எனக்குரிய இடம் எங்கே? – நூல் அறிமுகம்
கல்வி சார்ந்த வித்தியாசமான சிந்தனைகளை தமிழ் கல்வியுலகிற்கு கொண்டு வந்ததில் ச. மாடசாமி அவர்களின் பங்கு மிக முக்கியமானது. இன்றைக்கு சிபிஎஸ்சி பள்ளிகளிலும் மாண்டிசெரி பள்ளிகளிலும் செயல்முறை வகுப்புகள் வந்துவிட்டன, அரசு பள்ளிகளில் கூட கற்பித்தலில் பல மாற்று வழிகள் வந்துவிட்டது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் புதிய ஆசிரியன் இதழில் கட்டுரையாக வெளிவந்த 2003 காலகட்டத்தில் கற்பித்தல் என்பது வழக்கமான முறையில் மட்டுமே நிகழ்ந்து வந்திருக்கிறது. அதில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்த போது மாணவன் வாழ்வில் அது எவ்வளவு பெரிய உத்வேகத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது என்பதை வாசித்த போது சிலிர்ப்பாகவே இருந்தது.
இந்த நூலை சரியாக நான் கல்லூரி முடித்து வேலைத் தேடித் கொண்டிருந்த நாட்களில் வாங்கி இருக்கிறேன். கல்லூரி சார்ந்த ஒரு நூலாக இருப்பதும், விலை ரூபாய் நாற்பதாக இருந்ததும் கூட ஒரு காரணம் என்று சொல்லலாம் எனினும் இதை அந்த காலகட்டத்தில் வாசிப்பதற்கும் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழித்து இப்போது வாசிப்பதற்கும் மிகுந்த வேறுபாடு இருக்கிறது. வாசிப்பு மற்றும் வாழ்வின் அனுபவங்களால் என் சிந்தனைகள் மெருகேறி இருக்கிறது என்றே கூறவேண்டும், என்னால் ஆசிரியரின் பார்வையில் இருந்து நூலை முழுமையாக உள்வாங்கி கொள்ள முடிகிறது.
நூல் “வகுப்பறை”, “மாணவர்களிடம் கற்போம்” மற்றும் “எனக்குரிய இடம் எங்கே ?” என்று மூன்று பாகமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. வகுப்பறை என்ற பகுதியில் வரும் அத்தியாயங்களில் ஒரு வகுப்பறையில் ஆசிரியர் வழக்கம் போல பாடமெடுத்தால் மாணவர்களிடமிருந்து வரும் எதிர்வினைகள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை விளக்குறார். தமிழாசிரியராக அய்யப்பராஜ் ஒரு சாதாரண ஆசிரியராக இருக்கிறார். மாணவனுக்கு சொல்லித் தரும் போது அவன் கவனிக்கவில்லை என்றால் அவருக்கு கோபம் வருகிறது கோபத்தில் மாணவனை வகுப்பை விட்டு வெளியேற சொல்கிறார். சந்திரன் என்ற சக ஆசிரியரின் வழிகாட்டலின் பேரில் தன்னுடைய கற்பித்தல் முறைகளை மாற்றத் தொடங்குகிறார். மாணவர்களிடம் பொறுமை காக்க வேண்டும் என்ற விஷயம் அவருக்கு சற்று சிரமமாகவே இருக்கிறது எனினும் முயன்று அந்த இலக்கை தொடுகிறார். வித்யாசமான முறையில் பாடம் நடத்தி கருத்துக்களை மாணவர்கள் மனதில் விதைக்கிறார். அவரின் மாற்றம் மொத்த மாணவர்களையும் மகிழ்ச்சியாக்குகிறது அவர்கள் மனங்களை மலரச் செய்கிறது.
வகுப்பறை பறித்த அழகுகளில் ஒன்று குரல் என்கிறார் ஆசிரியர், இன்று வரை நாம் தயக்கம் உதறி வெளிப்படும் இடமாக எல்லா வகுப்பறைகளும் இருக்கிறதா என்ன ? ஒரு சில ஆசிரியர்களின் வகுப்புகளில் மட்டுமே நம்மால் தயக்கம் உடைத்து உரையாட முடிகிறது, என்னுடைய பள்ளி நாட்களில் நான் அதிகம் பேசியதே இல்லை, என்னை வகுப்பில் பலருக்கு தெரிந்திருக்க கூட நியாயமில்லை. முதல் நாளில் வகுப்பில் விட்டெறியாக எழுந்து போன ஆதிமூலம் தந்தை, தாயை இழந்து குடும்ப பொறுப்புகளை சுமக்க கஷ்டப்படும் ஒரு மாணவன் என்று தெரியவரும் போது அய்யப்பராஜின் பார்வை மாறுகிறது, ஆதிமூலமும் அவரிடம் சரணடைகிறான்.
