மாமியார்களும் மருமகள்களும்
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 40
– ராமச்சந்திர வைத்தியநாத்
“வெடிக்கும் ஸ்டவ்வுக்குக் /கூடத் தெரியும் / யார் மாமியார்/யார் மருமகள் என்று”
அறுபதுகளில் சிற்றிதழ் ஒன்றில் வெளியான கவிதை இது. வரதட்சணை தராத, தர மறுக்கக்கூடிய மருமகள்களை போட்டுத் தள்ளும் உத்திகளில் ஒன்றாக அன்றைய தினம் ஸ்டவ் வெடிப்பும் இருந்ததினால் பிறந்த கவிதை இது. நிஜத்தை வெளிப்படுத்தினாலும் அதிலும் பாதிதான் இருக்கிறது. வரதட்சணை பிரச்னையில் ஆண்களுக்கு கிஞ்சித்தும் பங்கில்லை என்ற பொதுப்புத்தி நம்மிடையே பரவலாக இன்னமும் இருந்து வருகிறது. அதன் அடிப்படையில்தான் அவளும் பெண்ணாக இருப்பினும் மாமியாரே இந்த கொடுமைக்கு காரணியாக சித்தரிக்கப்பட்டு வருவது இன்றும் தொடர்ந்து வருகிறது.
சொத்துரிமையும், ஆணாதிக்கமும் உச்சநிலையில் இருந்துவரும் சமூகத்தில் பெண்கள் ஆண்களின் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி பழியை ஏற்கும் நிலை பல கட்டங்களில் இருந்து வருகிறது. இவ்வாறே கணவன் இறந்ததும் மனைவியை சிதையில் தள்ளிவிட்டுவிட்டு சதிமாதாவாக பூசிப்பதும் இந்த புண்ணிய பூமியில் காலங்காலமாக நடைபெற்றுவந்ததுதான். இத்தனைக்கும் விதவைகளுக்கு ஏன் பெண்களுக்கே சொத்து பத்தில் உரிமை இல்லாத நிலை. இதே வழியில்தான் வரதட்சணை கொடுமை இந்த நூற்றாண்டிலும் வேறுபட்ட விநோத வடிவங்களில் செய்தியாக வருவதோடு மருமகள்கள் கொலை செய்யப்படுவதும் நிகழ்ந்து வருகிறது. அப்படியாயின் அன்றாட வாழ்வில் மாமியார்-மருமகள் பிரச்னை என்பதே இல்லையா என்ற கேள்வி எழக்கூடும். ஒரு விதத்தில் கிட்டத்தட்ட ஆயின் வேறு வடிவில் அலுவலகங்களில் இருந்து வரக்கூடிய சீனியர் ஜூனியர் பிரச்னை போன்றதுதான் இது. ஆயின் இருவர்க்கிடையே புரிதலை ஏற்படுத்துவதிலும், சிக்கலை அடுத்த நிலைக்கு தள்ளாதிருப்பதிலும் குடும்பத்திலுள்ள இதர ஆண் உறுப்பினர்கள் உள்நோக்கம் கொண்டு முன்னெடுப்பினை கொள்ளாததுதான் பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறது.
மாமியார், மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே, மாமியார் மெச்சிய மருமகள் என்றெல்லாம் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. தவிர மாமியாரின் முட்டாள்தனத்தை விவரித்து படைப்பினை உருவாக்கி சாகித்திய அகாதெமியின் பரிசினை பின்னாள் மாமியார் சகலகலாவல்லி பி.பானுமதி பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் திரைப்படங்களில் ஆண்களின் ஆதாயத்திற்கு வகை செய்யும் மாமியார் மருமகள் முரண்பாடுகள் மையம் கொள்கிறதேயொழிய அவர்களிடையே இணக்கத்தையும் பரஸ்பர அன்பையும் ஏற்படுத்தும் படங்கள் அபூர்வமாகவே வருகின்றன. இதிலும் வித்தியாசமாக மகள் இறந்த நிலையிலும் அதே குடும்பத்தில் நிலைகொண்டு மருமகனையும் அவன் குடும்பத்தைச் சார்ந்தோரையும் அதட்டி உருட்டும் மாமியாரை பாலசந்தரே பூவா தலையா போட்டு நிறுத்தியிருக்கிறார்.
இதே பாலசந்தரின் பெரும்பாலான படங்கள் பெண்களின்பால் பரிவு கொண்டதாகவே அமைந்திருக்கின்றன. இவற்றில் ஒன்றுதான் அவர்கள் எனும் திரைப்படமும். காதல் கொண்டவனை கைப்பிடிக்கமுடியாமல் மற்றொருவனை மணம் புரிந்தவள் சகலவிதத்திலும் கொடுமைக்கு ஆட்படுத்தப்படுகிறாள். மணவிலக்குப் பெற்று காதலனையே திருமணம் செய்ய முனைப்பு கொள்வதும் கொடுமைக்கார முன்னாள் கணவனால் தந்திரமாக தடுக்கப்படுகிறது. மற்றொரு காதல் முயற்சியையும் தவிர்த்து தன்னந்தனியாய் கைக்குழந்தையுடன் வேறுபாதையில் செல்லத் தீர்மானிக்கிறாள். ஏற்கனவே மாமியார் என்ற அறிமுகமின்றி தனக்கு உற்ற துணையாக இருந்தவள் இம்முறையும் அவளுடன் இணைகிறாள். இருவரும் சேர்ந்து புதிய பயணத்தை அதுவும் எந்த ஆண் துணையுமின்றி தொடர்கிறார்கள்.
தன் மகன் வேற்று சாதிப் பெண்ணை மணம் புரிந்தமையால் வழக்கம்போல் குடும்பத்தார்கள் அவனை விலக்கி வைக்கின்றனர். விபத்தொன்றில் அவன் இறந்த பின்னர் அவள் வேறிடத்தில் வளர்ப்பு மகனுடன் வாழ்கிறாள். அதே விபத்தில் மனைவியை இழந்த மற்றொருவனுடன் யதேச்சையான நட்பு ஏற்படுகிறது. இப்போது மாமியார் வருகிறார் விதவைக் கோலத்தில். தன்னுடன் இருக்கும்படி அழைக்கிறாள். காதலனின் பெற்றோரும் பரிவு காட்டி மறுமணத்தை ஆதரிக்கும் நிலையில், அவர்களிடமிருந்து சொல்லாது விலகிச் செல்கிறாள். பின்னர் மற்றொரு யதேச்சையான சந்திப்பு, அவன் இவர்கள் குடும்பத்தினரை சந்திக்கிறான். அவன் மீது நேசம் கொண்ட சிறுவன் உற்சாகம் கொள்கிறான்.
ஆயினும் அவனை சந்திக்கும் வாய்ப்பு நேரிடாதது சிறுவனுக்கு வருத்தத்தை அளிக்கிறது. காதலன் மற்றும் அவன் பெற்றோருடன் தானும் தாயும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்திடலாம் என்று ஏற்கனவே அவள் சொன்னது பொய்த்துப் போனதை குமுறலுடன் வெளிப்படுத்துகிறான். அந்த ஒரு க்ஷண நேரத்தில் ஆசார அனுஷ்டானங்களில் மூழ்கிக்கிடக்கும் அந்த பிராம்மண விதவை மாமியார் அனைத்தையும் புரிந்து கொள்கிறாள். அவளே காதலனை தனது மருமகளுடன் சேர்ந்து வாழ அழைப்பு விடுக்கிறாள். திணிக்கப்பட்டதாக இன்றி ஒரு ரிதத்துடன் அமைந்த இந்த இறுதிக் காட்சியை எவராலும் மறக்க முடியாது. சமூகம் செல்லரித்துப் போய்விடவில்லை என்ற பாராட்டாதும் இருக்க முடியாது.
எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

