எனக்குரிய இடம் எங்கே? : நூல் அறிமுகம்
புத்தகத்தின் பெயர் : எனக்குரிய இடம் எங்கே?
ஆசிரியர் : ச.மாடசாமி
பக்கங்கள் : 128
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 130
தலைப்பு : கல்வி
சமீபத்தில் படித்த “இருளும் ஒளியும்” புத்தகத்தில் எழுத்தாளர் மாடசாமி அவர்கள் குறித்து சிலவற்றை அறிந்து கொண்டேன். எனக்கு அவரது நூலை வாசிக்கும் முதல் வாய்ப்பு இது.
ஆசிரியர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். இங்கே ஆசிரியர் இரண்டு நபர்களை பற்றி அறிமுகம் தருகிறார் . ஒருவர் குஜராத்தை சார்ந்த கிஜுபாய் , மற்றொருவர் மரியா மாண்டிசோரி.
கிஜு பாய் எழுதிய பகல் கனவு , ஸ்பென்சர் ஜான்சனின் “Who Moved my Cheese? ”ஆகிய இரு நூல்களின் சிறு தாக்கங்கள் இந்நூலில் உண்டு என்கிறார். சிறிய வகுப்பறையில் மாணவர்களை வைத்து ஒவ்வொரு நாளும் புதுப்புது முயற்சியோடு உயிர்த்தெழும்ப செய்தவர் கிஜு பாய். கல்வி ஆசிரியரிடமிருந்து அல்ல ; குழந்தையிடமிருந்தே தொடங்குகிறது என்று வலியுறுத்தி , தலையால் நடந்து கொண்டிருந்த வகுப்பறைகள் கால்களால் நடப்பதற்கு தளம் அமைத்தவர் மாண்டிசோரி. ஆனால் இவர்கள் இருவரும் ஆசிரியர்கள் அல்ல கிஜூபாய் வழக்கறிஞர் ; மாண்டிசோரி மருத்துவர் என நூல் பற்றிய அறிமுகம் கொடுத்துவிட்டு…
இந்த நூல் வெளிவந்த புதிதில் செல்போன் பேச்சுகள் தொடங்கி இருக்கவில்லை. தினசரி நூல் பற்றி கடிதம் வரும். கல்வித்துறையில் இல்லாதோர் பலரும் வாசித்துவிட்டு பாராட்டி எழுதினார்கள். அந்த கடிதங்களை இன்றும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் . ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எடுத்து படிக்கிறேன் என்கிறார் ஆசிரியர். எடுத்துக்காட்டுக்கு நாராயணன் அவர்களுடைய கடிதப் பகிர்தல் என் மனதை துவம்சம் செய்தது.
இனி புத்தகத்திற்குள் வருவோம் :
ஒரு ஆசிரியர் தன் மனதளவில் எப்படி எல்லாம் மாற்றம் காண வேண்டும், ஒரு வகுப்பறையை எந்த முறையில் கையாள வேண்டும் என்பதை அய்யப்பராஜ் என்னும் ஆசிரியர் கொண்டு, அருமையான நிகழ்கலை விவாதங்களை வைத்து அடுத்தடுத்த பக்கங்களை நகர்த்த வைக்கிறார் ஆசிரியர்.
வகுப்பறையில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கக் கூடிய மாணவரைக் கூட , ஆசிரியரின் மாற்று சிந்தனை அவனுள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும்..
வகுப்பறை என்பது ஆசிரியருக்கு உரியது அல்ல ;அது மாணவருக்கானது மட்டுமே என்பதையும், அங்கே ஒரு குரல் மட்டும் ஒலித்து பிற குரல்கள் நசுக்கப்படாமல், பல குரல்கள் ஒலிக்கும் கானகமாய் வகுப்பறை அமைய வேண்டும் என்கிறார்.
மாறுபட்ட வகுப்பறையின் வெற்றி ருசி அலாதியானது. நாக்கு இனித்து விட்டால் மனசும் இனித்து விடும் . உடம்பில் வலுவும் ,நடையில் கம்பீரமும் தோன்றும் என்கிறார் . “வாசிப்பு ஒரு கலை” என்ற விவரம் வகுப்பறைக்கு தெரியாது . வகுப்பறையைப் பொருத்தமட்டில் வாசிப்பு ஒரு தண்டனை . மாணவனை கையும் களவுமாக பிடிக்க ஒரு யுக்தி என்பதை தகர்த்தெறிந்து குரல்களுக்கு விடுதலை கொடுக்க வேண்டும். ஆம், குரல்களை விடுவிப்பது மொழி வகுப்பின் முதல் கடமை .
வாழ்க்கை பல தளங்களில் நடக்கிறது . ஒருதளத்தில் ஏற்படும் மாற்றம் பிற தளங்களையும் சென்றடைவதுதான் உண்மையான ஜனநாயகம் . வகுப்பறையில் செய்து வரும் மாற்றங்கள் வீட்டுக்குள்ளும் வேறு வடிவில் நடந்துள்ளன என்பதை , சமீப காலமாக அய்யப்பராஜ் எனும் ஆசிரியர் நுட்பமான உணர்வுகளுக்கு ஆட்பட்டு வருவதை மனைவி கவனித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறார். வார்த்தைகளிலேயே சிறந்த வார்த்தை தோற்றவருக்கு ஆறுதல் அளிக்கும் வார்த்தை என்பது எத்தனை உண்மையானது.
பெரியவர்களானால் கூட நாம் செய்யும் செயலுக்கு பிறர் தரும் பாராட்டு பெரிய அளவில் ஊக்கத்தை தருகிறது. எனில் ஆசிரியர்கள் மாணவர்களை எந்த அளவுக்கு பாராட்ட வேண்டும் என்பதை ஒரே ஒரு வரியில் சொல்லிவிடுகிறார் . (பாராட்டு மழையில் சில செடிகள் துளிர்த்து விடுகின்றன என்று.)
அதேபோல மாணவர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பானது எப்போதும் ஒற்றை வாய்ப்பாக இருக்கக் கூடாது என்பதும். அது ஒரு வகையில் திணிப்பு என்கிறார். நம்மிடம் படிக்கும் பல மாணவர்கள் உழைக்கும் மாணவர்கள் எனும் பொழுது, அவர்களோடு நாம் எங்ஙனம் இணங்க வேண்டும் என்பதை புத்தகம் தெளிவாக விளக்குகிறது.
இடையிடையே கொடுக்கப்பட்ட குட்டி குட்டிக் கருத்துக்கள் மேலும் புத்தகத்திற்கு வலு சேர்க்கிறது. உதாரணமாக…
திணிப்பதில்ல கல்வி ; வசப்படுத்துவது அல்ல கல்வி ; பங்கேற்க வைப்பது கல்வி . உருவாக்குவது கல்வி.
ஒவ்வொருவரும்
வெளிப்பட
ஒரு சந்தர்ப்பம் வேண்டும் !
வெளிப்படும் போது
காண்பதற்கு கண்கள்
வேண்டும்!
வீட்டுக்குள்
ஒரு பள்ளிக்கூடம்
வேண்டும் ;
பள்ளிக்கூடத்துக்குள்
ஒரு வீடு வேண்டும்.
இதயம் உள்ள வீடு!
50 வயதான பிறகும்
கதாநாயகன் அந்தஸ்தை
விட்டுக்கொடுக்காத
தமிழ் சினிமா
கதாநாயகர்களா
ஆசிரியர்கள்?
வகுப்பறை
‘இளம் கதாநாயகர்கள்’
கைகளுக்குப்
போக வேண்டும்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மாணவர்களின் உயர்கல்வி படிப்பு தேடலானது எதை சார்ந்து இருந்தது என்ற காலநிலை வரிசையைக் கூறி, மாணவர்களை ஆசிரியர்களாக்கி ஒத்தாசைக்குக் கூட இருப்பது தான் உண்மையான ஆசிரியர் பணி என்றும் கூறுகிறார்.
இத்தனை அனுபவங்களையும் தந்தது சுவரும் , சன்னலும் , கரும்பலகையும் , பெஞ்சுகளும் , மணியோசியமாய் சலித்து போன வகுப்பறை அடையாளங்களை நீக்கி “கல்வி கலாச்சாரம் மையம் “ என்ற குதூகலமான புரிதலை வழங்கிய “அறிவொளி இயக்கம்” தான் என்று முடிக்கின்றார்.
ஓடியாடி சாதிக்கும் ஆற்றல் உடைய இளம் தலைமுறைகளைத்தான் உருப்படாத பாடத்திட்டத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறோம் . காட்டு யானைகளை கோவில் யானைகளாக்கியது போல.. என நறுக்கென்று கூறி மூளையில் நங்கூரம் இறக்கி, எனக்குரிய இடம் எங்கே..? என்று காட்டிவிட்டார். வாசிக்கும் நீங்களும் தேடுங்கள். தேட வேண்டும்…..
ஆம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நட்சத்திரம் இருக்கிறது . அதனை காண்பதற்கு கண்கள் கண்டிப்பாக வேண்டும்.
நூல் அறிமுகம் எழுதியவர் :
பா விமலா தேவி
பட்டுக்கோட்டை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிக அருமையான அறிமுகத்திற்கு பாராட்டுகள்.
“நாராயணன் அவர்களுடைய கடிதப் பகிர்தல் என் மனதை துவம்சம் செய்தது” என எழுதியிருக்கிறீர்கள். அந்தக் கடிதத்தை ‘எனக்குரிய இடம் எங்கே?’ புத்தகத்தில் படித்து கண்ணீர் வந்தது. பாராட்டுகள். நன்றி.