எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் (Sundara Ramasamy) 'எங்கள் டீச்சர்' சிறுகதை (Engal Teacher Short Story) - https://bookday.in/

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் (Sundara Ramasamy) ‘எங்கள் டீச்சர்’ சிறுகதை

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் (Sundara Ramasamy) ‘எங்கள் டீச்சர்’ சிறுகதை

ஒரு கனவு ; ஒரு போராட்டம்; ஒரு பழி.

-மணி மீனாட்சிசுந்தரம்

கால வெள்ளம் எல்லா நினைவுகளையும் மூழ்கடித்து விடுவதில்லை.சில நினைவுகள் கரையை மீறிய வெள்ளமாய் நிகழ்காலத்துச் சுழிப்புகளின் மேலேறி
வந்தபடியே இருக்கின்றன.படைப்பு மனம், தம் மனத்தில் அழியாது நிலைத்து நிற்கும் நினைவுகளை, அது தரும் அலைக்கழிப்பை படைப்பின் வழியே இறக்கி வைத்து ஆசுவாசம் தேட முயல்கிறது.வாசக மனத்துக்குள் வந்து சேரும் படைப்பாளியின் அனுபவங்கள் வாசகனின் நுண்ணுணர்வுக்கு உரமாகின்றன.

இருபது ஆண்டுகளுக்குப் பின்னாலும் எண்ணிப் பார்க்கையில் தன் மனதைத் தொடும் அந்த ஒரு கணத்தை எழுத்தாளர் சுந்தர ராமசாமி ‘எங்கள் டீச்சர் ‘ என்ற சிறுகதையில் இறக்கி வைத்திருக்கிறார்.

பிரம்மாண்டமான கட்டடங்களைக் கொண்ட‌ பெரிய பள்ளிக்கூடம் அது. கதைசொல்லி எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறார்.அந்தப் பள்ளியின் முப்பது நாற்பது ஆசிரியர்களுக்கு மத்தியில் ஒற்றைப் பெண் ஆசிரியராக வேலை செய்துகொண்டிருக்கிறார் பத்மாவதி டீச்சர்.

பத்மாவதி டீச்சர்தான் எட்டாம் வகுப்பு ‘பி’ பிரிவின் கணக்கு ஆசிரியர்.’பி’ பிரிவு மாணவர்களுடைய விடைத்தாள்கள் பத்மாவதி டீச்சரின் திறமைக்கு அத்தாட்சி.மண்டை ஓட்டைக் கழற்றிப் பாடங்களை உள்ளே வைத்து மூடி விடுவதில் அவர் காட்டுகிற சாமர்த்தியம் அலாதியானது.சென்ற வருஷம் ‘சீதாலெட்சுமி அம்மாள் நினைவுப் பரிசு ‘ வழங்குகையில் பத்மாவதி அம்மாள் மனசு வைத்தால் ஒரு பெருச்சாளிக்குக்கூட “பித்தக்கோரஸ் தியரத்தைக்’ கற்றுக் கோடுத்துவிடுவார்” என்று ஹெட்மாஸ்டர் சொன்னது முக்காலம் உண்மை. பத்மாவதி டீச்சர் வகுப்பு மாணவர்கள்தான் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை அள்ளிச் செல்கிறார்கள்.

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் (Sundara Ramasamy) 'எங்கள் டீச்சர்' சிறுகதை (Engal Teacher Short Story) - https://bookday.in/

ஆனால், இந்தக் கதையைக் கூறும் கதைசொல்லி குறிப்பிடும் எங்கள் டீச்சர் பத்மாவதி டீச்சர் அல்ல.

பள்ளிக்கு வந்த ஆய்வாளரிடம் பத்மாவதி டீச்சர்,தனியொரு பெண்ணாக ஆண் ஆசிரியர்கள் மத்தியில் வேலை செய்யும் துன்பத்தை முறையிட , புதிய பெண் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு நியமனமாகி வருகிறார்.அவர்தான் எலிசபெத் தாமஸ்.

எலிசபெத் தாமஸ் முதன்முதலில் பள்ளிக்கு வந்தபோது அவரைக் காண அசெம்பிளி ஹால் முன்பாகப் பள்ளியே கூடிக் கிடக்கிறது.பள்ளிக்கு வந்த புதிய டீச்சரைப் பத்மாவதி டீச்சர் அழைத்து வரும் காட்சி, கதைசொல்லி எனும் மாணவர் மனத்தில் என்னமாய்ப் படிந்திருக்கிறது பாருங்கள்,

” பத்மாவதி டீச்சர், எதிர்ச்சாரி ஏணிப்படி வழியாக, படிகளில் கால் இடறாது சாக்லேட் கலர் பட்டுச்சேலையை இடது கை விரலால் நாசூக்காகத் தூக்கிப்

பிடித்தபடி இறங்கி, மிடுக்குடன் நடத்துவந்து எலிசபெத் டீச்சரின் கைகளை அன்புடனும் முகத்தில் செட்டான சிரிப்புடனும் பற்றி, ஒரு குழந்தையை‌ அழைத்துச் செல்வதுபோல் வெயிட்டிங் ரூமுக்கு அழைத்துச் சென்றார்.நிகழ்ந்தது இவ்வளவுதான்.அந்த வேளையின்‌ சாமர்த்தியம்தானோ என்னவோ! எல்லாம் கடவுளின் ஜோடனைபோல் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துவிட்டது”.

“யாரடீ அழகு’ என்று மாணவிகள் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்கின்றனர். இருவருக்கும் ஏறத்தாழ சம வயது.ஜோடியாக அவர்கள் வருவதை மாணவர்கள் வராண்டாவில் நின்றும்,மாணவிகள் மறைந்து நின்றும் இரசித்து மகிழ்கிறார்கள்.

பள்ளியில் ஆசிரியர்கள் தோழமையுடன் பழகுவது மாணவர்களுக்கு எப்படிப்பட்ட உணர்வைத் தரும் என்பதைக் கதையின் வரிகள் உணர்த்துகின்றன.

” எங்கள் மனசும் எண்ணமும் அவர்களைச் சுற்றிப் பாடியதற்கு, எங்கள்மேல் அவர்கள் கொண்டிருந்த பாசமும், பாடம் கற்றுத் தருகையில் வெளிப்பட்ட அவர்கள் திறமையும் மட்டுமல்ல காரணங்கள்.அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த நேசமும் தோழமை உணர்ச்சியும் எங்கள் மனசை வெகுவாகக் கவர்ந்தன.அவர்கள் மனசுக்குள் மலர்ந்திருந்த அந்தரங்கம் எங்கள் இதயங்களிலும் எதிரொலித்தது. அவ்வெண்ணமே சுகந்தமாக இருந்தது.அவர்கள் மனப் பிணைப்புக்குத் தெய்வ சௌந்தரியம் ஏற்ற நிஜமும் கற்பனையுமாக மாணவர்.

உள்ளம் புனைந்த கதைகள் அநேகம்.”

ஆனால், அவர்களுக்கிடையேயான நட்பின் சுருதி கலையும் காலமும் வந்தது.

பத்மாவதி டீச்சர் ‘பி’ கிளாஸ் கணக்கு டீச்சர் என்றால், இன்னொரு வகுப்பிற்கு, அதாவது இக்கதைசொல்லி படிக்கும் இன்னொரு வகுப்பிற்கு, நாற்பத்தியேழு பேரில் முக்கால்வாசிப்பேர் கணக்கில் பெயிலாகும் வகுப்பிற்கு எலிசபெத் கணக்கு டீச்சர்.

எலிசபெத் டீச்சர் வந்த அன்றே மாணவர்களின் மதிப்பெண்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.”போனது போகட்டும்,உங்களை மேல் வகுப்பிற்குச் சிப்பாய் போல அணிவகுத்துப் போக வைக்க முடியும்.அதற்கு உங்கள் ஒத்துழைப்பும் தேவை” என்கிறார்.மாணவர்களின்‌ தலைகள் பலமாக‌ அசைகின்றன.
“முதல்நாளே அவர் எங்களை முந்தானையில் கட்டிக்கொண்டு விட்டார் “.

