எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 37 (Enakku Cinema Konjam Pidikkum) கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே | வேற்றுமதக் காதலைத் தமிழ்த் திரையுலகு எப்படிக் கையாண்டது | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 37: கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே – ராமச்சந்திர வைத்தியநாத்

கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே..!

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 37

– ராமச்சந்திர வைத்தியநாத்

உனக்கும் எனக்கும் / ஒரே ஊர் / வாசு தேவ நல்லூர் / நீயும் நானும் /
ஒரே மதம். . . ./ திருநெல் வேலிச் / சைவப் பிள்ளைமார் / வகுப்புங் கூட…/
உன்றன் தந்தையும் / என்றன் தந்தையும் / சொந்தக் காரர்கள் /
மைத்துனன் மார்கள் / எனவே / செம்புலப்பெயல்நீர் போல /
அன்புடை நெஞ்சம் தாம் கலந் தனவே

காதல் என்பதே அன்பின், சுதந்திரத்தின், ஜனநாயகத்தின் வெளிப்பாடாக இருப்பினும் குடும்பம், சாதி. மதம் போன்றவற்றைக் கடந்து செல்வது ஒன்றும் சுலபமாக இருந்து விடவில்லை. அன்றும் சரி இன்றும் சரி அதே நிலைதான் தொடர்ந்து வருகிறது. சமூகத்தில் ஏற்றத் தாழ்வை அகற்றக்கூடிய வழிமுறைகளை தடுக்கும் சூத்திரங்களில் ஒன்றாக அகமண முறை இருந்து வருவதன் வெளிப்பாடுதான் மேற்கூறப்பட்ட மீராவின் கவி வரிகள்.

யதார்த்தத்தில் காதலில் தோல்வியுற்ற அல்லது ஏற்கப்படாத ஆண்கள் பெண்களை ஏசுவதும் வெட்டிச் சாய்ப்பதும் வழமையாகிப் போய்விட்டது, ஆயின் கடந்த காலங்களில் பெரும்பாலான திரைப்படங்களில் காதலில் தோல்வியுற்ற பெண்களைக் காட்டிலும் ஆண்களே துன்பம் மேலிட்டு சோகமாக பாடிச் செல்வதோடு, சில தருணங்களில் சாமியார்களாகவும் மாறிவிடுவதை கண்டு களித்து வந்திருக்கிறோம். இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் வெற்றி பெறாத காதல் கதைகள் வெற்றி பெற்ற திரைப்படங்களாக இருந்திருப்பது. சொத்துரிமைச் சமூகத்தில் சாதிக்குள்ளே மட்டுமின்றி மதத்திற்குள்ளேயும் இருந்து வரக்கூடிய காதல்களுக்கு எதிர்ப்பு இருப்பதை பல்வேறு திரைப்படங்கள் வெளிப்படுத்தியிருக்கிறது.

இவை பெரும்பாலும் இறுதி நிலையில் உறவுகளிடையே சுமுகமும் இணக்கமும் எற்படுவதை குறிப்பாக குழந்தைகள் பிறப்புக்குப் பின் – வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றன. இது காதலர்களிடையே நம்பிக்கையை ஊட்டக்கூடிய அம்சமாகும். இந்நிலையில் மதத்துக்கு வெளியே உள்ள காதல் உறவுகள் எந்த நிலைக்கு ஆளாகும் என்பதை எளிதில் எவரும் அறிய முடியும். இப்பிரச்னைகளை தமிழ்த் திரையுலகு பெரிய அளவில் இல்லையெனினும் சிற்சில படங்களில் வெளிப்படுத்தியிருக்கிறது. இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இரு படங்களைப் பார்க்கலாம். ஒன்று கிறித்துவ இஸ்லாமியரிடையேயான காதல். மற்றொன்று இந்து கிறித்துவரிடையேயான காதல்.

இரண்டிலுமே மாற்று மதத்தவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டவர்கள் பிறப்பால் இந்து என்றும், வேற்று மதச் சூழலில் வளர்ந்தவர்கள் என்றும் நிறைவுக் காட்சி வெளிப்படுத்தினாலும் இவர்களிடையேயான காதலும் அதை அவர்களைச் சுற்றியுள்ளோர் எப்படி இதை ஏற்கிறார்கள் என்பதும் சுவாரசியமானது. ஐம்பதுகளின் இடையிலும் அறுபதுகளின் துவக்கத்திலும் வெளியான இரு திரைப்படங்கள் வேற்று மதங்களுக்கிடையிலான காதலை சுவாரசியமாகவும் ஜனநாயக பூர்வமாகவும் மிகையுணர்வின்றி கையாண்டிருப்பது என்பது ஆச்சரியமான அம்சமாகும்.

தத்தம் பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய வேலையின் பொருட்டு இந்து யுவனும் கிறித்துவ யுவதியும் கணவன் மனைவியாக நடிப்பதாக தீர்மானித்து ஒரு இந்து குடும்பம் நடத்தும் கிராமத்து பள்ளியில் பொறுப்பேற்கின்றனர். பின்னர் நடைமுறையில் மோதல்களுக்கிடையே காதல் மலர்கிறது. இறுதியில் பிறப்பால் அவள் இந்து என்பது தெரியவருகிறது. இருவரும் மணம் செய்து கொள்கின்றனர். இதுதான் நாகிரெட்டி சக்கரபாணி தயாரிப்பில் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வெளியான மிஸ்ஸியம்மாவின் கதைச்சுருக்கம்.

பல்வேறு கட்டங்களில் பெண் மாற்று மதத்தைச் சார்ந்தவர் என்பதை சுற்றியுள்ளோர் உணர்ந்த போதிலும் எப்படி அதை அங்கீகரிக்கிறார்கள் என்பதை நளினமாக நகைச்சுவையுடன் பிரசாத் காட்சிப்படுத்தியிருந்தார். தங்களுக்கிடையிலான காதலின் பொருட்டு நடைமுறை பழக்க வழக்கங்கள் வழிபாட்டு முறைகள் வேறுபட்டிருப்பினும் ஒருவருக்கொருவர் அவற்றை ஏற்பது மட்டுமின்றி பள்ளிக்கூடத்தை நடத்தக்கூடிய குடும்பமும் சகிப்புத் தன்மையுடன் மனித நேயம் கொண்டவர்களாக இருப்பது ஆழமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால்தான் எழுபது ஆண்டுகளுக்குப் பின்னரும் பேசக்கூடிய படமாக அது இருந்து வருகிறது.

இஸ்லாமியக் குடும்பத்தில் வளரக்கூடிய ஆணுக்கும் கிறித்துவ குடும்பத்தில் வளரக்கூடிய பெண்ணுக்கும் இடையிலான காதலை பீம்சிங் கைவண்ணத்தில் வெளியான பாவமன்னிப்பு சற்றே அமைதியாகவே சொல்கிறது. சாதாரணமான உழைக்கும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு இணைய வேண்டும் என்பதையும் வலுவாகவே காட்சியமைப்புகள் வெளிப்படுத்துகிறது. புவியில் நூறு வகை பறவை வரும் கோடி வகை பூ மலரும் என்பதோடு கடவுளில் பேதமில்லை கடலுக்குள் பிரிவுமில்லை என்பதையும் உணர்த்துகிறது. மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய் கூடுவோம் என்று அழைப்பு விடுக்கிறது. வேற்று மதங்களுக்கிடையிலான காதலை மட்டுமின்றி மக்கள் ஒற்றுமையையும் அது வலுவாகவே பேசுகிறது. இது இன்றைய தேவையும் கூட.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *