நாம் என்ன ஈமுக் கோழிகளா?
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 41
– ராமச்சந்திர வைத்தியநாத்
வெகு ஆண்டுகளுக்கு முன்னர் கொலைக் குற்றவாளி ஒருவர் தான் கொலை செய்வதற்கான வழிமுறையை தமிழ்திரைப்படமொன்று அளித்ததாக நீதிமன்றத்தில் கூறினார். அச்செய்தி அன்னாளில் பரபரப்பாக பேசப்பட்டதோடு, சமூகம் கெட்டழிந்து நிற்பதற்கு திரைப்படங்களே பிரதான காரணம் என்ற தொனியில் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இத்தகைய சீரழிவுகளுக்கு திரைப்படங்கள்தான் காரணம் என்று அவ்வப்போது பலரும் கருத்து தெரிவிப்பதையும், அதே நேரத்தில் அதன் படைப்பாக்கத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சமூக நிகழ்வுகளின் பாதிப்பில்தான் தாங்கள் அத்தகைய திரைப்படங்களை உருவாக்குவதாக கூறிவருவதையும் கண்டுவருகிறோம். பரந்துபட்ட வீச்சினை கொண்டிருப்பதோடு காட்சி ஊடகமாக இருப்பதினாலும் இத்தகைய கருத்துக்கள் பரவலாக இருந்து வருகிறது.
அதே மக்களின் வாழ்வியலில், பண்பாட்டியலில் அசைவுகளை ஏற்படுத்துவதோடு சமூகத்தில் பதற்றத்தை தணித்து இணக்க நிலையை உருவாக்குவதிலும் அதற்கே உரிய வழிமுறையில் பங்கினை கொண்டிருந்திருக்கிறது. இது நாம் எதிர்பார்க்கும் விதத்தில் அல்லது பெருமளவில் இல்லாமல் இருந்திருக்கலாம். அதே தருணத்தில் திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களே தங்கள் படைப்புகள் பற்றிய எதிர்மறையான கருத்துக்களையும் செயல்பாடுகளையும் அவர்களே மேற்கொள்வது என்பது அத்திரைப்படங்களை ஓரளவு உயர்த்திப்பிடிக்கும் வணிக உத்தியாக இருந்து வருவதையும் இது பல்வேறு வழிமுறைகளில் நடைபெற்று வருவதோடு தொடர்ந்து வருவதையும் கூர்ந்து காண்கையில் அறிய முடியும். ஒரு திரைப்படத்தினாலேயே கெட்டழியக்கூடிய சமூகம், அதே போன்று சமூகத்தில் நிகழக்கூடிய ஏமாற்று வேலைகள் தோலுரிக்கப்பட்டு அவலம் தொடர்ந்த போதிலும் அதே சமூகம் ஏன் எச்சரிக்கையாக இருக்கத் தவறுகிறது என்ற கேள்வி இங்கே எழுகிறது.
மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனும் சங்கிலித் தொடர் வணிகம், முதலீட்டிற்கு சாத்தியமில்லாத அளவில் ஈவினையோ வட்டியையோ அளித்தல் அல்லது இத்தகைய வழிமுறைகளில் வனங்களை உருவாக்கி பெருந்தொகையை திரும்பப்பெறுவது போன்ற சூதான வழிமுறைகள் காலங்காலமாகவே நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்ற எவரும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது என்பதை அனைவரும் அறிவர். எனினும் இச்சமூகம் இம்மாயச் சுழலில் சிக்கிக் கொண்டு தங்களின் மகத்தான உழைப்பினை இழந்து வருகிறது.

இது பற்றி அவ்வப்போது படங்களில் துண்டு துக்காணி காட்சிகள் இழந்தோரை இகழ்ந்திடும் வகையில் இடம்பெற்று வந்தாலும், இத்தகைய மோசடிகளை வெளிப்படையாக நேரடியாகவே தோலுரித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்த படம்தான் சதுரங்க வேட்டை. மக்களிடம் பணம் பறிப்பதற்கான உத்திகள் மறைபொருளாக இல்லாது நேரடியாக இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சங்கிலித் தொடர் வணிகம், மண்ணுளிப் பாம்பு, சாத்தியமில்லாத விலை குறைப்பு, சித்திரக் குள்ளர்கள், ஈமுக் கோழி, அரிசியை இழுக்கும் கோபுர கலசம் ஆகிய பொருட்களின் விற்பனையில் சமூகத்தில் பலநிலைகளில் உள்ளோர் தங்களின் சமூகநிலைக்கேற்ப இவற்றில் ஈடுபட்டு தங்கள் வாழ்நிலையை அழித்துக் கொள்கின்றனர் என்பது விரிவாகவே, அதே நேரத்தில் எள்ளலுடன் காட்சிப் படுத்தப்பட்டிக்கின்றன.
“கருணையினாலன்றி ஆசையைத் தூண்டுவதன் வாயிலாகத்தான்” அனைவரும் இந்த மாயவலையில் சிக்கிக் கொள்கின்றனர். “கியூவிலே நிக்கப் போறியா இல்ல கியூவே உங்க முன்னாடி நிக்கணுமா” என்ற வார்த்தையை சுயமுன்னேற்ற அறமாக எடுத்துக் கொள்ளக்கூடிய இளைஞர்களும், சாதாரண மண்ணுளிப் பாம்புக்கு இருநூறு மொழிகள் தெரியுமென்பதையும், சித்திரக்குள்ளர்களை வைத்திருப்பதனால் ஆதாயம் பெறமுடியும் என்பதையும் ஏற்கக்கூடிய இடைநிலை வர்த்தகர்களும் மற்றோரும், ஈமு கோழிக்குஞ்சுகளில் பல லட்சங்கள் முதலீடு செய்த கிராமப்புற விவசாய சமூகமும், சாதாரண தாமிர கலசத்தினால் தனது லௌகீக வாழ்வுப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்று கருதக்கூடிய மேல்தட்டு தொழிலதிபர்களும் – ஆக இச்சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இதில் தப்பிக்கவில்லை என்பதை அறிகிறோம். “குற்ற உணர்ச்சி இல்லாம செய்யற எதுவும் தப்பு இல்லை”, “ஒருத்தன் ஏமாற்றினால் அவனை எதிரியாக நினைக்காது அவனை குருவாக ஏற்க வேண்டும்”, “மணி ஈஸ் அல்டிமேட்” போன்றவற்றை தாரகமந்திரமாக கொண்ட நாயகனின் இறுதிச் செயல்பாடுகள்தான் திரைப்படத்தை காண்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
அனைத்து தரப்பிலும் இத்திரைப்படம் பட்டவர்த்தனமாக பரவலாக சென்று சேர்ந்த பின்னணியில் அதுவும் சமகாலத்தில், இந்த ஓரிரு ஆண்டுகளில் “வீடியோ பார்த்தால் பணம் பெறலாம்” எனும் நூதன முயற்சியில் 69 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர் என்பதும் அதன் உரிமையாளரை கைது செய்யலாகாது என்று பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டதும் எதை நமக்கு உணர்த்துகிறது?
எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 35: உயர்ந்த மனிதர்களின் பொய்கள் – ராமச்சந்திர வைத்தியநாத்

