பாட்டி சொன்ன கதைகள்
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 30
– ராமச்சந்திர வைத்தியநாத்
பட வெளியீட்டுக்குப் பிந்திய பரபரப்புகளுக்கும் செய்திகளுக்கும் நிகராக வெளிவராத படங்களும் பெற்றுவந்திருப்பது திரையுலக வரலாற்றின் ஒரு பகுதியாகும். இப்போக்கு இன்னமும் நீடித்து வருகிறது. சமீபகாலத்தில் பிரிட்டானிய அரசி முன்னிலையில் துவக்கப்பட்ட படம் என்ற பெருமையைக் கொண்ட மருதநாயகம் வெளிவராத படங்களிலேயே அதிகமாக பேசப்பட்டது.
முறையான திட்டமிடலின்மை, படமொன்று வெற்றிகரமாக ஓடியபின்னர் அப்புகழை தக்கவைக்கும் பொருட்டு தன்னிச்சையாக மற்றொன்று பற்றிய அறிவிப்புகள், போட்டிச்சூழலில் முந்தும் நோக்கம், வெறுங்கையில் முழம் போடுவது போன்றவற்றை இதற்கு அடிப்படையான காரணமாக சொல்ல முடியும். பொன்னியின் செல்வனை படமாக்குவது குறித்து கடந்த காலத்தில் பலரும் முயற்சித்தது இத்தருணத்தில் நினைவுகூறத்தக்கது.
“திரையிலே தீந்தமிழ் காவியம்” என்ற எம்ஜியார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அறிவிப்புடன் தினத்தந்தியில் ஏக்கர் கணக்கில் விளம்பரம் வெளியிடப்பட்டு, நடிகர் நடிகையர் ஏற்கவிருக்கும் கதாபாத்திரங்களும் அறிவிக்கப்பட்டு, பின்னர் சந்தடியின்றி அது முடங்கிப்போனது. இந்த அம்சத்தில் எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரித்த படங்களுக்கு நிகராக அறிவித்து நின்று போன எம்ஜியார் படங்களும் இருக்கக்கூடும். காதலிக்க நேரமில்லை தயாரிப்பில் இருந்த தருணத்திலேயே, அன்று சிந்திய ரத்தம் எனும் எம்ஜியார் நடிக்கும் படத்திற்கான அறிவிப்பினை ஸ்ரீதர் வெளியிட்டிருந்தார்.

தேர்தல் தருணம், ரசிகர்களை உற்சாகப்படுத்துவது இப்படி பல நோக்கங்களை கொண்டதன் பேரில் மக்கள் என் பக்கம், அண்ணா நீ என் தெய்வம், இயேசுநாதர் போன்ற பெயர்களில் அவர் நடிப்பதாக அறிவிப்புகள் வந்திருக்கின்றன. கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு – வெளிவராத இப்படம் குறித்த செய்திகள் அன்று வார மாத இதழ்களில் பரவலாக இருந்து வந்தன. மை லேடீஸ் கார்டனிலும் ஊட்டியிலும் படம் பிடிப்பதற்கு பதிலாக வெளிநாடுகளில் படம்பிடிக்கவிருப்பதான செய்திகள் மக்களிடையே இது பற்றிய ஆர்வத்தை அதிகரித்தது. இதுதான் பின்னர் உலகம் சுற்றிய வாலிபனாக மாறியிருக்கலாம்.
கமலஹாசனும் படங்கள் பற்றிய அறிவிப்பில் உலக நாயகனாகவே இருந்து வருகிறார். மருதநாயகம் மட்டுமின்றி சபாஷ் நாயுடு என்ற படம் பற்றிய அறிவிப்பும் வெற்று அறிவிப்பாகவே இருந்து வருகிறது. சென்ற நூற்றாண்டைக் காட்டிலும் சமீப காலங்களில் நின்று போன படங்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே இருக்கிறது. பிரபலமான நட்சத்திரம் ஒருவரின் படப்பிடிப்புக்கான ஒப்புதலைப் பெற்றிட்ட அல்லது பெற முடியுமென்ற உறுதி மட்டும் படத்தயாரிப்புக்கு போதுமானது என்ற கருத்தும் இதன் காரணியாக இருக்கிறது.
திரையுலகு பற்றிய புரிதல் இல்லாதவர்கள் மத்தியில் இப்போக்கு கூடுதலாக இருக்கலாம். நிதியாதாரங்களை திரட்டுவதில் சாதுர்யமின்மை படத்தயாரிப்பு நின்று போவதைத் தவிர்த்து வேறு விபத்துகளும் இழப்புகளுக்கும் வகைசெய்து விடுகிறது.
கடந்த காலத்தில் திரைப்பட நுணுக்கங்களை நன்கறிந்திருந்ததோடு வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனங்களின் திரைப்படங்கள் பற்றிய அறிவிப்புகள் அடுத்த கட்டத்திற்கு நகராமல் முடங்கிக் கிடந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.
முப்பதுகளின் இறுதியில் செயல்படத் துவங்கிய கீழ்பாக்கம் நியூடோன் ஸ்டுடியோ புகழ் பெற்ற நிறுவனமாகும். தற்போது இங்கே பாரதீய வித்யா பவனின் பள்ளியொன்று செயல்பட்டு வருகிறது. மீரா, சிவகவி, அம்பிகாபதி போன்ற வெற்றிப்படங்கள் இங்கே படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இதன் பங்குதாரர்களில் ஒருவர்தான் கலை இயக்குனர் எஃப். நாகூர். எம்ஜியாரின் வெற்றிப்படங்களின் ஒன்றான ஜெனோவாவை இயக்கியவர் இவர்தான்.
மலையாளப்படங்களையும் இயக்கி வெற்றி பெற்ற இவர் குங்குமம் அணிந்த குல மங்கை எனும் வித்தியாசமான பெயரில் படத்தை இயக்குவதாகவும் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறுவதாகவும் அன்றைய தினம் செய்திகள் மட்டுமே வந்திருக்கின்றன. ஆனால் இன்னும் படத்தைக் காணோம்.

எம்.ஏ.வேணு புகழ்பெற்ற படத்தயாரிப்பாளர் என்பதை பலரும் அறிந்திராவிடினும் அவரது தயாரிப்பில் வெளிவந்த சம்பூர்ண ராமாயணத்தை தமிழ்திரையுலகில் அறியாதோர் இருக்க முடியாது. நவாப் ராஜாமாணிக்கத்தின் நாடகமே இதற்கு உந்துதலாக இருந்திருக்கலாம். மாங்கல்யம், டவுன் பஸ், முதலாளி, பணம் பந்தியிலே போன்ற வெற்றிப்படங்களை தயாரித்தவர்.
இவரது தயாரிப்பில் “பாட்டி சொன்ன கதை”, “செங்கமலத் தீவு” ஆகிய இருபடங்கள் வெளிவரவிருப்பதாக 1956ல் ஒரே நாளில் விளம்பரமொன்று வந்திருக்கிறது. இரு படங்களிலும் நடிகர்களும் தொழில் நுட்பக் கலைஞர்களும் கிட்டத்தட்ட அச்சு அசலாக இருந்தது இன்றும் வியப்பளிக்கிறது. கடைசியில் பாட்டி சொன்ன கதை வரவில்லை. செங்கமலத் தீவு மட்டும் வேறு நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறிப்பாக அறிவிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஆனந்தன் புஷ்பலதா பங்களிப்பில் வெளிவந்திருக்கிறது. வெளியிடப்பட்ட ஆண்டோ 1962.
எழுதியவர் :
ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
