எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 39 (Enakku Cinema Konjam Pidikkum) அறிவில்லார் ஆதரவை அன்பு கொண்டு தேடு | ரத்தக்கண்ணீர் படத்தில் வரும் எம்.ஆர்.ராதாவின் அந்த 'வசன நடை' | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 39: அறிவில்லார் ஆதரவை அன்பு கொண்டு தேடு – ராமச்சந்திர வைத்தியநாத்

அறிவில்லார் ஆதரவை அன்பு கொண்டு தேடு

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 39

– ராமச்சந்திர வைத்தியநாத்

என்னதான் நவீன அறிவியலின் பலாபலன்களை பயன்படுத்திக்கொண்டு தமிழ்த் திரையுலகு வெகுவாக முன்னேறி வந்தபோதிலும், உள்ளடக்கத்தைப் பொறுத்தமட்டில் நிலப்பிரபுத்துவ விழுமியங்களையும் அறிவியலுக்கு பொருந்தாத அம்புலிமாமா கதைகளையும் உயர்த்திப்பிடிப்பது என்பது இன்னமும் தொடர்ந்து வருகிறது. சென்ற நூற்றாண்டைப் போன்று அப்பட்டமாக இல்லாவிடினும், மறைபொருளாக ஒப்பனையோடு காட்சியளிக்கிறது.

மேலும் பெண்கள் பற்றிய நடைமுறை மட்டுமின்றி சித்தரிப்பும் விவாதிக்க முடியாத அளவில்தான் இருக்கிறது. எங்கேயோ எப்பொழுதாவது ஒரு பெண்ணை உயர்த்திப் பிடிக்கையில் அதே தருணத்தில் மற்றைய பெண்களை துச்சமாக காட்சிப்படுத்துவதும் இருந்து வருகிறது. திரையுலகைச் சார்ந்து இருந்து வரக்கூடிய சக பெண்கலைஞர்களுக்கு அநீதி இழைக்கப்படுகையில் கூட நடுக்குவாத நோயுற்றவர்களைப் போன்று பெரும்பாலான ஆண்கலைஞர்கள் குரலையோ அல்லது கையையோ உயர்த்துவதில்லை என்பதோடன்றி அத்தருணங்களில் விரல்களைக் கூட அசைப்பதில்லை.

“பெண் பித்தினால் ஆண் சீரழிந்தான்” என்ற ஒற்றைவரியை மூலமாகக் கொண்டு சென்ற நூற்றாண்டின் மத்தியில் பெரிதும் விவாதிக்கப்பட்ட சமூகப் படங்களில் ஒன்றுதான் ரத்தக்கண்ணீர். திருவாரூர் தங்கராஜு எழுதிய நாடகம் எம்.ஆர்.ராதாவினால் மேடையேற்றப்பட்டதோடு, பின்னர் அவரே பிரதான பாத்திரத்தில் நடிக்க, நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் திரைப்படமாகவும் வெளியிடப்பட்டது.

திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்னரும், ராதா தொடர்ந்து இந்த நாடகத்தை நடத்தி வந்திருக்கிறார் என்பது மக்களிடையே ரத்தக் கண்ணீருக்கு இருந்த வரவேற்பினையே வெளிப்படுத்துகிறது. பின்னாளில் ராதாவின் புதல்வர்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்நாடகத்தை நடத்தி வந்திருக்கின்றனர். கதை வசனம் எழுதியவரும், பிரதான பாத்திரத்தில் நடித்தவரும் பகுத்தறிவுக் கொள்கைகளை முழு மூச்சாய் கொண்டவர்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 39 (Enakku Cinema Konjam Pidikkum) அறிவில்லார் ஆதரவை அன்பு கொண்டு தேடு | ரத்தக்கண்ணீர் படத்தில் வரும் எம்.ஆர்.ராதாவின் அந்த 'வசன நடை' | www.bookday.in

ஒரு தனிப்பட்ட அல்லது பிரத்யேகமான அனுபவத்தையோ நிகழ்வினையோ சமூகத்தின் பொதுமைப் பண்பாக சித்தரிப்பது என்பது திரையுலகில் இருந்துவரக்கூடிய குணாம்சமாகும். அவ்வழியில் வெளியான முதலும் முன்னோடியுமான படமென்றுகூட ரத்தக்கண்ணீரை குறிப்பிட முடியும்.

சமூகத்தில் பெண்களுக்கு உரிய பங்கு அளிக்கப்படாத நிலை. பால்ய திருமணங்கள் எல்லா சமூகத்திலும் நடைபெற்று வரும் காலம். தேவதாசிகள் என்போர் உயர்சாதி நிலப்பிரபுக்களின் செல்வந்தர்களின் ஆதரவிற்கும் சகலவிதமான அச்சுறுத்தல்களுக்கும் உட்பட்டிருந்த நேரம். என்னதான் நுண்கலைகளில் பயிற்சி பெற்று மக்களை மகிழ்வித்து வந்தாலும் அவர்களை இழிவாக கருதுவேதோடு பேசியும் வந்த தருணம்.

கணவனால் கைவிடப்பட்டு அபலைகளாகவும் கைப்பெண்களாகவும் வீதிகளில் தள்ளப்பட்டு முறைதவறிய வாழ்வினை மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளான கணக்கற்ற பெண்களைக் கொண்ட சமூகம் இவை குறித்து வெளிப்படாத கண்ணீர் செல்வத்தை முறைதவறிய வாழ்முறையால் இழந்த ஏதோ ஒருவனுக்காக அதையே சமூகத்தின் பொதுநிலையாக சித்தரித்து ரத்தக்கண்ணீர் விடுவது என்பது விசித்திரமானது என்பதோடன்றி ஆணாதிக்கத்தின் உச்சமே. அதே நேரத்தில் இறுதியில் நோய்வாய்ப்பட்டவன் மீட்சியற்ற நிலையில் தன்னால் ஒதுக்கித் தள்ளப்பட்ட தன் மனைவியை நண்பனுக்கு தாரமாக்குவது என்பது துணிச்சலானது. அன்றுமட்டுமின்றி இன்றும் சமூகத்திற்கு பெருத்த அதிர்வினை அளிக்கும் காட்சியென்றும் கூற முடியும்.

தேவதாசி முறை என்பது பெண்களின் நிலை எனினும் அத்தகைய வாழ்முறையை தங்களுக்காக வடிவமைத்தது ஆண்களே என்ற அடிப்படைகூட அதில் வெளிப்படவில்லை என்பது வினோதமானது. தவிர நோயுற்ற பெண்களோடு உடலுறவு கொள்பவன் பால்வினை நோயால்தான் பாதிக்கப்படுவானேயொழிய தொழுநோயாளியாகமாட்டான். தவிர தொழுநோயிலிருந்து மீளவும் முடியும். ஆனால் திரைப்படமே இந்த நோய்பாதிப்பின் மேல் கட்டமைக்கப்பட்டிருந்தது. இதர சினிமா சமாச்சாரங்களும் வழக்கமான ராதாவின் இலக்கணம் மீறிய நடிப்பும் இதை அன்றைய தினம் வெற்றிப்படமாக்கியிருந்தாலும் இப்படம் காலப்பொருத்தமற்று அறிவியல் கருத்துக்களுக்கு புறம்பாக இருக்கிறது.

அறிவியலுக்கு அப்பாற்றபட்ட மற்றொரு சமாச்சாரத்தையும் தமிழ் திரையுலகு அடிக்கடி கையாண்டிருக்கிறது. புதைகுழி பற்றிய உண்மைகளுக்கு புறம்பான தகவல்கள் நெஞ்சிருக்கும் வரை, மெல்லத் திறந்தது கனவு போன்ற படங்களில் அழுத்தமாக காட்சிப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இது ஜன சமூகத்தில் மூட நம்பிக்கைகளுக்கு வழி வகுக்கிறது என்பதை அவர்கள் அறியத் தவறுகிறார்கள் அல்லது அதை விதைக்கிறார்கள் என்றுதான் கொள்ள முடியும்.

அவ்வாறே சற்றே இருமிய நாயகனோ அல்லது நாயகியோ வாழ்வே மாயமென நோயுற்று மரிக்கும் அல்லது மரணப்படுக்கைக் காட்சிகளுக்கும் இங்கே பஞ்சமில்லை. இதில் வேறுபட்டு நம்பிக்கையளிக்கும் விதத்தில் நம்மவர் படக் காட்சியையும் குறிப்பிடாது இருக்க முடியாது.

இறுதியாக ஒரு நடைமுறை சமாச்சாரம். ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதி சி.எஸ்.ஜெயராமன் இசையமைப்பில் எம்.எல்.வசந்தகுமாரி பாடிய பாடல் வித்தியாசமானதொன்றாகும். “கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச்சாத்தடி” என்ற காலப்பொருத்தம்மிக்க பாடல் வரிகள் வேறொரு கேள்வியை நுட்பமாக நகையுணர்வோடு எழுப்புகிறது. திருப்பணிகள் வேறின்றி ஓய்ச்சல் ஒழிவாக இருவரும் இருக்கையில் இராம.இரவிக்குமார் இதையும் கீர்த்தி வாய்ந்த நீதிமான் ஸ்ரீமான் ஸ்வாமிநாதனிடம் எடுத்துச் செல்லலாம் என்றே தோன்றுகிறது.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *