எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 31 (Enakku Cinema Konjam Pidikkum) சினிமா பத்திரிகைகள் | திரைப்படப் பத்திரிகைகளின் வரலாறு குறித்த கட்டுரை | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 31: சினிமா பத்திரிகைகள் – ராமச்சந்திர வைத்தியநாத்

சினிமா பத்திரிகைகள்  

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 31

– ராமச்சந்திர வைத்தியநாத்

மவுனப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட காலத்திலேயே அவற்றைக் குறித்து பேசக்கூடிய பத்திரிகைகளும், அடுத்த கட்டத்தில் படங்கள் பேசத் தொடங்கியதும் படங்கள், அதன் வர்த்தகம் பற்றிய பத்திரிகைகளும் பெருமளவில் வெளியீட்டை துவக்கியிருக்கின்றன. இன்றும் திரைப்படத் துறையினராலும் ஆர்வலர்களாலும் பெரிதும் விரும்பப்படும் பத்திரிகையாக பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாதந்தோறும் வெளியிட்டு வரும் சைட் அண்ட் ஸவுண்ட் விளங்கி வருகிறது.

இப்பத்திரிகையில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் சிறந்த திரைப்படங்களுக்கான கணிப்புகள் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. (இக்கதைகளை களவாடவும் முயற்சிக்கப்படுகிறது). இக்கணிப்புகளில் ஆர்ஸன் வெல்ஸின் சிட்டிஸன் கேன், செர்ஜி ஐஸன்ஸ்டீனின் பேட்டில்ஷிப் ஆஃப் பொட்டம்கின் ஆகிய இரண்டு திரைப்படங்கள் அதிக முறை இடம் பெற்று வருவது குறிப்பிட்டத்தக்கதாகும்.

1913ல் இந்தியாவில் தாதாசாகிப்பின் மவுனப்பட முயற்சிக்குப் பின் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அர்தேஷ் இரானி பேசும் படத்துடன் வந்திருக்கிறார். இதன் பின்னரே திரைப்படங்களைப் பற்றிய பத்திரிகைகள் பிராந்திய அளவில் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன. அவை நீடித்த முயற்சியாக இல்லை. ஐம்பதுகளுக்குப் பின்னரே திரைப்படத்துறை பற்றிய பத்திரிகைகள் பெருமளவில் வரத்தொடங்கிற்று.

திரைப்படங்கள் வசீகரமாக இருப்பதனால் அதைப் பற்றிய செய்திகளுக்கு ஆர்வம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதைக் காட்டிலும் துவக்க நாட்களிலிருந்தே செய்திகளைக் காட்டிலும் அதேசெய்தியை மறைமுகமாகக்கூறி படிப்பவரிடம் புதிர் போடக்கூடிய “காசிப்” எனப்படும் கிசுகிசுக்களுக்கு மவுசு கூடுதலாகவே இருந்து வந்திருக்கிறது.

பம்பாயில் பாபுராவ் பட்டேல் மதர் இந்தியாவுக்கு முன்னர் நடத்திவந்த ஃபிலிம் இந்தியா திரைப்படஞ்சார்ந்த பத்திரிகையாக இருப்பினும், இத்தகைய கிசுகிசுக்களுக்கு பெரிதும் புகழ்பெற்றதாகவே அன்னாளில் விளங்கியது. இதில் இன்னொரு ஆச்சரியம் பின்னாளில் பெரிதும் புகழ்பெற்ற இலக்கியகர்த்தாவாக விளங்கிய சதத் ஹஸன் மாண்டோவும் திரைப்படக் கலைஞர்கள் பற்றியும், கிசுகிசுக்களையும் இலக்கிய பூர்வமாக எழுதியிருப்பதுதான்.

செய்திப் பத்திரிகைகளை நடத்திவரக்கூடிய பெருங்குழுமங்கள் திரைப்படஞ்சார்ந்த பிரத்யேக பத்திரிகைகளையும் நடத்தி வருகின்றன. எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஸ்கிரின், டைம்ஸ் குழுமத்தின் ஃபிலிம் ஃபேர், இந்து குழுமத்தின் ஸ்போர்ட் அண்ட் பாஸ்டைம் போன்றவைகளைக் கடந்து திரைப்பட கிசுகிசுக்களுக்கான பிரத்யேகமான பரபரப்பான ஸ்டார் டஸ்டும் இருந்து வந்தன. இதில் ஸ்கிரின் செய்தித்தாளின் அளவிலேயே இருந்து வந்தது.

பின்னாளில் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் நின்றுபோன ஸ்போர்ட் அண்ட் பாஸ்டைமில் விளையாட்டு, குதிரைப்பந்தயம், திரைப்படம் ஆகியவை குறித்த செய்திகளோடு விசேஷமான படங்களும் இடம் பெற்றிருந்தன. இதில் T.M. ராமச்சந்திரனின் காரசாரமான திரைவிமரிசனங்களும் கட்டுரைகளும் தனித்துவம் வாய்ந்தவை என்றே சொல்ல முடியும்.

இப்பின்னணியில் தமிழிலும் ஐம்பதுகளிலிருந்தே ஏராளமான பிரத்யேக சினிமா பத்திரிகைகளும் ரசிகர் மன்றங்கள் வெளியிடக்கூடிய தனித்துவமிக்க பத்திரிகைகளும் வெளிவந்தன, வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை மாநிலம் தழுவியதாக இல்லை என்பதோடு வெளியீட்டில் தொடர்ச்சியும் இல்லை. அதே தருணத்தில் செய்திப் பத்திரிக்கைகளில் மட்டுமின்றி வார மாத பத்திரிகைகளில் கூட திரைத்துறை சார்ந்த செய்திகள் அதிக அளவில் இடம்பெறுவது தவிர்க்கவியலாத ஒன்றாகிவிட்டது.

அன்றையதினம் பரபரப்பான திரைப்பத்திரிகையாக இந்துநேசன் விளங்கியது. அதன் ஆசிரியர் லட்சுமிகாந்தன் கையாண்ட உத்திதான் வேறு வடிவில் மாற்று உருவில் இன்று பல்வேறு திரைப்பத்திரிகைகளால் கையாளப்பட்டு வந்த போதிலும், லட்சுமிகாந்தன் நிலைக்கு எவரும் இன்று ஆளாவதில்லை. தமிழின் பிரத்யேக திரைப்பத்திரிகைகள் எனில் T.V.ராம்நாத்தின் மாறுபட்ட பேசும்படம், ஸ்ரீதரின் சித்ராலயா, பாலு சகோதரர்களின் கலை, விஜயா குழுமத்தின் பொம்மை, நவீனத்துவம் வாய்ந்த ஃபிலிமாலயா, வண்ணத்திரை, திரைக்கதிர், குண்டூசி, நாரதர், சினிமா எக்ஸ்பிரஸ், ஃபிலிம்நியூஸ் போன்றவற்றை குறிப்பிடமுடியும். பேசும்படம் திரைத்தயாரிப்பு குறித்த விவரங்களோடும் வெளிவந்த திரைப்படங்களின் வசனத்தை சுருக்கமாக வெளியிட்டும் வந்திருக்கிறது.

திரைவிமரிசனங்களை எழுதுவதில்லை என்பதை கொள்கையாகவும் கொண்டிருந்தது. இன்றைய தினம் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பேசும்படம் என்றொரு பேருந்து நிறுத்தம் மட்டுமே மிச்சமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தமிழில் திரைப்படத்துறைக்கான மாநிலந்தழுவிய பன்முகங்கொண்ட பத்திரிகை எதுவுமே இன்றைய தினம் இல்லை. இதில் ஒரு வெற்றிடம்தான் இன்னமும் இருந்து வருகிறது.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *