ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 5: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – எட்வர்ட் அவேலிங் (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 5: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – எட்வர்ட் அவேலிங் (தமிழில் ச.சுப்பாராவ்)ஏங்கெல்ஸ் எனும் மனிதர்

(எட்வர்ட் அவேலிங் (1851 – 1898) ஆங்கிலேய சோஷலிஸ்ட்,  எழுத்தாளர். மார்க்ஸின் மகள் எலினாரை மணந்தவர். இந்தக் கட்டுரை 1895ல் வெளியானது)

சமீபத்தில்  மறைந்த மாபெரும் சோஷலிஸ்ட்டான ஏங்கெல்ஸின் வாழ்வு, பணிகள் பற்றி உலகெங்குமுள்ள பத்திரிகைகளும், சோஷலிஸ்ட்டுகளும் ஏராளமாக எழுதி வருகிறார்கள். இந்தக் கட்டுரையில் நான் அவரது தனிப்பட்ட வாழ்வு பற்றி சில விஷயங்களைக் கூறலாம் என்று நினைக்கிறேன்.

Cad whose cruelty killed Karl Marx's daughter: Eleanor Marx's intellect was as dazzling as her beauty. But then the trailblazing feminist fell foul of a callous charmer | Daily Mail Online
Edward Aveling

கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், பிரடெரிக் ஏங்கெல்ஸ், வாழ்வின் வேறொரு கோணத்தில் ஹென்றி இர்விங்  ( இவர் புகழ் பெற்ற ஆங்கில நடிகர் மற்றும் தயாரிப்பாளர். ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில் நடித்தார்)  ஆகியோர் நான் சந்தித்த மிக முக்கியமான, மனதில் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய ஆளுமைகள். இந்த நால்வரிலும், அவர்களது பெரும் அறிவாற்றல் மிகச் சிறந்த குணநலன்களோடு இணைந்திருந்தது. மார்க்ஸ் மற்றும் டார்வினைப் பொருத்த வரை, அவர்களது எழுத்துகள் அனைத்தும் ஓரளவிற்கு எனக்குத் தெரியும் என்றாலும். அவர்களை நேரில் சந்திக்கும் பேறு ஓரிரு சந்தர்ப்பங்களில் மட்டுமே வாய்த்தது.  மார்க்ஸை நான் நேரில் பார்த்த ஒரே சந்தர்ப்பத்தில் நான் மிகவும் இளையவனாக இருந்தேன். அப்போது அவர் ஹேவர்ஸ்டாக் ஹில்லில் அனாதைத் தொழிலாளர் பள்ளியின் குழந்தைகளிடையே “பூச்சிகள் மற்றும் பூக்கள்“ பற்றி உரையாற்ற வந்திருந்தார். அன்று பள்ளியில் ஏதோ நிகழ்ச்சி என்பதால் குழந்தைகளோடு, பள்ளி மீது அக்கறை கொண்டவர்களும் வந்திருந்தார்கள். கூட்டம் முடிந்ததும், சிங்கம் போன்ற பிடரியுடன் இருந்த  அந்த முதிய கனவான், ஒரு சீமாட்டி மற்றும் இளம் பெண்ணுடன் என்னருகே வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அந்தக் கனவான் கார்ல் மார்க்ஸ்.  அந்த சீமாட்டி ஜென்னி வான் வெஸ்ட்பாலன். அந்த இளம் பெண் அவர்களது புதல்வி எலினார். அன்று மார்க்ஸ் மிக அன்போடு,  தாராளமாக என்னை உயர்த்தியும், உற்சாகப்படுத்தியும் சொன்ன வார்த்தைகள் இன்றும் நினைவிருக்கின்றன. நான் அவரை அடுத்த முறை பார்த்தது அவர் மரணமடைந்த பிறகுதான். ஆனால்,  அவரது மாபெரும் ஆளுமை இன்றளவும் என்னிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏங்கெல்ஸ் ஆறடி உயரம் இருப்பார். கடைசியில் நோய்வாய்ப்பட்டிருந்த காலம் வரையில் ராணுவ வீரன் போல் கம்பீரமாக நிமிர்ந்து நின்று, தன் எழுபத்திச் சொச்ச வயதின் சுமையை எளிதாகச் சுமப்பார். இந்த ராணுவ மிடுக்கிற்கும், வேகமான, உற்சாக நடைக்கும், அவரது நெருங்கிய நட்பு வட்டங்கள் அவரை அழைக்கும் ஒரு பட்டப் பெயருக்கும் தொடர்பு உண்டு – “ஜெனரல்“.  இந்தப் பட்டப்பெயர் சூட்டப்படக் காரணமாக இருந்தது 1870ல் நடந்த பிரான்கோ – ஜெர்மன் போரின் போது, பால்மால் கெஸட் பத்திரிகையில்  அவர் எழுதிய ராணுவக் கட்டுரைகள்தான். இக்கட்டுரைகளில் ஒன்றில் அவர் சேடனில் ஜெர்மனி வெற்றி பெறப் போவதை எட்டு நாட்களுக்கு முன்பே கணித்து எழுதியிருந்தார். அந்தக் கட்டுரைகள் அவரது ராணுவத் தந்திரங்கள் பற்றிய ஆழமான அறிவைக் காட்டியதால், வாசகர்கள்  யாரோ ஒரு பெரிய ராணுவ அதிகாரிதான் அவற்றை எழுதி வருவதாக்க் கருதினார்கள். ஆம் அப்படித்தான். ஆனால் அதை எழுதியவர் மான்செஸ்டர் பஞ்சாலைக்காரரும். சோஷலிசப் படையின் தளபதியுமாவார். அந்தப் படையின் தலைமை தளபதி மார்க்ஸ் காலமான பிறகு, முதலாளித்துவத்திற்கெதிரான சோஷலிசப் படையின் போரை அந்த தளபதிதான் நடத்திச் சென்றார்.

122 ரீஜண்ட் பார்க் ரோடின் அந்த அற்புதமான ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரே ஒரு முறை கலந்து கொண்டவர் கூட அதை என்றென்றும் மறக்க மாட்டார். மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் குடும்ப நண்பரான ஹெலன் டெமூத் அப்போது மார்க்ஸின் வீட்டு வேலைகள் அனைத்தையும் கவனித்து வந்தார். அது மட்டுமல்ல, அவர் அரசியல் முதலிய எல்லா விஷயங்களிலும் அந்த இரு மேதைகளுக்கும் ஆலோசனை கூறுபவராக இருந்தார்.

அவரது இல்லம் கிட்டதட்ட வர்த்தகத்தின் பேபல் கோபுரம் போலத்தான் இருக்கும். அவரது நெருக்கமான குடும்ப நண்பர்களான எங்களைப் போன்றோருக்கு மட்டுமின்றி, பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த சோஷலிஸ்ட்டுகளுக்கும் 122 ரீஸண்ட்ஸ் ரோடு ஒரு மெக்காவாகத் தான் இருந்தது.

அவர்கள் அனைவரிடமும் ஏங்கெல்ஸால் அவரவரது மொழியில் உரையாட முடியும்.  மார்க்ஸைப் போலவே அவர் ஜெர்மன். பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அழகாக பேசவும் எழுதவும் செய்வார். இத்தாலியன், ஸ்பானிஷ், டேனிஷ் ஆகிய மொழிகளிலும் கிட்டத்தட்ட துல்லியமாகப் பேசவும்,  எழுதவும் தெரியும். ரஷ்யன், போலிஷ், ருமேனிய மொழிகளில் வாசிக்கத் தெரியும். ஓரளவு நன்றாகவே பேசவும் தெரியும். லத்தீன், கிரேக்க மொழிகள் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

1886) Eleanor Marx (C) with Edward Aveling (R) and William Liebknecht (L) | Fairy paintings, Photographer, History

