந்தார்.
“எம்ஜிஆருக்கு ஸ்மரணை இல்லையே” விசு பரிதாபப்பட்டான். முதியவர் கரைக்கு வந்து “ஜீவா” என்று குரல் கொடுக்க “தாத்தா” என்றபடி ஜெயலலிதா ஓடி வந்தார். சீட்டில் உட்கார்ந்திருந்தவரிடம் “டைடில் போட்டாச்சா?” என்றேன். “கால் அவர் ஆச்சு” என்றபடி தலையை திருப்பிக் கொண்டார். எம்ஜிஆர் குனிந்து நடப்பது எனக்கு பரிதாபமாக இருந்தது.

எப்படியோ ஜோதிலட்சுமியை கட்டையிலிருந்து தூக்கிவிட்ட பிறகு நிமிர்ந்து விட்டார். ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களின் கைதட்டலும் கும்மாளமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஒரு சிலர் திரையை நோக்கி பூக்களை எறிந்து கொண்டிருந்தனர். கழுத்துக்கு மேலே தலை இருக்கறவன் எல்லாரும் தலைவனாகிவிட முடியாது என்ற வசனத்திற்கும், ஓயாது உழைப்பதில் சூரியன் நீ, ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ என்று ஜெயலலிதா பாடியபோதும் தியேட்டரில் உள்ள பெருவாரியான பார்வையாளர்களைப் போன்றே சாமாவும், விசுவும் நாக்கை மடித்து விசில் அடித்தார்கள். இடைவேளையின்றி முழுப்படமும் ஓடியது.
சுவரோரம் காற்று இல்லாததினால் எனக்கு லேசாக தலை சுற்றல் வந்துவிட்டது. தண்ணீர் குடிக்க வேண்டும்போல் தோன்றியது. சிறுநீர் உபாதை வேறு. சென்ற காட்சி முடிந்ததும் சுத்தம் செய்யாததினால் தியேட்டரில் ஒரு மாதிரியான வீச்சு. ஒரு வழியாக ராஜஸ்ரீயை படகில் அனுப்பி வைத்து பண்டரிபாய் – ஜெயலலிதா – எம்ஜிஆர் மூவரும் பாறையில் நின்றபடி கையசைக்க படம் முடிந்தது. நாங்கள் வெளியே வருவதற்கு முன்னரே அடுத்த காட்சிக்கு நுழைய ஆரம்பித்து விட்டார்கள். வெளியே வந்து கிட்டத்தட்ட ஒரிரு பர்லாங் வரை நாங்கள் நடக்கவில்லை. கூட்டமே எங்களை தள்ளிச் சென்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
சாயந்திரம் எதிர்வீட்டுக்குச் சென்றேன். சாமாவும் சங்கரும் தாத்தாவுடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தனர். மணி அய்யர் பெண் “நீ சின்ன மகுடி புள்ளேதானே?” என்றாள். “ஆமாம்” என்றபடி தலையசைத்தேன். “நீயும் கொட்டகைக்கு போனியோனோ?” கேட்டாள். “அத விடு, எப்டியோ இவா ஜென்மசாபல்யம் ஆயிடுத்து” என்றார் மில் மணி ஐயர். மாமாவுக்கு பிராபல்யமான இன்னொரு பெயரும் உண்டு. அதுதான் மௌனி.
எழுதியவர் :
ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமையான பதிவு.
அன்று அப்படித் தான் இருந்தது.
1969 அன்று எனக்கு 10 வயசு.
உடுமலை கல்பனா திரையரங்கில் படம் பார்த்தேன். நான் முதன்முறையாக ரசித்த திரைக்காவியம் அடிமைப்பெண் தான். ரொம்ப பிடித்த படம்.
நான் அதிகமான முறை ஒரு படத்தை தியேட்டர்ல பார்த்ததும் அது தான்.
ஆயிரம் நிலவே வா பாடல் இந்த 55 வருடமும், கேட்கும் போதெல்லாம் என்னை என்னமோ செய்யும் ,பரமவமடைவேன்.
நன்றி.