எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் (Enakku Cinema Konjam Pidikkum) 44 - இது தாண்டா போலீஸ்..! | தமிழ் போலீஸ் திரைப்படங்கள் | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 44: இது தாண்டா போலீஸ்..! – ராமச்சந்திர வைத்தியநாத்

இது தாண்டா போலீஸ்..!

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 44

– ராமச்சந்திர வைத்தியநாத்

கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு காவல் துறையின் ஒத்துழைப்போடு மாநில அரசு தயாரித்த செய்திப் படமொன்று தமிழ்நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் பரவலாக திரையிடப்பட்டது. ஏழெட்டு நிமிஷங்கள் வரை ஓடக்கூடிய இதில் சிவாஜி கணேசனும் கீர்த்தி வாய்ந்த அன்றைய ஐஜி அருளும் நடித்திருந்த ஞாபகம். போலீஸ் மீதுள்ள எதிர்மறையான கருத்துக்களை மாற்றிடும் நோக்கில் ‘உங்கள் நண்பன்’ என்றே இச்செய்தித் படத்திற்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது. நடைமுறையில் அரசின் ஒடுக்குமுறைக் கருவிகளுள் ஒன்றாக போலீஸ் இருப்பினும், அத்துறையை சீவி சிங்காரிக்கும் வேலையாக இது அமைந்திருந்தது.

இதில் மற்றொரு அம்சம் சென்ற நூற்றாண்டு வரை திரைப்படங்களில் போலீஸ் பற்றிய சித்தரிப்பு என்பது நடைமுறைக்கு எதிராகவே இருந்து வந்தது. புகழ் பெற்ற நடிகர்கள் நேர்மை கடமை தவறாத போலீஸ் உயர்அதிகாரிகளாகவும், நகைச்சுவை நடிகர்கள் லஞ்ச லாவண்யத்தோடு முட்டாள்தனம் பொருந்திய சாதாரண போலீஸ்காரார்களாகவும் இருப்பது வழக்கம். உச்சநட்சத்திரங்களான சிவாஜி, எம்ஜிஆர், ஜெயசங்கர் போன்றோர் மட்டுமின்றி காதல் மன்னனாக பெயர் பெற்ற ஜெமினியும் இலக்கணம் மீறாத போலீஸ் அதிகாரிகளாக நடித்திருக்கின்றனர். இப்பட்டியலில் மேஜர் சுந்தரராஜன் பெயர் இல்லையேல் அது நிச்சயம் நிறைவடையாது. இன்னும் சொல்லப்போனால் போலீசுக்கே உரிய மிடுக்கினை அவர்தான் வெளிப்படுத்தியிருந்தார். எம்.என்.நம்பியார் கூட சில படங்களில் போலீசாக நடித்ததாலும், உளவுத் துறை அதிகாரியாக பத்து வேடங்களில் திகம்பர சாமியாரில் அசத்தியிருக்கிறார்.

இத்தகையோர் போலீஸாய் நடித்த படங்களெல்லாம் அத்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்களை முழுமையாக எடுத்துக் கொண்டதாக கூற முடியாது. மக்களை அடக்கி ஒடுக்கும் கருவியாக இருந்து வரக்கூடிய யதார்த்த சித்தரிப்பும் அவற்றில் கிடையாது. மொத்தத்தில் அவர்களின் குடும்பப் பிரச்னைகளை போலீஸ் சீருடையில் கையாண்ட படங்களாகத்தான் இவை இருந்து வந்திருக்கின்றன. இதில் இன்னொரு வேடிக்கை போலீஸ்காரன் மகள். சேவா ஸ்டேஜுக்காக பி.எஸ்.ராமையா எழுதிய நாடகம் ஸ்ரீதரின் இயக்கத்தில் திரைப்படமாகியது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற பி பி சீனிவாஸ் எழுப்பிய கேள்வியைத்தவிர போலீஸ் குடும்பத்து பெண்ணிண் காதல் தோல்வியை சொல்லியதேயொழிய, போலீசுக்கே உரிய வேறு பிரத்யேக பிரச்னைகளையோ போலீஸின் செயல்பாடுகளையோ கையாண்டதில்லை.

சிறந்த போலீஸ் தமிழ் திரைப்படங்கள் | Best Police Movies In Tamil. - YouTube

இந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து போலீஸ் பற்றிய பாரம்பரியமாக இருந்து வந்த சித்தரிப்பு அடியோடு மாறிப்போய் விட்டது. அவர்கள் பற்றிய ஒப்பனையும் அதே நேரத்தில் ஒடுக்குமுறை கருவி என்ற சித்தரிப்பும் ஏதுமின்றி, நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டும் பொருட்டு எத்தகைய காரியங்களையும் செய்யக்கூடியவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவரத் துவங்கின.

‘நீ வெட்டினா கொலை, நா வெட்டினா விசாரணை கமிஷன்’ என்ற பிரகடனத்தோடு நாயகன் போலீஸாக மட்டுமின்றி பொறுக்கிக்கு பொறுக்கியாகவும் சித்தரிக்கப்பட்டது தமிழ்த் திரையுலகில் ஒரு மொழிமாற்றுப் படத்தின் வழியே துவங்கியது ஆச்சரியமான சமாச்சாரமாகும்.

ஆட்சியாளர்களின் பரிபூரண ஆசியுடன் கற்பழிப்புகளுக்கும் படுகொலைகளுக்கும் பாதுகாப்பான இடமாக காவல்நிலையங்கள் படிப்படியாக மாற்றடைந்து வரக்கூடிய நிலையில் ‘இந்த சமூகத்தின் இன்னுயிர் காக்கத் தன்னுயிர் ஈந்த காவல்துறையின் தெரிந்து கொள்ளப்படாத தியாகிகளுக்கு இப்படம் காணிக்கை’யாக்கப்பட்டதுதான் இதில் பெரிய வேடிக்கையாகும். திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு ஆரூர்தாஸின் வசனங்களும் ஒரு காரணமாக அமைந்தது என்பது உண்மை. போலீஸ் பற்றிய சித்தரிப்பு முழுமையாகவே மாறுவதற்கு ‘இதுதாண்டா போலீஸ்’ முன்னோடி படமாகவே அமைந்து விட்டது.

அறுபதுகளில் துவங்கி நேற்றுவரை திருச்சி ஜமீலா, சிதம்பரம் நந்தகோபால், கடலூர் ராஜாக்கண்ணு, தூத்துக்குடி ஜெயராஜ்-பெனிக்ஸ், மடப்புரம் அஜீத் குமார் போன்று ஏராளமானோர் பட்டியலிட முடியாத அளவில் காவல் நிலையங்களில் படுகொலை செய்யப்படுவது தமிழகத்தில் வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வாறே காவல்நிலையங்களில் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதும், வாச்சாத்தி போன்ற இடங்களில் ஒட்டுமொத்த கிராமத்தவரே பாலியல் தாக்குதலுக்கு ஆளாவதும் தமிழ்நாட்டில் எல்லையின்றி தொடரத்தான் செய்கிறது.

மகத்தான வெற்றிப்படமொன்றில் போலீஸ் நாயகன் அறிமுகக் காட்சியில் பீரை வாயில் கடித்து திறந்து, முகம் கழுவதோடன்றி, இட்லியில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டுவிட்டு, குத்துப்பாட்டு பாடுவது என்பது சீரழிவின் உச்சகட்டம் இருப்பினும் இது பற்றி எவரும் குறிப்பாக சம்பந்தப்பட்டவர்களே எதிர்வினையாற்றவில்லை என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. போலீஸ் என்றால் இப்படி இருந்தால்தான் சமூக அராஜகங்களை அடக்க முடியும் என்ற புதிய இலக்கணத்தை வரையறை செய்வது இத்தகைய திரைப்படங்கள் வாயிலாக உருவாயிருக்கிறது. இதில் வேட்டையாடு விளையாடு, தீரன் அதிகாரம் போன்ற பழையை பாணி பாடங்களும் அடங்கும். அதே தருணத்தில் குற்றச்செயல்பாடுகளுக்கும் காவல் துறைக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளையும், காவல் நிலைய அராஜகங்களையும் வெளிப்படுத்தக்கூடிய திரைப்படங்கள் அபூர்வமாகவே வருகின்றன. அப்படி வருகையில் அதை தடுத்திட அரசே பிரம்ம பிரயத்தனங்களை செய்து வருகிறது.

காவல் நிலையங்களில் கற்பழிப்பும், கொலைகளும் மட்டுமின்றி, சகலரும் நியாயப்படுத்தும் என்கவுண்டர்களும் அன்றாட நிகழ்வுகளாக இருந்து வந்தாலும் குற்றச் செயல்களை ஒடுக்கிட பொறுக்கித்தனத்தை அராஜகத்தை போலீஸ் எடுத்துக் கொள்வது தவறில்லை என்ற மனோநிலையை மக்கள் மனதில் இந்த வரிசையில் வந்த திரைப்படங்கள் சற்று ஆழமாகவே விதைத்து வருகின்றன. இதன் வெளிப்பாடுதான் நாலைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமியும் சிறுவனும் கொலையுண்ட பின்னர் குற்றவாளிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும் என்று மக்கள் (?) சார்பில் கோவையெங்கிலும் சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதே தருணத்தில் போலீஸ் என்கவுண்டரில் கொலையுற்ற வீரமணியின் மரண அறிவிப்பு சுவரொட்டி அவரது உற்றார் உறவினர்கள் நெருக்கமாக வாழ்ந்து வரக்கூடிய திருவல்லிக்கேணி பகுதியில் தடைசெய்யப்பட்டது நினைவு கூறத்தக்கது.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *