வைத்தியநாதன் என்ற கல்லூரி மாணவனை பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு அவன் கூறுவதாக விரியும் கதைக்களமே இது.
படிப்பதற்காக அஹ்ரகாரத்தில் வாடகைக்கு குடிபுகுந்த இடத்தில் மலரும் காதல் அத்தியாயம் பரிசுத்தமானதே.
வைத்திக்கும் பாகீக்குமான உறவு காதலாக அரும்பி விடுமோ என்று நாம் எண்ணும் வேளையிலேயே தரகர் (?) மாமாவுக்கும் வைத்திக்குமான சம்பாஷணைகள் வேறொரு கோணத்தில் பார்வையை நகர்த்த உதவுவதாக கருதலாம்.
பாகீயின் அம்மாவுக்கும் அப்பாவுக்குமான உரையாடல்கள் ஒவ்வொன்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களின் பிரதிபலிப்பாக மிளிர்ந்துள்ளது. அதிலும் கரண்டுக்காரர் சமையல் செய்யும் காட்சிகள் களேபரம் தான்.
டேவிட் முத்தையாவின் வருகை முதல் கதைக்களம் டேவிட் முத்தையாவை மையங்கொண்டு நகரும் விதம் மிக யதார்த்தமாக அமைந்துள்ளது. டேவிட் முத்தையாவுக்கு கரண்டுக்காரர் குடும்பம் வழங்கும் மரியாதையும் சலுகைகளும் அவரின் பணிக்கும் ஊதியத்திற்குமானதே என்பதை உணர்த்தும் தருணங்கள் மிக இலகுவாக புலப்படுகிறது.
டேவிட் முத்தையாவின் மீது பாகீக்கு வரும் காதலை(?) டேவிட் முத்தையா கையாளும் முறையே இந்நாவலை இலக்கியத்தரத்தில் நிற்க வைக்கிறது எனலாம். டேவிட் முத்தையாவின் இளமைப் பருவம் சோக கீதமென்றால் அவரின் கனவுகளும் இலட்சியங்களும் விடுதலைப் பாடல்களாக நம்மை கிளர்ச்சியூட்டக் கூடியவைகளாகவே அமைந்துள்ளன.
தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒருவர் மனதில் உண்டாகும் இலட்சியம் கண்ணியமான முறையில் இந்நாவலில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் நடைபெறும் காதல் விளையாட்டு ரோமியோக்கள் கவனம் செலுத்த வேண்டிய இடமாக இந்நாவலைக் கருதலாம். “தான் உயர்ந்தால் மட்டும் போதாது; தன் இனத்தையும் உயர்த்த பாடுபடுவதே நல்லது” என்று கருதும் டேவிட் முத்தையா உயர்குடியில் பிறந்த உத்தமராக மிளிர்கிறார் எனலாம்.
ஹேமா,கிருஷ்ணமூர்த்தி தம்பதியர் வாழ்வில் நிகழும் சம்பவங்களே கதைக்களம். இரண்டு குழந்தைகள் பெற்ற பின்னர் நாற்பது வயதிற்கு மேல் கணவன் மனைவியிடையே நிகழும் மாற்றங்களை மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார் பிரபஞ்சன் அவர்கள். நரைமுடி துளிர்ப்பதை மறைக்கும் முயலும் ஆடவர் மனப்பான்மைக்கும் இரண்டு குழந்தைகள் பெற்ற பின்னர் வீட்டிலிருக்கும்போது அலங்காரம் எதற்கென்ற பெண்டிரின் மனப்போக்குக்கிடையே விரியும் விரிசலை பகிரங்கப்படுத்துவதே இக்குறுநாவலின் மையக்கருவாக கருதலாம்.
இல்லத்தரசிகளின் அவலநிலையை பகிரங்கப்படுத்தியபடியே அவர்களின் அலட்சிய மனப்பான்மையையும் புடம் போட்டு வார்க்க பிராயதனப்பட்டுள்ளார் எழுத்தாளர் அவர்கள். அலுவலகத்தில் பணிபுரியும் சுஜி மீது கிருஷ்ணமூர்த்திக்கு வரும் ஈர்ப்பின் காரணம் யாதென எளிதில் புலனான போதிலும் சுஜியின் கதாபாத்திரம் அதனை பிறிதொரு கோணத்தில் நகர்த்த உதவியதாகவே எண்ணலாம்.
சுஜியின் வாழ்க்கையை இன்னும் தெளிவாக கூறாதது எழுத்தாளரின் சாமர்த்தியமாக இருக்குமோ என்ற ஐயமே உண்டாகிறது. மனைவியை பாராட்ட வேண்டுமென்று கிருஷ்ணமூர்த்திக்கு போதிக்கும் சுஜி, கிருஷ்ணமூர்த்தி மீது காதல் வசப்படுவதற்கான காரணங்கள் தெளிவாக கூறப்படவில்லை எனலாம். காதலுக்கு காரணங்களாக முக்கியம்; சந்திக்கும் சந்தர்ப்பங்களே போதுமானவைகளாக இருக்கக்கூடுமோ…
கலாச்சார காவலர்கள் கூக்குரலிட்டுக் கொண்டு ஓடி வரக்கூடிய கதைக்களமாக இருந்த போதிலும் அதனை கண்ணியமாகக் காட்சிப்படுத்திய விதத்தில் பிரபஞ்சன் ஜொலிக்கிறார் எனலாம். அடுத்தவளின் கணவர் என்று தெரிந்தும் சுஜிக்கு மூர்த்தி மீது காதல் உண்டாவதற்காக கூறப்படும் முகாந்திரங்கள் போதுமானதாக இல்லை என்றே கருதுகிறேன். ரசனையும், படிப்பறிவும் அது குறித்த கலந்துரையாடலும் காதல் மலர போதுமானவைகளோ என்னவோ…
சுஜிக்கும் மூர்த்திக்குமான உறவை ஹேமாவிடம் தெரியப்படுத்த வேண்டுமென்று சுஜியே மூர்த்தியிடம் கூறுவது நாடகத்தனமாகவே தோன்றுகிறது. மூர்த்தியும் அதனை சுஜியிடம் கூறுவது யதார்த்தத்தை மீறியதாகவே தோன்றுகிறது. அதிலும் இதனை கூறுவதற்காகவே மனைவியை வெளியில் அழைத்து செல்லும் காட்சி அபத்தமானதாகவே தோன்றுகிறது.
ஹேமாவின் அப்பாவின் கதாபாத்திரம் முற்போக்குத்தனத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. காலங்காலமாக பின்பற்றப்படும் ஒழுக்க முறைகள் மீது அவர் தொடுக்கும் சாட்டையடிகள் ஒவ்வொன்றும் நியாயமென்றே நம்பும்படி அமைந்திருப்பது பாராட்டுதலுக்குரியதே. இருந்த போதிலும் முடிவு சற்று அதிர்ச்சியளிக்கக்கூடியதே… பெண் காவலர்கள் இதனை ஏற்றுக் கொள்வது கடினமே. சுப முடிவென்பதற்கான முடிவாக மட்டுமே இதனைக் கருத இயலுமே தவிர இயல்பில் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு மிக மிக குறைவே…
இக்குறுநாவலைப் படித்து விட்டு ஆண்கள் யாரும் சுஜியை போன்ற பெண்டிரை நாடிச் செல்ல துணிந்தவிடக் கூடாதே என்ற பரிதவிப்பு உண்டாகிறது என்பதே உண்மை. அதே வேளையில் ஹேமா போன்ற இல்லத்தரசிகள் இதனைப் படித்து தமது நடை உடை பாவனைகளை மாற்ற முயன்றால் அதுவே இந்நூலுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாம்.
பெண்ணடிமைத் தனத்தை ஊக்கப்படுத்துகிறதோ என்ற ஐயம் ஹேமாவின் வாழ்வியல் முறை கண்டு உண்டாவதைத் தவிர்க்க இயலவில்லை. அன்றாட வாழ்வில் எளிதில் நடக்க சாத்தியமான கதைக்களத்தை நடக்கவே வாய்ப்பில்லாத முடிவுடன் இணைந்த துணிவிற்காக எழுத்தாளரை மனதார பாராட்டலாம். புதியதோர் அனுபவம் கைகூடுவது திண்ணம்.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.
நன்றி.