எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 36 (Enakku Cinema Konjam Pidikkum) இளமை வெறும் கனவல்ல! | பழைய திரைப்படங்களின் போக்கு | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 36: இளமை வெறும் கனவல்ல! – ராமச்சந்திர வைத்தியநாத்

இளமை வெறும் கனவல்ல..!

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 36

– ராமச்சந்திர வைத்தியநாத்

பதின்பருவத்தில் உள்ளோர் என்பதன்றி சாதாரண மனிதர்களும் ஒவ்வொரு கட்டத்திலும் இன்ப துன்பங்கள், வெற்றி தோல்விகள் என்று வெவ்வேறுவிதமான வாழ்வியல் அனுபவங்களைப் பெற்று முழுமையடைகின்றனர். பெரும்பாலானோர் இவற்றை வாழ்வின் ஒரு அம்சமாகவே கருதி இயல்பு நிலைக்கு சுலபமாகவே திரும்பி விடுகின்றனர். ஒரு சிறுபகுதியினரே இவற்றிலிருந்து மீள முடியாது துவண்டு அதிலேயே உழல்வதோடு, தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவும் தவறுகின்றனர். மனித சமூகம் காலங்காலமாகவே துன்பங்களையும் துயரங்களையும் எதிர்கொண்டு, அவற்றிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வருவது என்பது தொடர்ச்சியாக இருந்து வருகிறது என்பதை அவர்கள் அறியத் தவறுகின்றனர். குடும்ப அமைப்பு, கல்வி போன்றவை இத்தகைய மாற்றத்தில் பெரும் பங்கினைக் கொண்டுள்ளது.

வாய்மொழிக் கதைகளும், இலக்கிய வாசிப்பும் இதில் முன்னிலை பெறுகிறது. தோல்வியுற்றோர் இயல்பு நிலைக்கு திரும்புவதை பல்வேறு திரைப்படங்கள் அழுத்தமாகவே முன்வைத்திருக்கின்றன. அவநம்பிக்கையும் இதைவிட்டால் வேறுவழியில்லை என்ற கருத்தும் இருந்து வரும் சூழலில், இத்தகைய படங்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றன. அதே நேரத்தில் இதற்கு எதிரான போக்கும் அதே திரையுலகில் இருந்து வருகிறது.

ஆயினும் அவை எண்ணிக்கையில் இவற்றுக்கு சமமானவை என்பதோடு, வெற்றிச் சூத்திரங்களையும் அத்திரைப்படங்கள் கொண்டிருந்தன. இத்தகைய படங்களில் ஒன்றுதான் பெரிதும் பேசப்பட்ட கல்யாணப் பரிசு. இயல்பு நிலைக்கு திரும்ப மறுக்கும் நாயகன் புதிய வாழ்வினை துவக்கும் தன் காதலிக்கும் மறக்க முடியாத சூழலை உருவாக்கி மீளாத் துயரில் ஆழ்த்திச் செல்கிறான். ஸ்ரீதரின் ஒரு சில திரைப்படங்களின் நாயகர்கள் வாழ்வின் தோல்விகளை நிதர்சனமாக ஏற்று கடந்து செல்லத் தவறுகின்றனர். அவரது ஒரு படத்தில் குடும்ப நலனுக்காக உழைத்து தோல்வியுற்றதாக கருதிய நாயகன் அவன் மனசாட்சியே “வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை” என்று கூறிய நிலையிலும் காலங்காலமாக கடைப்பிடித்துவந்த மதத்திலிருந்து விலகி கிறித்துவ மடாலயத்தில் சாமியாராகி பிரச்னையிலிருந்து தப்பிக்கவோ விடுபடவோ முயல்கிறான். மற்றொரு படமொன்றில் காதலியின் கணவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவனோ துயரில் மரிக்கிறான்.

மனைவி இறந்த துயரிலிருந்து “போனால் போகட்டும் போடா” என பீனிக்ஸ் பறவையாய் எழுந்த வேறொரு நாயகன் மற்றொன்றில் சகோதரியின் பிரிவினால் துயருற்று வாழ்வினை இழப்பதும், “ஆறு மனமே ஆறு” என்று பாடித் திரிவதும் இயல்பை மீறிய செயல்களாகும். “இன்பம் கனவில் துன்பம் எதிரில்” என “தெளிவும் அறியாது முடிவும் தெரியாது” மயங்கிச் செல்லும் போக்கு பார்வையாளர்கள் மத்தியில் நம்பிக்கையின்மை ஏற்படுத்தி நின்றாலும் வெற்றிப்படங்களாகவே இவை வலம் வருகின்றன. கடந்த பத்தாண்டுகளுக்குள் வந்த இரு படங்கள் தோல்வி துயருக்கு அப்பாலும் அவற்றை இயல்பாகக் கொண்டு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதை சற்று ஆழமாகவே சிரத்தையுடன் வெளிப்படுத்தியிருக்கிறது. இன்றைய அத்யாவசிய தேவையான அவநம்பிக்கைக்கு எதிராக வாழ்ந்திட வேண்டும் என்ற உறுதிப்பாட்டை எவ்வித பகட்டும் படாடோபமும் இன்றி இவை வெளிப்படுத்தியிருக்கின்றன.

சமூகத்தின் அடித்தட்டு நிலை மக்களின் வாழ்வே இப்படங்களில் பேசப்பட்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் விளிம்பு நிலையில் உள்ள குடும்பத்தைச் சார்ந்த நாயகர்கள் தாங்கள் பெற்ற கல்வியினால் சமூகத்தில் அடுத்த நிலைக்கு பாய்ந்திடத் தயார் நிலையில் இருப்பவர்கள். இவர்களின் பதின்பருவ அனுபவங்கள் பிந்திய வாழ்முறையை எப்படி மாற்றியமைக்கிறது என்பதை எடுத்துச் சொல்வதாக அட்டைக் கத்தியும் மதராஸும் அமைந்துள்ளது. பல்வேறு காதல் தோல்விகள், கல்வியில் தேக்கம், எதையும் விளையாட்டுப் போக்கில் அணுகக்கூடிய செயல்பாடுகள் இப்பின்னணியில் உருவான இளைஞன் கால மாற்றத்தில் ஒரு புறம் காலங்காலமாக இருந்து வந்த நம்பிக்கைகளிலிருந்தும் பெண்கள் பற்றிய கருத்துக்களிலிருந்தும் வெளியே வருவது சர்வ சாதாரணமாக இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவே இப்படத்தினை முக்கியத்துவம் வாய்ந்த படமாக மாற்றியிருக்கிறது. தன் செயல்பாடுகள் தோல்வியுற்றாலும் துவண்டிடாது வாழ்வில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு தான் சார்ந்த சமூகத்தையொட்டிய புதிய பாதையில் சற்றே தயக்கத்துடன் பிரவேசிக்கிறான். இரண்டாவது பட நாயகனும் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிப்பவனாகத்தான் அறிமுகம் செய்யப்படுகிறான். இவன் குடும்பத்தையும் கல்விதான் மேம்படுத்தியிருக்கிறது என்பதை வெளிப்படையாகவே அறிகிறோம். தன் போக்கில் சகாக்களுடன் விளையாடி கதை பேசும் இளைஞன் கட்சி அரசியல் சூழ்ச்சிக்குள் சிக்குண்டு நண்பனை இழந்து வெளியே வருகிறான். இங்கிருந்து வேறொரு உலகத்தை நோக்கியோ எச்1பி விசாவைத்தேடியோ அவனும் அவன் துணைவியும் போவதில்லை. தாங்கள் வாழ்ந்த அச்சமூகத்திலேயே மாற்றுப் பாதையை முன்வைக்கிறார்கள்.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *