என்னைச் செதுக்கிய மாணவர்கள் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : என்னைச் செதுக்கிய மாணவர்கள்
ஆசிரியர்: ஆயிஷா.நடராஜன்
பக்கங்கள்:160
விலை: 144
பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ரன்
நூலைப் பெற : thamizhboks.com
இந்தப்புத்தகம் இந்து வெற்றிக்கொடி இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.
என்னுடைய மாணவர்கள் முன் நான் உட்காருவதில்லை என்றார் கோல்ட் என்ற இப்புத்தக ஆசிரியரின் என்னுரையே இந்தப் புத்தகத்தை நம்மை ஆழ்ந்து படிக்க வைக்கிறது.
ஒவ்வொருவர் மனதிலும் கட்டாயம் ஒரு ஆசிரியர் இருப்பார் அதைப்போலவே ஒவ்வொருஆசிரியர் மனதிலும் பல மாணவர்கள் இருப்பார்கள் அம்மாணவர்களைப் பற்றி விளக்குவதே இப்புத்தகம்.
மாணவர்களிடமிருந்து என்ன கற்றுக் கொண்டேன் என்று ஒரு ஆசிரியர் பேசினால் எப்படியிருக்கும்..? அந்தப் புதுமையான முயற்சியின் விளைவே இந்தப் புத்தகம் ஆகும்.
தான் எழுதிய புத்தகத்தின் பெயராலே சிறப்புப் பெயர் பெற்று இன்று பலராலும் பாராட்டக்கூடிய குழந்தைகள், கல்வி,அறிவியல் சார்ந்த புத்தகத்தை எழுதும் நடராசன் அவர்கள் எழுதிய புத்தகம் இது ஆகும்.
தான் எழுதிய ஆயிஷா புத்தகத்தின் சிறப்பால் “ஆயிஷா” நடராஜன் என இந்தப் புத்தக ஆசிரியர் அழைக்கப்படுகிறார்.
தன் ஆசிரியர் பணி அனுபவத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் தன்னை பாதித்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளில் தனக்கு மாற்றத்தை ஏற்படுத்திய மாணவர்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தப்புத்தகத்தின் தனிச்சிறப்பு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அடையாளம் காட்டாமல் சூழலால்,அறியாமையால் தவறு செய்யும் மாணவர்களை அரவணைத்து அவர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடைந்ததை எடுத்துக் கூறுவதே இந்தப் புத்தகம் ஆகும்.
ஒரு ஆசிரியராய் மாணவர்களின் அனைத்து உள்ளார்ந்த திறன்களையும் மேம்படுத்த வாய்ப்பு தர வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
இப்புத்தகம் மதிப்பெண்களைக் காட்டிலும் மாணவர்களிடம் உள்ள மட்டற்ற திறன்களை வெளிப்படுத்துவது ஆசிரியரால் மட்டுமே முடியும் என்பதை விளக்குகிறது.
வகுப்பறையில் பீர் பாட்டிலோடு வந்த மாணவியைத் தண்டிக்காமல் அவளின் குடும்ப பிரச்சினை அறிந்து அதற்கு உளவியல் ரீதியாக அறிவுரை வழங்கி நம் முன்பு நல்ல மனிதராக மிளிர்கிறார் ஆசிரியர், அந்த அந்த மாணவியையும் நல்வழிப்படுத்துகிறார்.
இந்தப் புத்தகத்தை படித்துவிட்டால் மாணவர்கள் எந்த தவறு செய்தாலும் தண்டிக்கும் மனம் நமக்கு கண்டிப்பாக வராது.
ஆசிரியர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும் எல்லாவற்றையும் விட பெற்றோர்கள் படிக்க வேண்டும் அப்போதுதான் தன் குழந்தைகளை மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக பார்க்காமல் அவர்களின் மனதை உணர முடியும்.
இந்தப் புத்தகத்தில் உள்ள 35 கட்டுரைகளும் 35 திரைப்படங்களாக எடுக்கலாம் அந்த அளவுக்கு விறுவிறுப்பானவை.
குடிகாரக் கும்பலிடம் இருந்து தான் அடி வாங்கிக் கொண்டு தன் ஆசிரியர் அடி வாங்காமல் பாதுகாக்கும் மாணவர் பற்றி படிக்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது இப்படியும் மாணவர்களா …? என்று வியக்க வைக்கிறது.
குறித்துக் கொடுத்த கேள்விகளை மட்டும் கேட்காமல் துணிந்து கேள்வி கேட்ட மாணவி சிறந்தவள் குடியரசு தலைவருக்கே கடிதம் எழுதி தனது குழந்தை திருமணத்தை நிறுத்திய அந்த மாணவியின் வீரம் போற்றக்கூடியது.
பல்வேறு பேனாக்களை வைத்துக்கொண்டு இல்லாத மாணவர்களுக்கு உதவும் மாணவன் அருமை.
மை சிந்தும் பேனா மூலம் பேனா இல்லா மாணவர்கள் கண்ணீர் சிந்த வைக்காத மாணவனின் குணம் பாராட்டுக்குரியது.
இட்லி சமைப்பதன் மூலம் வாழ்க்கைக்கு அனைத்து பாடங்களும் தேவை என்பதை உணர்த்திய மாணவர் பாராட்டுக்குரியவர்.
இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பிற்கு மற்றொரு காரணம் ஒவ்வொரு கட்டுரையின் முகப்பிலும் கல்வியாளர்கள் சிந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தில் பல்வேறு இடங்களில் சுய முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை மற்றும் கல்வி சார்ந்த தகவல் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு.
கட்டுரைகளின் மையக்கருத்தை எளிதில் உணர்த்தும் கவித்துவமான தலைப்புகள்.
நீதான் தம்பி முதலிடம்
கேள்வி ஞானி அந்தோணி ஜோசப்
தமிழில் ஓங்கி அடித்த சூர்யா
லட்சுமி யாக மாறிய சரஸ்வதி
என் மனதை மிகவும் பாதித்த கட்டுரைகள்
எனக்கு டிசி கொடுங்க சார்
விடைத்தாள் என்னும் போதிமரம்
என் மனதை கவர்ந்த சிந்தனைகள்
யார் சிறந்த ஆசிரியர் ஒரு கட்டத்தில் தான் இருப்பதன் தேவையை உணராமல் மாணவர்களைத் தாங்களாகவே வெற்றியடைய வைப்பவர் தான்.
மதிப்பெண் வாங்க வைப்பது கல்வியல்ல சமூகம் நோக்கிய மதிப்பீடுகளை வளர்க்க உதவுவதே கல்வி.
குழந்தைகளின் கற்பனைக்கு மிஞ்சியது எதுவும் உலகில் இல்லை.
மாணவர்களின் இதயம் துடிக்கும் உயிருள்ள இதயமாய் இயங்குவது ஆசிரியர் கையில் தான் உள்ளது.
இப்புத்தகம் படித்தவுடன் அதன் நினைவுகளில் இருந்து இன்னும் மனம் மீளவே இல்லை.
இப்புத்தகம் மூலம் என் வகுப்பில் படித்த பல மாணவர்களின் முகம் நினைவுக்கு வருகிறது.
கண்டிப்பாக மாணவர்கள் எது செய்தாலும் தண்டிக்கவே கூடாது அவர்கள் செய்யும் அனைத்திற்கும் சூழலே காரணம் என உணர வைத்த புத்தகம்.
ஒரு ஆசிரியர் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்பதற்கு நடைமுறை உதாரணம் இந்தப் புத்தகம்.
கண்டிப்பாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் படிக்க வேண்டியது இந்தப் புத்தகம் ஆகும்.
நாளைய எதிர்காலத்தை இன்றைய வகுப்பறையில் செதுக்குபவர்கள் ஆசிரியர்கள் அவர்கள் தங்கள் பணியின் அவசியத்தை உணர்ந்தால் போதும் நாளைய இந்தியா வளமானதாக இருக்கும.
நூல் அறிமுகம் எழுதியவர் :
வ.பெரியசாமி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.