அன்றிலிருந்து அவர் மேற்கொண்ட உழைப்புக் கடினமானது.இதற்குமுன் கடமையிலிருந்நது தவறிவிட்ட ஆசிரியர்களுக்காகவும்,மாணவர்களுக்காகவும் அவரே தண்டனையை அனுபவித்துக் கொள்வதைப்போல் கடுமையாக உழைக்கிறார்.அவர் மேற்கொண்ட சிரமமும் சிரத்தையும் மாணவர்களை அனுதாபம் கொள்ள வைக்கிறது.ஆசிரியருடன் இணைந்து மாணவர்களும் முயற்சி செய்கிறார்கள்.

“அத்துடன் அவர் பாடம் சொல்லித் தந்த முறையும் கவர்ச்சிகரமானது.
எண்களை ஜீவகாருண்யத்துடன்

பார்க்கத் தெரிந்துகொண்டோம்”.

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் எலிசபெத் டீச்சர் ” இந்த வருஷம் ‘சீதாலெட்சுமி அம்மாள் நினைவுப் பரிசு ‘ நமக்குத்தான் கிடைக்கப் போகிறது என்கிறார். மாணவர்கள் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் ஆசிரியரோடு இணைந்து உழைக்கின்றனர்.நாள் ஆக ஆக அந்தப் பரிசு நமக்குத்தான் என்ற நம்பிக்கையும் மாணவர்களிடம் நிலைத்துவிடுகிறது.

“எலிசபெத் டீச்சரின் தன்னம்பிக்கையும் எங்களுடைய உழைப்பும் வீண்போகவில்லை.அரை வருஷப் பரிட்சையில் மார்க்குகளை அள்ளிக்கொண்டு வந்துவிட்டோம்.எங்கள் வகுப்பு‌ சரோஜினிக்கு நூற்றுக்கு நூறு. விடைத்தாள்களைத் திருத்திய

பத்மாவதி அம்மாளே தன் கையால் போடும்படி ஆகிவிட்டது”.

இதுவரை பறந்த பத்மாவதி டீச்சரின் கொடி இறக்கப்பட்டுவிட்டது. இல்லை இல்லை அப்படிச் சொல்வது தவறு.எலிசபெத் டீச்சரின் கடின உழைப்பும்,மாணவர்களின் முயற்சியாலும் அந்த வகுப்பு உயர்வடைந்தது.அப்படித்தான் சொல்ல வேண்டும்.

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் (Sundara Ramasamy) 'எங்கள் டீச்சர்' சிறுகதை (Engal Teacher Short Story) - https://bookday.in/

ஆனால்,’பிரிவு’ மாணவர்கள் அப்படி நினைக்கவில்லை.பொறாமையால் மோதல் போக்கில் ஈடுபடுகின்றனர்.

தலைமையாசிரியர் வகுப்பிற்கே வந்து மாணவர்கள் முன்னிலையில் எலிசபெத் டீச்சரை வெகுவாகப் பாராட்டுகிறார்.”ஒரு ஆசிரியைக்கு இதைவிடவும் மகிழ்ச்சி அளிக்கும்.

விசயம் ஏது? பூரித்துப் போய்விட்டார். நாணத்தால் முகம் சிவந்து பார்வை காலடியில் லயித்துவிட்டது.பெருமிதம் கண்களிலும் முகத்திலும் பிரவாகம் எடுத்து ஓடியது”.

தலைமையாசிரியர் சென்றதும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த சரோஜினி , டீச்சரிடம் ஏதோ சொல்கிறாள்.அவள் பேசப்பேச டீச்சரின் முகம் கோரமாக மாறுகிறது ; நிற்கமுடியாமல் உட்கார்ந்து விடுகிறார் ; அழுகையைக் கட்டுப்படுத்துவதால் கழுத்தும் முகமும் உப்பிச் சிவந்து விடுகின்றன.

எலிசபெத் டீச்சர், பரீட்சைக்கு வரும் வினாக்களை முன்பே வகுப்பில் சொல்லிக் கொடுத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டை ‘ பி’ வகுப்பு மாணவர்களிடம் பத்மாவதி டீச்சர் கூறியிருக்கிறார்.

“எங்கள் டீச்சர் மேல் இப்படி ஒரு அபாண்டத்தைச் சுமத்த பத்மாவதி டீச்சருக்கு எப்படித்தான் மனசு வந்ததோ? என்ன கொடுமையான வார்த்தை. உண்மை எங்கள் மனச்சாட்சிக்குத் தெரியும்.எங்களிடம் அவர் எதுமே சொல்லவில்லை.சொல்லப்போனால் எங்கள் டீச்சர்தான் கேள்விகளை அமைத்தார் என்பதுகூட அன்றுவரை
எங்களுக்குத் தெரியாது”.

“அன்றும் சரி,அதற்குப் பின் வந்த நாட்களிலும் சரி,அவரையும் பத்மாவதி டீச்சரையும் எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் ஒன்றாகப் பார்க்கவில்லை.

இருவரும் இணைந்திருக்கும் காட்சி பழங்கதையான ஒன்றாகிவிடுகிறது. அவர்கள் இருவரையும் இணைத்துப் பார்க்க விரும்பிய அத்தனை

கண்களுக்கும் ஏமாற்றமே கிடைத்தது.

இறுதிப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது.ஒரு நாள் எலிசபெத் டீச்சர் மீண்டும் மாணவர்களிடம் சொல்கிறார் “சீதாலெட்சுமி நினைவுக் கோப்பை நமக்குத்தான் கிடைக்கவேண்டும். ஆனால், கேள்வித்தாள்கள் வெளியூரில் தயாராகின்றன” என்று துயரம் தோய்ந்த சிரிப்புச் சிரிக்கிறார். காயம் பட்ட ரணம் அவருக்குள் வலிக்கிறது.

டீச்சரின் கைகளில் எப்படியாவது வெற்றிக்கோப்பையைத் தந்துவிட வேண்டும் ; அவர் மேல் விழுந்த பழியைத் துடைத்துவிட வேண்டும் என்ற வெறியுடன் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகின்றனர். சனிக்கிழமை என்றும் பாராமல் சதா சர்வ காலமும் வேலையில் அழுந்திக் கிடக்கிறார் எலிசபெத் டீச்சர்.

இறுதித் தேர்வும் வந்தது.கடைசி நாள் கணக்குப் பரீட்சை நடந்து கொண்டிருக்கும்போது அந்த சம்பவம் நடக்கிறது.பரீட்சை முடிய ஐந்து நிமிடம் இருக்கும்போது சரோஜினி விடைத்தாளைக் கொடுப்பதற்கு எழுந்து நிற்கிறாள்.அப்போது அவள் அருகே வந்த எலிசபெத் டீச்சர் “இன்னும் ஐந்து நிமிஷம் இருக்கிறதே,மீண்டும் பாரு” என்று மெல்லிய குரலில் சொல்கிறார்.டீச்சர் சொன்னதற்காக சரோஜினி மீண்டும் விடைத்தாளைப் புரட்டிப் பார்க்கிறாள்.
கடைசி மணியும் ஒலிக்கிறது.

எலிசபெத் டீச்சர் வேகமாக சரோஜினி அருகில் வந்து “கடைசிக் கணக்கு வரையில் பார்த்தாயா?” என்று கூறிக் கொண்டே மற்ற மாணவர்களிடம் விடைத்தாளை வாங்குகிறார்.

சரோஜினி கீழ் உதட்டைக் கடித்தபடி கடைசிப் பக்கக் கணக்கில் ஏதோ

திருத்தம் செய்கிறாள்.

அப்போது, “உங்கள் நடவடிக்கையை நான் ஆட்சேபிக்கிறேன்” என்ற பத்மாவதி டீச்சரின் குரல் ஹால் நெடுகிலும் எதிரொளிக்கிறது‌.

தடதடவென்று ஓசையெழ‌ப் பத்மாவதி டீச்சர் மேலே சென்றார். எலிசபெத் டீச்சர் முதல்நாள் வந்த அன்று அதே ஏணிப்படியில் பத்மாவதி டீச்சர் இறங்கி வந்த சித்திரம் கதைசொல்லியின் மனத்தில் விரிகிறது.

தலைமையாசிரியர் அறையில் விசாரணை நடக்கிறது. எலிசபெத் டீச்சர் தலைமையாசிரியர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் கல்லாய் உறைந்து நிற்கிறார்.

“இதுதான் என்னுடைய கடைசிக்

கேள்வி” என்று கூறிவிட்டுத் தலைமையாசிரியர்,’ கடைசிக் கணக்கு வரையிலும் பார் என்று கூறியபோது அவள் தவறாக எழுதியிருந்த விடையைத் திருத்திவிட வேண்டுமென்ற எண்ணம் உங்கள் மனசில் இருந்ததா?” என்று கேட்டார்.

“நீண்ட நேர மவுனத்திற்குப்பின் டீச்சர்’
இருந்தது என்று சொன்னார்.

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் (Sundara Ramasamy) 'எங்கள் டீச்சர்' சிறுகதை (Engal Teacher Short Story) - https://bookday.in/

கதைசொல்லி கதையை இப்படி முடிக்கிறார்,”அதற்குப்பின் நான் அவரைச் சந்திக்கவில்லை.வேலையை ராஜினாமா செய்துவிட்டுக் கோட்டயத்துக்கே சென்று விட்டதாகப் பையன்கள் பேசிக் கொண்டனர்”. எலிசபெத் டீச்சர் ஒரு மகத்தான ஆசிரியர்.கைவிடப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கையளித்து அவர்களைச் சிகரத்தில் ஏற்ற ஆசைப்பட்டவர் ; அதற்காகக் கடுமையாக உழைத்தவர்.அவர் ஒன்றும் பரீட்சையில் தன் மாணவிக்கு விடைகளைச் சொல்லிக் கொடுக்கவில்லையே.நினைவூட்டினார் அவ்வளவுதான்.ஒரு கண நேரப் பலவீனத்திற்கு ஆட்பட்டு அவர் செய்த ஒன்றை வைத்து அவரது ஒட்டுமொத்த உழைப்பையும் கேள்விக்குள்ளாக்கலாமா? எனத் தோன்றுகிறதல்லவா?

இக்கதையைப் படிக்கும்போது, இது ஒரு கனவுப் பள்ளி மாதிரியும் ஆசிரியர்களும் அவ்வாறே இருப்பதாகவும் நீங்கள் நினைத்தால் நீங்கள் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் அறியாதவர் என்பதே உண்மை.எலிபெத் டீச்சரைப் போன்ற அரர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இங்குப் பணி புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

கதை நுட்பமான சில செய்திகளையும் சுட்டி நிற்கிறது. கற்றலைச் சிறப்பாக்க, கற்பிக்கும் ஆசிரியரிடம் முதலில் நம்பிக்கை ஏற்படவேண்டும்.அந்த நம்பிக்கையும் உறுதியும் மாணவர்களைத் தாமாகக் கற்றலில் இணைய வைக்கும். பணிபுரியும் இடத்தில் ஆசிரியர்கள் நட்புடன் இணைந்து பணியாற்றுவது மாணவர்க்குத் தாமாக நற்பண்பு மேம்படத் துணை செய்யும் என்பதைக் கதை உணர்த்துகிறது.

இப்படி எலிசபெத் டீச்சர் எல்லோர் முன்னிலையும் அவமானப்பட்டுத் தலைகுனிந்து நிற்க வேண்டி வந்ததே என வருந்தும் வாசகருக்கு, அவரின் மாணவரான கதைசொல்லி இப்படிச் சொல்லி நம்மை ஆசுவாசப்படுத்துகிறார்.

” எந்தக் கோணத்தில் பார்த்தாலும், அவருடைய ஆசை அவசியம் நிறைவேறியிருக்க வேண்டிய ஒன்று என்ற முடிவுக்குத்தான் வரமுடியும்.அதிலிருந்து பிறக்கும் சந்தோசத்தை அடைய அவர் முற்றிலும் தகுதியானவர்”.

உதவிய நூல் :

சுந்தர ராமசாமி சிறுகதைகள் (முழுத் தொகுப்பு) – சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் – 629001

கட்டுரையாளர் குறிப்பு :

மணி மீனாட்சி சுந்தரம்,
மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நவீன கவிதை குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்.
அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.
முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. நாகேந்திரன் இ

    இரண்டு ஆசிரியர்களுமே ஆகச்சிறந்தவர்களே. எலிசபெத் ஆசிரியர் போல உழைக்க வேண்டும் என்று நினைப்பது சிறப்பாக இருந்தாலும் தவறுதான். எங்கள் டீச்சர் மாணவர்கள் கண்ணோட்டத்தில் சிறப்பு தான். வாழ்த்துகள் ஐயா. அருமை அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *