ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 7: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – வி.ஐ.லெனின் (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 7: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – வி.ஐ.லெனின் (தமிழில் ச.சுப்பாராவ்)1895 ஆகஸ்ட் 5 அன்று (புதிய நாட்காட்டியின்படி) பிரடெரிக் ஏங்கெல்ஸ் லண்டனில் மரணமடைந்தார். அவரது நண்பர் கார்ல் மார்க்ஸிற்குப் பிறகு ஏங்கெல்ஸ்தான் ஒட்டு மொத்த நாகரீக உலகின் நவீன பாட்டாளி வர்க்கத்தின் அருமையான அறிஞராகவும், ஆசிரியராகவும் திகழ்ந்தார்.  கார்ல் மார்க்ஸையும், ஏங்கெல்ஸையும் விதி ஒன்று சேர்த்த நாளிலிருந்து இந்த இரு நண்பர்களும் தமது வாழ்வை ஒரு பொது நோக்கத்திற்காக அர்ப்பணித்தார்கள். எனவே, பிரடெரிக் ஏங்கெல்ஸ் பாட்டாளி வர்க்கத்திற்கு என்ன செய்தார் என்பதைப் புரிந்து கொள்ள, மார்க்ஸின் போதனைகளின் முக்கியத்துவம் பற்றியும், சமகால உழைப்பாளி வர்க்கத்தின் இயக்கத்தின் வளர்ச்சிக்காக அவர் செய்தது பற்றியும் நாம் தெளிவாக அறிவது அவசியம். மார்க்ஸும், ஏங்கெல்ஸும்தான் முதன்முதலாக உழைக்கும் வர்க்கமும், அதன் கோரிக்கைகளும் இன்றைய பொருளாதார அமைப்பின் ஒரு அவசியமான விளைவு என்பதையும், அது பூர்ஷ்வாவுடன் இணைந்து தவிர்க்க முடியாத வகையில் உழைக்கும் வர்க்கத்தை உருவாக்கி, அணிதிரட்டுகிறது என்பதையும் காட்டினார்கள். 

மனித இனத்தை இன்று ஒடுக்கிவரும் தீங்குகளிலிருந்து  அதைக் காப்பாற்ற  நல்லிதயம் கொண்ட தனிநபர்களின் நன்னோக்கு முயற்சிகளால் முடியாது. மாறாக, ஒன்றுதிரட்டப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தால் தான் முடியும் என்பதைக் காட்டினார்கள். தமது விஞ்ஞானபூர்வமான படைப்புகளில் மார்க்ஸும், ஏங்கெல்ஸும்தான் முதன்முறையாக சோஷலிசம் என்பது கனவு காண்பவர்களின் கண்டுபிடிப்பல்ல, மாறாக,  நவீன சமூகத்தின் உற்பத்தி சக்திகளின்  அவசியமான விளைவு, இறுதி நோக்கம் என்பதை விளக்கினார்கள்.  எழுதப்பட்ட அனைத்து வரலாறுகளும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே, குறிப்பிட்ட சமூக வர்க்கங்கள் ஒன்றின் மீது ஒன்று வெற்றி பெற்று ஆட்சி செய்யும் தொடர்ச்சிதான். எனவே. இது வர்க்கப் போராட்டத்தின், வர்க்க ஆதிக்கத்தின் – தனியுடமை மற்றும் அராஜக சமூக உற்பத்தி – அடித்தளங்கள் மறையும் வரை தொடரும். உழைக்கும் வர்க்கத்தின் நலன்கள் இந்த அடித்தளங்களை அழிக்கக் கோருகின்றன. எனவே,  அணிதிரடட்டப்பட்ட உழைப்பாளிகளின் உணர்வுமிக்க வர்க்கப்போராட்டம் இவற்றிற்கு எதிராகத் திரும்ப வேண்டும். மேலும், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஒரு அரசியல் போராட்டம்தான்.

மார்க்ஸ், ஏங்கெல்ஸின் இந்தக் கருத்துகள் இப்போது  தமது விடுதலைக்காகப் போராடும் அனைத்து உழைப்பாளிகளாலும் ஏற்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நாற்பதகளில் இந்த இரண்டு நண்பர்களும் தமது காலத்தின் சமூக இயக்கங்களில், சோஷலிச படைப்புகளில் பங்கேற்ற போது, இவை முற்றிலும் புதுமையாகவே இருந்தன.. அப்போது திறமையானவர்கள், திறமையற்றவர்கள், நேர்மையானவர்கள், நேர்மையற்றவர்கள் என பலரும் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில்,  அரசர்கள், போலீஸ், மதகுருக்களின் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டத்தில்  ஈடுபட்டிருந்த போதிலும், அவர்கள் பூர்ஷ்வா நலன்களுக்கும், பாட்டாளி வர்க்க நலன்களுக்கும் இடையயே இருந்த பகைமுரணை கவனிக்கத்  தவறினர்கள். இந்த மக்களால் உழைப்பாளிகள் ஒரு சுதந்திரமான சமூக சக்தியாக செயல்படுவார்கள் என்ற கருத்தை ஏற்க முடியவில்லை. மாறாக, ஆட்சியாளர்கள், ஆளும் வர்க்கத்தினருக்கு சமகால சமூக அமைப்பின் அநீதிகளைப் புரிய வைத்தால் போதும், பிறகு உலகில் சமாதானத்தையும், நல்வாழ்வையும் ஏற்படுத்துவது எளிது என்றே பல கற்பனாவாதிகள் நினைத்தார்கள். அவர்களில் பல மேதைகளும் உண்டு. அவர்கள்  போராட்டம் இன்றியே சோஷலிசத்தை அடைய கனவு கண்டார்கள். இறுதியாக, அக்காலத்தின் கிட்டத்தட்ட எல்லா சோஷலிஸ்டுகளும். உழைப்பாளி மக்களின் நண்பர்களும் பாட்டாளி வர்க்கத்தை ஒரு புண்ணாகவே கருதினார்கள். தொழில் வளர்ச்சியுடன் அது எப்படி வளர்கிறது என்பதை அச்சத்தோடு குறிப்பிட்டார்கள். எனவே அவர்கள் எல்லோருமே “ வரலாற்றின் சக்கரத்தை” நிறுத்த, தொழில் மற்றும் தொழிலாளிகளின் வளர்ச்சியை நிறுத்துவதற்கு வழியைத் தேடினார்கள்.  பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி குறித்த இந்த பொதுவான அச்சம் மார்க்ஸ், ஏங்கெல்ஸுக்கு இல்லை.  மாறாக, அவர்கள் அதன் தொடர்ந்த வளர்ச்சியில் தமது நம்பிக்கை அனைத்தையும் வைத்தார்கள்.  பாட்டாளிகள் அதிகமாக இருந்தால், ஒரு புரட்சிகர வர்க்கமாக அவர்களது பலம் அதிகமாக இருக்கும், அதனால், சோஷலிசத்தை  விரைவாக அடைய அதிக சாத்தியம் இருக்கும் என்று கருதினார்கள். எனவே உழைக்கும் வர்க்கத்திற்கு மார்க்ஸும், ஏங்கெல்ஸும் செய்த பணியை சுருக்கமாக இவ்வாறாகக் கூறலாம் – அவர்கள் உழைக்கும் வர்க்கம் தன்னைத் தானே அறிந்து கொள்ள கற்றுத் தந்தார்கள். கனவுகளுக்கு மாற்றாக விஞ்ஞானத்தை நிறுத்தினார்கள்.

Vladimir Lenin | Transformation From 4 To 53 Years Old - YouTube

எனவேதான் ஏங்கெல்ஸின் பெயரும், வாழ்வும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும். எனவெதான் நவீன பாட்டாளி வர்க்கத்தின் தலை சிறந்த இரு ஆசிரியர்களில் ஒருவரான ஏங்கெல்ஸின் வாழ்வு, பணி பற்றி நான் இங்கே சுருக்கமாகத் தருகிறேன்.

புருஷ்ய அரசின் ரைன் மாகாணத்தின் ப்ரேமெனில் 1820ல் ஏங்கெல்கஸ் பிறந்தார். அவரது தந்தை ஒரு  தொழிற்சாலை அதிபர்.1838ல் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஏங்கெல்ஸ் பள்ளி உயர்நிலைப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு ப்ரேமெனில் ஒரு வர்த்தக நிறுவனத்தில் குமாஸ்தாவாகப் பணியில் சேர நேர்ந்தது. ஆனால் இந்த வர்த்தக நடவடிக்கைகள் எதுவும் ஏங்கலெ்ஸ் தனது விஞ்ஞான அரசியல் கல்வியைத் தொடர்வதைத் தடுக்க முடியவில்லை.அவர் பள்ளி நாட்களிலேயே  அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மையை, எதேச்சதிகாரத்தை வெறுக்கத் தொடங்கினார். தத்துவப் படிப்பு அவரை மேலும் முன்னேற்றியது. அக்காலத்தில், ஹெகலின் போதனைகள் ஜெர்மன் தத்துவத் துறையில் ஆதிக்கம் செலுத்தின. ஏங்கெல்ஸ் அவரைப் பின்பற்ற ஆரம்பித்தார். ஹெகல் எதேச்சதிகார புருஷ்ய அரசை ஆதரிப்பவர் என்றாலும் ( அந்த அரசின் பெர்லின் பல்கலைக்கழகத்தில்தான் அவர் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்) ஹெகலின் போதனைகள் புரட்சிகரமானவை. மனித அறிவு, மனித உரிமைகளில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை, உலகம் தொடர்ந்து மாற்றத்தையும், வளர்ச்சியையும் அடைந்து கொண்டே இருக்கிறது என்ற ஹெகலிய தத்துவத்தின் அடிப்படை ஆகியவை, நிலவும் சூழலை ஏற்க மறுத்த அவரது சீடர்கள் மனதில் இந்த நிலைக்கு எதிராக போராட வேண்டும், இப்போதிருக்கும் தவறுகள், தீமைகளுக்கு எதிரான போராட்டமும் தொடர்  மாற்றம் என்ற அந்த விதியில் உள்ளடங்கியது தான் என்ற கருத்தை உருவாக்கியது. எல்லா விஷயங்களும் வளர்ச்சி பெறும், ஒரு வகையான நிறுவன அமைப்பு மற்றவற்றை உருவாக்கும் என்றால், பிறகு ஏன் புருஷ்ய அரசர் அல்லது ஜார் மன்னரின் எதேச்சதிகாரம், பெரும்பான்மையான மக்களைக் காவு கொடுத்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சிறுபான்மையினர் செல்வாக்குப் பெறுவது, மக்கள் மீது பூர்ஷ்வாவினர் ஆதிக்கம் செலுத்துவது ஆகியவை எல்லாம் ஏன் என்றைக்குமாகத் தொடர வேண்டும்? என்று அவர்கள் யோசித்தனர். ஹெகலின் தத்துவம் மனம் மற்றும் கருத்துகளின் வளர்ச்சி பற்றிப் பேசியது.

அது கருத்துமுதல்வாதம். மனதின் வளர்ச்சியிலிருந்து அது இயற்கை, மனிதன், சமூகம் ஆகியவற்றின் வளர்ச்சியை  ஊகித்து உணர்ந்தது.  முடிவற்ற வளர்ச்சி குறித்த ஹெகலின் கருத்தை எடுத்துக் கொண்ட மார்க்ஸும், ஏங்கெல்ஸும்,  முன்கூட்டியே கருத்துக் கொள்ளும் கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தை நிராகரித்தார்கள். ( மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும்  தங்களது அறிவார்ந்த சிந்தனைக்காக தாம் ஜெர்மன் தத்துவவாதிகளுக்கு, குறிப்பாக, ஹெகலுக்கு கடன்பட்டிருப்பதாக அடிக்கடி குறிப்பிடுவார்கள். “ஜெர்மன் தத்துவம் இல்லாவிட்டால்,  விஞ்ஞான சோஷலிசம் என்றுமே உருவாகி இருக்காது,“ என்றார் ஏங்கெல்ஸ் – லெனினின் அடிக்குறிப்பு)  யதார்த்த வாழ்க்கையைப் பார்த்த அவர்கள், மனதின் வளர்ச்சி இயற்கையின் வளர்ச்சியை விளக்கவில்லை, மாறாக, மனமே, இயற்கையிலிருந்து, பொருளிலிருந்துதான்…. உருவாகி இருக்க வேண்டும் என்ற விளக்கினார்கள். ஹெகல் மற்றும் இதர ஹெகலியர்களைப் போலன்றி, மார்க்ஸும், ஏங்கெல்ஸும் பொருள்முதல்வாதிகளாக இருந்தார்கள்.

உலகையும், மனித இனத்தையும் பொருள்முதல்வாத அடிப்படையில் பார்த்த அவர்கள், எல்லா இயற்கை நிகழ்வுகளுக்கும் பின்னால் பொருளாயத காரணங்கள் இருப்பதைப் போலவே, மனித சமூகத்தின் வளர்ச்சியும், பொருளாயத சக்திகளின், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் முடிவு செய்யப்படுகிறது என்றார்கள். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பொருட்களின் உற்பத்திக்காக மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் உறவைப் பொருத்தது. இந்த உறவில்தான் சமூக வாழ்வின், மனித  அபிலாஷைகளின், கருத்துகளின் , சட்டங்களின் எல்லா வெளிப்பாடுகளின் விளக்கமும் இருக்கிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தனிச்சொத்து அடிப்படையிலான சமூக உறவுகளை உருவாக்குகிறது.  அதே சமயம் இந்த வளர்ச்சி பெரும்பாலான மக்களின் சொத்துகளைப் பறித்து, மிகச் சிறிய எண்ணிக்கையிலான சிறுபான்மையினர் கையில் அவை குவிய வழிவகை செய்கிறது. அது நவீன சமூக அமைப்பின் மிக அடிப்படையான சொத்து என்பதையே அழிக்கிறது. அதனால். சோஷலிஸ்ட்டுகளின்  நோக்கம் நோக்கி அது நகர்கிறது. சோஷலிஸ்ட்டுகள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த சமூக சக்தி, நவீன சமூகத்தில் தனது நிலையை வைத்து, சோஷலிசத்தை உருவாக்கவதில் அக்கறை காட்டுகிறது என்று பார்த்து, அந்த சக்திக்கு தனது நலன்கள், வரலாற்றுக் கடமை பற்றிய உணர்வை ஊட்டுவதுதான்.

உழைக்கும் வர்க்கம்தான் இந்த சக்தி. 1842ல் இங்கிலாந்து தொழில்வளர்ச்சியின் மையமான மான்செஸ்டரில்,  தன் தந்தை பங்குதாரராக இருந்த நிறுவனத்தில் பணியாற்றும் போது, ஏங்கெல்ஸ் இங்கிலாந்தின் இந்த உழைக்கும் வர்க்கம் பற்றி அறிந்து கொண்டார். அங்கு ஏங்கெல்ஸ் தனது தொழிற்சாலை அலுவலகத்தில் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. மாறாக, தொழிலாளர்கள் கூடி வாழ்ந்த சேரிகளில் அலைந்து திரிந்தார். அவர்களது வறுமையை, துன்பத்தை நேரடியாக அறிந்தார். ஆனால், அவர் தனது நேரடி அனுபவங்களோடு மட்டும் நின்றுவிடவில்லை.  பிரிட்டிஷ் உழைக்கும் வர்க்கம் பற்றி, அதுநாள் வரை எழுதப்பட்டிருந்த அனைத்தையும் படித்தார். தனக்கு கிடைத்த அத்தனை அதிகாரபூர்வ ஆவணங்களையும் கவனமாக ஆராய்ந்தார். இந்த ஆய்வுகளின் பலன் 1845ல் கிடைத்தது. The Condition of the Working Class in England என்ற படைப்பு உருவானது.இந்த புத்தகம் எழுதியதன் மூலம் ஏங்கெல்ஸ் செய்த பெரிய பணி பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஏங்கெல்ஸிற்கு முன்பும் பலர் உழைக்கும் வர்க்கத்தின் துன்பங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஆனால், உழைக்கும் வர்க்கம் என்பது  துன்பப்பட்டுக் கொண்டே இருக்கும்  ஒரு வர்க்கம் மட்டுமல்ல என்பதை முதலில் கூறியவர் ஏங்கெல்ஸ்தான். உண்மையில் உழைக்கும் வர்க்கத்தின் மிக மோசமான பொருளாதார நிலை, அதை தவிர்க்க முடியாத வகையில் முன்னே தள்ளி, தனது இறுதி விடுதலைக்காக போராட அதை நிர்ப்பந்திக்கும் என்றார். மேலும் அப்படிப் போராடும் பாட்டாளி வர்க்கம் தனக்குத் தானே உதவி செய்து கொள்ளும். உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் இயக்கம் தவிர்க்க முடியாத வகையில், தமது விமோசனம் சோஷலிசத்தில்தான் இருக்கிறது என்பதை அவர்களை உணர வைக்கும். மாறாக, சோஷலிசம் உழைப்பாளி மக்களின் அரசியல் போராட்டத்தின் நோக்கமாக மாறும் போதுதான் அது ஒரு சக்தியாக மாறும்.

இவையெல்லாம் தான் ஏங்கெல்ஸினுடைய புத்தகத்தின் மையக் கருத்துகள்.  இப்போது அனைத்து சிந்திக்கின்ற, போராடுகின்ற பாட்டாளிகளின் கருத்துகளாக மாறிவிட்ட இக்கருத்துகள் அப்போது முற்றிலும் புதுமையாக  இருந்தன.  இக்கருத்துகள் அந்த நூலில் மிகவும்  ஈர்க்கும் நடையில். எழுதப்பட்டிருந்தன. ஆங்கிலேய உழைப்பாளி மக்களின் துயரம் குறித்த நம்பகபூர்வமான, அதிர்ச்சி தரும் சித்தரிப்பை இந்தப் புத்தகம் தந்தது. இப்புத்தகம் முதலாளித்துவம், பூர்ஷ்வா வர்க்கம் ஆகியவற்றின் மேல் கடுமையான குற்றச்சாட்டை வைத்தது.  மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.  நவீன தொழிலாளி வர்க்கத்தின் நிலை பற்றிய சிறந்த சித்தரிப்பைத் தந்ததால், எல்லா இடங்களிலும் மேற்கோள் காட்டப்பட்டது. உண்மையில் 1845ற்கு முன்பும் சரி, அதற்குப் பின்பும் சரி. இது போன்று தொழிலாளி வர்க்கத்தின் துயரை அதிரடியாக, உண்மையாகக் காட்டிய ஒரு நூல் வரவே இல்லை.

In Defense of Communism: V.I. Lenin writes about Engels: "A great fighter and teacher of the proletariat!"

இங்கிலாந்து வந்த பிறகு தான் ஏங்கெல்ஸ் சோஷலிஸ்ட் ஆனார். மான்செஸ்டரில் அவர் அக்காலத்தில், இங்கிலாந்து தொழிலாளர் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டோருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். ஆங்கில சோஷலிச பதிப்பகங்களுக்காக எழுத ஆரம்பித்தார். 1844, ஜெர்மனி செல்லும் வழியில் பாரீஸில் மார்க்ஸுடன் அறிமுகமானார். அதற்கு முன்பிருந்தே அவர் மார்க்ஸுடன் கடிதத் தொடர்பில் இருந்தார். பாரீஸில், பிரெஞ்சு சோஷலிஸ்ட்டுகள்,  பிரெஞ்சு வாழ்க்கை ஆகியவற்றின் தாக்கத்தில் மார்க்ஸும் சோஷலிஸ்ட் ஆனார். இங்கே இந்த நண்பர்கள் இணைந்து,  புனிதக் குடும்பம்  (The Holy Family, or Critique of Critical Criticism) என்ற நூலை எழுதினார்கள். பெரும்பகுதி மார்க்ஸால் எழுதப்பட்ட இந்த நூலில் நான் முன்பே விளக்கியிருக்கும் புரட்சிகர பொருள்முதல்வாதத்தின் அடிப்படைகள் கூறப்பட்டிருந்தன.  புனிதக் குடும்பம்  என்பது  தத்துவவாதிகளான பாவர் சகோதரர்கள், மற்றும் அவர்களைப் பின்பற்றுவோருக்கான கிண்டலான பட்டப்பெயராகும். இந்தக் கனவான்கள் அனைத்து யதார்த்தத்திற்கும், அனைத்து கட்சிகளுக்கும், அரசியலுக்கும், மேலே நின்ற ஒரு விமர்சனப் போக்கை பரப்பிவந்தார்கள். அது அனைத்து நடைமுறை சார்ந்த நடவடிக்கைகளையும் நிராகரித்தது.  வெறுமனே சுற்றியிருந்த உலகையும், அதில் நிகழ்பவற்றையும் “விமர்சனரீதியாக“ சிந்தித்தது. பாவர்கள் என்ற இந்தக் கனவான்கள் உழைக்கும் வர்க்கத்தை விமர்சனத்திற்குத் தகுதியற்ற கூட்டமாக ஏளனமாகப் பார்த்தார்கள். மார்க்ஸும், ஏங்கெல்ஸும் இந்த அபத்தமான, தீங்கான போக்கை கடுமையாக எதிர்த்தார்கள். ஒரு  உண்மையான மனிதனின் பெயரால் – ஆளும் வர்க்கத்தால், அரசால் நசுக்கப்படும் தொழிலாளியின் பெயரால் – அவர்கள் சிந்தனையையல்ல, நல்ல சமூக அமைப்பிற்கான ஒரு போராட்டத்தைக் கோரினார்கள். அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் சக்தியாக,  உழைக்கும் வர்க்கத்தைப் பார்த்தார்கள். புனிதக் குடும்பம் எழுதுவதற்கு முன்பாகவே ஏங்கெல்ஸ் மார்க்ஸ் மற்றும் ரூஜ் நடத்திய ரூயிச் பிரான்சொசிச் ஜார்புச்ரில் தனது “அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனக் கட்டுரையை“ எழதியிருந்தார். அதில் அவர் சமகால பொருளாதார அமைப்பின் அடிப்படைகளை ஒரு சோஷலிசக் கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்திருந்தார். அவற்றை தனிச்சொத்தின் ஆட்சியின் அவசியமான பின்விளைவாகக் கருதியிருந்தார்.  அரசியல் பொருளாதாரத்தை ஆழமாகப் படிக்க மார்க்ஸ் முடிவு செய்ததற்கு ஏங்கெல்ஸுடனான தொடர்பு ஒரு முக்கிய காரணம் என்பதில் ஐயமில்லை. பின்னர் அத்துறையில் மார்க்ஸின் படைப்புகள் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தின.

1845 முதல் 1847 வரை மார்க்ஸ் பிரஸ்ஸல்ஸிலும், பாரீசிலும் வாழ்ந்தார். அக்காலகட்டத்தில் அவர் தனது விஞ்ஞானரீதியான ஆய்வுகளோடு. பிரஸ்ஸல்ஸ். பாரீஸ் பகுதியில் ஜெர்மன் தொழிலாளர்களுடன் நடைமுறை நடவடிக்கைகளிலும்  ஈடுபட்டார். இங்குதான் மார்க்ஸும், ஏங்கெல்ஸும் ரகசியமாக இயங்கிய கம்யூனிஸ்ட்  லீக்குடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். அது அவர்களை சொஷலிசத்தின் முக்கியக் கொள்கைகளை விளக்கி எழுதுமாறு கேட்டுக் கொண்டது. அப்படியாகத்தான் மார்க்ஸும், ஏங்கெல்ஸும் எழுதிய புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கை 1848ல் வெளியானது. இந்த சிறு நூல் மிகப் பெரிய பல நூல்களுக்கு இணையானது. இன்று வரை அதன் ஆன்மா நாகரீக உலகின் பாட்டாளி வர்க்கத்தின் அணிதிரட்டலுக்கும், போராட்டத்திற்கும் உத்வேகமாக இருந்து, வழிகாட்டுகிறது. 

முதலில் பாரீசில் உ்ருவாகி பின்னர், மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவிய 1848ன் புரட்சி மார்க்ஸையும், ஏங்கெல்ஸையும் அவர்களது தாய்நாட்டிற்கு இட்டுச்சென்றது.  ரைன் பகுதி புருஷ்யாவில் அவர்கள் கலோனிலிருந்து வெளிவந்த ஜனநாயகப் பத்திரிகையான நியூ ரெங்னிஷ் ஜெய்டுங்கின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். இரு நண்பர்களும் ரைன் பகுதி புருஷ்யாவின் அனைத்து புரட்சிகர, ஜனநாயக உணர்வுகளின் இதயமாகவும், ஆன்மாவாகவும் விளங்கினார்கள். சுதந்திரத்திற்காகவும், எதிர்புரட்சி சக்திகளிடமிருந்து மக்கள் நலனைக் காக்கவும் கடைசி வரை போராடினார்கள். ஆனால், அந்த சக்திகள் தான் மேலோங்கின.  நியூ ரெய்னிஷ் ஜெய்டுங் ஒடுக்கப்பட்டது. நாடு கடத்தப்பட்ட மார்க்ஸ் தனது புருஷ்யக் குடியுரிமையை இழந்தார். ஏங்கெல்ஸ் ஆயுதமேந்திய மக்கள் புரட்சியில் கலந்துகொண்டார். விடுதலைக்காக மூன்று போர்களில் போரிட்டார். தோல்வியடைந்ததும், புரட்சியாளர்கள் சுவிட்சர்லாந்து வழியாக லண்டனுக்குச் சென்றார்கள்.

மார்க்ஸும் லண்டனில்தான் குடியேறினார். விரைவிலேயே ஏங்கெல்ஸ் மீண்டும் குமாஸ்தா ஆனார். பிறகு நாற்பதுகளில் அவர் வேலை பார்த்து வந்த வர்த்தக நிறுவனத்தின் பங்குதாரர் ஆனார்.  1870 வரை அவர் மான்செஸ்டரில் வசிக்க, மார்க்ஸ் லண்டனில் வசித்தார். ஆனால் இது அவர்களது கருத்துப் பரிமாற்றத்தை எந்த வகையிலும் தடுக்கவில்லை. அவர்கள் கிட்டத்தட்ட தினமும் கடிதம் எழுதிக்  கொண்டார்கள். விஞ்ஞான சோஷலிசப் பணிகளில் சேர்ந்து ஈடுபட்டார்கள். 1870ல் ஏங்கெல்ஸ் லண்டனுக்கு குடியெர்ந்தார். மிகக் கடினமானதான அவர்களது அறிவுஜீவி வாழ்வு 1883ல் மார்க்ஸ் மறையும் வரை தொடர்ந்தது. இதன் பலனாக மார்க்ஸ் தரப்பில், நமது காலத்தின் தலைசிறந்த அரசியல் பொருளாதாரப் படைப்பான மூலதனம் உருவானது. ஏங்கெல்ஸ் தரப்பில் சிறியதும், பெரியதுமான நிறைய படைப்புகள் உருவாகின. மார்க்ஸ் மிகவும் சிக்கலான முதலாளித்துவப் பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்து  எழுதிவந்தார். ஏங்கெல்ஸ் பொதுவான பழைய மற்றும் நிகழ்கால அறிவியல் பிரச்சனைகளை ஆராய்ந்து, மார்க்ஸின் பொருளாதாரக் கொள்கை மற்றும், வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் எளிமையான படைப்புகளை எழுதினார். ரூரிங்கிற்கு மறுப்பு என்ற தத்துவம், இயற்கை மற்றும் சமூக விஞ்ஞானங்களில் உள்ள பிரச்சனைகளை ஆராயும் நூல், குடும்பம் , தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூல், லட்விக் ஃபேயர்பாக் என்ற நூல், ரஷ்ய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை குறித்த கட்டுரை, வீட்டு வசதி பிரச்சனை குறித்த அற்புதமான கட்டுரைகள், ரஷ்ய பொருளாதார வளர்ச்சி பற்றிய மிக முக்கியமான ஆனால் சிறிய இரு கட்டுரைகள் ஆகியன ஏங்கெல்ஸின் படைப்புகளில் முக்கியமாவை. மூலதனத்தில் கடைசி நகாசு வேலைகளைச் செய்வதற்கு முன்பாகவே மார்க்ஸ் இறந்துவிட்டார். எனினும், கைப்பிரதி முடிக்கப்பட்டு தயாராக இருந்தது.

Marx Lenin Engels by systemdestroyer on DeviantArt

தன் நண்பன் இறந்தவுடன். ஏங்கெல்ஸ்  மூலதனம் நூலின் இரண்டாம், மூன்றாம் பாகங்களைத் தயாரித்து, வெளியிடும் பெரும்சுமையை ஏற்றார். இரண்டாம் பாகத்தை 1885லும், மூன்றாம் பாகத்தை 1894லும் வெளியிட்டார்.  ( நான்காம் பாகத்தை வெளியிடுவதை அவரது மரணம் தடுத்துவிட்டது)  இந்த இரண்டு பாகங்களுக்கும் ஏராளமான உழைப்பு தேவைப்பட்டது. ஆஸ்திரிய சோஷியல் டெமாக்ரட்டான ஆட்லர், மூலதனத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை வெளியிட்டதன் மூலம் ஏங்கெல்ஸ் தன் நண்பனுக்கு எழுப்பிய பெரும் நினைவுச் சின்னத்தில், தன்னையுமறியாமல் தனது பெயரை ஆழமாகப் பொறித்துவிட்டார் என்று குறிப்பிட்டது சரிதான்.  உண்மையில் இந்த இரு பாகங்களும் மார்க்ஸ்,ஏங்கெல்ஸ் என்ற இரு மனிதர்களின் உழைப்புதான். நட்பு குறித்து எத்தனையோ இதிகாசக் கதைகள் உள்ளன.  இவர்களது நட்பு அவற்றை விஞ்சுபவை. ஐரோப்பிய உழைக்கும் வர்க்கம். தனது விஞ்ஞானம்  இதிகாசக் கதைகளின் நட்புகளில் வரும் பாத்திரங்களை விஞ்சும்படியான இரு நண்பர்களால், இரு அறிஞர்களால், இரு போராளிகளால் படைக்கப்பட்டது என்று பெருமையாகக் கூறிக் கொள்ளலாம்.  ஏங்கெல்ஸ் எப்போதுமே, மிக நியாயமாக, முழுமையாகத்  தன்னை மார்க்ஸிற்குப் பின்னால் நிறுத்திக் கொள்வார். “மார்க்ஸின் காலத்தில், நான் ஒத்து ஊதுபவனாகத்தான் இருந்தேன்,“ என்று பழைய நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.  மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் அவர் மார்க்ஸ் மீது கொண்டிருந்த அன்பு, அவரது மரணத்திற்குப் பிறகு அவரது நினைவின் மீது வைத்திருந்த மரியாதை இரண்டும் அளவற்றவை. அந்தக் கடுமையான போராளிக்கு. கண்டிப்பான சிந்தனையாளருக்கு அத்தனை ஆழமாக அன்பு செலுத்தும் மனம் இருந்தது !

1848-49 இயக்கத்திற்குப் பிறகு நாடுகடத்தப்பட்ட மார்க்ஸும், ஏங்கெல்ஸும் அறிவியல் ஆய்வுடன் நின்றுவிடவில்லை. 1864 ல் மார்க்ஸ் சர்வதேச உழைப்பாளர் சங்கத்தைத் தோற்றுவித்தார். இதை பத்தாண்டுகளுக்குத் தலைமையேற்று நடத்தினார். ஏங்கெல்ஸும் அதன் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றார். மார்க்ஸின் கருத்தின்படி. இச்சங்கம் உ்லகின் அனைத்து நாடுகளின் உழைப்பாளிகளையும் ஒருங்கிணைக்கும், உழைப்பாளர் இயக்கத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஆனால், இந்த சர்வதேச சங்கம் எழுபதுகளில் கலைக்கப்பட்ட பிறகும், மார்க்ஸும், ஏங்கெல்ஸும் ஒன்றுதிரட்டும் தமது பணியை நிறுத்தவில்லை. மாறாக, உழைப்பாளிகளின் இயக்கத்தின் தலைவர்களாக இருவரது முக்கியத்துவமும் அதிகரித்துக் கொண்டே சென்றது என்று சொல்லலாம். ஏனெனில், இந்த இயக்கம் தங்குதடையின்றி வளர்ந்து வந்தது. மார்க்ஸின் மரணத்திற்குப் பிறகு, ஏங்கெல்ஸ் ஐரோப்பிய  சோஷலிஸ்ட்டுகளின்  வழிகாட்டியாக  தலைவராக  தன்னந்தனியாகத் தொடர்ந்து பணியாற்றினார். அரசு அடக்குமுறைகளை மீறி, வளர்ந்து கொண்டிருந்த ஜெர்மன் சோஷலிஸ்ட்டுகளும் அவரது ஆலோசனைகளைக் கேட்டனர்.  சோஷலிசப் பாதையில் முதலடியை எடுத்து வைத்துக் கொண்டிருந்த பின்தங்கிய நாடுகளான ஸ்பெயின், ரஷ்யா, ருமேனியா போன்ற நாடுகளின் சோஷலிஸ்ட்டுகளும் அவரது ஆலோசனைகளைக் கேட்டனர். எல்லோருமே, ஏங்கெல்ஸின் பழுத்த வயதின் ஏராளமான அறிவையும், அனுபவத்தையும் நன்கு பயன்படுத்திக் கொண்டனா.

மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவருக்கும் ரஷ்ய மொழி தெரியும். ரஷ்ய நூல்களை வாசிப்பார்கள். ரஷ்ய நாட்டின் மீது தொடர்ந்து அக்கறை காட்டி வந்தார்கள். ரஷ்யப் புரட்சிகர இயக்கத்தின் செயல்பாடுகளை அக்கறையோடு கவனித்துவந்தார்கள். ரஷ்யப் புரட்சியாளர்களோடு தொடர்பு வைத்திருந்தார்கள்.  அவர்கள் இருவருமே ஜனநாயகவாதிகளாக இருந்து சோஷலிஸ்ட்டாக மாறியவர்கள். எனவே இருவரிடமும், அரசியல் கொடுங்கோன்மைக்கு எதிரான வெறுப்பு என்ற ஜனநாயக உணர்வு மிக அதிகமாகவே இருந்தது.  இந்த நேரடி அரசியல் உணர்வு, அதோடு இணைந்த, அரசியல் கொடுங்கோன்மைக்கும், பொருளாதார ஒடுக்குமுறைக்குமான தொடர்பு பற்றிய ஆழமான புரிதல், பரந்த வாழ்வியல் அனுபவம் ஆகியவை காரணமாக மார்க்ஸும், ஏங்கெல்ஸும் அசாதாரணமான வகையில் அரசியல் ரீதியாக எதிர்வினையாற்றினார்கள். இதன் காரணமாகத்தான் வலிமை வாய்ந்த ஜார் அரசிற்கு எதிராக ஒரு சில ரஷ்யப் புரட்சியாளர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம் இந்த புரட்சியாளர்கள் மனதில் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது. மாறாக, சில  கற்பனையான பொருளாதார சலுகைகளுக்காக, அரசியல் சுதந்திரம் எனும் முக்கியமான உடனடித் தேவையான பணியிலிருந்து விலகும் போக்கு  இயல்பாகவே இவர்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.  சமூகப் புரட்சி என்ற பெரும் லட்சியத்தைக் காட்டிக் கொடுக்கும் செயலாகக் கூட இதைக் கருதினார்கள்.  “ தொழிலாளர்களின் விடுதலை என்பது தொழிலாளர்களின் செயல் மூலமாகவே வரவேண்டும்,“ என்று மார்க்ஸும், ஏங்கெல்ஸும் தொடர்ந்து போதித்து வந்தார்கள்.  ஆனால்,  தனது பொருளாதார விடுதலைக்காகப் போராடுவதற்கு, உழைக்கும் வர்க்கம் சில அரசியல் உரிமைகளை வென்றெடுத்தாக வேண்டும். ரஷ்யாவில் ஏற்படும் அரசியல் புரட்சி மேற்கு ஐரோப்பிய உழைக்கும் வர்க்கத்தின் இயக்கத்திற்கு மிக உத்வேகமானதாக இருக்கும் என்று மார்க்ஸும், ஏங்கெல்ஸும் தெளிவாகக் கருதினர். பொதுவாகவே எதிர்புரட்சி ஐரோப்பாவில், எதேச்சதிகார ரஷ்யா எப்போதுமே முன்னணியில் இருந்தது. 1870 போரின் விளைவாக ரஷ்யாவிற்கு இருந்த அசாதாரணமான சாதகமான சூழல்,  நீண்டகாலத்திற்கு ஜெர்மனி, பிரான்ஸ் இடையே ஒரு கருத்து வேற்றுமையை உருவாக்கியது.

The Twin Legacies of Lenin and Fidel | global-e journal

இதன் காரணமாக ரஷ்யா ஐரோப்பாவின் எதிர்புரட்சி சக்திகளில் மிக முக்கியமானதாக இருந்தது.  ஒரு சுதந்திரமான ரஷ்யாவால்தான், போலந்தியர்கள், பின்லாந்தியர்கள், ஜெர்மனியர்கள் அல்லது அர்மேனியர்கள் அல்லது எந்தவொரு சிறி நாட்டினர்களையும் அடக்கி, ஒடுக்கத் தேவையில்லாத ரஷ்யாவால்தான், ஜெர்மனியையும், பிரான்ஸையும் ஒன்றோடு ஒன்று போரிடுமாறு தூண்டாத ரஷ்யாவால்தான் நவீன ஐரோப்பாவை உருவாக்க முடியும், போரின் சுமையை நீக்க முடியும், ஐரோப்பாவின் எதிர்புரட்சி சக்திகள் அனைத்தையும் பலவீனமடையச் செய்து, ஐரோப்பிய பட்டாளி வர்க்கத்தை வலுப்பெறச் செய்ய முடியும். அதனால்தான். மேற்கின் தொழிலாளி வர்க்கத்தின் முன்னேற்றத்திற்காக, ரஷ்யா அரசியல் சுதந்திரம் பெறவேண்டும் என்று ஏங்கெல்ஸ் மிகத் தீவிரமாக விரும்பினார்.  அவரது மறைவில் ரஷ்யப் புரட்சியாளர்கள் தமது மிகச் சிறந்த நண்பரை இழந்து விட்டார்கள். 

மிகச் சிறந்த போராளியும், உழைக்கும் வர்க்கத்தின் ஆசிரியருமான பிரடெரிக் ஏங்கெல்ஸின் நினைவை நாம் என்றென்றும் போற்றுவோம் !ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 1 : நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – பால் லஃபார்கே (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 2 : நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – பிரெடரிக் லெஸ்னர் (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 3: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – வில்ஹெம் லீப்னெஃஹ்ட் (தமிழில் ச.சுப்பாராவ்)ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 4: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – எலினார் மார்க்ஸ் ஆவேலிங் (தமிழில் ச.சுப்பாராவ்)
ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 5: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – எட்வர்ட் அவேலிங் (தமிழில் ச.சுப்பாராவ்)ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 6: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – ஃபேனி க்ராவ்சின்ஸ்கி (தமிழில் ச.சுப்பாராவ்)Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *