அகவை இருபதிருக்கும்
அப்போது ஆசை வந்தது
மீசை வந்தது
கன்னத்தில் பருக்கள் வந்தன
கண்டிப்பாய் காதல் வந்தது
காதலுடன் கவிதையும் வந்தது
உடலின் சுரப்பிகள்
உசுப்பி விட
இதயத்தின் ஆழத்திலிருந்து
எழுந்து வந்த இளமை
விழிகள் வழியே காதலாகவும்
விரல்கள் வழியே
கவிதைகளாகவும்
உருகி உருகி
பெருக்கெடுத்தோடியது
பின்னாலிருந்து
அசரீரி போலொரு குரல்
ஆவணக் கொலை
அறிவாயா தம்பி..
கனவு பழுத்து
கல்யாணமாய் கனிந்து
மகிழ்ச்சியின் வண்ணம்
மத்தாப்பாய் விரிய
குடும்பத் தோட்டத்தில்
குழந்தைகள் பூத்தன
அந்தி மழையாய்
ஆனந்தம் பொழிய
சிந்து கவிகள் சிந்தையில்
எழுந்தன
மழலைகளை கையில்
தவழவிட்ட மனைவி
மாட விளக்காய் வீடு நிறைத்தாள்
வாய்க்கு ருசியாக
வடித்துக் கொட்டியதில்
பித்தம் தலைக்கேறி
சந்தோஷம் ஜதி போட
சந்தங்கள் சதிராட
அந்தாதிகள் கிளம்பி
அருவி போல் கொட்டின
அப்போதும் ஒரு குரல்
அருகில் வந்து கேட்டது
அடுப்பங்கரை சிறைக்குள்
ஆயுள் கைதியாய்
அடைபட்டு கிடக்கும்
மனைவியை விடுவிக்கும்
பரணியை எப்போது
பாடப் போகிறாய்.
தாராளமாய் செலவு செய்து
வாழ்வின் தேவைகளை
வாங்கிக் குவித்தாயிற்று
மாடி வீடு மகிழுந்து
ஆளுக்கொருஅலைபேசி
வாசனைத் திரவியங்கள் என
ஆளே மாறி
அடையாளம் தொலைத்தாயிற்று
நினைத்த போது படுத்து
விரும்பிய போது எழும்
வசதியான வாழ்வு
மடிக்கணினியில் நீள் கவிதை
அலைபேசியில் ஹைகூ
ஒளிப்படங்களோடு
தினமொரு பதிவு
பண்டமாற்று முறையில்
பாராட்டுக்கள் பரிமாறி
படைப்பாளியென்ற
பட்டியலில் இணைந்தாயிற்று
மீண்டும் அதே குரல்
ஆணவம் மிதித்து அநீதி அழித்து
மானுடம் மீட்கும்
மகத்தான போரின்
வீர முழக்கத்தை
யோசித்து எழுத மாட்டாயா..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.