எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் (Enakku Cinema Konjam Pidikkum) 43 - யார் உச்ச நட்சத்திரம்? | வணிக மதிப்பை விட நடிப்புத் திறமையே உயர்ந்தது | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 43: யார் உச்ச நட்சத்திரம்? – ராமச்சந்திர வைத்தியநாத்

யார் உச்ச நட்சத்திரம்?

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 43

– ராமச்சந்திர வைத்தியநாத்

நாலைந்து வாரங்களுக்கு முன்னர் மலையாள நடிகர் சீனிவாசன் அவர்கள் மரணமடைந்தார் என்பது பரவலாக அறியப்பட்ட செய்தியாகும்.  காலங்காலமாக வெள்ளித்திரை  நாயகனுக்கான வரையறை செய்யப்பட்டுவந்த  சாமுத்ரிகா லக்ஷண சாஸ்திர நியதிகளையெல்லாம் தகர்த்து  திரையுலகில் நீடித்து வந்திருக்கின்றார்.

நடிகர் மட்டுமின்றி பன்முகத்திறமை வாய்ந்த அவரை திரையுலகு சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையென்றுதான் சொல்ல வேண்டும்.  அவர் திறமை வெளிப்பட்ட  சிறப்பு வாய்ந்த படங்களில் ஒன்றுதான் சிதம்பரம்.  தொண்ணூறுகளில் வெளிவந்த அரவிந்தனின் இப்படத்தில் ஸ்மிதா படேலின் கணவராக நடித்திருந்தார்.  தன் உடமை பறிக்கப்படுகிறது என்ற ஆதங்கத்தின் பேரில் இயலாமையின் காரணமாக தற்கொலையை நோக்கிச் செல்லும் முனியாண்டியாக நடித்திருந்தார்.  பின்னாளில் பிரபலமான கோபி படம் முழுமையும் வந்தாலும், சீனிவாசனின் பாத்திரப்படைப்பும்  தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது நடிப்பும் அழுத்தமாகவே பதிவாகியிருந்தது. அவரது திறனை வெளிப்படுத்தக்கூடியவிதத்தில் எண்ணிக்கையில் கூடுதலாக படங்கள் வெளிவராதது ஆச்சரியமே.

இதேபோன்று இந்தியத் திரையுலகில் பல்வேறு காலகட்டங்களில் பலரும் தங்களின் சிறப்பான திறனை வெளிப்படுத்திய போதிலும் அவர்கள் முழுமையாகவோ   தொடர்ச்சியாகவோ பயன்படுத்திக் கொள்ளப்பட்டதில்லை.  இத்தனைக்கும்  இவற்றில் ஓரிருவர் தேசிய அளவில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமானது.    தேர்வு செய்யப்பட்ட கதைக்கும்  படமாக்கப்பட்ட விதத்திற்கும் பதிலாக உச்ச நட்சத்திரம்தான் ஒரு படத்தை தாங்கிப் பிடிக்கிறார் என்ற கருத்து துவக்ககாலந்தொட்டே வலுவாக இருந்து வருவதன் பேரில் இப்போக்கு இன்னமும் தொடர்கிறது.

எழுபதுகளின் பிற்பகுதியில்  வெளிவந்த படங்களில் எம்.டி வாசுதேவன் நாயர் இயக்கிய நிர்மால்யம் குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும். இதில் மையப் பாத்திரத்தில் வெளிச்சப்பாடாக பி.ஜே.அந்தோணி நடித்திருந்தார். படத்தை தூக்கி நிறுத்தியதில் அவருக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது.  தவிர இன்றைய இந்தியச் சூழலில் இப்படத்தை வெளியிடுவதை கனவில் கூட கற்பனை செய்ய முடியாது.

அதே காலகட்டத்தில் கடஷ்ராத்தா மூலம் கன்னட திரையுலகில் பிரவேசித்த கிரீஷ் காஸரவல்லி ஓய்வு பெற்ற அரசு கடைநிலை ஊழியர் தன் ஓய்வூதியத்திற்காக அல்லாடுவதை தபரண கதாவில் சித்தரித்திருந்தார்.  அரசு அதன் நிர்வாகம் மீதான கடுமையான விமரிசனத்தை இப்படம் கொண்டிருந்தது.  தமிழிலும் இதர மொழிகளிலும் துண்டு துக்காணி பாத்திரங்களில் நடித்து வந்த சாருஹாசன் தபர ஷெட்டியாக மாறியிருந்தார்.

இதே எழுபதுகளில்  பி.வி.கராந்த் இயக்கத்தில் சோமன துடி கன்னட திரைப்படம் வெளியானது. சிவராம கராந்தின் கதை இது.  இன்றும் இந்திய கிராமங்களில் நிலவிவரக்கூடிய தீண்டாமை, நிலம், கொத்தடிமை, மதமாற்றம் போன்ற பிரச்னைகளை நுட்பமாக இப்படம் கையாண்டிருந்தது. இதில் சோமாவாக வாசுதேவ ராவ் நடித்திருந்தார்.

இதே வாசுதேவ ராவ் பின்னாளில் மிருணாள் சென்னின் ஒக ஊரி கதாவிலும்,  சௌந்தர்யா தயாரிப்பில் காஸரவைல்லி இயக்கிய த்வீப்பிலும்  மையப்பாத்திரத்தை ஏற்றிருந்தார். இரண்டிலுமே அவர் திறனை சொல்லி மாளாது.

பி.ஜே.அந்தோணி, சாருஹாசன், வாசுதேவ ராவ் மூவருமே சிறந்த நடிகருக்கான தேசிய அளவிலான விருதினைப்  பெற்றவர்கள்.  ஆனால் இவர்களை திரையுலகு பொருத்தமான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சீற்றம் கொண்ட சோமாவாகவும்,  இந்த அசமத்துவ சமூகத்தில் உழைக்க மறுத்து மது அருந்தி பொழுதைக் கழிப்பவராகவும்,  காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு அகல மறுப்பவராகவும் அழுத்தமாக தன்னைப் பதிவு செய்த வாசுதேவராவ் விடலைப் பசங்களை வைத்துக் கொண்டு படகில் சரக்கு கடத்துவதோடன்றி “நாலு பேருக்கு உதவினா எதுவும் தப்பில்லை” என்று வசனம் பேசுவதை  தமிழ்ப்பட வினோதங்களில் ஒன்றாக மட்டும் கருதிட முடியாது.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *