ஏங்கெல்ஸ் நினைவலைகள்
வில்ஹெம் லீப்னெஃஹ்ட்
பிரடெரிக் ஏங்கெல்ஸ் தெளிந்த, கூர்ந்த மதியுடையவர். அது எந்த கற்பனையான, அல்லது எந்தவிதமான உணர்ச்சிக்கும் ஆட்படக்கூடிய ஒளிவட்டமும் இல்லாதது. அது மனிதர்களை அல்லது விஷயங்களை வண்ணக் கண்ணாடி வழியாகவோ, அல்லது மங்கலாகவோ பார்க்காது, தெறிந்த கண்களோடு, தெளிவான, பிரகாசமான வெளிச்சத்தில் பார்க்கும். மேலோட்டமாகப் பார்க்காது, துளைத்துத் துளைத்து அடியாழம் வரை பார்க்கும் சக்தி வாய்ந்தது. தெளிந்த கூரிய பார்வை, அச்சொல்லின் முழுமையான பொருளைப் பிரதிபலிக்கும் அவரது ஞானதிருஷ்டி, இயற்கையன்னை ஒரு சிலருக்கே பிறப்பிலேயே வழங்கும் அந்த நுண்ணறிவு ஆகியவை ஏங்கெல்ஸிற்கு மட்டுமே உரியவை. நான் முதன்முறை அவரைச் சந்தித்த போதே, உடனடியாக இவற்றால் ஈர்க்கப்பட்டேன்….
1849ன் கோடையின் பிற்பகுதியில், இம்பீரியல் கான்ஸ்டிட்யூஷன் இயக்கத்தின் ( 1848-49 புரட்சியின் போது, பிராங்ஃபர்ட் தேசிய அசெம்பிளி ஒரு அரசியலமைப்பை உருவாக்கியது. இது ஜெர்மனியை ஒன்றுபடுத்துவதற்கான முதல் படியாகும். எனினும் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஜெர்மன் நாடுகளும் – பிருஷ்யா, சாக்ஸனி, மற்றும் பிற நாடுகள் – அதை அங்கீகரிக்க மறுத்தன. இதற்கு மக்கள் ஆதரவு மட்டுமே இருந்தது. அதை ஆதரித்து, குட்டி பூர்ஷ்வா ஜனநாயகவாதிகள் தலைமையில் ஆயுதமேந்திய புரட்சி நடந்தது ) தோல்விக்குப் பிறகு ஜெனோவாவின் ப்ளூ ஏரிக்கருகே நாங்கள் பல புலம்பெயர்ந்தோர் காலனிகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம். அதற்கு முன்பே, ரூஜ், ஹீன்சன், ஜுலியஸ் ஃப்ரோபல் போன்ற பெரும் ஆளுமைகளுடனும். பாடன், சாக்ஸனி புரட்சிகளின் பல்வேறு தலைவர்களுடனும் எனக்கு அறிமுகம் இருந்தது. ஆனால் அவர்களுடன் நான் நெருங்கிப் பழகப் பழக அவர்களைச் சுற்றியிருந்த ஒளிவட்டம் மங்க ஆரம்பித்தது. அவர்கள் எனக்கு சிறியவர்களாகத் தோன்ற ஆரம்பித்தார்கள்..
சூழல் மங்கலாக இருந்த நேரத்தில், அந்த மனிதர்கள், மிகப் பெரியவர்களாகத் தெரிந்தார்கள். ஏங்கெல்ஸின் தெளிந்த பார்வைக்கு முன் அந்த மங்கல் மறைந்தது. மனிதர்கள் மனிதர்களாகவும், விஷயங்கள் விஷயங்களாகவும் தெரிய ஆரம்பித்தன.
அந்த துளைக்கும் பார்வையும், ஊடுருவும் தீர்மானமும் ஆரம்பத்தில் எனக்கு சற்று சங்கடமாக இருந்தன. சமயங்களில் என்னை புண்படுத்தவும் செய்தன. ஏங்கெல்ஸ் போலவே அந்தப் புரட்சியின் நாயகர்களால் நான் பெரிதும் ஈர்க்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் பல மதிப்பு மிக்க சக்திகளையும், தன்னலமற்ற தியாக உற்சாகமும் கொண்ட அந்த ஒட்டுமொத்த இயக்கத்தையுமே ஏங்கெல்ஸ் சற்று குறைத்து மதிப்பிட்டார் என்று நான் நினைத்தேன். அதே சமயம், நான் தென் ஜெர்மனியைச் சேர்ந்தவன் அல்ல என்றாலும், அந்த காலகட்டத்தில் என்னிடம் இருந்த (பின்னாளில் இங்கிலாந்தில் என்னிடமிருந்து முழுவதும் நீங்கிவிட்ட) அந்த “தென்ஜெர்மனிய அமைதி“ காரணமாக, உடனடியாக என்றில்லா விட்டாலும், மனிதர்கள், விஷயங்கள் பற்றிய எங்கள் பொதுவான கருத்துகளில் ஒத்துப் போனோம். பிரிட்டிஷ் உழைக்கும் வர்க்கம் குறித்த ஏங்கெல்ஸின் புத்தகத்ததை முன்பே படித்திருந்ததாலும். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருந்ததாலும். அவரது கருத்துகளுக்கு அவரிடம் வலுவான, தீர்மானமான ஆதாரங்கள் உண்டு என்பதை விரைவில் தெரிந்து கொண்டேன். அவர் என்னை விட ஐந்தாண்டுகள் மூத்தவர். அப்போதே அவர் நிறைய சாதித்து விட்டார். அந்த வயதிலேயே ஒரு நூற்றாண்டுக்குப் போதுமான சாதனைகளைச் செய்துவிட்டார்.
இராணுவ விவகாரங்களிலும் அவர் மிகவும் திறனுள்ளவர் என்பதையும் நான் விரைவிலேயே அறிந்தேன். அப்போது ஹங்கேரியில் நடந்து வந்த புரட்சிகரப் போர் (ஆஸ்திரியாவிற்கு எதிரான ஹங்கேரியின் தேசிய விடுதலைப் போர்) பற்றி அப்போது நியூ ரெய்னீஷ் ஜெய்டுங்கில் கட்டுரைகள் வந்து கொண்டிருந்தன. அக்கட்டுரையில் சொல்லப்படுபவை அப்படியே பின்னர் நடக்கும் என்பதால் அவற்றை ஹங்கேரிய ராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் எழுதுகிறார் என்றே எல்லோரும் நினைத்தனர். ஏங்கெல்ஸுடன் உரையாடும் போதுதான் அந்தக் கட்டுரைகளை அவர்தான் எழுதி வருகிறார் என்று தெரிந்தது. ஆனாலும், அவற்றை எழுத, தன்னிடம் செய்தித்தாள்களைத் தவிர, மற்றபடி வேறு எந்த தரவுகளும் கிடையாது என்ற அவர் சிரித்துக் கொண்டே கூறினார். இந்த செய்தித்தாள்கள் கிட்டத்தட்ட ஆஸ்திரிய அரசாங்கத்தால் மட்டுமே வெளியிடப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் அப்பட்டமான பொய்களைத் தவிர எதுவும் இருக்காது. இப்போது கியூபாவில் ஸ்பானிய அரசாங்கம் செய்து வருவது போலத்தான். ( 1895ல் கியூபா ஸ்பானிய காலனியாக இருந்தபோது, கியூபாவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியைத் தடுக்க ஸ்பானிய அரசாங்கம் முயற்சி செய்து தோற்றது இங்கு குறிப்பிடப்படுகிறது) ஆனால், ஏங்கெல்ஸ் உண்மையைத் தன் நுண்ணறிவால் உணர்ந்தார். அவர் வார்த்தை ஜாலங்களில் மயங்கிவிடவில்லை. ராண்ட்ஜனின் எக்ஸ்ரே கருவி அப்போதே அவரது தலைக்குள் இருந்தது. அதன் வழியாக அவர் உண்மையை நிலைநாட்ட எவையெல்லாம் தேவையில்லை என்பதை உணர்ந்தார். எந்தவொரு மாயத்தோற்றமும் தன்னை திசை திருப்பி விட அவர் அனுமதிக்கவில்லை. எது முக்கியமோ அதை ஒட்டி நின்றார். ஆஸ்திரிய அரசாங்கம் தனது மன்சூசன் அறிக்கைகள் வாயிலாக (மன்சூசன் என்பது ஜெர்மனிய எழுத்தாளரான ருடால்ஃப் எரிக் ராஸ்ப் எழுதிய நகைச்சுவை சாகசத் தொடரின் நாயகன். நிறைய பொய் சொல்வான். தற்பெருமைக்காரன். இத்தகையோரைக் குறிக்க மன்சூசன் என்று சொல்வது ஜெர்மனியர் வழக்கம் – மொழிபெயர்ப்பாளர்) எவ்வளவுதான் பொய் உரைத்தாலும் கூட, சிறிதளவேனும் உண்மைகளையும் தன் அறிக்கையில் சொல்லித்தானே ஆக வேண்டும் ! போர் நடைபெற்ற இடங்கள், படைகள் போரின் ஆரம்பத்திலும், இறுதியிலும் இருந்த இடங்கள், போர் நடைபெற்ற நேரம். படைகளின் நடமாட்டம், போன்றவற்றை ஓரளவிற்காவது சொல்லித் தானே ஆக வேண்டும் ! இந்த சின்னச் சின்ன தகவல்களை வைத்து, தனது கூர்ந்த பார்வை மூலம் போர் நடந்த இடத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை ஏங்கெல்ஸ் ஊகித்து விடுவார். போர் நிகழும் இடத்தின் துல்லியமான வரைபடத்தை வைத்து நாட்களையும் நேரத்தையும் வைத்து ஆராய்ந்து பார்த்தால், வெற்றி பெற்றதாகச் சொல்லிக் கொள்ளும் ஆஸ்திரியர்கள் மேலும் மேலும் பின்னுக்குத் தள்ளப்படுவதும். தோற்கடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஹங்கேரியர்கள் தொடர்ந்து முன்னேறி வருவதும் தெரியும். ஏங்கெல்ஸின் கணிப்பு மிகத் துல்லியமான இருந்தது. செய்தித்தாள்களில் ஹங்கேரியர்களைத் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டு வந்த ஆஸ்திரிய ராணுவம் உண்மையில் முற்றிலும் சீர்குலைந்து ஹங்கேரியிலிருந்து தூக்கியெறியப்பட்டது.
அதிலும், ஏங்கெல்ஸ் ஒரு பிறவி ராணுவ வீர்ராகவே தோற்றமளித்தார். அவருக்கு தெளிந்த பார்வை இருந்தது. விரைவாக ஒன்றைப் புரிந்து கொள்வார். சின்ன விஷயத்தையும் தெளிவாக கவனித்து விடுவார். எதற்கும் சலனப்படாது, விரைவாக முடிவெடுப்பார். பின்னர் அவர் ராணுவப் பிரச்சனைகள் குறித்து ஏராளமான அற்புதமான கட்டுரைகளை புனைப்பெயரில் எழுதினார். மிகப் பெரிய ராணுவ அதிகாரிகளால் அவை பெரிதும் பாராட்டப்பட்டன. புனைப்பெயரில் எழுதும் அந்தப் படைப்பாளி உண்மையில் மிகப் புகழ்பெற்ற புரட்சியாளர் என்பது அந்த ராணுவ உயரதிகாரிகளுக்குத் தெரியாது !
இலண்டனில் நாங்கள் அவரை வேடிக்கையாக ஜெனரல் என்றுதான் அழைப்போம். அவரது வாழ்க்கைக் காலத்தில் மற்றொரு புரட்சி வந்திருந்தால், தனது ராணுவ மூளையின் காரணமாக பல்வேறு வெற்றிகளைக் குவித்த கார்னோவாக ஏங்கெல்ஸ் திகழ்ந்திருப்பார் ! ( பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த பிரெஞ்சு பூர்ஷ்வா புரட்சியின் போது புகழ்பெற்றிருந்த லாஸர் நிகோலஸ் கார்னோ இங்கு குறிப்பிடப்படுகிறார் – மொழிபெயர்ப்பாளர்.)
சுவிட்சர்லாந்தில் சிறிது காலம் ஏங்கெல்ஸுடன் தங்கியிருந்த பிறகு, அடுத்த ஆண்டு அவரை மீண்டும் லண்டனில் சந்தித்தேன். எனக்கு முன்பாக அவர் லண்டனில் குடியேறியிருந்தார். அதன் பிறகு அவருடன் நான் எப்போதும் தொடர்பில் இருந்தேன். 1850ல் நான் லண்டனில் இருந்த காலத்தில் அவர் மான்செஸ்டருக்கு சென்றுவிட்டார். எல்லா ரைன் உற்பத்தியாளர்களைப் போலவே ஏங்கெல்ஸின் தந்தையாரும், இங்கிலாந்தில் ஒரு கிளை அலுவலகம் வைத்திருந்தார். மான்செஸ்டரில் இருந்தாலும், ஏங்கெல்ஸ் அடிக்கடி லண்டன் வருவார். சமயங்களில் நீண்ட காலம் தங்குவார். கிட்டத்தட்ட தினமுமே அவர் மார்க்ஸிற்கு கடிதம் எழுதுவார். அடிக்கடி உறுப்பினர்கள் மாறிக் கொண்டே இருக்கும், மிக நம்பகமான நெருக்கமான நபர்களைக் கொண்ட “மார்க்ஸ் கோஷ்டியில்” எந்த ரகசியங்களும் கிடையாது. எனவே நாங்களும் அந்தக் கடிதங்களைப் படிப்போம். மார்க்ஸ் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பிருந்தவனாக, கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் அவரது குடும்ப உறுப்பினர் போலவே, தினமும் அவர் வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருந்தவனான எனக்கு மார்க்ஸிடம் இருந்த அளவிற்கு ஏங்கெல்ஸிடம் நெருக்கம் இல்லை என்ற உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
மார்க்ஸின் மரணம் என்னை ஏங்கெல்ஸுடன் இன்னும் அதிகமாக நெருங்க வைத்தது. அப்போது அவருக்கு மார்க்ஸின் உயிலை நிறைவேற்றுவது, மார்க்ஸின் முற்றுப்பெறாத படைப்புகளை முடிப்பது என்ற இரட்டை வேலைகள் இருந்தன.
நான் எப்போதும் ஒத்து ஊதுபவன்தான் என்று அவரே சொல்லிக் கொண்டாலும் கூட, அவரது திறமை இப்போதுதான் முழுமையாக வெளிப்பட்டது. பல ஆண்டுகளாக தனது தொழிலில் அவர் பெரும்பாலும் காட்டி வந்த அசாதாரண சக்தி, இப்போது இந்த இரண்டு வேலைகளில் முழுமையாக வெளிப்பட்டது. அவர் மூலதனம் நூலை முடித்தார். தனது சொந்த அறிவியல் ஆய்வுப் படைப்புகளையும் முடித்தார். பணிகளைத் திறம்படச் செய்யும் அவரது அபாரமான ஆற்றல் காரணமாக இவை தவிர, ஏராளமான சர்வதேச அளவிலான கடிதப் போக்குவரத்துகளை மேற்கொள்ளவும் அவரால் முடிந்தது. ஏங்கெல்ஸின் கடிதங்கள் பெரும்பாலும் அரசியலிலும், பொருளாதாரத்திலும் வழிகாட்டும் முக்கியமான ஆய்வு நூல்களாகவே அமைந்தன.
தான் தேவைப்பட்ட அனைத்து இடங்களிலும் அவர் உதவினார். தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் அவர் உற்சாகம் கொள்ள வைத்தார். தனது இறுதி மூச்சுவரை அவர் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் மாபெரும் போரை முன்னெடுத்துச் செல்லும் ஒரு வீர்ராக, ஒரு ஆலோசகராக, புத்தி சொல்பவராக, எச்சரிக்கை செய்பவராகத் திகழ்ந்தார்.
உலகத் தொழிலாளர்களே ! ஒன்று கூடுங்கள் !
என்று 1848ல் பிப்ரவரிப் புரட்சியின் அதிகாலைக் காற்றின் நறுமணத்தில் தானும் தன் நண்பர் மார்க்ஸும் வெளியிட்ட அறைகூவலை இறுதிவரை முன்னெடுத்துச் சென்றார்.
அவர்கள் ஒன்றிணைந்தார்கள்.
உலகின் எந்த சக்தியும் உழைக்கும் வர்க்கம் ஒன்றிணைவதற்கான பாதையை அடைக்க முடியாது !.
1890 நவம்பர் 28 அன்று நாங்கள் லண்டனில் ஏங்கெல்ஸின் எழுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடினோம். தன் இளம் வயதில் இருந்த அதே போராடுவதற்கான துறுதுறுப்போடும் உற்சாகத்தோடும் இருந்தார் அவர். மூன்றாண்டுகளுக்குப் பிறகு பெர்லினில் கன்கார்டியா அரங்கத்தில் தொழிலாளர்களுக்கு மத்தியில் உரையாற்றும் போது அவர் “தோழர்களே ! நீங்கள் எதிர்காலத்திலும் உங்கள் கடமைகளை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்,“ என்றார். ( 1893 செப்டம்பர் 22 அன்று பெர்னிலில் நடந்த சோஷியல் டெமாக்ரடிக் கூட்டத்தில் ஏங்கெல்ஸின் உரை) மிக உற்சாகத்தோடு, ஏங்கெல்ஸ் மீது மிகவும் நன்றியுணர்வோடும், அன்போடும் கூடியிருந்த அந்த ஆயிர்க்கணக்கான தோழர்களில் ஒவ்வொருவரும், “ இந்த இளைஞனுக்கா 73 வயதாகிவிட்டது?” என்று வியந்தார்கள்.
அதற்கு இரண்டாண்டுகள் கழித்து, 1895 ஆகஸ்ட் 6ம் தேதி, பிரெமெனில் ஒரு மாபெரும் தொழிற்சங்க விழாவொன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பி வந்த போது. வோர்வட்ஸ்சின் ஆசிரியர் அலுவலகத்திலிருந்து வந்திருந்த அந்த சோகமான தந்தி என் மேஜையில் காத்திருந்தது.
“ஜெனரல் நேற்றிரவு 10.30க்குக் காலமானார். மதியத்திலிருந்தே நினைவிழந்து விட்டதால், அதிகம் சிரமப்படவில்லை. சோல்ஜர், சிங்கர் ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கவும்.”
அதில் குறிப்பிட்டிருந்த சோல்ஜர் நான்தான்.
வசந்தகாலத்திலிருந்தே ஜெர்மனியில் இருந்த எங்கள் மூவருக்கும் (வில்ஹெம் லீப்னெஃஹ்ட், ஆகஸ்ட் பேபல், பால் சிங்கர்) “ஜெனரல்“ குணப்படுத்த முடியாத தொண்டைப் புற்று நோயால் சிரமப்பட்டு வருகிறார் என்பது தெரியும். ஆனால், ஓரளவு எதிர்பார்த்தது தான் என்றாலும் கூட, செய்தி தாங்கமுடியாததாகத் தான் இருந்தது.
இவ்வாறாக, விஞ்ஞான சோஷலிசத்தின் அடித்தளத்தையும். சோஷலிசத்தின் நடைமுறைகளையும் தனது நண்பர் மார்க்ஸோடு சேர்ந்து உருவாக்கிய அந்த மாபெரும் அறிவாளி, தனது மிக இளம் வயதில், 24வது வயதில் the condition of the working class in England என்ற அற்புதமான நூலை எழுதியவர், கம்யூனிஸ்ட் அறிக்கையின் இணையாசிரியர், தன் வாழ்நாள் முழுவதும் சர்வதேச உழைப்பாளிகளுக்காக உழைத்த மார்க்ஸின் மறுஉருவம், சிந்திக்கத் தெரிந்த எவரும் தெள்ளத் தெளிவாக அறிவியலை அணுகும் வகையிலான ஒரு கலைக்களஞ்சியமான டூரிங்குக்கு மறுப்பு நூலை எழுதியவர். குடும்பத்தின் தோற்றம் எழுதியவர். ஆயிரக்கணக்கான கட்டுரைகள், பிரசுரங்கள், பத்திரிகைக் கட்டுரைகள் எழுதியவர். நண்பர். ஆலோசகர், தலைவர், போராளி நம்மை விட்டுப் பிரிந்தார்.
ஆனால் வர்க்க உணர்வுள்ள தொழிலாளி எங்கெங்கெல்லாம் வாழ்கிறானோ, போராடுகிறானோ, அங்கெல்லாம் அவர் இன்னும் வாழ்கிறார்.
வில்ஹெம் லீப்னெஃஹ்ட் – தையல் தொழிலாளி. மிக முக்கியமான ஜெர்மன் சோஷலிஸ்ட். மார்க்ஸ், ஏங்கெல்ஸின் நண்பர். 1848 பாரீஸ் புரட்சியில் பங்கேற்றவர்.
ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 1 : நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – பால் லஃபார்கே (தமிழில் ச.சுப்பாராவ்)