தினமும் அனைத்து மொழிகளிலும் பல பத்திரிகைகளும், கடிதங்களும் அவருக்கு தபாலில் வரும். அவரது பல்வேறு பணிகளுக்கு இடையில் அவற்றைப் படிக்கவும், அவற்றை ஒழுங்குபடுத்தி வைக்கவும், அவற்றின் முக்கிய அம்சங்களை நினைவில் கொள்ளவும் அவருக்கு எப்படி நேரம் இருந்தது என்றே தெரியவில்லை. அவரது அல்லது மார்க்ஸின் படைப்புகளில் ஏதாவது ஒன்று வேறு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால், மொழிபெயர்ப்பாளர்கள் அதை சரிபார்த்து, திருத்துவதற்கு ஏங்கெல்ஸிற்குத்தான் அனுப்புவார்கள். கபால அளவையியலில் ஒன்றுமில்லை என்று யார் சொல்ல முடியும்? ( கபால அளவையியல் – ஆங்கிலத்தில் phrenology – இது பூர்ஷ்வா இனவரைவியலாளர்களின் ஒரு கோட்பாடு.  இது ஒருவரின் கபாலத்தின் அமைப்பிற்கும் அவரது அறிவு மற்றும் குணநலன்களுக்கும் உறவு இருப்பதாகச் சொல்லும் ஒரு கருதுகோள்)  யார்மௌத்திலிருந்து வந்த ஒரு கபால அளவையிலாளர் ஏங்கெல்ஸின் கபாலத்தில் புடைப்புகள் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து விட்டு, “இந்தக் கனவான் நல்ல வர்த்தகர் ஆனால். இவருக்கு மொழிகளில் எந்தத் திறமையும் இருக்காது,“ என்று கூற, சுற்றி இருந்தவர்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

அவரது மொழித்திறமைகள் போக, மற்ற விஷயங்களிலும் ஏங்கெல்ஸ் மிகச் சிறந்து விளங்கினார். விருந்தோம்பலின் மறுஉருவம் அவர். உயர்ந்த பழக்கவழக்கங்கள் கொண்டவர்.. வாரநாட்களில் நாங்கள் யாராவது அவரைப் பார்க்க மதிய, இரவு உணவு நேரத்தில் செல்லும் சமயங்களில் தவிர, மற்ற நாட்களில் அவர் கடுமையான சிக்கன வாழ்வு வாழ்ந்தார். ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில், நண்பர் சூழ இருக்கும் போது, தன்னால் இயன்ற அளவிற்கு மிகச் சிறந்ததை அவர்களுக்கு அளித்து, அவர்களது மகிழ்ச்சியில் மகிழ்ச்சி காண்பார்….

ஸ்டெப்னியாக் ( க்ராவ்சின்ஸ்கி என்ற ரஷ்ய எழுத்தாளரின் புனைப்பெயர் – அவர் 1870களின் நரோட்னிக் புரட்சியில் முக்கியமானவர்) எப்போதாவது வருவார். இங்கிலாந்திற்கு வந்தது முதல் வேரா ஜாஸுலிச் (இவரும் நரோட்னிக் புரட்சியில் ஈடுபட்ட முக்கியமான ஆளுமை)  வாராவாரம் வந்துவிடுவார். அவருடைய சக ஊழியரும், மிகச் சிறந்த நண்பரும். கட்சியின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரும், எந்தவொரு எழுத்தாளரையும் விட அராஜகவாதிகளால் அதிகமாக அஞ்சப்பட்டவருமான ஜார்ஜ் பிளகோனவ், இங்கிலாந்தில் சிறிது காலமே வசித்தாலும் கூட, வழக்கமாக ஏங்கெல்ஸ் வீட்டிற்கு வருவார்.

அட்லாண்டிக் பெருங்கடல் பிரித்ததால் அடிக்கடி வரமுடியாமல் போனாலும். ஏங்கெல்ஸ் வீடு எப்போதும் வரவேற்கத் தயாராக இருந்த அமெரிக்கர் ஒருவர் இருந்தார். பின்னாளில் இவர் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இருவருக்கும் மிக நெருக்கமாக விளங்கினார். அடிக்கடி கடிதத் தொடர்பிலும் இருந்தார். அவர் நியூயார்க்கிற்கு அருகில் உள்ள ஹோபோகென் பகுதியைச் சேர்ந்த பிரடெரிக் அடால்ஃப் சோர்ஜ். 1888ல் நானும் எனது மனைவியும் ஏங்கெல்ஸுடன் அமெரிக்க பயணம் மேற்கொண்ட போது அவரைச் சந்தித்தது மறக்க முடியாத இனிய அனுபவம். அந்தப் பயணத்தில் அவரை மட்டுமின்றி, வேதியியலாளர்களின், சோஷலிஸ்ட்டுகளின் அரசனான பேராசிரியர் ஷோர்லெமரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

மார்க்ஸின் புதல்விகள், மாப்பிள்ளைகளான பால் லஃபார்கேயும், நானும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரது நம்பிக்கைக்குரிய நீண்ட கால நண்பராகிய சாம் மூரும் அதில் இயல்பாகவே கலந்து கொண்டோம்.

9780717806485: Thoughts on Women & Society - AbeBooks - Eleanor Marx Aveling; Edward Bibbins Aveling: 0717806480

இடம், நேரம் கருதி அங்கு அவ்வப்போது வந்து சென்ற பல சோஷலிஸ்ட்டுகள் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை.  அவர்களில் பலரும் இங்கிலாந்திற்கு ஓரிரு நாட்கள் வந்து செல்வதாக இருந்தாலும், ஏங்கெல்ஸை வந்து பார்த்து விட்டுத்தான் செல்வார்கள். மிகப் பெரிய தலைவர்கள், பிரபலமானவர்கள் மட்டுமே இவ்வாறு அவரை வந்து பார்த்தார்கள் என்று நினைக்க வேண்டாம். இராணுவத்தின் ஒவ்வொரு சாதாரண வீரனும், அந்த “ஜெனரல்“ வீட்டில் வரவேற்கப்பட்டான்.

அதே சமயம், அவரது நட்பும், விருந்தோம்பலும் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது என்றும் கருத முடியாது. தான் நம்பாத யாரையும் அவர் தன் வீட்டில் அனுமதிக்க மாட்டார். ஒரு வெளிநாட்டுக் குழுவோடு வந்த ஒருவரை ஏங்கெல்ஸ் சிறிதும் தயக்கமின்றி உடனடியாக வெளியேறச் சொன்ன சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

உலகிலேயே பிறருக்கு உதவி செய்வதில் முதன்மையானவர் ஏங்கெல்ஸ்தான் என்று நான் முன்னர் குறிப்பிட்ட அத்தனை நண்பர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று கருதுகிறேன். அவர் அருகில் இருப்பதே பெரிய உத்வேகத்தைத் தரும். அவரது ஒப்புமையற்ற தைரியமும், நம்பிக்கையும் அவ்வாறே.  இளைஞர்கள் கூட சமயங்களில் நம்பிக்கை இழந்து, தம் முயற்சியைக் கைவிடக் கூடிய நிலையில், இந்த வெல்ல முடியாத போராளி என்றும் நம்பிக்கை இழக்க மாட்டார். ஒடுக்கப்பட்டோருக்காகத் திரும்பத் திரும்ப தன்னால் இயன்றதைச் செய்து கொண்டே இருப்பார். கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு ஞாயிறன்றும் அவரைச் சந்தித்து வரும் எங்களைப் போன்றோருக்கு (அதுவும் சிலர் வாரத்திற்குப் பலமுறை) அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாததுதான்.

எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் அவரிடம் ஆலோசனை கேட்கலாம். அவரது அறிவுரையைப் பின்பற்றலாம்.  கலைக்களஞ்சியம் போன்ற அவரது பரந்த அறிவு எப்போதும் தம் நண்பர்களின் சேவைக்காகவே காத்திருக்கும். ஏதேனும் ஒரு துறையில் சிறந்த நிபுணராக இருக்கும் ஒருவர் கூட, அத்துறையில் ஏங்கெல்ஸ் தன்னைவிட அதிகம் தெரிந்து வைத்திருப்பதை உணர முடியும். இவ்வாறாக, இயற்கை அறிவியலில், அதன் எந்தப் பிரிவிலும், அந்தப் பிரிவின் எந்தத் துறையிலும் யார் என்ன கேட்டாலும், அவரால் எப்போதும் சில புதிய கருத்துகளைச் சொல்ல முடியும். சில கூடுதல் உதவிகளைச் செய்ய முடியும்.

அவரது அனைத்து நண்பர்களுக்கும் பொதுவான அரசியல் துறையைப் பொருத்தவரை, அந்த நண்பர்கள் அனைவருமே அவரிடம்தான் வழிகாட்டுதல் கேட்பார்கள். ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரஈ வரலாற்று, அரசியல் இயக்கம் பற்றியும் பொதுவான அடிப்படை விஷயங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு சிறு நுட்பமான தகவல்களையும் அவர் அறிந்து வைத்திருப்பார்.

உதாரணத்திற்கு, ஆங்கிலேய இயக்கம் பற்றிய அவரது அறிவு, அசாதாரணமான ஆழமும், துல்லியமும் கொண்டது. எட்டு மணிநேர உழைப்புக்கான சர்வதேசக் கமிட்டி 1890ல் உருவானதிலிருந்து, 1898 வரை அவரது உடல்நலம் ஒத்துழைக்காத வரை நடந்த அனைத்து இயக்கங்களிலும் அவர் பங்கேற்றவர் என்பதை மறந்துவிடக் கூடாது.

சமகால அரசியல் ஆய்வில் அவர் தனது இறுதி மூச்சு வரை அக்கறை காட்டி ஆய்வு செய்து வந்தார். கடந்த காலங்களில் அவர் செய்தது போலவே, ஜப்பான், சீனா இடையிலான போரின் போதும் (1894-95) அவர் தீர்க்கதரிசனத்தோடு கூர்மையான விமர்சனங்களை வைத்தார். இந்த விமர்சனங்கள் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் அவர் கூர்ந்து கவனித்து வைத்த ஆழமான விமர்சனங்கள். அந்த நிகழ்வுகள் அவர் முன்னுணர்ந்து கூறியது போலவே மிகச் சரியாகப் பின்னர் நிகழ்ந்தன.

அவரது கடைசி அரசியல் உரையாடல் இந்தக் கட்டுரையாளரின் மனைவி நாட்டிங்ஹாமிலிருந்து வந்த 28ம் தேதி ஜுலையன்று நடந்தது. (அவர் ஆகஸ்ட் 5 அன்று காலமானார்) அப்போது நாட்டிங்ஹாமின் தொழிலாளர் கட்சி இயக்கம் பற்றிப் பேசினார்கள். அப்போது அவரால் சரியாகப் பேசக் கூட முடியாத அளவிற்கு உடல்நலம் மோசமாக இருந்தது. எனினும் அவர் மிக உற்சாகமாக, மிக ஆர்வமாக அந்த இயக்கம் பற்றி உரையாடினார். ஒரு சிலேட், குச்சி உதவியுடன் மிக முக்கியமான, ஆழமான கேள்விகளை எழுப்பி அந்த உரையாடலை மேற்கொண்டார்.

மிகச் சிறந்த இனிய சுபாவம் உள்ள அனைவரையும் போலவே அவர் அதிகமாக கோபப்படவும் செய்வார். ஏதாவது அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக அறியும் நேரங்களில். பயங்கரமாகக் கோபப்படுவார். ஆனால், அந்தக் கோபம் மிகவும் நியாயமானதாக இருக்கும்.

A Warning to MGTOW: Can you change a Government if you Change Society? — Steemit

சில விஷயங்களில் அவர் பழமைவாதியாக இருந்தார் என்பதைக் கேட்கவே சற்று வினோதமாக இருக்கக் கூடும். அவர் சில வேலைகளை தினமும் ஒரே நேரத்தில், ஒரே விதமாகச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஆனால், அவர் தனது அரசியல் மற்றும் சமூக உறவுகளில் பேணிய நம்பகத்தன்மை, நேர்மை, சமரசமற்ற வழக்கங்கள், துல்லியம் ஆகியவற்றை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. வேரா ஜாசுலிச் கூட ஒருமுறை “அவர் பல முறை நமது சிந்தனை, செய்கைகளால் தவறு செய்வதைத் திருத்திக் கொண்டே இருந்திருக்கிறார்? நம்மைப் பற்றி அவர் என்ன நினைப்பாரோ?” என்று குறிப்பிட்டாள்.

அவரைவிட மிகத் தெளிவான, அறிவுச்சுடர் ஒளிரும் ஒரு அறிவுஜீவியை நினைத்துப் பார்க்கவே முடியாது. அவர் தொட்ட விஷயங்களிலெல்லாம் மிகப் பெரிய ஒளியைப் பாய்ச்சினார். அப்போது, அந்த விஷயங்களில் நாம் இதுவரை பார்க்கத் தவறிய அனைத்தையும் நம்மால் பார்க்க முடியும். முன்பு பார்த்தவற்றை மேலும் தெளிவாகப் பார்க்க முடியும். “அவர் தொட்ட அனைத்தையும் துலங்க வைத்தார்” (Nihil tetigit quod non ornavit) என்று ஆலிவர் கோல்ட்ஸ்மித் ( இங்கிலாந்தின் பூர்ஷ்வா அறிவொளிக்காலத்தின் முக்கியமான ஆளுமை, எழுத்தாளர்) பற்றி ஜான்சன் குறிப்பிட்டார். அதுபோலவே, “தான் தொட்ட அனைத்திலும் அவர் புத்தொளி பாய்ச்சினார்” என்று ஏங்கெல்ஸ் பற்றி அவரது நண்பர்கள் குறிப்பிடக்கூடும். அதுவும், ஆங்கிலம், ஜெர்மனி இரண்டிலும் ஒரு எழுத்தாளராக அவரது நடை மிக அற்புதமானது. குறிப்பாக, தெளிவானதும், பளிச்சிடுவதும், கூர்மையானதுமான அவரது ஜெர்மனிய நடை மிக அபூர்வமானது.

இத்தனை அபூர்வமான குணாதிசயங்களோடு. அவரிடம் மிக அரிதான நகைச்சுவை உணர்வும் இருந்தது. எல்லா மொழிகளிலும் அவர் நகைச்சுவையை ரசிப்பார். நண்பர்களுக்கு மத்தியில் மிக ஜாலியாக இருக்கக் கூடியவர். இறவாப்புகழ் பெற்ற அந்த ஞாயிற்றுக்கிழமை சந்திப்புகளில் வெறுவழியின்றி, பெரும்பாலான பேச்சுகள் அரசியல், கட்சி விவகாரங்கள் பற்றித்தான் இருக்கும். நாங்கள் எல்லோருமே புதிதாய் எதையேனும் அறிந்து கொள்ளத்தான் சென்றிருப்போம். ஆனால் பெரும்பாலான பேச்சு மிக லகுவானதாக இருக்கும். திடீர் திடீரென வேடிக்கைப் பேச்சுகள் வெடிக்கும்.மிக நெருக்கமானவர்கள் மட்டும் இருக்கும் வேளைகளில் அவர் கார்ட்  ஃபார் கவுண்டர் என்ற விளையாட்டை விளையாட விரும்புவார். அதிகபட்சமாக ஒரு டஜனுக்கு அரை பென்னி காசு. ஏதோ ஒரு நாட்டின் எதிர்காலமே அந்த விளையாட்டின் முடிவில்தான் இருப்பது போல அத்தனை தீவிரமாக, ஆர்வமாக அதை விளையாடுவார்.

ஜெர்மன் தேர்தல் முடிவுகள் வரும் நேரங்களின் இ.ரவுகள் பெரும் கொண்டாட்டமாக இருக்கும். அப்போது ஏங்கெல்ஸ் சிறந்த ஜெர்மன் பீரை பெட்டியாக வாங்கிவிடுவார். சிறப்பான உணவையும் ஏற்பாடு செய்து தன் நெருங்கிய நண்பர்களை வரச் சொல்லிவிடுவார். பிறகு ஜெர்மனியின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் தேர்தல் முடிவு பற்றிய தந்திகள் வர வர, இரவு முழுவதும் அந்தத் தந்திகளைப் பிரித்து. ஜெனரல் உரக்கப் படிப்பார்.  வெற்றி என்றால் அதற்காகக் குடிப்போம். தோல்வி என்றால் அதற்காகக் குடிப்போம்.

நான் முன்பே குறிப்பிட்டது போல், 1888ல் நாங்கள் ஏங்கெல்ஸுடனும், ஷோர்லெமருடனும் அமெரிக்கா, கானடாவிற்கு பயணம் மேற்கொண்டோம். எங்கள் குழுவில் மிகவும் இளையவராக ஏங்கெல்ஸ்தான் இருந்தார். கப்பலில் அவர் இருக்கையைச் சுற்றிக் கொண்டு செல்வதைவிட, அதைத் தாண்டிக் குதித்துச் செல்வதையே விரும்புவார். சாதாரண கப்பல் பயணிகள் போல் அவர் எடுதத்தெற்கெல்லாம் கோபப்பட மாட்டார். ஒரு முறை காலை உணவிற்கு முன்பாகவே அறுபத்தியெட்டு முறை கொசுக்கடிக்கு ஆளானபோதும் (அவர் அதை எண்ணி வைத்திருந்தார்) பிறகு நாங்கள் பாஸ்டனில் இறங்கும் போது எங்கள் சாமான்கள் நியூயார்க்கிற்குச் சென்றுவிட்டபோதும் மட்டுமே கோபப்பட்டார் !

ஈஸ்ட்போர்னில் நோய்வாய்ப்பட்டிருந்த கடைசிக்காலத்தில், அத்தனை வலி, பலவீனத்தையும் மீறி அவரிடம் அந்தப் பழைய உற்சாகமும், குதூகலமும் இருந்த்து. கடைசிவரை ஒவ்வொருவர் பற்றியும் அவருக்கு இருந்த அக்கறையும், பாசமும் குறையவே இல்லை. அவரது அந்த அன்பையும், தாராள மனதையும் பற்றிப் பேச இது நேரமல்ல. அவரது ஒவ்வொரு நண்பரும் அவரது அந்த ஒப்புமையற்ற தாராள மனம் பற்றியும், அன்பு பற்றியும் மௌனமாக நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

Dr. Edward Aveling | Karl marx, Karl, Photographer

ஏங்கெல்ஸ் ஒரு நாத்தீகர். அதாவது அவர், முழுமையாக கடவுள் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாதவர். அதனால், உலகில் மிகுந்த நம்பிக்கையோடு வாழ்ந்தவர்….

அவரது வாழ்க்கை மிக அழகானது. அவர் அதை நேசித்தார்…..  தனது பரந்த அறிவு, தான் செய்த நற்பணிகள், இயக்கத்தின் எதிர்காலம் பற்றிய உறுதியான நம்பிக்கை,  தனது நண்பர்கள் பட்டாளம் – அதில் முதன்மையானவரும், கடைசியானவருமான மார்க்ஸ் – ரசித்து வாழ்ந்த வாழ்க்கை ஆகியவற்றால் அவர் பெரும்பாலான மனிதர்களை விட மிக அதிகமாகவே வாழ்வை அதிகமாக நேசித்து அதை உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தார். மரணம் குறித்த மிகச் சிறிய அச்சம் கூட அவரிடம் ஒரு கணத்திற்குக் கூட இருந்த்தில்லை…..

இந்த சிறிய நாட்டில்தான் இந்த உலகிற்காக மார்க்ஸும், ஏங்கெல்ஸும் கடுமையாக உழைத்தார்கள், இங்குதான் மறைந்தார்கள் என்பதை இங்கிலாந்து நாட்டினர் மறந்துவிடக் கூடாது.  இங்குள்ள அத்தனை மாவீரர்கள், அரசர்களின் கல்லறைகள், நினைவுச் சின்னங்களை விட  இதுதான் இங்கிலாந்திற்கு மிகப் பெரிய பெருமை. இனி வரும் காலங்களில், அதிக மக்கள் வந்து அஞ்சலி செலுத்தும்  இடமாக ஹைகேட்டில் உள்ள கல்லறையும் (மார்க்ஸ் புதைக்கப்பட்ட இடம்) வோகிங்கில் பைன் காடுகளுக்கிடையே உள்ள அந்த எளிய சிறிய கட்டிடமும்  (ஏங்கெல்ஸ் எரியூட்டப்பட்ட இடம்) தான் இருக்கும்.ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 1 : நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – பால் லஃபார்கே (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 2 : நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – பிரெடரிக் லெஸ்னர் (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 3: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – வில்ஹெம் லீப்னெஃஹ்ட் (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 4: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – எலினார் மார்க்ஸ் ஆவேலிங் (தமிழில் ச.சுப்பாராவ்)Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *