என்னைத் தொடாதே (Ennai Thodathe) – நூல் அறிமுகம்
இன்றைய காலகட்டத்தில் பதின்பருவக் குழந்தைகளுக்கெனப் பிரத்தியேகமாகக் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், குறுநாவல்கள் எனப் பலவடிவங்களில், அதுவும் குறிப்பாகத் தமிழில் வெளிவந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று.
இந்நூலின் ஆசிரியர் பூங்கொடி பாலமுருகன், பதின்பருவக் குழந்தைகளை மையப்படுத்தி எழுதிய இரண்டாவது நூல் இதுவென்று நினைக்கிறேன். ஏற்கெனவே, ‘வாங்க பேசலாம்’ என்ற நூல் பதின்பருவக் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களை, சிக்கல்களை, சங்கடங்களை மிக அழகாகக் கதைவடிவில் தந்து இளம் வாசிப்பாளர்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தார்.
அடுத்து, ’என்னைத் தொடாதே’ என்ற இந்த இளையோருக்கான நாவல். மிகப்பெரிய பாய்ச்சலோடு ஆண்குழந்தைகளும், பெண்குழந்தைகளும், மனதளவிலும், உடலளவிலும் எதிர்கொண்ட அல்லது எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை உளவியல் ரீதியாக அணுகியிருக்கிறார். அதற்குத் தீர்வும் தந்திருக்கிறார்.
ஒரு பதின்பருவக் குழந்தைகளின் மீது ஏவப்படும் வன்முறையான விசயத்தை எழுத்து மூலம் காட்சிப்படுத்துவது என்பது சற்றே சவாலான விசயம்தான். அதையும் எந்தவித வக்கிரமும் இல்லாமல், ஆபாசமும் இல்லாமல், வாசிப்பவர்களின் மனம் பதைபதைக்கும்படிக் கதையை நகர்த்தியிருக்கிறார். இந்தத் தெளிவான நடைக்காகவே இந்நாவல் நிச்சயம் பல விருதுகளைப் பெறும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
நாவலின் மையக்கருவைத் தொட்டுக்காட்டும் அட்டைப்படம், நேர்த்தியான வடிவமைப்பு, கண்களை உறுத்தாத பெரிய எழுத்துக்கள், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்புமுனைகளைக் கொண்ட அத்தியாயங்கள் என்று எல்லாச் சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கிறது இந்நாவல். அத்தியாயத்திற்கு அத்தியாயம், வலிந்து திணிக்கப்பட்டது போன்று வரையப்பட்ட ஓவியங்களில் சற்றே கவனம் செலுத்தியிருக்கலாம். செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் வரையப்பட்டிருக்கும், சிறுமியின் படம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பொறுத்தப்பாடற்றுக் காணப்படுகிறது.
இன்றைய பெரும்பாலானப் பதின்பருவக் குழந்தைகள் அதிநவீனத் தொழில்நுட்பங்களை மிக எளிதாகக் கையாள்வதில் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள். பன்முகத் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் குழந்தைகள் பொதுவெளியில் எந்தவித சங்கடமும் இல்லாமல் தங்களது திறமைகளை வெளிப்படுத்திப் பாராட்டுதல்களைப் பெறுகிறார்கள்.
இதற்கு முக்கியக் காரணங்களாகப் பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், சகவயதொத்த நண்பர்கள் என்று எல்லோரையும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அவர்கள் தங்கள் பதின்பருவ வயதில், போகிறபோக்கில் மனதளவிலும், உடலளவிலும் எதிர்கொள்ளும் வன்முறையால், அவர்கள் எப்படியெல்லாம் மனம் துவண்டு ’எனக்கு ஏன் இப்படி நடந்தது?’ என்று அவர்கள் கேட்கும் கேள்விகளைப் புரிந்துகொள்ளமுடியாமல் தடுமாறுபவர்களுக்கு இந்நூல் நிச்சயம் ஒரு தீர்வைத் தரும்.
வெறும் சம்பவங்களை மட்டுமே விவரித்துச் செல்லாமல், ஒரு சிறுமியின் எதார்த்தமான மனநிலையை, தன்னுடன் பயிலும் குழந்தைகள் காட்டும் பரிவை, ஒரு சிறுவன் எதிர்கொண்ட வன்கொடுமையை, அவர்கள் மூலமாகவே வெளிப்படவைத்து, அதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காதவாறு தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்ற ஆலோசனை மற்றும் அறிவுரைகளைக் கதைசொல்லிக் கதாப்பாத்திரங்களைக் கொண்டு கையாண்டிருப்பது புதிய யுக்தி என்றுதான் சொல்லவேண்டும்.
இந்தக் கதை முழுக்க முழுக்க பிடோபிலியா (Pedophilia) என்னும் மனநோய் ஆட்கொண்ட மனிதமனத்தைப் பற்றியது. பிடோபிலியா என்றால், குறிப்பாகச் சிறுவயது சிறுமியர் அல்லது சிறுவர்களுடன் பாலியல் வேட்கைகொண்டு தங்களது வலையில் வீழ்த்தும் வக்கிர எண்ணம் கொண்ட மனிதர்களுக்கான மனநோய் என்று வைத்துக்கொள்ளலாம். அவர்கள் மிகச்சாதாரண மனிதர்களைப் போல எல்லோர் மத்தியிலும் சர்வசாதாரணமாக உலாவகிறார்கள் என்பதுதான் இங்கே நகைமுரண்.
இவர்களைப் பெரியவர்களே அடையாளம் காண்பது என்பது சவாலான விசயம்தான். பிடோபிலியா ஒரு மனநோய்க்கான அறிகுறியாக இருப்பினும் எந்தவித சமரசமும் இல்லாமல் குற்றச்செயலாகக் கருதி, காவல்துறைக்குப் புகார் அளிப்பது மிக மிக அவசியம்.
இதுபோன்ற மனிதர்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் தீவிரமான மன அழுத்தம், பயம், குற்ற உணர்வு கொள்கிறார்கள். எதிர்கால உறவுகளிலும், நெருக்கமான தொடர்புகளிலும் தன்னம்பிக்கைக் குறைந்து வாழும் நிலை ஏற்படுவதாக மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தற்போது, பெற்றோர்களும், பள்ளியாசிரியர்களும், சமூக அமைப்புகளும் தங்களைச் சுற்றியுள்ள குழந்தைகளுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்வது முக்கியக் கடமையாகிவிட்டது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க முடியும் என்றபோதும், அவர்களது செயல்களைச் சமரசம் செய்ய முயற்சிப்பதோ அல்லது பாதுகாக்க முயற்சிப்பதோ குற்றச்செயல் என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியம். சமூக விழிப்புணர்வு மூலமும், சட்டக்கட்டுப்பாடுகள் மூலமுமே இதை எதிர்க்கமுடியும்.
சில குழந்தைகள் அறியாமையினாலும், இணையம், சமூக ஊடகங்கள், ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலமும் இந்த நோய் கொண்டவர்கள் குழந்தைகளை வசிகரித்துத் தங்கள் வலைக்குள் சிக்கவைக்கிறார்கள்.
மிகவும் பழக்கப்பட்ட நபர், அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்குப்பவர் தங்களுக்கான இரையை, அக்குழந்தையின் பெற்றோர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தியோ, பெற்றோர்கள் கவனிக்காத நிலையிலோ அல்லது வீட்டில் தனியே இருக்கும் பாதுகாப்பற்ற சூழலிலோ அவர்களை வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள்.
பிடோபிலியா ஒரு மோசமான சமூகப்பிரச்சனையாக உருவெடுத்துவருவதால், உண்மையான அன்புகாட்டும் பெரியவர்களையும் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவந்து நிறுத்திப் பார்ப்பதும், யாரைச் சந்தேகிப்பது என்று குழப்பத்துடன் குழந்தைகளை வளர்ப்பதும் வருத்தத்திற்கு உரிய ஒன்றாக மாறிவருகிறது.
“என்னத் தொடாதே!” (இளையோர் நாவலான) இந்நூல் பலதரப்பட்ட விசயங்களைப் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், சமூகத்திற்கும் ஒரு விழிப்புணர்வைத் தர முயற்சித்திருக்கும் முதல் படி. இப்பணியைச் செவ்வனே செய்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் பூங்கொடி பாலமுருகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
நன்றி
நூலின் தகவல்கள் :
நூலின் பெயர் : என்னைத் தொடாதே!
ஆசிரியர் பெயர் : பூங்கொடி பாலமுருகன்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
பக்கங்கள் : 96
விலை : ரூ.100/-
நூல் அறிமுகம் எழுதியவர் :
வே.சங்கர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.