எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 33 (Enakku Cinema Konjam Pidikkum) ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா | தமிழ் திரைப்படங்களின் சினிமா காட்சிகளுக்கும், காதலை மறுக்கும் பெண்கள் மீதான வன்முறைக்கும் உள்ள தொடர்பு | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 33: ஊரப்பா பெரியதப்பா, உள்ளம்தான் சிறியதப்பா – ராமச்சந்திர வைத்தியநாத்

ஊரப்பா பெரியதப்பா, உள்ளம்தான் சிறியதப்பா

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 33

– ராமச்சந்திர வைத்தியநாத்

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் தன்னைக் காதலிக்க மறுத்த அண்டை அயல் பெண்ணை இளைஞன் ஒருவன் ஓடும் ரயில் முன்னர் தள்ளிக் கொலை செய்து தப்பியோடினான் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலங்களில் ஆந்திரத்தில் கல்லூரி வாயிலில் பெண்கள் கொலை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. நாளிதழ்களில் அன்றாடம் இத்தகைய செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த வாரத்தில் கூட ராமநாதபுரத்தில் பதின்பருவப் பள்ளிப் பெண் காதலை மறுத்தமைக்காக கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.

காதல் என்பதே சர்வ சுதந்திரமானது என்ற அடிப்படையை ஆண்கள் அங்கீகரிக்க மறுப்பதன் வெளிப்பாடுதான் இத்தகைய அராஜகங்கள். ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பிரத்யேக அனுபவங்களின் பேரில் ஒவ்வொருவருக்கும் மனோநிலை மாற்றம் அடைகிறது. அதற்கேற்ப காதல் என்பதும் மாறுபடுகிறது. காதல் அடுத்த கட்டத்தில் திருமணத்திற்கு எடுத்துச் சென்று தங்களை கரையேற்றாதா என்று கருதிவரும் பெண்களை நிர்க்கதியாக்கும் போக்குதான் சமூகத்தில் பொதுப்பண்பாக இருந்து வருகிறது.

ஆயின் இதற்கு நேர்மாறான இந்நிகழ்வுகள்தான் ஊடகங்களின் கவனத்தைப் பெறுவதோடு மக்களின் மனோநிலையையும் சலவை செய்கிறது. யதார்த்தத்தில் பெண்களை கும்பலாய் தொடர்வது, கேலி செய்வது, பாடுவது, ஆடுவது என்றெல்லாம் காலங்காலமாய் சமூகத்தில் இருந்து வருகிறது. இதுவே திரைப்படக் காட்சிகளாகவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. பரஸ்பர அன்பே காதல் என்பதற்கு மாறாக நிர்ப்பந்தமே காதல் என்ற செய்தியை இவை எடுத்துச் செல்கிறது.

சமூகப் பொறுப்பு என்பது சற்றும் இல்லாமல் இக்காட்சிகள் இன்றும் திரைப்படங்களில் வடிவமைக்கப்பட்டு வருவது இவர்களின் ஆணாதிக்க குணாம்சத்தையே வெளிப்படுத்துகிறது. பாடல் வரிகளை தந்து உதவும் பெருங்கவிஞர்களும், புகழ்பெற்ற நடிகர்களின் அங்க அசைவுகளும், இவற்றின் இயக்குநர்களும் இத்திருப்பணியை கூச்ச நாச்சமின்றி செய்து வருகிறார்கள்.

தெருவில் நடமாடும் பெண்ணை கிண்டல் செய்து பாடும் திரைப்படக் காட்சிகள் காலங்காலமாகவே தொடர்ந்து வருகிறது. வழித்துணையாக வாரேனுங்க என்று அழைப்பு விடுத்த எம்ஜிஆருக்கு அடுப்பெரிக்கும் பெண்களெல்லாம் ஏட்டினிலே படிப்பது பெருமையாக இல்லை. எனவேதான் நாட்டுக்கு ராணியாக இருந்தாலும் வீட்டுக்குள் அடங்கித்தான் இருக்க வேண்டும் என்கிறார். கடைவீதியில் நடக்கும் அக்கா மகள் கையை பிடிச்சா ஒத்துக்குவா என்கிறார் விஜயகாந்த்.

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 33 (Enakku Cinema Konjam Pidikkum) ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா | தமிழ் திரைப்படங்களின் சினிமா காட்சிகளுக்கும், காதலை மறுக்கும் பெண்கள் மீதான வன்முறைக்கும் உள்ள தொடர்பு | www.bookday.in

பொதுவெளியில் பெண்களை எப்படி பார்க்க வேண்டும் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான புதிய இலக்கணத்தை இவர் வகுத்தளிக்கிறார். பொண்ணுனு இருந்தா துணை வேணும் அது புரியலியா இன்னும் தெரியலியா என்று தன் பங்கிற்கு சிவாஜி நீதிபோதனை செய்கிறார். பாடல் காட்சிகள் மட்டுமல்ல அக்காட்சிகளின் உடல் மொழியும் பெண்களை கேவலப்படுத்துவதாகவே இருந்து வருகிறது. கமலஹாசன் இதில் சகலகலாவல்லவராகவே இருக்கிறார்.

பாக்கியராஜ் நண்பர்களுடன் பெண்களை சீண்டிப் பார்க்கும் பொருட்டு தெருத்தெருவாக அலையும் காட்சி அவரது திரைப்படமொன்றில் இடம் பெற்றிருந்தது. பாக்கியராஜின் ரசனை உணர்வின் பெண்களைக் குறித்த பார்வையின் உச்சக் காட்சி இது.

இதுபோன்ற காட்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம். முன்னரே கூறியதைப் போன்று பெண்கள் பற்றிய பார்வைக் குறைபாடு மட்டுமின்றி தனது தகுநிலையில் எதை வேண்டுமென்றாலும் காட்சியில் வெளிப்படுத்தலாம் என்ற மமதையும் இவற்றில் அடங்கியிருக்கிறது.

முன்பின் அறிமுகம் இல்லாத வீட்டிற்குள் நுழைந்து உங்கள் பெண்ணுடன் பழக வரலாமா என்று ரஜனிகாந்த் கேட்கிறார். அவர்கள் மறுக்க இரு சிறுமிகளுடன் இருக்கும் மற்றொருவர் அழைப்பு விடுக்கிறார். இதைக்காட்டிலும் குடும்பங்களை, பெண்களை எவரும் கேவலப்படுத்த முடியாது. இதேபோன்று தளபதியிலும் காட்சியொன்று இடம் பெற்றிருந்தது. காட்சிகள் மட்டுமில்லை பெண்களை ஒடுக்கி நிர்ப்பந்தத்தை உருவாக்கி அடக்கியாளுவதை கருவாக பல்வேறு படங்கள் கொண்டிருக்கின்றன.

சமீபகாலங்களில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் ஆடுகளம் இரண்டும் வர்த்தக ரீதியாகவே வெற்றி பெற்ற படங்களாகும். இவ்விரு திரைப்படங்களிலும் ஒரு பொதுமைப் பண்பு இருக்கிறது. காதலிக்க மறுத்த பெண்ணை நாயகன் வேட்டையாடி வெற்றி கொள்கிறான். காதலுக்கு அத்யாவசியமாக இருக்க வேண்டிய ஜனநாயகப் பண்பு என்பது இவ்விரு படங்களிலும் வெளிப்படுவதில்லை.

பெண் அவள் வாழும் சூழல், குடும்பத்தாருடன் இருந்து வரக்கூடிய பிணைப்பு போன்றவற்றை கணக்கில் எடுக்காது சகட்டு மேனிக்கு கதையின் நாயகர்கள் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதோடு நிர்ப்பந்தங்களையும் உருவாக்குகிறார்கள். இதற்கான காட்சிகள் மெருகிடப்பட்டு நளினம் பொருந்திய இசையுடன் வெளிப்பட்டன. வெற்றி பெற்றன. ஆயின் இடைத்துணி பறிக்கப்பட்டதை அறியாமல் இத்தகைய திரைப்படங்களையும் திரைக்காட்சிகளையும் நாம் துள்ளிக் குதித்து கொண்டாடி வருகிறோம். அதே தருணத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வாயில்களில் ஆண்களின் ஒருபட்சமான காதலை ஏற்க மறுக்கும் பதின்பருவ மாணவிகள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படுவது தொடர்கிறது.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *