எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும்…. 1
சமூக நீதி, ஷங்கர் மற்றும் சவரக் கத்தி
இடஒதுக்கீடு குறித்த கோரிக்கை சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே தமிழ் நாட்டில் ஒலிக்கத் துவங்கி மாகாணத்தில் நீதிக் கட்சியின் தலைமையிலான ஆட்சிக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்தாலும், இதற்கு எதிரான கூக்குரல்கள் அவ்வப்போது மூலை முடுக்குகளிலிருந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. காலங்காலமாய் சமூகத்திலும் ஆட்சி முறையிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த சக்திகளின் செல்வாக்கு படிப்படியாக நலிவுறத் தொடங்கியதும், இடஒதுக்கீடு திறமைக்கும் செயல்பாட்டிற்கும் எதிரானது என்ற வாதம் இதே காலத்தில் இதற்கு எதிரான பிற்போக்கு சக்திகளால் முன் வைக்கப்பட்டது.
பின்னாளில் இது பண்பாட்டுக் களங்களிலும் வெளிப்பட்டது. அத்தகைய வெளிப்பாடுகளில் ஒன்றுதான் ஜென்டில்மேன் திரைப்படம். இதற்குப் பின்னரும் ஷங்கரின் பல்வேறு படங்களில் இது கீற்றாய் வெளிப்பட்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆயினும் இக்கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றும் விதத்தில் குறிப்பிட்டுக் காட்டுமளவிற்கு இதன் பலாபலனைப் பெற்றிட்ட வெகுமக்கள் மத்தியில் எவ்வித அசைவும் இல்லை என்பது ஆச்சரிமளிக்கிறது.
தொண்ணூறுகளில் ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன் என்று வரிசையாக வந்த அவரது படங்களில் சமூகம் பற்றிய அக்கறை வெளிப்பட்டாலும் சமூக சீர்கேட்டிற்கான காரணிகள் பற்றிய அவரது சித்தரிப்பு திசை திருப்பலாகவே இருந்திருக்கிறது. இத்தகைய வழிமுறைதான் அவரது குறிப்பிடத்தக்க பிரத்யேகமான உத்தியாக இருந்து வருகிறது.
சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பும், அதில் உற்பத்திச் சாதனங்களை ஏகபோகமாக கையகப்படுத்தியிருப்போரின் ஆதிக்கம் மட்டுமின்றி இவற்றுக்கு அனுசரணையாக இருந்து வரும் அரசியல் அமைப்பு முறையும், அதிகாரத்துவமும் அரசின் அடக்குமுறையும், சீர்குலைவிற்கும் கோடானுகோடி மக்களின் தொடரும் துன்பத்திற்கும் அடிப்படை காரணமாக இருக்கும் நிலையில், இவற்றுக்கு சம்பந்தமற்ற எதையும் தீர்மானிக்க முடியாத பிரிவினைரை முன்னிருத்துவதே அவரது சிக்னேச்சர் பாணியாக உள்ளது. அதாவது சகலத்திற்கும் சக மனிதனை காரணியாக இன்னும் சொல்லப்போனால் விரோதியாக சித்தரிப்பது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
பின்னாளில் வெளியான அவரது திரைப்படமொன்றில் எடுத்துக்காட்டப்பட்ட கருட புராணத்தின் வரையறைக்கு ஏற்ப ஷங்கரின் “சமூக நீதி” இப்படங்களில் இடம் பெறுகிறது. ஜென்டில்மேன் திரைப்படத்தில் “வழிதப்பாக இருந்தாலும் சேரும் இடம் கோயிலாக இருக்க வேண்டும்” என்பதோடு “சத்ரியனாக இருக்க வேண்டாம் சாணக்யனாக இருக்க வேண்டும்” என்ற சமூகநீதி தெளிவாகவே பிரகடனம் செய்யப்படுகிறது. பேதத்தை அறுத்தெடுக்க கடைநிலை சமூகத்தைச் சார்ந்த கனகலிங்கத்திற்கு பாரதி பூநூல் அணிவிக்கிறான் என்பதை வரலாற்றுப் பக்கங்களில் கண்டிருக்கிறோம்.
இங்கே இடைநிலை சாதியைச் சார்ந்த நாயகன் கிருஷ்ணசாமி பூநூல் அணிந்து தாயின் இறுதிச் சடங்கினைச் செய்து முடித்து அக்ரஹாரத்து கிச்சாமியாக மாறி உப தொழிலாக அப்பளக் கம்பெனியை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பதை பிரதான தொழிலாக கொள்கிறான். (பிராம்மணர்கள் கொள்ளையடிப்பதில்லை என்பதை உணர்க) அவ்வப்போது பிராயச்சித்தமாக கணபதி ஹோமங்களைச் செய்து பிராம்மணர்களுக்கு அதுவும் மந்திர உச்சரிப்பே தெரியாதவர்களுக்கு கை நிறைய அள்ளித் தருகிறான்.
இந்தியன் திரைப்படத்தில் சமூக சீரழிவுக்கு காரணமானவர்களாக சித்தரிக்கப்படுபவர்கள் ஒரு பக்கம் இருப்பினும் குறிப்பிடப்படவேண்டிய அம்சங்கள் நிறையவே இருக்கிறது. இதில் முக்கியமான இரண்டு. ரிப்பன் மாளிகை வாசலில் பிறப்புச் சான்றிதழ் கோரி வந்திருப்பவனிடம் தரகர் கூறுவது. “செக்ஷன்லே வைதேகி மாமி கிட்டே பத்து ரூபாய் கொடுத்துட்டு ரசீது வாங்கிட்டு, பியூன் கிட்டே நூறு ரூபாய் லஞ்சம்…..” இரண்டாவது இந்தியன் தாத்தாவிடம் ஜேம்ஸ் அப்பாதுரை அய்.ஏ.எஸ் போன்றவர்களே சிக்கும் போது ஏன் நீரணிந்த ஒரு ஐயரோ அல்லது திருமண் தரித்த ஐயங்காரோ சிக்குவதில்லை? ஷங்கரின் இன்னொரு படத்தில் ஒரு நாள் முதல்வரால் சஸ்பெண்ட் செய்யப்படும் பெயர்களை பாருங்கள். முத்து வடுகு, பால்பாண்டி, நீதிமொழி, சோமசுந்தரம், காத்தமுத்து, மற்றும் மீசை வைத்த ரங்கனாதன். புரிந்தால் சரிதான். அத்தருணத்தில் இப்போக்கிற்கு எதிராக சீற்றம் கொள்வதற்கு பதில் நாம் என்ன டிக்கி லோனா விளையாடிக் கொண்டிருந்தோமா? நமக்குள்ளேதான் பதிலை தேடிக் கொள்ள வேண்டும்!
எழுதியவர்:-
ராமச்சந்திர வைத்தியநாத்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: குற்றமும் தண்டனையும் - ராமச்சந்திர வைத்தியநாத்