வகுப்பறையில் அய்யப்பன் செய்து பார்க்கும் வித்யாசமான முயற்சிகளும் விவாதங்களும் மாணவர்களை மட்டும் முன்னேற்றவில்லை, ஆசிரியரும் மாணவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறார். அதுவே இரண்டாவது பகுதியான மாணவர்களிடம் கற்போமில் உள்ளது. இந்த பகுதியில் தன்னுடைய வகுப்பறை அனுபவங்களை அப்படியே நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர். ஆசிரியர்களின் தவறுகளை மாணவர்கள் சுட்டிக் காட்டினால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலை அவர்களிடம் உண்டா ? என்ற ஒரு மாணவியின் கேள்வி அவரை அசைத்து பார்க்கிறது. பல ஆசிரியர்களுக்கு இது பெரிய மானப் பிரச்சனை. என்னுடைய பள்ளி இறுதியின் போது என்னுடைய கணக்கு ஆசிரியை கரும்பலகையில் சில கணக்குகளை தவறாக செய்தார் அதனை நான் மெதுவாக அவர் அருகில் சென்று சுட்டிக் காட்டினேன், அதை தாங்க முடியாமல் என்னை பார்க்கும் போதெல்லாம் வறுத்தெடுத்ததுண்டு. இப்படி ஒரு மாணவ(வியை)னை செய்யும் போது அவனுடைய/அவளுடைய தன்னம்பிக்கை குறையும் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.
வாழ்க்கை தரும் பாடங்களை இலக்கிய வகுப்போடு இணைப்பது தன் வாழ்நாளில் முக்கிய கடமையாக கொண்டிருக்கிறார் ஆசிரியர். கிராமங்களுக்கு சென்று முதியவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததன் மூலம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறார். அறிவொளி இயக்கம் வந்த பிறகு, நிரைய தன்னார்வலர்கள் ஆசிரியராக இருக்க முன்வருவார்கள், அதில் ஏழாம் வகுப்பில் இருந்து எம் ஏ படித்தவர்கள் வரை அனைத்துதரப்பினரும் இருப்பார்கள். ஆச்சர்யம்என்னவென்றால் எம்ஏ படித்த ஆசிரியரின் வகுப்பறை இறுக்கமாய் தூங்கி வழியும், ஏழாம் வகுப்பு படித்த ஆசிரியரின் வகுப்பறை தான் கலகலப்பாய் இருக்கும் என்கிறார் ச. மாடசாமி அவர்கள்.
தவறான மதிப்பீடுகள் என்ற ஒரு அத்தியாயத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் இப்படி தான் இருக்க கூடும் என்று நினைத்து தவறாக மதிப்பிட்டு விடுகிறார்கள், உண்மையில் நடப்பது என்னவோ நெகிழ்வான வேறு ஒரு சம்பவம். இந்த பகுதி வாசித்த போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது, இதை வாசித்து எதிரொலியாக போபாலில் இருந்து வந்த கடிதத்தையும் நம்முடன் பகிர்கிறார் ஆசிரியர். எத்தனை மாணவர்கள் இங்கே கல்வி கற்க வழியில்லாமல் கூலி வேலைகள் செய்து அந்த கஷ்டங்களுக்கு நடுவில் படிக்கிறார்கள், அவர்களை நாம் அங்கீகரிக்கிறோமா என்ற பெரிய கேள்வி நமக்குள் எழுகிறது, நம் குழந்தைகளுக்கு இப்படி ஒரு உலகம் இருக்கிறது என்பதை சொல்லிக் கொடுத்தேனும் வளர்கிறோமா ? இல்லையெனில் இப்போதாவது அதை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தொண்ணூறுகளின் இறுதியில் கலைக் கல்லூரிகளுக்கு மவுசு குறைந்து அனைவரும் பொறியியல் நோக்கி செல்ல தொடங்கிய போது கலைக் கல்லூரிகளின் அவசியத்தை எடுத்துரைக்கிறார் ஆசிரியர். அப்போது பல கல்லூரிகளுக்கு சென்று தான் நடத்திய பயிலரங்கங்களில் சில கேள்விகளை கேட்டு மாணவர்களிடம் விடை வாங்கி அதை தொடன்கிர்ந்து பேசுவாராம்… சுவாரஸ்யமான அந்த கேள்விகளில் ஒன்றை இங்கு பகிர்கிறேன்… தோல்வி அடைந்தவர்
1) கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்
2) பாதையை மாற்ற வேண்டும்
3) இறைவனிடம் முறையிட வேண்டும்
இந்த மூன்றில் எந்த விடையை தேர்தெடுத்தாலும் அதற்கான விளக்கத்தை விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்பதே அங்கு நியதி. இதே போல ஆசிரியர் கொடுத்த சித்திரக் குள்ளர்கள் கதையும் சுவாரஸ்யமானது, தங்கையை ஏழு அண்ணன்களில் எந்த அண்ணன் காப்பாற்றுவான் என்ற மாணவர்களின் விவாதம் படு ஜோர், நாமே விவாதத்தில் கே கொண்டது போல ஒரு உற்சாக உணர்வு தொற்றிக் கொண்டது. ஆசிரியர் பணி என்பது எவ்வளவு அர்ப்பணிப்போடு செய்ய வேண்டியது என்பதை இந்த நூலில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். இதை என்னுடைய இளமை பருவத்தில் சரியாக வாசித்திருந்தால் நல்ல ஒரு ஆசிரியராகி இருந்திருப்பேன் என்பதை குற்ற உணர்வுடன் நினைத்து பார்க்கிறேன். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என்று அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.
நூலின் தகவல்கள் :
நூல் : எனக்குரிய இடம் எங்கே?
ஆசிரியர்: ச. மாடசாமி
பக்கங்கள் : 119
பதிப்பகம் : பாரதி
நூல் அறிமுகம் எழுதியவர் :
இந்துமதி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.