என் குழந்தைப் பருவம்
என்னை செதுக்கிய பள்ளி நாட்கள்
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் திருச்சி மாவட்டம். எனினும் பல ஊர்களில் பல பள்ளிகளில் நான் படித்தேன். என் தந்தை ஒரு பஞ்சாயத்து யூனியன் அதிகாரியாக பணிபுரிந்ததால் எப்படியும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வேறு வேறு பஞ்சாயத்துகளுக்கு மாற்றப்பட்டு வந்தார். தான் மாற்றப்பட்ட பஞ்சாயத்துக்களுக்கு தன் குடும்பத்தையும் மாற்றிக் கொண்டு போனார். எனவே என் குழந்தை பருவத்தில் சாகசங்களுக்கு குறைச்சலே இல்லை. பலஊர்கள் பல நண்பர்கள். பலவிதமான மனிதர்கள். சில சம்பங்களை இன்னுமும் கூட மறக்க முடியவில்லை.
ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் எனும் ஊரில் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு அறிமுகம் ஆனது. பஞ்சயத்துக்கள்தான் அப்போது ஆரம்ப பள்ளிகளை நடத்தின. என் அப்பா எந்த ஊர் என்றாலும் அங்கே பஞ்சாயத்து பள்ளியில் எங்களை சேர்ப்பார். ‘ எங்களை’ என்றால் நான் என் தம்பி மற்றும் ஒரு தங்கை என் அம்மாதான் வீட்டில் எங்களுக்கு டீச்சர். ஒரு தகர மூடி அதையே கரும்பலகை ஆக்கி சிலேட்டு குச்சியில் எழுதி படிக்கவைப்பார். ஹு இஸ் த சீஃப் மினிஸ்டர் ஆஃப் தமிழ்நாடு ? (Who is the Chief Minister of TamilNadu) என்று ஆங்கில பாடத்தில் வந்தது கே.ஏ.எம்.ஏ.ஆர்.ஏ.ஜே (KAMARAJ) என்று எழுத தெரிந்தால் மீதி (‘இஸ் த சீஃப் மினிஸ்டர் ஆஃப் தமிழ்நாடு) பார்த்தே எழுதிவிடலாம். எனவே அந்த கே.ஏ.எம்.ஏ.ஆர்.ஏ.ஜே வை மறுபடி மறுபடி சொல்வது எழுதிப்பார்ப்பது என்று கழித்தேன். தேர்வில் முதல் கேள்வியே அதுதான். விடைத்தாள் வாங்கியவுடன் என் பெயரைக்கூட எழுதுவதற்கு முன் கே.ஏ.எம்.ஏ.ஆர்.ஏ.ஜே எழுதியது நினைவிருக்கிறது.
ஆனால் நாங்கள் மெட்ராசில் (தற்போதைய சென்னை) அப்பாவுக்கு தெரிந்த சக அதிகாரி ஒருவரின இல்லத் திருமணத்திற்கு பரிட்சை நடந்த அடுத்த சில நாட்களில் சென்று கலந்துகொண்டோம். அந்த திருமணத்திற்கு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் வந்தார். அந்த காலக்கட்டத்தில் சாதாரணமான எந்த நிகழ்வுக்கு வந்தாலும் காமராஜர் அந்த அரங்கத்தில் சுற்றி விளையாடும் எல்லா சிறுவர்களையும் பக்கத்தில் அழைப்பார். அன்றும் அப்படியே நடந்தது. நான் தொலைவில் இருந்த என் அம்மாவை நோக்கி சத்தமாக ‘அம்மா….. கே.ஏ.எம்.ஏ.ஆர்.ஏ.ஜே….. இதோ இருக்காரு பாருங்க’ என்றேன். ‘உஷ்…’ என்றார்கள் பலர்.
‘அடிடா…. செக்கே …’ என்றார் காமராஜர் பக்கத்தில் அழைத்தார்… அவரது உயரத்திற்கும், ஆஜானுபாகுவான உடல் வாகுக்கும் நான் அவரது முட்டிக்கு கூட வரவில்லை. ‘எல்லாரும் பள்ளிக்கூடம் போறீங்களாப்பா…’ என்றார். அங்கிருந்த பிள்ளைகள் யாவரும் ஆமோதித்தோம்…. ‘மதியம்… சாப்பாடு போடுறாங்களாங்கிறேன்?’ என்றார். நாங்கள் பள்ளியிலேயே உணவு அருந்துவதை ஒரு சாகசம் போல விவரித்தோம் என்று நினைவிருக்கிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் போதெல்லாம் அவர் நினைவு வரும். ஆண்டிமடம் பள்ளி நண்பர்களிடம் என் கே.ஏ.எம்.ஏ.ஆர்.ஏ.ஜே சந்திப்பை ஒரு ஆயிரம் தடவையாவது திரும்ப திரும்ப விவரித்து இருப்பேன்.
ஆறாம் வகுப்பு திருச்சி உறையூர் பள்ளிக்கு வந்துவிட்டேன். அந்த நாட்களில் நான் நண்பர்களோடு நாடகங்களின் நடிக்க ஆரம்பித்திருந்தேன். பள்ளியில் பெரிய சாமி சார் என்று எங்களுக்கு ஒரு ஆசிரியர் கணக்கு அறிவியல் பாடங்களுக்கு அவரே ஜவாப்தாரி. பள்ளியில் இலக்கிய மன்றம் அறிமுகமாகி இருந்தது. தமிழில் நாடகங்கள் எழுதி எங்களை மேடையேற்றுவார் பெரியசாமி சார்.
ஆண்டுவிழா நாடகம். பெரிய அண்ணாக்கள் அக்கா இவர்களோடு ஒரு புத்த பிட்சுவாக நடிக்க நான் தேர்வாகி இருந்தேன். ஆனால் நாடகம் போட செலவாகுமே. வீட்டில் கேட்க நாங்கள் எல்லாருமே கூசினோம்.
ஒரு நண்பன் கொடுத்த யோசனை, ஆனால் அதை செயல் படுத்துவது என்று முடிவானது… வீடு வீடாக சென்று வசூல் செய்வது, அதுவும் குறவன் குறத்தி வேடத்தில் சென்று காசு வாங்குவது என்று எங்கள் நாடகக்குழு ஆசிரியருக்கே தெரியாமல் குறவன் வேடம் போட ஒருவனையும் குறத்தி வேடம் போட ஒருவரையும் தேர்வு செய்தது. அவ்விதத்தில் குறத்திவேடம் போட நான் தேர்வு செய்யப்பட்டேன்.
சனி ஞாயிறு விடுமுறையில் என் குறத்தி வேடத்தில் வீடுவீடாக சென்று என் நண்பர்களோடு ‘டமுக்க டிப்பான் டியாலோ… டமுக்கடிப்பான் டியாலோ’ நடனம் ஆடினேன். ஓரளவுக்கு வசூலானது வேறு விஷயம்…. ஆனால் எத்தனையோ முயன்று எல்லா மேக்கப்பும் களைந்து வீடுதிரும்பியும் அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன். ‘கண்களில் மை வைத்தாயா‘ என்றார். முகத்தை எவ்வளவு கழுவினாலும மை மட்டும் இரண்டு நாட்களுக்கு போகவில்லை. பெரியசாமி வாத்தியாரிடம் அப்பா வசமாக மாட்டிவிட்டார். பிறகும் பள்ளியில் பெருஞ்சேரல் இரும்பொறையாக. பாரதியாராக, ராஜராஜ சோழனாக என்று பல வேடங்களில் நடித்து இருக்கிறேன். என்றாலும் அந்த குறத்தி வேடம் கட்டியதே பெரிய சாகசமாக நினைவில் தங்கிவிட்டது.
அப்போது ஏழாவதோ எட்டாவதோ சரியாக நினைவில் இல்லை. கோடை விடுமுறை. பம்பரம் கிட்டிப்பில் ஆடுவோம். கிராமத்தில் கிணற்றில் கும்மாங் குளியல் என்று போடாத ஆட்டமில்லை. என் தாத்தா (அப்பாவின் தந்தை) ஊரிலிருந்து வந்திருந்தார். ஊர் சிறார்களை திண்ணையில் உட்கரவைத்து கதைகள் சொல்வார். அவர் ஒரு சூப்பர் கதை சொல்லி எல்லாமே பேன்டசி வகை கதைகள்தான். பெரும்பாலும் இளவரசிகள் கடத்தப்படுவார்கள். பெரிய பூதங்கள் தான் கடத்தும். பலநாட்டு இளவரசர்கள் முயற்சி செய்து தோற்பார்கள்.
அரண்மனை தோட்டக்காரன் மகன் அல்லது துணி வெளுப்பவனின் தம்பி என சாதராணமானவர்கள் மிகுந்த துணிச்சலும் விவேகமும் பெற்று ஏழு கடலை தாண்டி ஏழுமலைகளை கடந்து இளவரசியை மீட்டு திருமணம் செய்யும் கதைகள் அவை. ஒருமுறை பாதி கதையில் ஏதோ அவசர வேலை என்று தாத்தா ஊருக்கு கிளம்பிவிட்டார். ஊர் சிறார்களான என் நண்பர்களை ஒரு இடத்தில் கூட்டி மீதிக் கதையை நானே இட்டுக்கட்டி சொல்லி முடித்தேன் அதிலிருந்து கதை சொல்வதும் எழுதுவதும் ஒட்டிக்கொண்டது.
நான் எட்டாம் வகுப்பு படித்த காலத்தில் எங்களுக்கு பரமேஸ்வரி டீச்சர் என்று ஒரு தமிழாசிரியை இருந்தார். பள்ளியின் நூலகத்திற்கும் அவர்தான் பொறுப்பு வீட்டில் அப்பா எங்களுக்கு எல்லா மாத வார இதழ்களும் வாங்கி போடுவார். அம்புலிமாமா, கோகுலம், அணில், மஞ்சரி எல்லாமே வரும். அவற்றை பள்ளிக்கும் வரவைப்பார் பரமேஸ்வரி டீச்சர். மாலையில் கொஞ்சநேரம் நூலகத்தில் தன் அபிமான மாணவர்களை கூப்பிட்டு புத்தகங்கள் தருவார். அவரது முதன்மையான அபிமான மாணவர் அந்தஸ்த்து பெற போட்டோ போட்டி நடக்கும். அழ. வள்ளியப்பா முதல் மு.வ. வரை, ஆலிவர் ட்விஸ்ட் முதல் கிட்னாப்டு வரை தமிழ், ஆங்கிலம் என்று பல புத்தகங்களை வாசித்து நான் அபிமான லிஸ்டில் முதலிடம் பிடிக்க என் வாசிப்பு பயணம் அப்போது தொடங்கியதுதான்.
ஒன்பதாம் வகுப்பு காலத்தில் – அப்போது நாங்கள் – கரூர் பரமத்தி என்கிற ஊரில் உயர்நிலைப்பள்ளியில் படித்தோம். மறக்க முடியாத இன்னொரு சம்பவம் நடந்தது. கரூர் – கோவை பிரதான சாலையிலேயே எங்கள் பள்ளி இருந்தது. இப்போது அது க.பரமத்தி அரசினர் மேல்நிலைப்பள்ளி என்று கம்பீரமாக நிற்கிறது. நாங்கள் படித்தபோது அது உயர்நிலைப்பள்ளிதான். அழகான வளாகம். கொடிகம்பத்திற்கு அருகில் இந்திய வரைபடம் சிமிண்டால் செதுக்கப்பட்டு கோலிகுண்டுகள் பதித்து மாநில தலைநகரங்களை குறித்து இருப்பார்கள். இதை உருவாக்கியவர். எங்கள் கால தலைமை ஆசிரியர் காதர் மொகிதீன் சார்.
ஒரு நாள் காலை முதல் பீரியட் முடிந்த நேரத்தில் பள்ளி கேட்டை கடந்து அந்தகால கார் ஒன்று உள்ளே நுழைந்தது. தலைமை ஆசிரியர் அறை வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து வேட்டி முழுக்கை வெள்ளை சட்டை அணிந்த தலையில் முடி இல்லாத ஒருவர் இறங்கி தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்றார். கூடவே ஒரு வெளிநாட்டவர் இருந்தார். எச்.எம். ரூமில் இருந்த மேசை – ஃபேன் (Table Fan) எடுத்து வந்து ( அவரது அனுமதி பெற்றுதான்) வெளியே அதை கழட்டி மோட்டாரை தனித்தெடுத்து காரில் இருந்த வைப்பர் (மழை நீர் துடைப்பான்) கருவியை ஓடவைத்தார் அவர். எங்களுக்கு காலை-இண்டர்வெல் விடப்பட்டிருந்ததால் நான் முழுமையாக வேடிக்கை பார்த்தேன். எங்கள் அறிவியல் ஆசிரியர் சுப்பிரமணி சார் என்னிடமும் சில நண்பர்களிடமும் அதுதான் ஜி.டி. நாயுடு என்றார்.
தனது சொந்த கண்டுபிடிப்பான காரின் மழைநீர் துடைப்பானில் ஏதோ பழுது ஏற்பட அதை உடன் வந்த வெளிநாட்டவருக்கு அது எப்படி வேலை செய்கிறது என்பதை வழியில் எங்கள் பள்ளிக்குள் நுழைந்து டேபிள்ஃபேன் மோட்டார் மூலம் – விளக்கம் கொடுத்திருக்கிறார் ஜி.டி. நாயுடு. பிறகு தலைமை ஆசிரியர் அறையில் பழையபடி அந்த டேபிள் ஃபேனை ஓடவைத்து விட்டு விடை பெற்றார் மக்கள் விஞ்ஞானி. எங்கள் அறிவியல் ஆசிரியர் சுப்பிரமணி அத்தோடு விடவில்லை. ஜி.டி.நாயுடு வின் எம்பள்ளி திக்-விஜயம் பற்றி எல்லாருக்கும் இடையே அறிவியல் கட்டுரை போட்டி ஒன்றை நடத்தினார். என் வாழ்க்கையில் நான் எழுதிய அறிவியல் கட்டுரை-1 அதுதான்.
ஒன்பதாம் வகுப்பில் இன்னொரு சம்பவம். இருபால் மாணவர் படித்த பள்ளி அது. எங்கள் வகுப்பில் லோகாம்பாள் எனும் மாணவி இருந்தார். இந்த சம்பவத்தையும் மறக்கமுடியவில்லை. ரொம்ப நன்றாக படிப்பார். பொதுவாகவே வகுப்பில் படிப்பில் நல்ல போட்டி இருந்தது. அந்த மாணவிக்கு அப்பா கிடையாது. அம்மாதான். ஆனால் நிலபுலன்கள் உண்டு என்று எல்லாரும் பேசிக்கொண்டார்கள். லோகாம்பாள் திடீரென்று அனைவரது பேசுபொருளாக ஆனதற்கு முக்கிய காரணம் அவர் பள்ளிவிட்டு நிற்கபோவதுதான்.
அவருக்கு அவரது வீட்டில் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்துவிட்டார்கள். நாங்கள் வகுப்பின் சக மாணவர்கள் முதலில் இதை கேட்டு சிரித்தோம். ‘படிக்கிற வயசுல திருமணமா…. நல்லா படிக்கும் பெண் ஒவ்வொரு ஆசிரியராக வருந்தினார்கள். சட்டம் என்ன சொல்கிறது சரியா தவறா என்பதெல்லாம் அப்போது கிராமத்தில் தெரியாது. ஆனால் நான் நண்பர்களிடம் பேசினேன். இந்த திருமணத்தில் அந்த மாணவிக்கு விருப்பமில்லை. தடுத்து நிறுத்துமாறு ஒரு மனு எழுதினேன். வகுப்பில் எல்லா மாணவர்களிடமும் கையெழுத்து வாங்கி தலைமை ஆசிரியரிடம் கூட்டமாக சென்று ஒப்படைத்தோம். அவர் முதலில் எரிச்சலடைந்தாலும் அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேசி கல்யாணத்தை ஒத்திவைத்தார். பள்ளிக்கு திரும்பிய லோகாம்பாள் அழுதபடி நன்றி கூறியதை மறக்கவே முடியாது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Superb… marvelous childhood story….while reading I enjoy and it created some curiosity also
..
கண்ணில் நீர் வர வைக்கும் அனுபவ தொகுப்பு.உங்கள் காலம் பொற்காலம்.
பள்ளிப்பருவ காலங்கள் என்பது ஒவ்வொருவருக்கும் மறக்கமுடியாத பருவம், சாரல் போல் அதன் நினைவுகள் அவ்வப்பொழுது தூறி செல்லும் பொழுது, இதமான தூறலில் புதிதாய் பூத்த மலர் போல மனம் உற்சாகமாய் மீண்டும் பிறப்பெடுக்கும்.
தங்களது இளமை கால நினைவுகள் எங்களுக்கும் அத்தகைய புத்துணர்வை
கொடுத்தது…..
புரட்சி என்பதெல்லாம் அரசியலால் உருவானது அல்ல அது இதயத்தின் எழுச்சி என்பதை சிறுவயதில் செய்த திருமண ஒத்திவைப்பு முயற்சி உணர்த்துகிறது, சிறுவயதிலும் பரந்த சமூக கண்ணோட்டம் …..
சுவாரஸ்யமான நினைவுகள்….. !!!