மாப்பிள்ளை அவ்ருதான் ஆனா . . . .
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 32
– ராமச்சந்திர வைத்தியநாத்
தமிழகத்தில் இன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கும், தயாரிக்கவிருக்கும் திரைப்படங்களுக்கும் பெயர் சூட்டுவதென்பது சிக்கலான பிரச்னையாக மாறி வருகிறது. தன் வீட்டில் பிறந்த குழந்தைக்கு தன் மூதாதையர் அல்லது தனக்குப் பிடித்தவர்களின் பெயரை வைப்பதற்கு பதிலாக, நாடி ஜோதிடம், எண் ஜோதிடம், காக்கை கரைதல் போன்றவற்றில் ஆய்வு செய்து வரக்கூடிய ஆய்வறிஞர்களிடம் சென்று, வடமொழி எழுத்துக்கள் என்று நாம் இத்தனை நாள் வகைப்படுத்தி வைத்ததை பிரதான எழுத்துக்களாகக் கொண்ட பெயரை அதுவும் இந்த மண்ணுக்கு பரிச்சயம் இல்லாததொன்றை சூட்டி மகிழ்வது பரவலாக இருந்து வருவதோடு ஆட்டோக்களிலும் பொறிக்கப்பட்டு வருகின்றது.
இதைப்போன்றுதான் திரைப்படங்களுக்கு பெயர் வைப்பதிலும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தன் கனவில் நினைவில் வந்த பெயர்களையெல்லாம் பதிவு செய்து, பின்னர் மற்றொருவர் பயன்படுத்த முனைகையில் பரபரப்பும் போட்டியும் உருவாகிறது. படம் உருப்பெருவதற்கு முன்னரே விளம்பரம் தேடும் யுக்தியாகவும் இது இருந்து வருகிறது.
தற்போது பராசக்தி படத்தின் பெயரை பயன்படுத்துவது குறித்து சர்ச்சை உருவாகியிருக்கிறது. ஏற்கனவே மேடை நாடகமாக வெற்றி பெற்ற பாவலர் பாலசுந்தரத்தின் கதைதான் கருணாநிதியின் கைவண்ணத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பில் பராசக்தியாக 1952ல் வெளிவந்து, திரையுலகில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இப்பொழுது அப்படத்தை தயாரித்த நிறுவனத்தின் அனுமதியை பெற்றுவிட்டதாக ஒரு நிறுவனமும், தான் ஏற்கனவே இதை பதிவு செய்துவைத்திருப்பதாக ஒருவரும் பொதுவெளியில் இப்பிரச்னையை கொண்டு வந்திருக்கின்றனர்.
படத்தயாரிப்பு என்பதே பஞ்சாயத்துக்குரியதாக மாறிவிட்ட நிலையில், முதல் நிலையில் பெயருக்குக்கூட பஞ்சாயத்தை நாடுவது என்பது இவர்களின் நம்பிக்கையின்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.
இப்போதுதான் உருவானதாக தோன்றினாலும் திரையுலகில் காலங்காலமாகவே இத்தகைய போக்கு இருந்து வருகிறது. பெயருக்கும் கதைக்கும் பொருத்தமிருக்கிறதோ இல்லையோ, ஆயின் வெற்றிப்படப் பெயர் அது என்ற முட்டாள்தனமான கருத்தின் பேரில்தான் பெயர்களை கைப்பற்றும் முயற்சியே இது. ஒரு குறிப்பிட்ட கால வரையறையில் வெளியான திரைப்படங்களின் பெயர்களை பார்க்கையிலேயே இவற்றை நாம் அறிய முடியும்.
தமிழில் 1931ல் இம்பீரியல் கம்பெனியின் தயாரிப்பில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸிலிருந்து துவங்கி 1950ல் வெளிவந்த ஜூபிடரின் விஜயகுமாரி வரையில் 421 படங்கள் வெளி வந்திருக்கின்றன. இதில் பிரதான படத்திற்குள்ளேயே நாலைந்து துண்டுப் படங்களை காட்சிப்படுத்துவதும் இருந்து வந்திருக்கிறது. அபலை, காலேஜ் குமரி, தேவதாசி, மிஸ் கமலா, மிஸ் மாலினி, மிஸ் சுந்தரி, தமிழ் தாய், டூபான் குயின், உத்தமி போன்று பெண்களின் பெயர்களைக் கொண்ட திரைப்படங்கள் 156 ஆகும். திரௌபதி வஸ்த்ராபரணம் என்ற பெயரில் 1934லேயே இரு வேறு நிறுவனங்கள் படங்களை தயாரித்திருக்கிறது. புடவையை உருவும் காட்சிகளுக்கு அன்னாளிலேயே மவுசு இருந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. தேசபக்தி, தேச முன்னேற்றம், நம் நாடு, ஷைலக் போன்ற முற்றிலும் வேறுபட்ட பெயர்களையும் திரைப்படங்கள் கொண்டிருந்திருக்கின்றன.
பக்தன் என்று துவங்கும் படத்தின் வெற்றிக்குப் பின்னர் வெவ்வேறு ஆண்டுகளில் பக்த அருணகிரி, பக்த துருவன், பக்த கௌரி, பக்த ஹனுமான், பக்த ஜனா, பக்த ஜெயதேவ், பக்த குமணன், பக்த மீரா (இது இல்லாமல் வெறும் மீராவும் உண்டு) பக்த நாமதேவர், பக்த நந்தனார், பக்த நாரதர், பக்த புரந்தரதாசர், பக்த ராமதாஸ், பக்த சேதா, பக்த துளசிதாஸ் (1937) பக்த துளசிதாஸ் (1947) பக்தகோடி கம்பர், பக்தி என்ற வரிசையும் இருந்திருக்கிறது. ஏற்கனவே கைம்பெண்களை உடன்கட்டை ஏறச் செய்து சதிமாதாவாக பூசித்து வரக்கூடிய நாம் திரைப்படங்களிலும் விட்டு வைப்போமா? சதி அகல்யா, சதி அனுசூயா, சதி லீலாவதி, சதி மகாநந்தா, சதி முரளி, சதி சுகன்யா, சதி சுலோச்சனா எனும் திரைப்படங்கள் இவர்களை கொண்டாடியிருக்கிறது.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அம்பிகாபதி, அருணகிரிநாதர், பாமா விஜயம், தசாவதாரம், தேவதாஸ், என் மகன், ஞானசௌந்தரி, இதயகீதம், ஜகதலப் பிரதாபன், கிருஷ்ண துலாபாரம், லவகுசா, மதுரை வீரன், நல்லதங்காள், பதி பக்தி, ராஜா தேசிங்கு, ரம்பையின் காதல், சகுந்தலை, சாரங்கதாரா, சீதா கல்யாணம், தூக்குத் தூக்கி, உத்தமபுத்திரன், வாயாடி போன்ற பெயர்களில் ஐம்பதுகள் வரை மட்டுமின்றி இந்த நூற்றாண்டிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்திருக்கின்றன. இனி வருங்காலங்களிலும் இது தொடரத்தான் போகிறது. நகைச்சுவை காட்சியொன்றில் மாப்பிள்ளை இவ்ருதான் ஆனா போட்டிருக்கும் டிரஸ் என்து என்று ரஜனி கூறுவதுதான் இப்போதைக்கு நினைவுக்கு வருகிறது.
எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
