என்ஹெடுவான்னா – உலகின் முதல் பெயரறியப்பட்ட எழுத்தாளர் & கவிஞர்
பேரா.சோ.மோகனா
உலகின்..முதல்..விளைநிலம்..!
சுமேர் என்பது அறியப்பட்டதிலேயே மிகப் பழமையான நாகரிகமாகும் (கி.மு. 6500 முதல் கி.மு. 1750 வரை). இது தெற்கு மெசபடோமியாவில், இன்றைய ஈராக் மற்றும் குவைத்தில் அமைந்திருந்தது. டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளுக்கு இடையிலான வளமான சமவெளிகளில் உள்ளது. ஆதிகால சுமேரியாவும், பாபிலோனும்தான் நாகரிகம், எழுத்துக்களின் பிறப்பிடம் என்று சொல்லப்படுகிறது. மெசபடோமியாதான்,மனித “நாகரிகத்தின் தொட்டில்” என்றும்,வளமான பிறைநிலம் (Fertile Crescent) என்றும் போற்றப்படுகிறது.
அந்தக் காலம், கற்காலத்தின் முடிவாகவும், பித்தளை/உலோக காலத்தின் துவக்க காலமும் கூட; எழுத்துகள் உருவானதும் அப்போதுதான்.பழங்கால சுமேரியர்கள் கல்வியில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர். எதனையும் பதிவு செய்வது முக்கியமாக கருதப்பட்டது.. அங்கு பட எழுத்துக்களும், கியூனிபாரம் வடிவ எழுத்துக்களும் புழக்கத்தில் இருந்தன. பாபிலோனிய தொங்கும் தோட்டம்,பழங்கால 7 உலக அதிசயங்களில் ஒன்று.

என்ஹெடுவான்னா
நண்பர்களே. என்ஹெடுவான்னா என்ற பெயரைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இல்லையா ? நானும்தான். ஆனால் வரலாறு பேசுகிறதே அப்படி ஓர் ஆளுமை மிகுந்த அரச குரு பெண் இருந்தார் என. அவர்தான் உலகின் முதல் பெயர் தெரிந்த பெண் எழுத்தாளர் என்ஹெடுவான்னா (Enheduanna.). அவர் கி.மு.2354 ஆம் ஆண்டில் (கி.மு 2300) வாழ்ந்த புகழ் பெற்ற பெண். என்ஹெடுவான்னா பற்றிய தகவல்கள் உண்மையிலேயே நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. சுமார் 4,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்தப் பெண், “உலகின் முதல் எழுத்தாளர்” என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறார். அவர் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல; அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்; உயர் பூசாரி; கவிஞர்;, அரசியல் அதிகாரம் கொண்டவர். சமயம், அரசியல், மொழி, பண்பாடு ஆகியவை ஒருங்கிணைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெண் அவர்.
“என்ஹெடுவான்னா” பெயர்-பொருள்
என்ஹெடுவான்னாவின் அசல் பெயர் “ஹெடுவான்னா” (Heduanna) என்பதாகும். அதற்கு முன்னால் சேர்க்கப்பட்டுள்ள “en-” என்பது மரியாதையையும் மதிப்பையும் குறிக்கும் கௌரவச்சொல். அது அவர் வகித்த உயர்ப் பூசாரிப் பதவியையும் சுட்டிக்காட்டுகிறது. அவரது பெயரே அவரது பதவியின் பெருமையைச் சுமந்தது.
En — உயர்ப் பூசாரி / தலைமைப் பூசாரி
Hedu — அணிகலம் / அலங்காரம்
An-na — வானத்தின் / விண்ணுலகின். அதனால் Enheduanna என்பது பொதுவாக,“உயர் குருத்துவப் பெண், வானின் அணிகலன்”
என்பதாகும் பெயர் மட்டுமல்ல, அவரது வாழ்க்கையும் அந்தப் பெயரைப் போலவே தனித்துவமானது
இன்று நமக்குக் கிடைத்துள்ள அவருடைய அனைத்து எழுத்துப் படைப்புகளும், அவரது பிற்காலப் பெயரான என்ஹெடுவான்னா என்ற பெயரிலேயே உள்ளன. எனவே, அவர் உயர்ப் பூசாரியாக நியமிக்கப்பட்ட பின்னரே, தமது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பிறப்பும் வரலாறும்
என்ஹெடுவான்னா கி.மு. 2285 ஆம் ஆண்டு, மெசபடோமியாவின் அக்காட் நகரில் பிறந்தார் எனக் குறிப்பிடப்படுகிறது. அவரது தந்தை அக்காடியப் பேரரசை நிறுவிய, அக்காடின் சர்கோன் (மாபெரும் சர்கோன்,சுமார்கி.மு. 2334 -2279 வரை) ஆவார். அவரது அன்னை: “தாஷ்லுல்தும்” அரசி.,சர்கோனின் மனைவி (இவருடைய நிர்வாகியால் ஒரு கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒற்றை பளிங்குக் கல் குவளையின் துண்டிலிருந்து இவருடைய பெயர் வரலாற்றில் அறியப்படுகிறது “) அவரும் ஒரு ராஜகுரு ஆவார்.,
உயர் தலைமைப்பூசாரி- என்ஹெடுவான்னா
சார்கோன்,மெசபடோமியாவின் வடக்கில் இருந்த அக்காடியப் பகுதிகளையும், தெற்கின் சுமேரிய நகர-அரசுகளையும் ஒன்றிணைத்து ஒரு வலிமையான பேரரசை உருவாக்கியவர். அந்த அரசியல் மாற்றத்தின் மையத்தில் என்ஹெடுவான்னாவும் இருந்தார். தந்தை வெற்றி கண்ட சுமேரிய நகரமான ஊர் நகரில், நிலவுக் கடவுள் நன்னாவின் தலைமைப் பூசாரியாக இவர் நியமிக்கப்பட்டார். அரசியலையும் மதத்தையும் இணைக்கும் ஒரு உத்தியாகவே இந்நியமனம் அமைந்தது. இது வெறும் சமயப் பதவி அல்ல. என்ஹெடுவான்னா. அரசியலுக்கும் ஆன்மிகத்திற்கும் இடையே ஒரு பாலமாகவும், அக்காடியருக்கும் சுமேரியருக்கும் இடையே ஒரு கலாச்சார இணைப்பாகவும் இருந்திருக்கிறார்.
மொழியும் எழுத்தும்
என்ஹெடுவான்னாவின் தாய்மொழி, பேச்சுமொழி, ஆகியவை அக்காடிய மொழியாக இருந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் அவர் தமது கவிதைகளையும் சமயப் பாடல்களையும் சுமேரிய மொழியிலேயே இயற்றினார். சுமேரிய மொழி அக்காலத்தில் கோயில்களின் புனித மொழியாகவும், இலக்கியத்தின் உயர் மொழியாகவும் விளங்கியது.எனவே சுமேரிய மக்களையும், சமயப் பாரம்பரியத்தையும் சென்றடையும் வகையில், புனித இலக்கிய மொழியையே,படைப்பு மொழியாக்கினார்.

கியூனிஃபார்ம் – களிமண்ணில் அழியாத கையொப்பம்
அவரது படைப்புகள் கியூனிஃபார்ம் (Cuneiform) எனப்படும் பண்டைய ஆப்பு வடிவ எழுத்து முறையில் எழுதப்பட்டன. கியூனிஃபார்ம் என்பது, ஈரமான களிமண் பலகைகளில் முக்கோண வடிவ குறிகளை, நாணல் குச்சி மூலம் ஆப்பு வடிவத்தில், பதிவிடுதல். இதில் கருத்துகளையும் சிந்தனைகளையும் பதிவிட்டனர். என்ஹெடுவான்னா, தமது படைப்பின் மீது தன் பெயரைப் பதித்தார்.அந்தச் சிறிய களிமண் பலகைகளில் பொறிக்கப்பட்ட பெயர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து இன்று நம் முன்னால் நிற்கிறது. என்ஹெடுவான்னாவின் சொற்கள், களிமண்ணில், பொறிக்கப்பட்டவை. காலம் பேரரசுகளை அழித்தது. நகரங்கள் மண்மேடுகளாயின.கோயில்கள் இடிந்தன.ஆனால் அந்தக் களிமண் பலகைகளில் பதிந்த என்ஹெடுவான்னாவின் குரல் மட்டும் ஆயிரமாண்டுகளைத் தாண்டி நம்மை வந்தடைந்தது..ஒரு காலத்தில் ஊரின் கோயிலில் ஒலித்த அவரது குரல்,இன்று அருங்காட்சியகங்களின் அமைதிக்குள் மீண்டும் கேட்கிறது. அவர் எழுதியது களிமண்ணில்.ஆனால் அவர் விட்டுச் சென்றது—மனித நினைவில்
என்ஹெடுவான்னா: சான்றுகளும் பாரம்பரியமும்
களிமண் பலகைகளில் நகலெடுக்கப்பட்ட பாடல்களைத் தவிர, என்ஹெடுவான்னாவின் உயர் பதவிக்குச் சான்றாக இன்னும் பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. ஆழ்நீல லாபிஸ் லாசுலி கல்லில் செதுக்கப்பட்ட உருள் முத்திரைகள், களிமண் துண்டு ஒன்றில் காணப்படும் முத்திரைப் பதிவு ஆகியவை, சார்கோனின் மகள் என்ஹெடுவான்னாவையும், அவரது பணியாளர்களான எழுத்தர்கள், நிலமேலாளர், அலங்கார நிபுணர் உள்ளிட்டோரையும் அடையாளப்படுத்துகின்றன. தலைமைப் பூசாரிக்கு ஏராளமான பணியாளர்கள் இருந்திருப்பர்.
பளிங்குத் தட்டில் என்ஹெடுவான்னா:
ஊர் நகரில் தலைமைப் பூசாரியின் இல்லமான “கிபார்” எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட பளிங்குத் தட்டு ஒன்றிலும் இவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆடையும், தலைப்பாகையும் அணிந்த நிலையில், உதவியாளர்களை விடச் சற்றுப் பெரிதாகச் சித்தரிக்கப்பட்டு, ஒரு கோபுரம் போன்ற கட்டிடத்தின் முன், பலி நீர் ஊற்றும் சடங்கில் ஈடுபட்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளார். இத்தட்டின் பின்புறம் உள்ள கல்வெட்டு, “நன்னா தெய்வத்தின் மனைவி, உலக மன்னன் சார்கோனின் மகள்” என இவரை அடையாளப்படுத்துகிறது. பிற்கால பாபிலோனிய பலகை ஒன்றில் இந்தக் கல்வெட்டின் முழு நகல் கிடைத்துள்ளது. இது நூற்றாண்டுகளாக இத்தட்டு நினைவில் வைக்கப்பட்டிருந்ததைக் காட்டுகிறது.

கலாச்சாரங்களை இணைத்த கவிதை
என்ஹெடுவான்னாவின் பாடல்கள் அக்காடிய, சுமேரிய கலாச்சாரங்களின் இணைப்பை வெளிப்படுத்துகின்றன. சுமேரிய தலைநகர் ஊரில் வாழ்ந்த இவர், சுமேரியரின் காதல் தெய்வமான இனான்னாவைப் போற்றும் அதே வேளையில், அக்காடியரின் போர்க் கடவுளான இஷ்தாரின் பண்புகளையும் போற்றிப் பாடினார் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இரு தெய்வ அடையாளங்களையும் இணைத்ததன் மூலம், தந்தை சார்கோனின் பேரரசு ஒருமைப்பாட்டு நோக்கத்திற்கு இவரும் தன் பங்களிப்பை அளித்தார் எனலாம்.
தன்வரலாறு கூறும் உலகின் முதல் பதிவு
என்ஹெடுவான்னா எழுதிய “இனான்னாவின் உயர்வு” எனும் பாடலின் வரிகள், மெசபடோமியா முழுவதும் சுமார் நூறு நகல்களில் கிடைத்துள்ளன. அவற்றுள் கி.மு. 1750 அளவில் எழுதப்பட்ட மூன்று பலகைகள் முழுப் பாடலையும் காக்கின்றன. 153 வரிகள் கொண்ட இப்பாடலில், இனான்னாவை (இஷ்தாரின் போர்க்குணத்துடன்) விரிவாகப் போற்றுகிறார். குறுகிய வரிகள் நீண்ட சரணங்களாக அமைந்து பக்தி உணர்வுடன் நகர்கிறது. இதுவே “தன்வரலாறு” எனும் இலக்கிய வடிவின் முதல் எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. ஏனெனில் ஒரு எழுத்தாளர் தன் சொந்த வாழ்க்கை நெருக்கடியை, தன்னிலைக் குரலில், உணர்ச்சி ஆழத்துடன் சொல்வது இதுவே முதல்முறை ..இது தன்னிலையில் எழுதப்பட்ட முதல் இலக்கியப் படைப்பாகவும், தன்வரலாறு எனும் இலக்கிய வடிவத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது.
கண்டுபிடிப்பும் அங்கீகாரமும்
என்ஹெடுவான்னாவின் பெயர் 1927ஆம் ஆண்டு தொல்லியல் அறிஞர் சர் லியனார்ட் உல்லியால் வெளியுலகுக்கு வந்தது. அதில் இவரது பெயர் பொறித்த பொருட்கள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டன. இன்று நியூயார்க் மோர்கன் நூலகத்தில் “அவள் எழுதினாள்: என்ஹெடுவான்னாவும் மெசபடோமியப் பெண்களும்” எனும் கண்காட்சி இவரது பாரம்பரியத்தைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. பொதுவாக முதல் எழுத்தாளர் யார் எனக் கேட்டால் மெசபடோமியாவைச் சேர்ந்த, ஒரு பெண்ணை, அரிதாகவே நினைவுகூர்வதாகவும் கண்காட்சியின் பணிப்பாளர் “சிட்னி பாப்காக்” குறிப்பிடுகிறார்.

மூவகைச் சான்றுகள்
அதிர்ஷ்டவசமாக, என்ஹெடுவான்னாவின் வியப்பூட்டும் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்த,மூன்று வகையான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. தொல்லியல், வரலாற்று, இலக்கிய ஆதாரங்கள் மூன்றும் என்ஹெடுவான்னாவின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி உதவுகின்றன. ஊரில் கிடைத்த ஒரு சுண்ணாம்புக்கல் தட்டில் அவரது நிஜத்தன்மை வாய்ந்த உருவம் காணப்படுகிறது. அறிஞர்கள் இக்னேஸ் கெல்ப், எச். ஹிர்ஷ் ஆகியோர் ஆய்வு செய்த ஊர் கல்வெட்டுகள், அவர் சார்கோனின் மகள் என்றும், நன்னாவின் தலைமைப் பூசாரி என்றும் உறுதிப்படுத்துகின்றன. அவர் தன் தந்தையைவிட நீண்ட காலம் வாழ்ந்தார். கி.மு. 2279 ஆம் ஆண்டில் சார்கோன் இறந்த பின்னரும், பல ஆண்டுகள் என்ஹெடுவான்னா, கி.மு. 2251 ஆம் ஆண்டு வரை உயர்ப் பூசாரியாகத் தொடர்ந்து பணியாற்றினார்
கதைக்களம்
என்ஹெடுவான்னாவின் இப்பாடல் ஒரு உண்மை நிகழ்வை மையமாகக் கொண்டது. சுமரில், உகல்-அன்னே (Lugal-ane) எனும் அரசியல் எதிரி, என்ஹெடுவான்னாவை, தலைமைப் பூசாரி பதவியிலிருந்து துரத்திவிடுகிறான். இந்தச் சூழலில் அவர் இனான்னா தேவியிடம் தனக்காகத் தலையிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறார். ஆனால் தேவி உடனே பதிலளிக்கவில்லை. மேலும் என்ஹெடுவான்னா, தன் கவிதைத் திறனையும் இழந்துவிட்டதாக உணர்கிறார். தன் வாக்கு சக்தியை மீட்டெடுத்தால்தான் தேவியை வேண்டுகோளுக்கு இணங்கச் செய்ய முடியும் என்பது இப்பாடலின் நெருக்கடி. இறுதியில் அவர் தன் இழந்த குரலை மீட்டெடுத்து, இந்தப் பாடலையே இயற்றுவதன் மூலம் தன் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்கிறார். கவிதை எழுதும் செயல்பாட்டையே கவிதைக்குள் காட்சிப்படுத்துவது இதன் தனித்துவம்..
உலகின் முதல் சுயசரிதைக்குரல்
இனான்னாவின் இப்பாடல் 153 வரிகள் கொண்டது (சில பதிப்புகளில் இது வேறுபடுகிறது), குறுகிய வரிகள் நீண்ட சரணங்களாக அமைந்து பக்தி உணர்வுடன் நகர்கிறது. இதுவே “தன்வரலாறு” எனும் இலக்கிய வடிவின் முதல் எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. ஏனெனில் ஓர் எழுத்தாளர், தன் சொந்த வாழ்க்கை நெருக்கடியை, தன்னிலைக் குரலில், உணர்ச்சி ஆழத்துடன் சொல்வது இதுவே முதல்முறை. ஒரு பெண் தன் வாழ்க்கையைப் பற்றி தானே பேசும் அரிய வரலாற்றுக் குரல். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்,ஒரு பெண் களிமண் பலகையின் முன் அமர்ந்து,“இது என் அனுபவம். இது என் துயரம்.இது என் குரல்.இது என் படைப்பு.”என்று வரலாற்றிடம் உரையாடியது போல் அது ஒலிக்கிறது
வாழ்க்கைப் பணி
என்ஹெடுவான்னா பூசாரியாகப் பொறுப்பேற்றபோது ஒப்பீட்டளவில் இளம் வயதிலேயே இருந்தார். அவரது இளமைக் காலமும், பின்னர் வாழ்ந்த ஆண்டுகளும் துறவற அடைவு வாழ்க்கையிலேயே கழிந்திருக்கலாம். தலைமைப் பூசாரிகள் பொதுவாகத் திருமணமாகாதவர்களாகவும், தனிமைச் சூழலில் வாழ்பவர்களாகவும் இருந்தனர். என்ஹெடுவான்னா இதனையே பின்பற்றினார்..அவர் வாழ்க்கை முழுவதும் பிரார்த்தனையும் கவிதை இயற்றுதலும், எண்ணற்ற துதிப்பாடல்களை உருவாக்குதலும் நடைபெற்றது.அவர் விட்டுச் சென்ற கவிதைச் செல்வம் மிகவும் விரிவானது
இன்னானா — தெய்வமும் கவிதையும்
என்ஹெடுவான்னாவின் இனான்னா பாடலில் ஆசிரியர் பெயர் நேரடியாகவே இருக்கிறது. இன்னானா (Inanna).அன்பு, போர், அதிகாரம், வளம் ஆகிய பல பரிமாணங்களுடன் தொடர்புடைய சுமேரியத் தெய்வம். இன்னானாவைப் போற்றிப் பாடிய அவரது கவிதைகள், வெறும் பக்திப் பாடல்களாக மட்டும் இல்லாமல், அதிகாரம், மனித உணர்வு, அரசியல், தனிமை, துயரம், மீட்பு ஆகியவற்றையும் தொட்டுச் செல்கின்றன.அவரது கவிதைகளில் தெய்வம் வெறும் விண்ணுலகில் இருக்கும் ஓர் உருவம் அல்ல.அது மனித வாழ்வின்அச்சத்துடனும் ஆசையுடனும், வெற்றியுடனும் தோல்வியுடனும்,இழப்புடனும் மீட்சியுடனும் உரையாடும் ஒரு சக்தியாகிறது.இதுவே என்ஹெடுன்னாவின் கவிதைகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் உயிருடன் வைத்திருக்கும் தன்மைகளில் ஒன்று..
முக்கியப் படைப்புகள்: ‘இனான்னாவின் மேன்மை, உட்பட, சக்தி வாய்ந்த சுமேரியக் கோயில் பாடல்களையும் தனிப்பட்ட பக்திக் கவிதைகளையும் இயற்றினார்
42 கோயில் துதிப்பாடல்கள் (Sumerian Temple Hymns)
“இன்னானாவை உயர்த்திப் பாடுதல்” (The Exaltation of Inanna)
“இன்னானாவும் எபிஹும்” (Inanna and Ebih)
என்ஹெடுவான்னாவின் கோயில் துதிப்பாடல்களில், சுமேரின் பல்வேறு நகரங்களில் வழிபட்ட தெய்வங்களுக்கும், கோயில்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பாடல்கள் ஆகும்..
:“இந்தப் பலகைகளின் தொகுப்புக்குப் பின் வரும் கருத்து இன்னும் துணிச்சலானது:“என் தலைவனே, இங்கு படைக்கப்பட்டதைப் போன்ற ஒன்றை இதற்கு முன் யாரும் படைத்ததில்லை.”இவை வெறும் சமயப் பாடலின் இறுதி வரிகள் அல்ல.“நான் இதை உருவாக்கினேன்” என்று தன் படைப்பின் மீது தன் பெயரைப் பொறித்த ஓர் எழுத்தாளரின் குரல்.அதனால்தான், வரலாற்றில் பெயருடன் அறியப்படும் முதல் எழுத்தாளராக என்ஹெடுவான்னா கருதப்படுகிறார்.
ஆயிரம் ஆண்டுகள் நீடித்த மரபு
நிலவுத் தெய்வமான நன்னாவுக்கு உயர்ப் பூசாரியாகத் தன் மகளை முதன்முதலில் நியமித்த மன்னன் சார்கோனே.அந்த நியமனத்திற்குப் பிறகு, அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு, அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசிகள் தொடர்ந்து நன்னாவின் பூசாரிகளாகப் பணியாற்றினர்.
பாராட்டு
வில்லியம் ஹாலோ என்ற ஐரோப்பிய இலக்கியவாதி, என்ஹெடுவான்னாவின் கவிதைகளையும், எழுத்துக்களையும், மிக ஆழமாக ஆராய்ந்த பின்னர், அவரின் அறிவுத்திறன் கண்டு வியந்து, என்ஹெடுவான்னாவை, பழங்கால சுமேரிய இலக்கியங்களின் ஷேக்ஸ்பியர் என்று, பாராட்டுகின்றார். மேலும் ஜோன் வெஸ்டென்ஹோல்ஸ் மற்றும் ஆன்னெட் சைகோல் என்பவர்களும் இந்த கருத்தையே முன் வைக்கின்றனர். என்ஹெடுன்னா மறைந்து, பல 1௦௦௦ ஆண்டுகள் ஆனபின்னும் கூட, அவரது எழுத்துக்கள்,படி எடுக்கப்பட்டு, லிபி மூலம் படித்து பதிவு செய்யப்பட்டு, இன்றும் இலக்கிய மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன, அவரது எழுத்தின் பெருமையையும், முக்கியத்துவத்தையும், நாம் உணரவேண்டும்
காலத்தைக் கடந்த இலக்கிய மரபு
என்ஹெடுவான்னாவின் படைப்புகளின் அசல் பிரதிகள் இன்று நம்மிடம் இல்லை. நமக்குக் கிடைத்திருப்பவை, அவருக்குப் பின் பல நூற்றாண்டுகளில் எழுத்தர்களால் மீண்டும் மீண்டும் நகல் எடுக்கப்பட்ட பிரதிகள்.அதனால், இன்றுள்ள உரைகளில் கால மாற்றங்கள் இருக்கலாம் என அறிஞர்களிடையே விவாதங்கள் நிலவுகின்றன. ஒரு முக்கியமான உண்மை மறுக்க முடியாதது: என்ஹெடுவான்னாவின் பெயரும் படைப்புகளும் பல நூற்றாண்டுகளாக உயிருடன் இருந்தன.அவரது கவிதைகள் பின்னாளில் சுமேரிய எழுத்தர் பள்ளிகளில் மாதிரிப் படைப்புகளாகக் கற்பிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் நகலெடுக்கப்பட்டன.ஓர் எழுத்தாளரின் படைப்பு நூற்றாண்டுகள் கடந்தும் மாணவர்களால் ஈர்க்கப்பட்டது என்றால், அவை சமூகத்தில் எத்தனை உயரிய இடத்தைப் பெற்றிருக்க வேண்டும்.காலம் அவரது குரலை அழிக்கவில்லை;. தலைமுறைகள் அதை மீண்டும் எடுத்துச் சென்றன.என்ஹெடுவான்னா மறக்கப்படவில்லை
அவரது வாழ்க்கை நமக்குச் சொல்வது: எழுத்து என்பது வெறும் சொற்களைப் பதிவதல்ல.ஒருவரின் இருப்பை காலத்தின் மீது பொறிப்பது. கி.மு. 23ஆம் நூற்றாண்டின் பெண் தன் பெயரை களிமண்ணில் பொறித்தார்.அது மட்டும் நிலைத்தது.அவர்தான் என்ஹெடுவான்னா.,ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும் நம்மிடம் வரும் தகவல்: “ஒரு குரல் உண்மையாக எழுதப்பட்டால்,
காலத்தால் அதை மௌனமாக்க முடியாது.”
Ref:
https://en.wikipedia.org/wiki/Enheduanna
https://minervamagazine.com/i-enheduanna
10 Things We Know About Enheduanna, the World’s First Named Author
https://www.bbc.com/culture/article/20221025-enheduanna-the-worlds-first-named-author
https://www.britannica.com/biography/Enheduanna
https://www.ebsco.com/research-starters/history/enheduanna
https://www.worldhistory.org/Enheduanna/
📚 எழுதியவர் :

– ✍🏻 பேரா.சோ.மோகனா
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

