“எண்ணோடான இடைஞ்சல்கள்” சிறுகதை
முக நூலில் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை. எப்பொழுதாவது படித்துவிட்டு லைக் போடுவதோடு சரி. திடீரென கமெண்ட்டில் ஏதாவது எழுதுவதும் உண்டு. வாழ்த்துக்களைத் கடந்து எப்பொழுதாவது எழுதுவது சுருக்கென கண்டிப்பாக தைத்துவிடும். அதை விடுங்கள்.
ஒரு நாள் எஃப்.பி பார்த்துக்கொண்டே வரும்போது தேநீர் பதிப்பகத்தில் சி. மோகன் அவர்களின் ‘ஓநாய் குலச்சின்னம்’ அறிமுக சலுகையில் ரூ 250க்கு கிடைப்பதாக சொல்லப்பட்டிருந்தது. அவரது எழுத்து எனக்குப் பிடிக்கும். சமீபத்தில் கூட தமிழ் திசை இந்துவில் வந்த கட்டுரையில் அவரது கவிதை என்னை வெகுவாக கவர்ந்தது.யுக பாரதி அந்தக் கட்டுரையை எழுதி இருப்பார் என நினைக்கிறேன்.அதைக்கூட எனது கைபேசியில் சேமித்து வைத்திருகிறேன்.
‘பெரு நகரத்தார்சாலையில் சட்டென வீழ்ந்து./சல்லென நீந்தி./நீண்ட தோர் கட்டிடத்தில் மோதி./சிறு விபத்துமின்றி மறைந்தது./ஒரு பறவையின் நிழல்.’
இதனால்தானோ என்னவோ அந்தப் புத்தகத்தை வாங்க முடிவு எடுத்து அவர்களின் கைபேசி எண்ணை மனப்பாடம் செய்தவனாக பணத்தை ஜி-பேயில் அனுப்பிவிட்டேன். அந்தக் கைபேசி எண்ணை நான் எனது கைபேசியில் சேமித்து விட்டு, எனது முகவரி, பணம் செலுத்திய பரிவர்த்தனை ஆதாரத்தையும் அவர்களுக்கு அனுப்பினேன். மேலும் ‘அன்புடையீர், வணக்கம் .தபால் செலவு குறிப்பிடவில்லை.அது எவ்வளவு தொகை என்றால் அதையும் அனுப்புகிறேன்.நன்றி’ என்று குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு என் வேலைகளுக்கு சென்றுவிட்டேன். அன்று எனக்கு அதிகமான கைபேசி அழைப்புகள் வந்தன. வேறொரு பிரச்சினை மனதினை தொந்தரவு செய்து கொண்டு இருந்தது. இதுபோன்ற சமயங்களில் நான் வேறு வேலைகள் செய்யமாட்டேன். சிலசமயம் தோன்றுவதை உடனே செய்ய வேண்டும் என்ற கொள்கை இருப்பதாலும் இதை நான் செய்து இருக்கலாம்.
ஒரு வாரம் கழித்து தமிழ் திசை இந்துவில் தேநீர் பதிப்பகம் வெளியீடான யூமாவாசுகி அவர்களின் ‘குதிரை வீரன் பயணம்’ இதழ் தொகுக்கப்பட்டதன் கட்டுரை வெளியாகி இருந்தது. எனக்கு அந்த இதழ் அப்போது வரும்போதே மிகவும் பிடிக்கும். அதன் அளவும் அது வடிவமைக்கப்பட்ட நேர்த்தியும் அதன் படைப்புகளும் தனித்துவமாக இருக்கும். நண்பர் மணிவண்ணனின் நண்பர் யூமா வாசுகி அவர்கள். மணி மூலமாக ஒரு சில இதழ்களை நான் வாசித்தும் இருக்கிறேன். அந்த இதழ்களை அப்படியே அதே மாதிரியாக தொகுத்து புத்தகமாக்கி இருக்கலாம் என நினைத்தேன். வணிக ரீதியாக அதற்கான சாத்தியங்கள் குறைவாக இருக்கலாம்.
நான் அலுவலகத்தில் இருந்ததால் இந்து நாளிதழ் வீட்டில் இருப்பதை பார்க்க முடியாமல் போனது. மனைவிக்கு போன் செய்து அதைப் பார்த்து தொகையை சொல் என்று கேட்க முடியாது. அந்த நாளிதழ்களை எங்கு எப்படி வைத்திருக்கிறேன் என்று ஞாபகம் இல்லை. அவர்தான் அவைகளை அடுக்கி வைத்து இருப்பார். அவரிடம் பேப்பரைத் தேடி அதில் அந்தக் கட்டுரையைப் படிக்கச் சொல்லி அதில் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்று முடிவு எடுப்பது எனக்கு சிரமமாகப் பட்டது.
எனது கைபேசியில் பதிப்பக எண் சேமிக்கப்பட்டதால் அதற்கு போன் செய்தேன். அவர்கள் ரிங்டோனுக்கு ஹிந்தியோ வேறு ஏதோ ஒரு மொழியோ எனக்கு சரியாக கணிக்க முடியவில்லை. நான் குழம்பினேன். தமிழ் ஆர்வலராக இருப்பார்கள்.ஹிந்தி(ஹிந்தி என்றே வைத்துக் கொள்வோம். தெலுங்கு,கன்னடம்,மலையாளம் இல்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.) ஹிந்தியிலா ரிங் டோன் வைத்து இருப்பார்கள். உலக இலக்கியம் உள்ளூர் இலக்கியம் என்று ஒவ்வொருவரும் ஒரு கொள்கையில் இருப்பார்கள். நமக்கு அந்த வம்புகள் ஆகாது என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே போனை எடுத்துவிட்டார்கள்.
“சார். தேநீர் பதிப்பகங்களா. குதிரை வீரன் பயணம் தொகுப்புகள் எவ்வளவு சார்.”
“….. ”
அந்த வயதானவர் பேசியது எனக்குப் புரியவில்லை. பணத்தைத் தவறாக அனுப்பியது அப்போதுதான் புரிந்தது. மறுபடியும் அவருக்கு போன் செய்து பேசினேன். ‘ தவறுதலாக உங்களுக்கு பணம் அனுப்பிவிட்டேன். அதை எனக்கு திருப்பி அனுப்பி விடுங்கள்’ என்று ஆங்கிலத்தில் கேட்ட போதும் அவருக்குப் புரியவில்லை.
கூகுள் டிரான்சிலேட்டரில் ’04/02/26 அன்று உங்களுக்கு தவறாகப் பணம் அனுப்பி இருக்கிறேன். அதைத் திருப்பி அனுப்பி வையுங்கள்.’என்று ஹிந்தியில் மொழி மாற்றி அந்த வயதானவருக்கு அனுப்பினேன்.
என் வாழ்க்கையில் எண்களோடு எனக்கு ஏதாவது சிக்கல் இருந்து கொண்டே இருக்கிறது.
அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். பொதுத் தேர்வு வெளியூர் சென்று எழுத வேண்டும். எங்களது கணித ஆசிரியர் மகன் ஆறாம் வகுப்பிலிருந்து என்னுடன் படிக்கிறான். அவன் பெயர் சுந்தரம். அவன் சுமாராகத்தான் படிப்பான். கணக்கு அவனுக்கு சுத்தமாக புரியவே புரியாது.
எங்களுக்கு கணிதம் எடுக்கும் அவன் அப்பாவிடம் நாங்கள் டியூசன் படித்தோம். உண்மையிலேயே சிறப்பாக கணக்கு எடுப்பார். மனுஷன் ஹோம் வொர்க் போடலைன்னா. பென்சிலை ஆட்காட்டி விரலுக்கும் பெரிய விரலுக்கும் இடையில் வைத்து முறுக்குவார் பாருங்க. உயிரேப் போகும். நான் முதல் மார்க் வாங்கக் கூடியவன் என்பதால் நான் அந்தத் தண்டனையை அனுபவித்ததில்லை. பல பேருக்கு தோல் பழுத்து வெந்து தழும்பாகிவிடும்.
எங்கள் பள்ளியில் ஆறாவது அட்மிஷன் போடும் வரிசை அடிப்படையில் பெயர்கள் அட்டெண்டன்ஸில் இருக்கும். இப்போது போல சிஸ்டம் எல்லாம் அப்போது கிடையாது. ஆறாம் வகுப்பிலிருந்து அப்படியே மாணவர்கள் தேர்ச்சி அடிப்படையில் பத்தாம் வகுப்பு வரை வருகைப் பதிவேட்டில் இருக்கும்.
மேத்ஸ் சார் தனது மகன் தேர்ச்சி பெற வேண்டும் என்று அல்பப்பெட்டிக்கலாக பெயரை வரிசைப் படுத்துகிறேன் என்று எனது பெயருக்கு பின்னால் சுந்தரைக் கொண்டு வந்துவிட்டார். அப்படிப் பார்த்தாலும் இடையில் இரண்டு பேருக்குப் பிறகு தான் அவன் வரவேண்டும். கே. கே சார் துணை ஹெச். எம் என்பதால் யாரும் எதுவும் சொல்ல முடியாது. ஹெச். எம் கோபாலகிருஷ்ணனோ, சத்தியநாரயணனோ சரியாக நினைவுக்கு வரவில்லை. அவர் கே. கே சார் சொல்வதைத்தான் செய்வார்.
ஆனால் அந்த ஹெட் மாஸ்டர் செய்ததே வேறு. ஒரு நாள் என்னை அழைத்து ‘ஸ்டாப் எல்லாரும் கே. கே சார் மேல கோவமாக இருக்காங்க. அவர் அவரோட மகனுக்காக வருகைப் பதிவேடு வரிசை மாற்றி இருக்கிறார். உனக்கு இதுல இஷ்டம் இல்லைன்னு சொல்லிவிடு ‘ என்றார். அதோடு அவர் கையில் பழைய லிஸ்ட்டை வைத்து இருந்தார். அதை என்னிடம் பார்க்கச் சொன்னார். என் வரிசை எண்ணை நான் மனப்பாடம் செய்து கொண்டேன். புதிய எண்ணும் பழைய எண்ணும் என்னை பயம் கொள்ள வைத்தது.
நான் எப்படி இதை கே.கே சாரிடம் சொல்ல முடியும்.
பள்ளியின் காலை ப்ரேயரில் எஸ். பி. எல் தான் ஹெச் எம் பக்கத்தில் நின்று மிலிட்டரியில் நடந்து சென்று சல்யூட் அடிப்பது வழக்கம். சல்யூட்டிற்குப் பிறகு அன்றைக்கான ஏதாவது செய்திகள் இருந்தால் சொல்ல வேண்டும். குறல் என்று சொன்னதும் ஹெட் மாஸ்டருக்கு இடது பக்கம் இருப்பவன் குறல் சொல்ல வேண்டும். மொத்த பள்ளியும் தேசியக் கொடி கம்பத்தைச் சுற்றி நிற்க இந்த நிகழ்ச்சி தினம் அரை மணி நேரம் நடக்கும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றுவது இருக்கும். மாலை கொடி இறக்கி சல்யூட்டுடன் பத்து நிமிடங்களில் முடிந்துவிடும். ஏதாவது பள்ளியில் பிரச்சினை என்றால் பிரேயர் டைம் கூடிவிடும்.
எஸ். பி. எல் இதுவரை எங்கள் பள்ளியில் உயரமாக முரடனாக இருக்கிறவங்கதான் இருந்திருக்கிறார்கள். நான் குள்ளமா சின்னப் பையனா இருப்பேன். என்னை எஸ்.பி.எல் என்று கே. கே சார் அறிவித்ததும் பள்ளியில் அதுதான் பேச்சாக இருந்தது. நான் முதல் மார்க் வாங்கும் மாணவன் என்பதால் இது சரியான தேர்வு என்று சில ஆசிரியர்கள் சொன்னார்கள். எஸ்.பி.எல் கனவில் இருந்த பலர் என்னை முறைத்துக் கொண்டு இருந்தார்கள். நான் பெரிய குடும்பத்துப் பையன் என்பதால் என்னை முறைப்பதோடு விட்டுவிட்டார்கள். எல்லோரிடம் நான் நெருங்கிப் பழகுவதால் ஒரு வாரத்தில் அவர்களும் என்னோடு சகஜமாகிவிட்டார்கள்.
நான் எப்படி கே. கே. சாரிடம் சொல்றதுன்னு குழப்பமாக இருந்தேன். அடுத்த முறை ஹெச். எம் கூப்பிட்டபோது நான் அழுதுகொண்டே ‘வீட்டிலிருந்து ஆள் அழைச்சுக்கிட்டு வர்றேன். அவுங்க கிட்ட சொல்லுங்க. ‘ என்றேன். அதன் பிறகு ஹெச். எம் அதை எப்படி சமாளித்தார் என்று எனக்கு தெரியாது. நான் பல மாதங்கள் இரண்டு வரிசை எண்களையும் மனப்பாடமாக வைத்து இருந்தேன். முழு ஆண்டு தேர்வுக்கு லிஸ்ட் அனுப்பிவிட்டதாக பள்ளியில் பேசிக் கொண்ட பிறகு தான் எனக்கு மனம் சமாதானம் ஆனது. பத்தாம் வகுப்பில் நான் முதல் மார்க் வாங்கினேன். சுந்தரும் பாஸாகிவிட்டான். அவனிடம் கூட நான் இந்த விசயத்தை சொன்னதில்லை. இனி நினைத்தாலும் சொல்ல முடியாது. மூன்று வருடங்களுக்கு முன்பு புடலங்காய் கூட்டு சாப்பிட்டதில் குடும்பமே வாந்தி மயக்கம் வந்து மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைப் பெற்றும் அவனும் அவன் அம்மாவும் இறந்துபோனார்கள்.அவன் மனைவி பசங்க இரண்டு பேர் கே கே. சார் மட்டும் பிழைத்துக் கொண்டார்கள். சென்னை செய்தித்தாள்களில் செய்தி வந்ததாக அவன் பிரண்ட் கோதண்டம் சொன்னார்.
புடலங்காயில் பாம்பு விசம் இருக்குமாம். அதன் விஷம்தான் அவர்கள் இறக்க காரணம் என்று மருத்துவமனையில் சொன்னார்களாம். அதனால் தான் புடலங்காய் சமைப்பதற்கு முன் மஞ்சள் தூள் போட்டு ஊற வைப்பார்களாம்.சுந்தரம் இறந்ததிலிருந்து நான் புடலங்காய் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன்.
தேநீர் பதிப்பகத்திற்கு பணம் போகாததால் 80க்குப் பதிலாக 50போட்டததால்தான் இந்த பிரச்சனை என நினைத்து அவர்களுக்கு இரண்டு முறை தொடர்பு கொண்டேன். அவர்களின் போன் எங்கேஜ்டாக இருந்தது. இப்போது எனக்குத் தேவையான அந்தப் புத்தகங்களின் பெயர்களை எழுதி நான்கிற்கும் விலை எவ்வளவு என்று கேட்டு வாட்ஸ் ஆப் செய்து இருந்தேன். கொஞ்சம் நேரத்தில் குதிரை வீரன் தொகுப்பு மூன்றும் 1010 என்றும் ஓநாய் குலச் சின்னம் புத்தகத்துடன் 1260 என்று அவர்களிடமிருந்து பதில் வந்தது. தபால் செலவு சேர்த்து சொல்லவும் என்றேன். ‘தபால் செலவு இல்லை’ என்று பதிலிட்டார்கள்.
இப்போது மிகவும் கவனமாக பணத்தை அவர்களுக்கு அனுப்ப வேண்டும். இந்த சமயம் பார்த்து எவரும் போன் செய்து விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன். ஜீபேயில் தேநீர் பதிப்பக நம்பரை தேடியபோது அங்கே 250 பணம் அனுப்பப்பட்டு இருந்தது.
அப்போது சரியாக என் நண்பரின் தம்பி போன் செய்தான். எடுக்காமல் விட்டிருக்கலாம் அவன் இரண்டாவது திருமணம் செய்ய தீவிரமாக பெண் தேடிக் கொண்டு இருக்கிறான். கேரளா காசர்கோட்டில் பெண் இருப்பதாக புரோக்கர் புகைப்படம் காட்டி இருந்தார். அந்தப் புகைப்படத்தை எனக்கும் அனுப்பி இருந்தான். பெண்ணின் பெரியப்பாவுடன் மணமாக வேண்டியப் பெண் இருக்கிறாராம். அவர் தான் பெண்ணிற்காக பேசுகிறாராம். இருபத்தி ஏழு வயதுப் பெண் என்றும் கணவர் விபத்தில் இறந்துவிட்டதாகவும் சொன்னார்களாம். இரண்டு பெண்களில் ஒருவர் திருமணமாகி மங்களூரில் வசிக்கிறாராம். வீடு சொந்தமாக இருக்கிறது. வங்கியில் கடன் வாங்கியதில் அது வட்டியுடன் மூன்று லட்சம் வருகிறதாம். புரோக்கர் ஆறு பேருக்கு கமிஷன் இரண்டு லட்சம் மொத்தம் ஐந்து கேட்கிறார்கள் என்ன செய்வது என்று கேட்டான்.
“தம்பி பொண்ணு அழகா இருக்கு. இதுவரை வந்த வரன்கள்ல இவங்கதான் வயது குறைவாக இருக்காங்க. நீங்க எல்லோரும் பார்த்துட்டு வாங்க. நாம இரண்டு பேரும் தனியாக பிறகு போகலாம். அப்போ நாம் பைனல் பண்ணலாம் தம்பி. வீட்டிற்கான மூனு லட்சம் எப்படி என்ன செய்யலாம்ன்னு நான் பிறகு சொல்றேன். இப்போது போயி பார்த்துட்டு வாங்க” என்றேன்.
“கேரளா பொண்ணு சரியா வராது மைய் மாயம் பண்ணிருவாங்கன்னு எங்க அக்கா மக சொல்லுதுண்ணே.”
“உனக்கு புடிக்கிதோ.புடிக்கலையோ. முதல்லப் போய் பார்த்துட்டு வா. அங்கேப் போகாம இருந்தே. அந்தப் பொண்ணைப் பார்த்திருந்தா வாழ்க்கை எனக்கு சிறப்பா மாறி இருக்கும்ன்னு சொல்ற ஆளு நீ. ”
“நீங்கள் சொல்றதும் சரிதாண்ணே. இருபதாயிரம் முப்பதாயிரம்ன்னு செலவாயிரும்ன்னு யோசனையா இருக்குண்ணே.”
“செலவைப் பத்தி நீ பேசாத. ஹெரன்யா ஆபரேஷன் பண்ணி வந்தவுடன்னே எனக்கு பசிக்கும் மூனு தோசை வாங்கி வையுங்கள் என்று என்னைய வாங்கி வைக்கச் சொல்லிட்டு வீட்டிலிருந்து சாதத்தை(சோறு சாப்பிடம்ன்னு தோன்றினால் தேவைப்படுமாம்)எடுத்து வந்து பேக்ல வச்சிருந்ததவன்தானடா நீ.”
பயங்கரமாக சிரித்தான்.
“வெரிக்கோஸ் பெயின்ல அவதிப்படும் போதும் சரி இப்பவும் சரி.என் வழியிலையேப் போயி எனக்கு அந்த ஆபரேஷன் நீங்கள் செஞ்சுவிட்டீங்க. . இல்லைன்னா நான் போய் சேர்ந்திருப்பேன். அதே மாதிரி எனக்கு இந்த பொண்ணு பார்க்கிற வேலையிலும் உதவி பண்ணுங்கண்ணே. உங்களைவிட்டா எனக்கு ஆள் கிடையாது. ”
அவன் சொல்வதில் தவறில்லை. அவனுக்கு என்னைவிட்டால் ஆள் கிடையாது. அண்ணன்கள் அக்காக்கள் என்று பெரிய உறவுப் பட்டாளமே அவனுக்கு இருக்கிறது. வெளிநாட்டில் சிட்டிசனாக இருக்கிறான்.அங்கு சொந்த வீடு உள்ளது. நகரில் சொந்தமாக அப்பார்ட்மெண்ட்டும் ஊரில் சொந்தமாக வீடும் நான்கைந்து பிளாட்டும் வைத்து இருக்கிறான். அவனோடு என்னைத்தவிர எவராலும் ஒத்துப்போக முடியாது. ஆபரேஷன் முடிந்தவுடன் சாப்பிட தோசை வாங்கி வைத்திருக்கிறேன் என்றால் நான் எந்தளவிற்கு ஒத்துப்போகிறேன் என்று நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்.
“அவன்தான் பைத்தியமாயிட்டான். நீங்கள் ஏங்க தோசையை வாங்கி வச்சி இருக்கீங்க”என்று அவன் மூத்த அண்ணன் என்னைத் திட்டினார்.
” நமக்கு இது தோசைண்ணே. அவனுக்கு மருந்து. அது இருந்தாதான் அவன் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளேயேப் போவான். அதோட இன்னொரு விசயத்தையும் கேட்டுக்கங்க. நான் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே இருந்தாதான் ஆபரேஷன் பண்ணுவேங்கிறான். அதுக்கும் டாக்டர்க்கிட்டேப் பேசிட்டேன்.”
“என்னமோ பண்ணுங்க. அவனை நீங்கள் தான் காவந்து பண்ணி வச்சிருக்கீங்க. இரண்டு தடவை என் உசுரக் காப்பாத்துனீங்க” என்று அவன் மூத்த அண்ணன் அழுதார்.
அவன் கேரளா போகும் செய்தியைக் கேள்விப்பட்டு எனக்கு அவனின் மூத்த அண்ணன் போன் செய்திருந்தார். ‘அவனை நாம இப்போ அனுப்பாவிட்டால் அவன் வாழ்க்கை நாசமானதுக்கு காரணம் நாமதாம்பான். பார்த்துட்டு வரட்டும் நாம நேரில் பார்த்து சரியாக வரவில்லை என்றால் ரிஜக்ட் பண்ணிடலாம்’ என்று அவரைச் சமாதானம் செய்தேன்.
அவன் புகைப்படம் அனுப்பியதும் டெலிட் எவ்வரி வேர் செய்யச் சொல்லி விட்டு அந்தப் புகைப்படம் இரண்டையும் அதற்கு முன்பாக எனது மெயிலில் சேமித்து வைத்து விட்டேன். இப்படி செய்யச் சொன்னதற்கு காரணம் இருக்கிறது. அவன் முதல் கல்யாணம் முடிவான போது எனது நண்பர் அவனது சின்ன அண்ணனுக்கும் அவர் நண்பர். அவன் இருக்கும் நாட்டில் இருந்தார். கல்யாணத்திற்கு முன்பு எப்படி மனைவியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும்போது அவன் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணை ‘அவ’ என்று செய்தி சுவாரசியத்தில் சொல்லிவிட்டார். இன்று வரை அவரிடம் அவன் பேசாமல் இருக்கிறான். நான் அவனை புகைப்படத்தை டெலிட் செய்யச் சொன்னது சரிதானே.
ஐந்து வருடங்களில் எனக்கு செலவுக்கு என்று ஐந்தாயிரம் வீதம் அறுபது ஆயிரம் அனுப்பியதை ஒரு முறை அவன் சொல்லிக்காட்டிவிட. நான் கடுப்பாகி எனது மனைவி நகையை அடகு வைத்து அவன் மூத்த அண்ணனிடம் அவனுக்கு அவன் அதிராம்பட்டினம் நண்பன் கொடுக்க வேண்டியது என கொடுத்துவிட்டேன். அப்பொழுது கூட நான் அவனுடன் பேசிக்கொண்டு தான் இருந்தான். அதன் பிறகு ஒரு பிரச்சினையில் நான்கு வருடங்கள் பேசாமல் இருந்துவிட்டு இந்த முறை இந்தியா வந்த போது தான் அவன் மேல் இரக்கப்பட்டு நானே பேசினேன்.
அவனுடைய வாழ்க்கையை வாய்ப்புகள் அமைந்தால் நாவலாக எழுத வேண்டும். அதில் அநேக பைத்தியக்காரத் தனங்கள் இருக்கும். அறுவருக்கத்தக்க குணங்கள் அதிகம் அவனிடம் இருந்தாலும் அறக்குணங்களும் சொற்பமாக உண்டு.
“சொல்லுப்பா.”
“வேலையாவா இருக்கீங்கண்ணே.”
அவசரமாக பணம் அனுப்ப வேண்டும் என்று சொல்லலாம் அவன் கல்யாணத்தில் நான் ஆர்வம் காட்டவில்லை என்று நினைப்பான்.
“இல்லை சொல்லுப்பா. ”
“காசர்கோடு போனோம்ண்ணே. நான் உங்களை மூனாந்தேதி வரச் சொன்னேன். நீங்கள் எட்டாம் தேதி வந்திருக்கீங்க. வீடு ஏலத்துக்கு போயிட்டுன்னு சொன்னான். என் கூட வந்த புரோக்கர் ’08/02/26 அன்று வரவும்’ என்று போட்ட மெசேஜ் இருக்கேன்னு சொன்னார். அது 3ன்னுதான் போட்டேன். 8 எனக்கு கண்ணுல கிளியராக தெரியலைங்கிறான். நீங்கள் மங்களூர் வாங்க நாங்க அங்க வந்துட்டோம்ங்கிறான். கார்ல மங்களூர் போனா வீட்டு அட்ரஸ் கொடுக்காம. மால் ஒண்ணுக்கு வாங்க அப்படின்னான்.”
என் அலுவலக ரிசப்சனிஷ்ட் கீர்த்தனா கதவிற்கு முன்னாள் நின்றார். அவரைப் பிறகு வரச் சொல்லிவிட்டு.
“சொல்லுங்க தம்பி. ” என்றேன்.
“மாலுக்கு அவளை அழச்சுக்கிட்டு வந்தான். அவ கிட்ட என்ன கேட்டாலும் அவ அவனையேப் பார்க்கிறா. அவன் மூனு லட்சம் பணம் குடுங்கங்கிறான். கூட வந்தவர்கள் அவனைத் திட்ட ஆரம்பிக்க. அவளைக் கூட்டிக்கிட்டு ஓடிட்டாண்ணே.”
“புரோக்கர் என்ன சொன்னாங்க. ”
“போலீஸ்ல கம்ளைண்ட் பண்ணுவோம்ன்னாங்க. மொழி தெரியாத ஊரில் நாம்மல உட்கார வச்சிருவாங்க. நான் இன்னும் பத்து நாளில் வெளிநாடு கிளம்பனும்ன்னு எல்லாரையும் அழச்சுக்கிட்டு வந்துட்டேண்ணே. முப்பதாயிரம் ரூபாய் செலவாச்சுண்ணே. ”
“செலவை விடுப்பா. இந்த லெவலோடப் போனதே. அதுக்கு சந்தோசப்படு.”
“இந்த தடவையும் தோத்துதாண்ணே ஊருக்குப் போறேன். ”
“அப்படி எல்லாம் சொல்லாத. இந்த முறை பெண் கிடைக்கலைன்னா, கிடைக்காததுலதான் நன்மை இருக்குன்னு நினைச்சுக்கப்பா.”
“அப்படியாண்ணே சொல்றீங்க. அந்த தா……… ழி அஞ்சி மூணு எட்டு ன்னு அலையவிட்டுட்டாண்ணே. ”
“விடுங்க தம்பி விளம்பரம் போட்டு நான் செலக்ட் பண்ணித் தர்றேன்.”
“அந்த ஒத்த நம்பிக்கையிலதான் நான் இருக்கேன் அண்ணே.. ”
அவன் போனை வைத்ததும் தான் தேநீர் பதிப்பகத்திற்கு பணம் அனுப்ப வேண்டியது நினைக்கு வந்தது. ஜிபேயை ஓபன் செய்தால் தேநீர் பதிப்பகத்திற்கு நான் 250 பணம் அனுப்பி இருக்கிறேன். ஆனால் விவரங்கள் யாவையும் 50என மாற்றிப்போட்ட பதிவு செய்த தவறான எண்ணிற்கு அனுப்பி இருக்கிறேன்.
முதலில் தேநீர் பதிப்பகம் என்று முன்பு பதிவு செய்ததை ராங்க் நம்பர் என பெயர் மாற்றிவிட்டு. அந்த வாட்ஸ்அப் சாட்டை ஸ்கிரீன் சாட் எடுத்தேன். தேநீர் பதிப்பகத்திற்கு 1010 ரூபாய் பணத்தை அனுப்பிவிட்டு ஸ்கிரீன் ஷாட்டையும் நடந்த விவரங்களை செய்தியாக அனுப்பினேன்.
‘காலையில் நான் தவறாக முகவரி அனுப்பிய நம்பருக்கு பேசியபோதுதான். அது ஹிந்திக்காரர் என்பது தெரிந்தது.அவருக்கு இங்கிலீஷ் தெரியவில்லை.எனக்கு ஹிந்தி தெரியவில்லை.பேமென்ட் தவறாக போட்டு விட்டேன் என்று தான் தமிழ் திசை இந்துவில் நம்பரைச் செக் பண்ணேன். 80க்கு பதிலாக 50 போட்டு இருக்கிறேன் என்பது புரிந்தது.
பணம் தவறாக போய்விட்டது என்று தான் உங்களிடம் நான்கு புத்தகங்களின் விலையைக் கேட்டேன்.
உங்களுக்கு பணம் அனுப்பும்போதுதான் பணம் சரியான நம்பருக்கும் போனது தெரிய வந்தது. என் மொபைலில் பதிவு செய்யும்போது தவறான நம்பரையும் ஷேவ் செய்திருக்கிறேன் என்பது புரிந்தது.
பாவம் அந்த ஹிந்திக்காரர் அவருக்கு அனுப்பிய மெஸேஜ்களை டெலிட் செய்து மன்னிப்பு கேட்க வேண்டும்.நீங்கள் மன்னிக்கவும்.தோழர். நன்றி.’
அவர்கள் ‘பணம் சரியாக வந்துவிட்டது தகவல் தான் தவறான இடத்திற்கு போய்விட்டது.’ என்று பதில் அனுப்பி இருந்தார்கள்.
ஆபீஸில் கணக்கு முடிக்கும் இரவு வசீகரிக்கும் குரலில் தவறான நம்பருக்கு கால் செய்துவிட்டேன் என்று வந்த போன் கால் பிறகு தொடராக அதே நேரத்தில் ‘வீட்டுக்கு வர்றீங்களா. ‘ என்று வந்த போன் வண்ணம் இருந்தது.
சைனாவில் செங்குடுவிலிருந்து தவறாக எனது நண்பர் அக்கவுண்ட்க்கு எட்டு மில்லியன் யுவான் பணம் போட்ட வரைத் தேடி எனது நண்பர் சென்றது என எண்களின் கதை எனக்குள் ஏராளமாக நினைவுக்கு வந்தாலும் தேநீர் பதிப்பகப் புத்தகங்கள் சரியாக வந்து சேர வேண்டும் என்ற கவலை இருந்தது.
கவலைக்கும் காரணம் இருக்கிறது. கடந்த வருடம் ஜூலை என்று தான் நினைக்கிறேன். ஒளிப்பதிவாளர் செழியன் அவர்கள் எழுதிய ‘ஆசிரியர் வந்திருந்தார்’ புத்தகம் பொள்ளாச்சி எதிர் வெளியீடு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.
நான் செழியன் அவர்களின் ‘உலக சினிமா’ புத்தகத்தை விமர்சனம் செய்து எழுதிய கட்டுரை புக் டே இணைய இதழில் வெளியாகி இருந்தது. அந்த லிங்க்கை அவருக்கு மெயிலில் அனுப்பினேன். அவர் தொலைபேசி எண்ணுடன் ‘சென்னை வரும்போது போன் செய்யுங்கள் சந்திக்கலாம்.’ என்று மெயிலில் பதில் அனுப்பி இருந்தார். அதன் பிறகு எனக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு டெல்லி செல்ல வேண்டியது இருந்ததால் அவரிடம் பேச கால தாமதமாகி விட்டது. அதன் பிறகு எத்தனையோ முறை சென்னை சென்றாலும் அவருக்கு போன் பேசாதது நினைவுக்கு வரும் தயக்கத்தில் அந்த நினைவைக் கடந்துவிடுவேன்.
இதுபோன்ற சூழ்நிலையில் அவரின் ‘ஆசிரியர் வந்திருந்தார்’ புத்தகம் வெளிவரும் அறிவிப்பு வந்ததால் அதற்கு விமர்சனம் எழுதி அவருக்கு போன் பேசி விடலாம் என அந்தப் புத்தகத்தை வாங்க எதிர் வெளியீட்டிற்கு பணம் அனுப்பினேன். அவர்களும் அந்தப் புத்தகத்தை அனுப்பிவிட்டார்கள்.
வாரங்கள் கடந்தும் வராததால், அவர்களுக்கு போன் செய்தால் அனுப்பிவிட்டேன் என்றார்கள். கூரியருக்கு போன் செய்தால் டெலிவரி ஆகிவிட்டது என்று சொன்னார்கள்.
அடுத்த நாள் இரவு மறுபடியும் கூரியருக்கு போன் செய்தேன்.
“சார் எனக்கு புத்தகம் டெலிவரி ஆகவில்லை. ”
“உங்க ஏரியா எது சார்”
நான் சொன்னதும்.
“உங்கள் ஏரியா போஸ்ட் மேன் நம்பர் தருகிறேன் சார். அவர்தான் டெலிவரி செய்றேன்னு எடுத்துக்கிட்டுப்போனார்.”
“நான் அவர் வீட்டிற்கு நேர் பின்னாடி தான் சார் இருக்கேன். ”
“அவரிடமே கேளுங்கள் சார். ”
போஸ்ட் மேனுக்கு போன் செய்ததும் பதறியபடி இரவு ஒன்பது மணிக்கு பார்சலைக் கொண்டு வந்தார்.
“நீங்கள் இங்க இருக்கீங்கன்னுத் தெரியும் சார். இந்த பேரு வித்தியாசமா இருக்கா. கீழ் வீடு காலியாக இருந்ததால. அவர்களா இருக்கும்ன்னு. நான் போன் அடிச்சேன். யாரும் எடுக்கல சார். ”
“என்ன நம்பருக்கு போன் பண்ணீங்க.”
அவர் எனது போன் நம்பரில் உள்ள 6ஐ 8ஆக மாற்றிவிட்டார்.
அதன் பிறகு செழியன் அவர்களின் அந்தப் புத்தகத்தை கால் பகுதி படித்த தோடு சரி. என்னால் படிக்க ஏற்ற சூழல் இதுவரை அமையவில்லை.
பைத்தியமாக படித்து இருந்த காலம் கடந்து இப்போதான என் வேலையும் வாழ்வியல் முறையும் எப்பொழுதாவதுதான் எழுதத் தோன்றுகிறது. எப்பொழுதாவதுதான் படிக்கவும் தோன்றுகிறது. அதில்தான் நான் விரும்பும் இவைகளை செய்து கொண்டு இருக்கிறேன்.
‘தற்போது புத்தகம் கைவசம் இல்லை வெள்ளிக்கிழமை அனுப்புகிறோம்’ என்று அப்போது தேநீர் பதிப்பகத்தில் சொன்னார்கள். மேலும் ‘புத்தகம் அனுப்பி வைத்துவிட்டு தகவல் சொல்கிறேன்.’ என்றும் அவர்கள் செய்தி அனுப்பி இருந்தார்கள். இரண்டு வெள்ளிக்கிழமை கடந்துவிட்டது.பணம் விசயம் குழறுபடியானதால் அவர்களிடம் மீண்டும் பேசத் தயக்கமாக உள்ளது.
கணங்கள் தோறும் மனதைக் கவனிக்கும் எனக்கு எழுதுவது படிப்பது எரிச்சலாகத்தான் இருக்கிறது. ஆனாலும் மனம் என்னை வென்று இவைகளைச் செய்ய வைத்துவிடுகிறது.
கால தாமதத்திற்குள் காலம் என்ன கதை வைத்திருக்கிறது என்று பார்க்கலாம்.
****
📚 எழுதியவர்:
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
