நாம் வாய்கிழிய கத்தி சொல்லுவதில் இல்லை கற்றல். குழந்தைகளின்
புலன்களின் வழியே சிந்தனைத்தூண்டுவது தான் உண்மையான கற்றல்.
என்ற சொற்றொடரிலிருந்து இந்த புத்தகத்தினை உங்களுடன் என்
அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த புத்தகம் மூன்று தலைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ளது. எண்ணுணர்வு, எண்களுக்கு முன்னால், எண்ணறிவு. இப்போது உங்களுக்கு தோன்றலாம் எண் என்பதது என்ன? 1லிருந்து 10 வரை சொல்லித்தருவதுதானே என்று. ஆனால் உண்மையில் அது அல்ல என்பதை அனுவத்திலிருந்தும், தரவுகளிலிருந்தும் மெதுவாக சன்னமாக பேசும்மொழியில் இதனை விளக்கியுள்ளார் ஆசிரியர். மிக மிக அற்புதமான கணித
கற்பித்தலுக்கான வழிகாட்டி புத்தகம் இது.
முதலில் எண்களை எவ்வாறு உயிரினங்கள் புரிந்து கொள்கின்றன என்பதில் ஆரம்பித்து எண் உணர்வுகள் இயற்கையிலேயே உள்ளன என்பதை உணர்த்தி பின்னர் எண்ணுணர்வு மேம்பட என்ன செய்ய வேண்டும் என்று விளக்கியுள்ளார். அதற்காக அவர் சில கதைகளையும் செயல்பாடுகளையும் முன்வைத்துள்ளார். உண்மையிலேயே பல கணிதவியல் அறிஞர்களின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்.
நாங்கள் பள்ளியில் மாண்டிஸோரி ஆசிரியர் பயிற்சிபள்ளியில் படிக்கும் ஆசிரியர்களுக்கு இது போன்ற செயல்பாடுகளை நாங்கள் கொடுத்துள்ளோம். அவர்களும் கற்றுக்கொண்டுதான் செல்வார்கள். குறிப்பாக எண்கட்டை ( Number rod) யை பயன்படுத்துவோம். இந்த கட்டைகள் ஒன்று முதல் 10 வரையிலான உயரங்களில் இருக்கும். குறிப்பாக மூன்று என்றால் ஒன்று கட்டையை அதன் மேல் மூன்று முறை வைத்து அளந்து பார்க்கும் வகையில் இருக்கும். மற்றொன்று இரண்டு கட்டை உயரம்
கொண்ட கட்டை மற்றும் ஒன்று கட்டை இரண்டையும் வைத்தால் மூன்று
கட்டையை அடையளாம் என்ற வகையில் கணிதத்தை தொடங்குவோம். இந்த வழிமுறை தான் புலன் வழி கணிதம் தொடக்கம் என்கிறோம். இதனை வலுவூட்டும் வகையில் தான் இந்த புத்தகம் அமைந்திருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கான் அனுபவம் எங்கள் பள்ளில் உள்ளது என்றாலும் சரியான வைகையில் தொகுக்கப்படவில்லை என்பதை என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
அதை தொடர்ந்து எண்களை அறிமுகப்படுத்தவதற்கு முன்பாக பாசிகளை கொண்ட எண்களை அறிதல், எண் சொன்னவுடன் அதன் அளவு என்ன என்பதை அறிந்து கொள்ளும் பை இப்படியான பல செயல்பாடுகளை நாங்கள் செய்து பயிற்சி கொடுத்து வருகிறோம். ஆனால் ஆசிரியர் இதில் குறிப்பிட்டிருப்பது போல இரண்டு
ஆண்டிற்குள் எத்தனை எண்களை படிக்கவும் எழுதவும், பயிற்றுவிக்கிறார்களோ அதுவே சிறந்த பள்ளி என்று முத்திரை குத்துவதாலும், அவ்வாறு நாங்கள் செய்யாததாலும் எங்கள் பள்ளியின் மாணவர் சேர்க்கை என்பது கவலைக்கிடமாக இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஒரு பரிசோதனை செய்தோம்.
5 x7 =35
இதனை இரண்டு முறைகளில் சொல்லிக் கொடுத்தேன்.
1. 5+5+5+5+5+5+5=35
2. 7+7+7+7+7=35 இப்படியான செயல்பாடுகளில் இதனை செய்தால் அவர்களுக்கு ஒரு சுமையாகவே கருதப்படுகிறது. மேலும் ஆசிரியர்களிடம் விவாதம் செய்யவே பெற்றோர் வருகின்றனர். நாங்க படிக்கும் போதெல்லாம் இப்படி இல்ல என்று பேசுகிறவர்கள் தான் அதிகம்.
இங்கே ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது போல முதல் மூன்று ஆண்டுகளில் மிக
முக்கியமாக எண்ணுணர்வை ஊட்டாவிட்டால் அல்லது மேம்படுத்தாவிட்டால் கணிதம் கற்றலிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே சேய்யும்.
கடைசியல் முடிக்கும் போது அவர் சொன்ன முக்கியமான விடயம் கணித கதைகளும். பாடல்களும் மிக மிக அவசியம், அதனைவிட இருக்கும் கணிதப்பாடல்களையும் கதைகளையும் கற்றுக்கொடுப்பது அதைவிட அவசியம்.
இந்த புத்தகத்தை ஆசிரியர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும். குறிப்பாக மழலையர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மூன்று முதல் ஐந்து வயதுவரை குழந்தைகளை வைத்துள்ள பேற்றோர்கள். ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்.
கணிதம் என்பது விடை தேடுவது அல்ல பல வழிகளை தேடுவது என்பதுதான். ஒரு பிரச்சனைக்கு பல தீர்வுகள் உள்ளன என்பதனை நாம் அறிந்து கொண்டு அதன் வழி கணிதத்தை பயிற்றுவிக்க இ்ந்த நூல் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.
அன்புடன்
மொ. பாண்டியராஜன்
மதுரை
நூல் : எண்ணுணர்வும் எண்ணறிவும்
ஆசிரியர்: இரா. கோமதி
விலை: 140 ரூபாய்
பக்கங்கள்: 136.
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன் {2022ம் ஆண்டு
வெளியிடப்பட்டுள்ளது}

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

