ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 4: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – எலினார் மார்க்ஸ் ஆவேலிங் (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 4: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – எலினார் மார்க்ஸ் ஆவேலிங் (தமிழில் ச.சுப்பாராவ்)பிரடெரிக் ஏங்கெல்ஸ்

எலினார் மார்க்ஸ் ஆவேலிங்

1890 நவம்பர் 28 அன்று பிரடெரிக் ஏங்கெல்ஸ்ஸிற்கு எழுபது வயது நிரம்புகிறது. உலகம் முழுவதும் அனைத்து சோஷலிஸ்டுகளும் அதைக் கொண்டாடுவார்கள். அந்த தருணத்தில், இன்றைய கட்சியின் அந்தத் தலைவர் பற்றி ஒரு கட்டுரை தருமாறு சோஷியல் டெமாக்ரடிக் மாத இதழின் ஆசிரியர் டாக்டர் விக்டர் ஆட்லர் என்னைக் கேட்டுக் கொண்டார்.

இப்படிப்பட்ட ஒரு கடினமான பணிக்கு பல்வேறு விதமான திறமைகள் தேவைப்பட்டாலும். என்னிடம் ஒன்றே ஒன்று இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். எனக்கு ஏங்கெல்ஸை நான் பிறந்தது முதல் தெரியும். ஆனாலும் கூட,  நீண்டகாலம் நெருங்கி ஒருவருடன் பழகியிருந்தால், அதை வைத்து அவரை முழுமையாகச் சித்தரித்து விட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. உலகில் உள்ள மனிதர்களிலேயே ஏங்கெல்ஸை அப்படி முழுமையாகச் சித்தரிப்பது மிகக் கடினம்.

மார்க்ஸ், ஏங்கெல்ஸின் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என்றால்  – இருவரின் வாழ்க்கையும், பணிகளும் பின்னிப் பிணைந்தவை என்பதால் அவர்கள் பற்றி தனித்தனியே பிரித்து எழுத முடியாது –  அதற்கு, ஒருவர் சோஷலிசம் “உடோபியாவிலிருந்து ஒரு விஞ்ஞானமாக“ வளர்ந்த வரலாற்றை தான் எழுத வேண்டும். ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சுமார் அரை நூற்றாண்டு கால வரலாற்றை எழுத வேண்டும். ஏனெனில் இந்த இரு மனிதர்களும் வெறும் கருத்துகளின் தலைவர்களாக, தத்துவத்தை போதித்தவர்களாக அன்றாட வாழ்வின் உழைப்பிலிருந்து தம்மை ஒதுக்கிக் கொண்ட தத்துவவாதிகளாக மட்டுமே வாழ்ந்துவிடவில்லை. அவர்கள் எப்போதுமே போராளிகளாக இருந்தார்கள். புரட்சியின் போர்வீரர்களாக எப்போதும் முன்னணியில் நின்று போராடியவர்கள் அவர்கள்.

ஏங்கெல்ஸின் வாழ்க்கை வரலாறு அனைவருக்குமே நன்கு தெரிந்த ஒன்றுதான் என்பதால் நான் இங்கே சுருக்கமாக சிலவற்றை மட்டும் நினைவுகூர்கிறேன். அவரது இலக்கிய விஞ்ஞானப் படைப்புகள் அனைத்தும் மிகப் புகழ் பெற்றவை என்பதால் அவற்றைப் பற்றி இங்கு எழுதுவது நான் பந்தா செய்வது போலத் தோற்றமளிக்கும். எனவே நான் ஒரு மனிதாராக ஏங்கெல்ஸ் பற்றி, அவர் வாழ்ந்த, வேலை செய்த விதம் பற்றி சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டலாம் என்று நினைக்கிறேன். இதனால் பலரையும் மகிழ்விக்கலாம் என்று நினைக்கிறேன். .. ஏனெனில் அவர் காட்டிய பாதையில் பயணிக்கும் இளைஞர்களான நம் போன்றோர்க்கு  அவரது வாழ்க்கைக் குறிப்புகள் பெரிய உத்வேகம் அளிக்கும் என்பது எனது கருத்து.

Friedrich Engels | Antiques & Collectibles Paretski

 ———————————————————————————————————

ரைன்லாந்தில், பார்மனில் 1820 நவம்பர் மாதம் 28ம் நாள் பிரடெரிக் ஏங்கெல்ஸ் பிறந்தார். அவருடைய தந்தையார் ஒரு உற்பத்தியாளர். ( ரைன் பகுதிகள் ஏனைய ஜெர்மன் பகுதிகளை விட பொருளாதார ரீதியாக உயர்ந்திருந்தன என்பதை நினைவில் கொள்ளுங்கள்) அவரது குடும்பம் மிகவும் புகழ் பெற்றதாகும். அக்குடும்பத்தில் பிறந்த எவரும் குடும்பத்தின் பாரம்பரியப் பாதையிலிருந்து  ஒரு மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்ததே இல்லை. குடும்பத்தினர் ஏங்கெல்ஸை “அசிங்கமான வாத்துக் குஞ்சாகவே“ கருதியிருக்க வேண்டும். ஒருவேளை, அந்த “வாத்து“ உண்மையில் ஒரு “அன்னம்“ என்பது இப்போது கூட அவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஏங்கெல்ஸ் தமது குடும்பம் பற்றிச் சொன்னவற்றை அறிந்தவர்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரியும்.  அவரது குதூகலமான மனநிலை அவரது தாயாரிடமிருந்து பெறப்பட்டதாகும்.

பள்ளிக்கல்வி வழக்கமான ஒன்றாகத் தான் இருந்தது. சிலகாலம் அவர் எல்பர்ஃபெல்ட் பள்ளிக்குச் சென்றார். முதலில் அவர் கோடோ பல்கலைக்கழகத்திற்குச் செல்ல விரும்பினார். ஆனால் அதற்கான முயற்சிகளைச் செய்யவில்லை. பள்ளி இறுதித் தேர்விற்கு ஓராண்டிற்கு முன்பாக அவர் பார்மெனில் ஒரு வர்த்தகத்தில் ஈடுபட்டார். பிறகு ஓராண்டு பெர்லினில் ராணுவத்தில் தன்விருப்ப சேவையாற்றினார்.

1842ல் அவர் அவரது தகப்பனார் பங்குதாரராக இருந்த தொழிலில் வேலை பார்க்க மான்செஸ்டர் அனுப்ப்ப்பட்டார்.  அங்கு அவர் இரண்டாண்டுகள் தங்கியிருந்தார். முதலாளித்துவத்தின் அருமையான உதாரணமான. நவீன தொழில்களின் இதயமான அந்த நாட்டில் அவர் கழித்த அந்த இரண்டாண்டுகளின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அவரது இயல்பின்படி, அவர் தனது Conditions of the Working Class in England என்ற நூலுக்கு தரவுகளைச் சேகரிக்கும் போதே, சார்ட்டிஸ்ட் இயக்கத்திலும் ஆர்வத்தோடு ஈடுபட்டார். சார்ட்டிஸ்ட்டுகள் நடத்திய நார்த்தன் ஸ்டார், ஓவன் நடத்திய நியூ மாரல் வேர்ல்ட் ஆகிய பத்திரிகைகளுக்கு தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.

1844ல் ஏங்கெல்ஸ் பாரீஸ் வழியாக ஜெர்மனி திரும்பினார். அப்போதுதான் தனது வாழ்நாள் முழுக்க சிறந்த நண்பனாகத் திகழப் போகும் அந்த மனிதரை முதன்முறையாகச் சந்தித்தார். அவர் கார்ல் மார்க்ஸ்

இந்த சந்திப்பின் உடனடிப் பலன் புனிதக் குடும்பம் கூட்டாக வெளியிடப்பட்டதும், பின்னாளில் பிரஸ்ஸல்ஸில் முடிவடையப் போகும் ஒரு பணி ஆரம்பிக்கப்பட்டதும்தான்…..

அதே ஆண்டு, ஏங்கெல்ஸ் Conditions of the Working Class in England என்ற தனது நூலை  எழுதினார். வெளிவந்து நாற்பதாண்டுகள் ஆனபிறகும் கூட அந்தப் புத்தகம் இன்றும் பொருத்தமானதாக இருக்கிறது. இதன் ஆங்கிலப் பதிப்பு வந்தபோது  ( அமெரிக்க பதிப்பு 1887ல் வந்தது) ஆங்கிலத் தொழிலாளர்கள் அந்த நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அந்த காலகட்டத்தில் ஏங்கெல்ஸ் ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார்.

பாரீஸிலிருந்து அவர் திரும்ப பார்மனுக்குச் சென்றார். அங்கு சிறிது காலமே இருந்தார்.

1845ல் அவர் மார்க்ஸைத் தொடர்ந்து பிரஸ்ஸல்ஸ் சென்றார். அங்குதான் அவர்களது கூட்டுப்பணி உண்மையாகத் துவங்கியது.  தமது மிகப் பெரிய இலக்கியப் பணியைத் தாண்டி, அந்த இரு நண்பர்களும் ஒரு ஜெர்மன் தொழிலாளர் சங்கத்தை ஆரம்பித்தார்கள். ஆனால், அதைவிட முக்கியமானது அவர்கள் லீக் ஆஃப் த ஜஸ்ட்டில்  (League of the Just) ,இணைந்ததுதான். இதிலிருந்துதான் தன்னுள் அகிலத்தைக் கருக் கொண்டிருந்த புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் லீக் பின்னர் உருவானது. 

Marx's General' by Tristram Hunt: Humanizing Engels - The New York Times

1847ல் பிரஸ்ஸல்ஸில் வசித்த மார்க்ஸும், பாரீஸில் வசித்த ஏஙகெல்ஸும் லீக் ஆஃப் த ஜஸ்ட்டின் தத்துவார்த்த ஆசிரியர்களாக இருந்தார்கள். அந்த ஆண்டில்தான் லீக்கின் முதல் காங்கிரஸ் லண்டனில் நடந்தது. பாரீஸ் உறுப்பினர்களின் சார்பாளராக ஏங்கெல்ஸ் அதில் கலந்து கொண்டார். லீக் முழுமையாக மறுச்சீரமைப்பு செய்யப்பட்டது. அந்த இலையுதிர்காலத்தில் இரண்டாவது காங்கிரஸ் நடைபெற்றது. இதில் மார்க்ஸும் கலந்து கொண்டார். அதன் விளைவு இந்த உலகிற்கே தெரியும் – கம்யூனிஸ்ட் அறிக்கை..

இலண்டனிலிருந்து இரு நண்பர்களும் கொலோன் சென்றார்கள். உடனடியாக நடைமுறை நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.  இந்த நடவடிக்கைகளின் விபரங்கள் முழுவதும் நியூ ரெய்னீஷ் ஜெய்டுங்கிலும். மார்க்ஸின் Revelations about the Cologne Communist Trail நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

செய்தித்தாள் மூடப்பட்டது, மார்க்ஸ் நாடு கடத்தப்பட்டது ஆகியவற்றின் விளைவாக, நண்பர்கள் சிறிது காலம் பிரிந்திருக்க  நேர்ந்தது.  மார்க்ஸ் பாரீஸ் சென்றார். ஏங்கெல்ஸ் பால்ஸ் (pfalz) சென்றார். அங்கு அவர் பாடன் புரட்சியில் வில்லிச்சிற்கு ராணுவ உதவியாளராகப் பணியாற்றினார். அதில் மூன்று  முறை அவர் போர்க்களத்தை சந்தித்தார்.  அவரோடு போர்க்களத்தில் உடனிருந்தவர்கள் களத்தில் அவர் அசாதாரணமாக,  பதட்டப்படாமல், அபாயங்களைக் கண்டு சிறிதும் கலங்காமல் இருந்தது பற்றி பல்லாண்டுகள் கழித்து  இப்போதும் சொல்வார்கள்.

நியூ ரெய்னிஷ் ஜெய்டுங்கிலும். பாலிடிக்ஸ் எகனாமிக் ரெவ்யூவிலும் பாடன் எழுச்சி பற்றி ஏங்கெல்ஸ் எழுதினார். அது முழுமையாகத் தோல்வி அடைந்த பிறகு, கடைசி ஆளாக அவர் சுவிட்சர்லாந்து சென்றார். அங்கிருந்து லண்டன் சென்றார். பாரீஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட மார்க்ஸ் அப்போது லண்டனில்தான் இருந்தார்.

ஏங்கெல்ஸின் வாழ்க்கையில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பித்தது…….  மார்க்ஸ் லண்டனில் வசிக்க ஏங்கெல்ஸ் தன் தகப்பனார் பங்குதாரராக இருந்த பஞ்சாலையில் பணிபுரிய மான்செஸ்டர் சென்றார்.  அங்கு அவர் குமாஸ்தாவாகத் தன் பணியைத் துவங்கினார்.

இருபதாண்டுகளுக்கு  இந்த கட்டாய  வர்த்தக வாழ்க்கையை அவர் வாழ நேர்ந்தது.  இந்த இருபதாண்டுகளிலும் இந்த இரு நண்பர்களும், அபூர்வமாக, குறுகிய காலத்திற்கு சந்தித்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களது தொடர்பு விட்டுப் போகவில்லை.  எனது சிறுவயதின் முதல் நினைவுகளில் ஒன்று மான்செஸ்டரிலிருந்து கடிதம் வருவதுதான். இரு நண்பர்களும் கிட்டத்தட்ட தினந்தோறும் மற்றவருக்கு கடிதம் எழுதினார்கள்.  எழுதியவர் நேரில் இருப்பது போலவே மூர் ( வீட்டில் அப்பாவை அப்படித்தான் அழைப்போம் ) அந்தக் கடிதங்களுடன் பேசுவார். ” இல்லை.. அப்படியல்ல..”  ” இதில் நீ சொல்வது சரிதான்… “ என்பது போல்.  ஏங்கெல்ஸின் கடிதங்களைப் படிக்கும் போது சில சமயங்களில் மார்க்ஸ் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடும் வண்ணம் சிரிப்பதும் எனக்கு நினைவிருக்கிறது.

எனினும், மான்செஸ்டரில் ஏங்கெல்ஸ் தனிமையில் இல்லை.  முதலாவதாக, அவருடன், ”துணிச்சலானவரும், விசுவாசமானவரும்,  உழைக்கும் வர்க்கத்தின் உன்னத நாயகருமான” உல்ஃப் இருந்தார். மூலதனத்தின் முதல் பாகம் இவருக்குத்தான் சமர்ப்பணம் செய்யப்பட்டது. வீட்டில் இவரை லூபஸ் என்று அழைப்போம். அடுத்தவர் என் அப்பாவிற்கும், ஏங்கெல்ஸிற்கும் விசுவாசமான நண்பர்ன சாம் மூர் ( இவர் என் கணவரோடு இணைந்து மூலதனத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்) இருந்தார். இன்று மகத்தான வேதியியலாளர்களில் ஒருவராகத் திகழும் போராசிரியர் ஷோர்லெம்மரும் உடனிருந்தார். இந்த நண்பர்கள் எல்லாம் இருந்தாலும் கூட, ஏங்கெல்ஸ் மாதிரியான ஒருவர் இருபதாண்டுகள் அந்த மாதிரியான ஒரு வாழ்க்கை வாழ நேர்ந்தது கொடுமைதான். ஆனால் அவர் ஒருபோதும் அது குறித்து வருந்தியதில்லை. முணுமுணுத்ததில்லை. மாறாக, அதி உற்சாகமாகவே இருந்தார் ! ”கடைக்குப் போவது” அல்லது அலுவலகம் செல்வது ஆகியவற்றைப் போல் இன்பமானது உலகில் வேறெதுவுமே கிடையாது என்பது போல் தனது வேலையில் அத்தனை உற்சாகமாக. கவனமாக இருப்பார். ஆனால், இந்தக் கட்டாய உழைப்பு முடிவடையும் தருணத்தில் நான் அவருடன் இருந்திருக்கிறேன். இத்தனை காலமும் அவர் என்ன பாடுபட்டிருப்பார் என்பதை உணர்ந்தேன். கடைசி நாளன்று அலுவலகம் கிளம்பும் போது, காலையில் பூட்ஸை அணியும் போது, ”கடைசி தடவையாக !” என்று உற்சாகமாக அவர் கூவியதை என்னால் என்றும் மறக்க முடியாது.

சில மணிநேரங்களுக்குப் பிறகு நாங்கள் அவருக்காக வாசலில் காத்திருந்தோம். வீட்டிற்கு எதிரிலிருந்த சின்ன வயல் வழியாக அவர் வருவதைப் பார்த்தோம். தன் கைத்தடியை காற்றில் சுழற்றிக் கொண்டு பாடிக் கொண்டே வந்தார். முகம் பெருமிதத்தில் விம்மியது. அதைக் கொண்டாட நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். ஷாம்பெயின் அருந்தினோம். மகிழ்ச்சியாக இருந்தோம். இதெல்லாம் விபரமாகப் புரியும் அளவிற்கு நான் அப்போது பெரியவளாக இல்லை. ஆனால் இப்போது நினைத்தால் கண் கலங்குகிறது.

1870ல் அவர் லண்டன் வந்தார். உடனடியாக அகிலம் அப்போது ஈடுபட்டிருந்த மிகப் பெரிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அந்த சமயத்தில் அவர் செயற்குழு உறுப்பினராகவும், பெல்ஜியத்தின் பொறுப்பாளராகவும் இருந்தார். பின்னர் ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் பொறுப்பாளரானார். ஏங்கெல்ஸின் இலக்கியப் பணி மிகப் பெரியது. பரந்து பட்டது. 1870 முதல் 1880 வரை அவர் இடைவிடாது கட்டுரைகளும், பிரசுரங்களும் எழுதிக் கொண்டே இருந்தார். ஆனால் அவரது மிக முக்கியமான படைப்பு 1878ல் வெளியான Herr Eugen Duhring’s Revolution in Science தான். (இந்தப் படைப்பிற்குப் பின்னாளில் Anti Duhring – டூரிங்குக்கு மறுப்பு என்று பெயர் மாற்றப்பட்டது – மொழிபெயர்ப்பாளர்) மூலதனத்தைப் போலவே இந்த நூலின் முக்கியத்துவம், செல்வாக்கு குறித்து தனியாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை.

அடுத்த பத்தாண்டுகளுக்கு ஏங்கெல்ஸ் அப்பாவைப் பார்க்க தினமும் வருவார். சில சமங்களில் இருவரும் நடை பயிற்சிக்குக் கிளம்பிவிடுவார்கள். ஆனால் பெரும்பாலும் அப்பாவின் அறையிலேயே குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருப்பார்கள். அவரவருக்கு உலாவ என்று ஒரு குறிப்பிட்ட பக்கம் இருக்கும். தனது பக்கத்தின் மூலை வந்ததும் அப்படியே திரும்பி நடக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த அறையில், பெரும்பாலான மக்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் எத்தனையோ விஷயங்களை விவாதித்திருக்கிறார்கள். பல சமயங்களில் இருவரும் மௌனமாக அடுத்தடுத்து உலாவிக் கொண்டிருப்பார்கள். அல்லது ஒவ்வொருவரும் தன் மனதில் அந்த நேரத்தில் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றிப் பேசுவார்கள். நேருக்கு நேராக வர நேரும்போது, கடந்த அரை மணிநேரமாக அடுத்தவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்ததாகச் சொல்லி, உரக்கச் சிரிப்பார்கள்.

இடமும், நேரமும் அனுமதித்தால் அந்தக் காலங்கள் பற்றி எவ்வளவோ எழுதலாம் ! அகிலம் பற்றி, கம்யூன் பற்றி. … அந்த நாட்களில் இங்கிலாந்தில் குடிபெயர்ந்தவர் ஒவ்வொருவரும் எங்கள் வீட்டுக்கு உதவி நாடி வந்து, எங்கள் வீடே ஒரு ஹோட்டல் போல் இருந்தது பற்றி….

181ல் என் அம்மா காலமானார். உடல் நலம் குன்றிய என் அப்பா சில மாதங்களுக்கு ஏங்கெல்ஸை சந்திக்கவில்லை.  1883ல் அப்பாவும் காலமானார்.

Miss Marx' Film: Who Was Eleanor Marx, Daughter Of Karl Marx? - HistoryExtra

அதன் பிறகு ஏங்கெல்ஸ் எவ்வளவு செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தனது நேரத்தின் பெரும்பகுதியை என் அப்பாவின் படைப்புகளை வெளியிட, புதிய பதிப்புகளுக்கு மெய்ப்புப் பார்க்க, மூலதனத்தின் மொழிபெயர்ப்புகளை சரிபார்க்க என்று செலவிட்டார். அதே சமயத்தில் அவரது சொந்த படைப்புகள் எழுத்துகள் பற்றி நான் தனியே சொல்லத் தேவையில்லை. ஏங்கெல்சை  நேரடியாக அறிந்தவர்கள் மட்டுமே அவர் ஒரு நாளில் எவ்வளவு உழைத்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இத்தாலியர்கள், டச்சுக்காரர்கள். டேனிஷ்காரர்கள், ருமேனியர்கள் ( இந்த எல்லா மொழிகளிலும் அவருக்கு நல்ல புலமை உண்டு), எல்லோரும் அவரிடம் உதவி, ஆலோசனை கேட்டு வந்து கொண்டெ இருப்பார்கள். ஆங்கிலேயர்கள், ஜெர்மனியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

எங்கள் நட்பு வட்டாரத்தில் யாருக்கு என்ன கஷ்டம் என்றாலும். நாங்கள் ஏங்கெல்ஸிடம் தான் செல்வோம். அவரிடம் செல்வது வீணல்ல. இந்த ஒற்றை மனிதர் சமீப காலங்களில் செய்துள்ள உழைப்பு ஒரு டஜன் சாதாரண மனிதர்களின் உழைப்பை விட அதிகம். மேலும், ஏங்கெல்ஸ் இப்போதும் வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறார். காரணம், மார்க்ஸ் விட்டு விட்டுச் சென்றதை தான் மட்டுமே, தன்னால் மட்டுமே முடிக்க முடியும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஏங்கெல்ஸ் நமக்காகச் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. அவர் கண்டிப்பாகச் செய்வார் !

இது அவரது வாழ்க்கையைப் பற்றிய ஒரு லேசான கோட்டுச் சித்திரம்தான். சொல்லப்போனால், ஒரு மனிதனைப் பற்றியல்லாமல், அவனது எலும்புக் கூட்டைப் பற்றிச் சொல்வதற்கு ஒப்பானதுதான். அந்த எலும்புக்கூட்டை ரத்தமும், சதையுமாக உலவவிட என்னைவிட திறமையான ஒருவர் வேண்டும். ஒருவேளை அது நம்மில் யாராகவும் இருக்கலாம். நாம் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால், நம்மால் அவரை முழுமையாகப் பார்க்க முடிவதில்லை.

ஏங்கெல்ஸிற்கு இப்போது வயது எழுபது. அந்த எழுபது வயது முதுமையை அவர் மிக எளிதாகச் சுமக்கிறார். உடலாலும், உள்ளத்தாலும் உற்சாகமாக இருக்கிறார். தன் ஆறடி சொச்ச உடலை அவர் மிக லகுவாக சுமப்பதில், பார்ப்பவர்களுக்கு அவர் எவ்வளவு உயரம் என்பது தெரிவதில்லை. அவரது தாடி ஒருபக்கமாகவே வளர்கிறது. நரைக்கவும் ஆரம்பித்து விட்டது. மாறாக, தலைமுடி ஒரு நரை கூட இல்லாமல் பிரவுன் நிறத்திலேயே இருக்கிறது. குறைந்தபட்சம், மிகக் கவனமாகப் பார்த்தாலும், கண்ணுக்கு ஒரு நரை முடி கூட  தட்டுப்படவில்லை என்று சொல்லலாம். தலைமுடி விஷயத்தில் கூட அவர் எங்களையெல்லாம் விட இளமையாக இருக்கிறார் ! ஏங்கெல்ஸ் இளமையாகத் தோற்றமளித்தாலும். அவர் உண்மையில்  தோற்றமளிப்பதை விட இன்னுமே இளமையானவர்.  பார்க்கப் போனால்,  எனக்குத் தெரிந்தவர்களிலேயே மிகவும் இளமையானவர் அவர்தான். எனக்குத் தெரிந்தவரை இந்த கடினமான கடைசி இருபது ஆண்டுகளில் அவருக்கு வயதே ஆகவில்லை.

1869ல் அவரோடு நான் அயர்லாந்து சென்றேன். அவர் அயர்லாந்தின் வரலாற்றை எழுத விரும்பியதால், அவரோடு பயணிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பின்னர் 1888ல் நான் அவருடன் அமெரிக்கா சென்றேன். 1869லும், 1888லும் அவர் கலந்து கொண்ட அத்தனை நிகழ்ச்சிகளிலும் அவர்தான் உயிரும், ஆன்மாவுமாக இருந்தார்.

சிட்டி ஆஃப் பெர்லின், சிட்டி ஆஃப் நியூயார்க் என்ற இரு கப்பல்களிலும் கால நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், அவர் மேல்தளத்தில் உலாவச் சென்றுவிடுவார். அப்படியே ஒரு கோப்பை பீர். ஒரு தடையைச் சுற்றிக் கொண்டு போகாமல், அதைத் தாண்டி அல்லது அதனை மிதித்து ஏறிச் செல்ல வேண்டும் என்பது அவரது அசைக்க முடியாத கொள்கையாக இருந்தது போல் தெரிந்தது.

இந்த இடத்தில்  என் அப்பா மற்றும் ஏங்கெல்ஸின் குணாதிசயங்களின் ஒரு பக்கத்தைப்  பற்றிச் சிறிது சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அந்தப் பக்கம் வெளி உலகிற்கு தெரியாதது. பலருக்கு நம்ப முடியாததாகவும் இருக்கும்.  என் அப்பா சிடுசிடுப்பானவராக, வேண்டியவர், வேண்டாதவர் என எல்லோரிடமும் எரிந்து விழுபவராகவே பொதுவாகச் சித்தரிக்கப்படுகிறார். ஆனால், துளைத்தெடுப்பதாகவும், அதே நேரத்தில் கருணையுள்ளதாகவும் உள்ள அவரது பிரவுன் நிறக் கண்களை ஒரே ஒரு முறை பார்த்தாலும், போதும். எல்லோரிடமும், தொற்றிக் கொள்ளக் கூடிய அவரது அந்த மனந்திறந்த சிரிப்பை ஒருவர் ஒரே ஒரு முறை கேட்டாலும் போதும். இந்த சிடுசிடுப்பு  பிம்பம் தவறானது என்று தெரிந்துவிடும். ஏங்கெல்ஸ் விஷயமும் இப்படியேதான். அவரை அதிகாரம் செய்பவராக, சர்வாதிகாரியாக, கடுமையாக விமர்சிப்பவராக சிலர் சொல்வார்கள். அவற்றில் சிறிதும் உண்மையில்லை.

இளைஞர்கள் மீது ஏங்கெல்ஸ் காட்டும் தீராத பரிவு பற்றி நான் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அதற்கு சாட்சியம் சொல்ல ஒவ்வொரு நாட்டிலும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். தனது சொந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, யாரோ ஒரு இளைஞனுக்கு உதவி செய்வதற்காக அவர் செல்வதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். 

Eleanor Marx with Wilhelm Liebknecht in 1886. | Eleanor, History, Historical figures

ஏங்கெல்ஸால் மன்னிக்க முடியாத ஒன்று உண்டு என்றால் அது ஏமாற்று வேலைதான். ஏமாற்றுக்காரனாக இருப்பது, அதுவும் தன் கட்சியை ஏமாற்றுவனுக்கு ஏங்கெல்ஸிடம் மன்னிப்பே கிடையாது. அவரைப் பொருத்தவரை அது மன்னிக்க முடியாத பாவச் செயல்….

இங்கு ஏங்கெல்ஸின் மற்றொரு குணத்தைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். உலகிலேயே மிகவும் சரியாக நடந்து கொள்ளும் மனிதர். மிக்க் கடுமையான கடமை உணர்வு கொண்டவர், அதிலும் கட்சிக் கட்டுப்பாட்டில் வேறு எவரையும் விட, மிகக் கண்டிப்பாக நடந்து கொள்பவர் என்றாலும், கூட அவர் சிறிதளவும் வறட்டுத்தனமான நன்னெறியாளரல்ல.

அவரது பன்முகத்தன்மை போலவே அவரது உற்சாக மனநிலையும், கருணையும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. இயற்கை வரலாறு, வேதியியல், தாவரவியல், இயற்பியல், மொழியியல்  ( “அவர் சுமார் இருபது மொழிகளில் திக்குவார்,“ என்று ஃபிகாரோ ஒரு முறை குறிப்பிட்டார்)  அரசியல் பொருளாதாரம், கடைசியாக என்றாலும், மிக முக்கியமாக, ராணுவ தந்திரம் என ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்து விளங்குபவர். 1870ல், ஃபிராங்கோ- புருஷ்ய யுத்தத்தின் போது அவர் பால்மால் இதழில் எழுதிய ராணுவக்கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர் சேடன் போர் எப்படி முடியப்போகிறது, பிரெஞ்சு ராணுவும் எப்படித் தோற்கப் போகிறது என்பதை மிகச் சரியாக முன்கூட்டியே சொல்லி விட்டார்.

அந்த தீர்க்க தரிசனத்திற்காகத் தான் அவருக்கு ஜெனரல் என்ற பட்டம் சூட்டப்பட்டது. என் சகோதரிதான் அந்தப் பெயரை வைத்தாள். அந்தப் பெயர் அப்படியே நிலைத்து விட்டது. அன்றிலிருந்து நாங்கள் அவரை ஜெனரல் என்றே அழைக்க ஆரம்பித்தோம். ஆனால், இன்று அந்தப் பெயருக்கு இன்னும் ஒரு பரந்த பொருள் கிடைத்துவிட்டது. உண்மையில் ஏங்கெல்ஸ் உழைக்கும் வர்க்கம் என்ற ராணுவத்தின் ஜெனரலாகத் திகழ்கிறார்.

ஏங்கெல்ஸின் மற்றொரு குணாதிசயத்தையும் – அது மிக முக்கியமானது – இங்கே குறிப்பிட வேண்டும். அது அவரது முழுமையான தன்னலமற்ற குணம்.

”மார்க்ஸின் காலத்தில் நான் ஒத்து ஊதுபவனாகத்தான் இருந்தேன்,” என்பார் அவர். ” அதில் நான் மிகுந்த தேர்ச்சி பெற்று விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். மார்க்ஸிற்கு நான் சிறந்த ஒத்து ஊதுபவனாக இருந்ததில் எனக்கு பெருமகிழ்ச்சிதான்,“ ( 1884 அக்டோபர் 15 அன்று பெக்கருக்கு எழுதிய கடிதம்) இன்று இந்த மாபெரும் இயக்கத்தை நடத்துபவரே அவர்தான். ஆனால், சிறிதும் அதனால் கர்வம் கொள்ளாது, பந்தா செய்யாது, மிக அடக்கமாக தன்னைத் தானே, “ஒத்து ஊதுபவன்” என்று சொல்லிக் கொள்கிறார்.

பலரைப் போலவே எனக்கும் என் அப்பாவிற்கும், ஏங்கெல்ஸிற்குமான நட்பைப் பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கிரேக்க புராணக்கதைகளில் வரும் டேமன், பிதியாஸ் நட்பைப் போன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நட்பு அது. (டேமன் பிதியாஸ் இருவரும் நண்பர்கள். ஒரு கொடுங்கோலனான அரசன் பொய்க் குற்றம் சாட்டி பிதியாஸிற்கு மரண தண்டனை விதிக்கிறான். பிதியாஸ் தனக்கு சில சொந்த வேலைகளை முடிக்க அவகாசம் கேட்கிறான். அரசன் அவகாசம் தருவதற்காக வேறு யாராவது ஒருவரை பிணையாகத் தரவேண்டும் என்று சொல்ல தன் நண்பன் டேமனைப் பிணையாகத் தருகிறான். குறிப்பிட்ட நாளுக்குள் அவன் திரும்பி வராவிட்டால் டேமன் கொல்லப்படுவான். எத்தனையோ தடங்கல்களால் அவனால் வரமுடியாமல் போகிறது. குறிப்பிட்ட நாளன்று அரசன் டேமனைக் கொல்ல ஏற்பாடுகள் செய்கிறான். டேமன் சிறிதும் கலங்காமல் தூக்கு மேடை ஏறும் சமயத்தில் எப்படியோ கஷ்டப்பட்டு பிதியாஸ் வந்து தன் நண்பனை விடுவித்து விட்டு, தன்னைக் கொல்லுமாறு வேண்டுகிறான். அவர்களது நட்பின் ஆழத்தைப் பார்த்த அரசன் இருவரையும் விடுவிக்கிறான் – மொழிபெயர்ப்பாளர்) 

மார்க்ஸுடனான நட்பின் காரணமாக ஏற்பட்டு, அவரதுவாழ்விலும், பணிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வேறு இரு நட்புகள் பற்றியும் சொல்லாவிட்டால், இந்தக் குறிப்பு முழுமை பெறாது. .. முதலாவது என் அம்மாவுடனான அவரது நட்பு. இரண்டாவது இந்த ஆண்ட நவம்பர் 4ம் தேதி மரணமடைந்து, என் பெற்றோர்களுடன் சேர்ந்து புதைக்கப்பட்டிருக்கும் ஹெலன் டெமூத்.

என் அம்மாவின் கல்லறையில் ஏங்கெல்ஸ் பேசியதை இங்கே அப்படியே தருகிறேன். (ஏங்கெல்ஸ் ஜென்னி மார்க்ஸ் பற்றி சோஷியல்டெமாக்ரடிக்கில் எழுதிய கட்டுரையை இங்கு அப்படியே தந்திருக்கிறார் எலினார்)

“நண்பர்களே!

“நாம் இங்கு புதைத்த இந்த கருணையுள்ளம் கொண்ட பெண் 1814ல் சால்ஸ்வீடலில் பிறந்தாள். அவளது தந்தை வெஸ்ட்பாலன் பிரபு சிறிது காலத்திலேயே ட்டரியருக்கு அரசாங்க ஆலோசகராக அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு மார்க்ஸ் குடும்பத்தாருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. இரு குடும்பத்தின் குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்தே வளர்ந்தார்கள். இரு மிகச் சிறந்த உள்ளங்கள் ஒன்றையொன்று புரிந்து கொண்டன. மேற்படிப்பிற்காக மார்க்ஸ் பல்கலைக்கழகம் போகும் போதே அவர்களது எதிர்கால வாழ்க்கை முடிவாகிவிட்டது.“

“1843ல் மார்க்ஸ் அப்போது ஆசிரியராக இருந்த ரெய்னீஷ் ஜெய்டுங் மூடப்பட்ட பிறகு, அவர்களது திருமணம் நடந்தது. அதிலிருந்து ஜென்னி மார்க்ஸ் மார்க்ஸின் வாழ்க்கையில் மட்டுமின்றி. அவரது போராட்டங்களிலும் , பணிகளிலும் பங்கு கொண்டார். அவற்றில் மிகவும் புரிதலோடும், மிகுந்த விருப்பத்தோடும் ஈடுபட்டார்.”

“அந்த இளம் தம்பதிகள் தம் விருப்ப நாடுகடத்தலாக பாரீஸ் சென்றார்கள். அது விரைவிலேயே உண்மையான நாடுகடத்தலாக ஆனது. அங்கும் பிருஷ்ய அரசாங்கம் மார்க்ஸைத் துன்புறுத்தியது. துரதிருஷ்டவசமாக அலெக்சாண்டர் வான் ஹெம்போல்ட் போன்ற ஒரு மனிதர் மிகவும் தரந்தாழ்ந்து மார்க்ஸை நாடுகடத்தும் உத்தரவைப் பிறப்பிப்பதில் சம்பந்தப்பட்டிருந்தார். குடும்பம் பிரஸ்ஸல்ஸிற்குக் குடியேறும் கட்டாயம் வந்தது. பின்னர் பிப்ரவரி புரட்சி வந்தது. அதன் விளைவாக பிரஸ்ஸல்ஸில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மார்க்ஸ் கைதானார். அதுமட்டுமன்றி, பெல்ஜியம் போலீஜ் எந்தக் காரணமும் இன்றி அவரது மனைவியையும் சிறையில் தள்ளுமளவு மோசமாக நடந்து கொண்டது.”

“1848ன் புரட்சிகர எழுச்சி அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே குலைந்தது. மீண்டும் நாடு கடத்தல். முதலில் பாரீஸுக்கு. பின்னர் பிரெஞ்சு அரசாங்கத்தின் தலையீட்டின் காரணமாக லண்டனுக்கு. இந்த முறை ஜென்னி மார்க்ஸிற்கு இது உண்மையிலேயே மிகத் துயரமான நாடு கடத்தலாக இருந்தது. ஆனாலும், தன் இரு மகன்களையும், ஒரு சின்னஞ்சிறு மகளையும் பறி கொடுக்குமளவு இருந்த வறுமையைக் கூட அவர் தாங்கியிப்பார். ஆனால், அரசாங்கமும், பூர்ஷ்வா எதிர்கட்சிகளும் சேர்ந்து அவரது கணவர் மீது மிகக் கேவலமான குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். பத்திரிகை உலகம் முழுவதும் அவருக்கு எதிராக இருந்தது. தன் நிலைபாட்டை எடுத்துரைக்கும் எந்த வழிமுறையும் இல்லாத நிலைக்கு மார்க்ஸ் தள்ளப்பட்டார். எதிரிகளுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவரும், அவரது மனைவியும் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். இவையனைத்தும் ஜென்னியை மிகவும் ஆழமாகப் புண்படுத்தின. அது நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தது.“

“ஆனால், நிரந்தரமாக அல்ல. ஐரோப்பிய தொழிலாளி வர்க்கம் மீண்டும் கிளர்ந்தெழுந்தது. அதனால் சில உரிமைகள் கிடைத்தன. அகிலம் உருவாக்கப்பட்டது. உழைப்பாளிகளின் வர்க்கப் போராட்டம் நாடு நாடாகப் பரவியது. அதில் அவரது கணவர் முன்னணியில், அனைவரும் முன்பாக நின்று போராடினார்.  பின்னர், அவரது துன்பங்களை ஓரளவிற்கு சமன்படுத்தும் ஒரு காலம் ஆரம்பித்தது. தன் கணவருக்கு எதிராகச் சொல்லப்பட்ட  வசைமாரிகள் காற்றில் பறக்கும் வைக்கோல் போல் சிதறிக் காணாமல் போவதைப் பார்க்குமளவு வாழ்ந்தார். எதிர்புரட்சி சக்திகளான அனைத்து முதலாளித்துவ, மற்றும் ஜனநாயகக் கட்சிகளும் அடக்க பெருமுயற்சி செய்த மார்க்ஸின் போதனைகள் அனைத்து நாகரீகமடைந்த நாடுகளிலும். அனைத்து மொழிகளிலும் ஒவ்வொரு வீட்டிற்கும் பரவுவதைப் பார்க்குமளவு உயிர் வாழ்ந்தார். அவருடைய வாழ்வோடு ஒன்றிணைந்து விட்ட தொழிலாளர் இயக்கம், அமெரிக்கா முதல் ரஷ்யா  வரையிலான அந்த பழைய உலகத்தை உலுக்கி. எல்லாத் தடைகளையும் மீறி,  என்றுமில்லாத அளவிற்கு, வெற்றிபெறும் தன்னம்பிக்கையோடு முன்னேறுவதைப் பார்க்குமளவிற்கு உயிர் வாழ்ந்தார். கடைசியாக ஜெர்மனியில் நடந்த தேர்தலில் நமது ஜெர்மன் தொழிலாளர்கள் தந்த அந்த உற்சாகமான பதிலடி அவரது கடைசி கால சந்தோஷங்களில் ஒன்று.“

Labour Party | Anti-Traitors

“இந்தப் பெண்மணி தனது கூர்ந்த அரசியல் அறிவால், உற்சாகமான, உணர்ச்சிகரமான இயல்பால், போராட்டக் களத்தில் உள்ள தன் தோழர்கள் மீது காட்டிய பெரும் அர்ப்பணிப்பால் இந்த நாற்பதாண்டு காலத்தில் இயக்கத்திற்கு ஆற்றியவை எதுவும் பொதுமக்கள் பார்வைக்கு வந்ததில்லை. சமகால பத்திரிகைக் குறிப்புகளில் பதிவாகவில்லை. ஒருவர் அந்த வாழ்க்கையை உடனிருந்து பார்த்திருக்க வேண்டும்.  ஆனால், எனக்கு இந்த அளவிற்குத் தெரியும் – நாடுகடத்தப் பட்டு கம்யூனில் வாழ்ந்தவர்களின் மனைவிகள் அவரை அடிக்கடி நினைத்துக் கொள்வார்கள். எங்களைப் போன்றோர் அவரது கூர்ந்த புத்திசாலித்தனமான அறிவுரைகளை, எந்த பாசாங்குமில்லாத கூர்ந்த பார்வையை. தற்பெருமை எதுவுமற்ற அந்த புத்திசாலித்தனத்தை அடிக்கடி நினைத்துக் கொள்வோம்.“

“அவரது தனிப்பட்ட குணாதிசயங்களை நான் சொல்லவேண்டிய அவசியம்இல்லை. அவரது நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும். அவற்றை மறக்க மாட்டார்கள். மற்றவர்களின் மகிழ்ச்சிதான் தனது மிகப் பெரிய மகிழ்ச்சி என்று யாராவது ஒருவர் வாழ்ந்திருந்தால், அது நிச்சயமாக இந்தப் பெண்மணிதான்.”

ஹெலன் டெமூத்தின் அஞ்சலியில் ஏங்கெல்ஸ் கூறியதாவது – 

“ பல சிக்கலான, கடினமான கட்சிப் பிரச்சனைகளில் மார்க்கஸ் அவரிடம் பலமுறை ஆலோசனை கேட்டிருக்கிறார். என்னைப் பொருத்தவரை, மார்க்ஸின் மரணத்திற்குப் பிறகு என்னால் செய்ய முடிந்த அனைத்திற்கும் காரணம், மார்க்ஸின் மரணத்திற்குப் பிறகு, ஹெலன் டெமூத் என் வீட்டில் வந்து வசித்து, தனது இருப்பால் என் வீட்டில் வெளிச்சத்தை ஏற்படுத்தி, உதவிகள் செய்ததுதான்.“

“மார்க்ஸிற்கும்  அவரது குடும்பத்திற்கும் அவர் எவ்வளவு செய்தார் என்பதை நாங்கள் மட்டுமே அறிவோம். எங்களால் கூட அவற்றை வார்த்தைகளில் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. 1837 முதல் 1890 வரை எங்கள் ஒவ்வொருவருக்கும் அவர் சிறந்த நண்பராக, துணையாக இருந்திருக்கிறார்.“

 

Mrs Eleanor Marx Aveling, daughter of Karl Marx.jpg

கட்டுரையாளர் மார்க்ஸின் இளைய மகள். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.  இளம் வயதிலிருந்தே மார்க்ஸின் செயலாளர் போல உடன் இருந்தவர். புகழ் பெற்ற பிரிட்டிஷ் மார்க்ஸியரான எட்வர்ட் அவேலிங்கை மணந்தவர்.ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 1 : நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – பால் லஃபார்கே (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 2 : நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – பிரெடரிக் லெஸ்னர் (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 3: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – வில்ஹெம் லீப்னெஃஹ்ட் (தமிழில் ச.சுப்பாராவ்)Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *