உயர்ந்த மனிதர்களின் பொய்கள்
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 35
– ராமச்சந்திர வைத்தியநாத்
சினிமா என்பது என்னதான் காட்சி ஊடகமாக இருப்பினும் அக்காட்சியினை பதியவைப்பது அதற்கான கதையமைப்பும் வசனங்களும்தான். துவக்க கால திரைப்படங்கள் இதிகாச புராண நாட்டுப்புறக் கதைகளை கையாண்டபோது பெரிய அளவில் கதை வசனம் எழுதியோர் தேவைப்படவில்லை. அன்றைய தினம் பாடலாசிரியர்களும், இசை அமைப்பாளர்களும்தான் முக்கியத்துவம் கொண்டவர்களாக இருந்து வந்தனர். அடுத்த கட்டத்தில் வசனகர்த்தாக்கள் முன்னணி வகித்தனர். பல்வேறு இலக்கிய படைப்பாளிகளும், கவிவாணர்களும் இத்துறையில் தடம் பதித்திருக்கின்றனர். தியாகராஜ பாகவதர் படமெனில் இளங்கோவன்தான் என்ற நிலை இருந்து வந்தது. அம்பிகாபதி மற்றும் ஜூபிடரின் கண்ணகி போன்ற படங்களின் வெற்றியில் இளங்கோவனுக்கும் பங்கு உண்டு. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் வசனகர்த்தா இவரே.
தஞ்சை ராமையாதாஸ், உடுமலை நராயணகவி, கம்பதாசன், பாரதிதாசன் மற்றும் மொழிமாற்றுப் படங்களில் புரட்சிதாசன், தேவநாராயணன் போன்றோரும் இடைக்காலத்தில் குறிப்பிடப்பட வேண்டியவர்களாவர். அடுத்த கட்டத்தில் திராவிட இயக்க முன்னோடிகள் இத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தினர். பராசக்தி, மனோகரா போன்ற படங்களில் கலைஞரின் திறன் பார்வையாளர்களை திகைக்க வைத்திருக்கிறது.
அண்ணா, கண்ணதாசன், முரசொலி மாறன், தென்னரசு போன்றோரின் வசனங்கள் புதிய போக்கை உருவாக்கி அக்ரஹாரத்து திண்ணையிலிருந்த சினிமாவை தெருவிற்கு வரச்செய்தது. இதற்குப் பின்னரே ஸ்ரீதரும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும், சக்தி கிருஷ்ணசாமியும் அடுத்த கட்டத்தில் பீம்சிங்கும், பாலசந்தரும், ஆரூர்தாசும், ஏ.எல்.நாராயணனும் புதிய பாணியை அதுவும் குடும்பப் படங்களில் உருவாக்கியிருக்கின்றனர். எழுபதுகளில் இறையியல் சார்ந்த திரைப்படங்களை மக்கள் விரும்பத் தொடங்கியதற்கு ஏ.பி.நாகராஜனின் திரைக்கதை வசனமும் ஒரு காரணமாக அமைந்தது. இப்படி எண்ணற்றோர் காலப்போக்கில் தமிழ் திரையுலகின் உரையாடலை செம்மைப்படுத்தியிருக்கின்றனர்.
ஜூபிடரின் கண்ணகியில் இறுதிக் காட்சியில் இளங்கோவனின் வசனத்தை கண்ணாம்பா பேசியது இன்றும் பேசப்படுகிறது. “தீ பரவட்டும்”, “திக்கெட்டும் பரவட்டும்” என்ற வரிகள் அரசியல் கட்சிகளின் கொள்கை முழக்கமாகவே பின்னாளில் மாறிவிட்டது. இப்படித்தான் பராசக்தி மற்றும் மனோகராவில் இடம்பெற்ற நீதிமன்ற அரசவைக் காட்சிகள் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. வசனகர்த்தா என்னதான் திறன்பெற்றவராக இருப்பினும் காட்சிப்படுத்துவதில் இயக்குனருக்கும் நடித்த கலைஞர்களுக்கும் இதில் மகத்தான பங்கிருப்பதை இவ்விருபடங்களுமே உணர்த்தியிருக்கின்றன.
பின்னாளில் ரத்தக்கண்ணீர், வீரபாண்டிய கட்டபொம்மன், படகோட்டி, பெற்றால்தான் பிள்ளையா, பணமா பாசமா, நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாணப் பரிசு, தெய்வப்பிறவி, திருவிளையாடல் போன்றவை வசனங்களுக்காகவே பேசப்பட்டவையாகும். குறிப்பாக “நீர்தான் ஜாக்சன் துரையோ” என்ற கட்டபொம்மன் வசனமும், தருமி-இறைவன் உரையாடும் திருவிளையாடல் காட்சியும் தனிப் பதிவாகவே இசைத்தட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கின்றன.
காட்சிப்படுத்துதலில் வசனமும், நடிகர்களின் பங்களிப்பும், கதைப் பின்னணியும் சாதாரண குடும்பப் படங்களிலும் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான உயர்ந்த மனிதன் திரைப்படத்தைக் காண முடியும். இதன் வசனகர்த்தா ஜாவர் சீதாராமன் அடித்தட்டு மக்களின் உழைப்பைச் சுரண்டி தங்களை நிலைப்படுத்திக் கொள்ளும் மேல்தட்டு மக்களின் போலித்தனத்தை அரசியல் சொற்கள் இன்றி சாதாரண நடைமுறை பேச்சின் ஊடே அதுவும் கணவன் மனைவிக்கிடையிலான சம்பாஷனையின் வாயிலாக வெளிப்படுத்துவது தனித்துவம் வாய்ந்ததாகும்.
கடந்தகால காதல் நினைவுகளிலிருந்து விலகாது, நடைமுறை இல்வாழ்விலும் பொருந்தாது இருக்கக்கூடிய தொழிலதிபருக்கும் அவரது மனைவிக்குமிடையிலான சிறுஊடல் பெரும் மோதலாய் வெடிக்கிறது. இக்காட்சி பெரும்பாலும் குளோசப்பில்தான். நாற்காலியில் கால்மேல் காலிட்டு அலங்காரமாய் மனைவி அமர்ந்திருக்க, கோட் சூட் அணிந்த கணவன் கையில் பூவுடன் உள்ளே நுழைய காட்சி துவங்குகிறது. ந
ளினமான தோற்றமும் பாங்கினையும் கொண்டவர்கள் க்ஷண நேரத்தில் தத்தம் ஆடைகளை பரிபூரணமாக இழந்து நிர்வாணமாகின்றனர். “இதுவரைக்கும் பொய்யே சொல்லாத மாதிரி பேசறீங்களே” என்று மனைவி கூறியதும் கணவன் தன் குடும்பத்தாரின் ஏழு மில்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஐம்பதினாயிரம் ஏக்கர் வளமான நிலப்பரப்பு, கார்,பங்களா, சொத்து, சுகம், ஆஸ்தி அனைத்தும் பலரிடம் பல தருணங்களில் சொல்லப்பட்ட பொய்களினால் உருவானது என்கிறான்.
அவள் அணிந்திருக்கும் ஆபரணமும் பல்லாயிரம் பொய்களினால் ஆனது என்றும் சுட்டிக் காட்டுகிறான். தன் தாத்தா, அப்பா வழியில் ஓயாமல் ஒழியாமல் இப்படி பொய்களினால் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளதை அடுக்குகிறான். சுரண்டல் என்பதை பொய்யென மறைபொருளில் பேசும் இக்காட்சியில் இருவரது உரையாடலுடன் அவர்களது உடல்மொழியும் நுட்பமாக ஒருங்கிணைந்து புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது.
எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
