சுற்றுச்சூழலும் பறவைகளும் (Environment and bird in india ) - முனைவர் வெ.கிருபாநந்தினி | https://bookday.in/

இந்தியாவில் சுற்றுசசூழல் மற்றும் பறவைகள்

சுற்றுச்சூழலும் பறவைகளும் – முனைவர் வெ.கிருபாநந்தினி

உலக சுற்றுச்சூழல் நாள் 2024. நாம் 52 ஆவது வருட சுற்றுச்சூழல் நாளில் உள்ளோம். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளை அறிவித்து அதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படும். அதன் படி “நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியிலிருந்து மீண்டு வருதல்” என்று இந்த வருடம் கருப்பொருளாக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் குழு அறிவித்துள்ளது. இதன் பின்னனியில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுவிட்டது, அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருதலைப் பற்றி தான் இனி யோசிக்க வேண்டும் என்பது தான்.

சுற்றுச்சூழல் என்பது நம்மைச் சுற்றியுள்ள உயிரற்ற மற்றும் உயிருள்ளவைகள் என அனைத்தும் இணைந்தது தான். நான் பறவைகள் பற்றி ஆய்வு மேற்கொள்வதால் பறவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்குமான தொடர்பு பற்றி மட்டும் இங்கு பகிர்கிறேன.

சுற்றுச்சூழலும் பறவைகளும் (Environment and bird in india ) - முனைவர் வெ.கிருபாநந்தினி | https://bookday.in/

ஏன் பறவைகள் ?

சுற்றுச்சூழல் பாதிப்பினால் உடனடியாக பாதிப்புக்குள்ளாவது பறவைகள் எனவே பறவைகள் உயிர் குறிப்பான்கள் மற்றம் எச்சரிக்கை மணிகள், என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிட்டுக் குருவியின் அழிவிற்கு செல்ஃபோன் டவர் தான் காரணம் எனத் தவறாக நினைத்துக் கொண்டிருப்பதால் உண்மைக் காரணங்களான உணவு பற்றாக்குறை, இனப்பெருக்கத்திற்கான ஓட்டு வீடுகள் மாடிகளாக மாறிப்போனதும், பூச்சிக்கொல்லிகளினாலும்தான் என்பதை கவனிக்காமல் தொழில் வளர்ச்சிக்கு எதிராக சிலர் பேசுகிறார்கள். இந்த திசை மாற்றத்தின் விளைவு சுற்றுசூழல் பாதிக்கபட்டு, பல்லுயிரினச் சமநிலை குறிப்பாக பறவைகளின் எண்ணிக்கையில் சமநிலை அற்று காணப்படுகின்றன. இது மனித-பறவைகள் மோதல் வரை நீள்கிறது.

உலளவில் கிட்டதட்ட 9,990 பறவை இனங்கள் உள்ளன என்று இன்று வரை பதிவு செய்யபட்டுள்ளன. இந்தியாவில் 1,364 பறவை இனங்கள் அதில் தமிழ்நாட்டில் மட்டும் 450 பறவையினங்கள் பதிவு செய்துள்ளனர் ஆய்வாளர்கள்.

இதில் உலகளவில் 49% பறவை இனங்கள் அழியும் நிலையில் இருந்தாலும் 6% பறவை இனங்கள் அதன் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. அதனால் இங்கு பறவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்குமான தொடர்பை பேச வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்.

அழியும் நிலையில் உள்ள பறவைகள் பெரும்பாலும் நீர் வாழ் பறவைகள் மற்றும் வேட்டையாடிப் பறவைகள். இதில் தமிழ்நாட்டில் எண்ணிக்கையில் குறைந்து வரும் நீர் வாழ் பறவையான பாம்புத்தாரா மற்றும் ஊணுண்ணியான வெண் முதுகு கழுகு ஆகிய இரண்டு பற்றியும் தெரிந்துகொள்வோம்.

சுற்றுச்சூழல் பாதிப்பினால் அழிந்து வரும் பறவைகள்

சுற்றுச்சூழலும் பறவைகளும் (Environment and bird in india ) - முனைவர் வெ.கிருபாநந்தினி | https://bookday.in/

பாம்புத்தாரா (Oriental Darter, Anhinga melanogaster)

இப்பறவை நீர் நிலைகளில் மீன்களை உண்டு வாழ்பவை. அங்கிருக்கும் மரங்களில் இனப்பெருக்கம் செய்பவை. தற்போது எண்ணிக்கையில் குறைந்து கூடியவிரைவில் அழிவிற்குள்ளாகக் கூடிய (Near Threatened) நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பொதுவாக இனப்பெருக்கத்தின் போது அதன் குஞ்சுகளுக்கு எளிதாக உணவு கிடைக்குமா? எனப் பறவைகள் சிந்தித்து செயல்படும். அதன்படி இப்பறவை உணவு, தங்குமிடம், இனப்பெருக்கம் என அனைத்திற்கும் தடைகள் அதிகரித்து வருவதால் வாழ்வதில் சிக்கல் ஏற்படுகின்றன.

இதற்கு நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, மாசடைதல் காரணமாக அங்குள்ள மொத்த சுற்றுச்சூழலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நீர்நிலைகளுக்குள் உள்ள மரங்களும், இதன் முக்கிய உணவான மீன்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.

மேலும் வேட்டையாடப்படுவதாலும் எண்ணிக்கை குறைவதால் இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 ன் படி Schedule IV ல் பட்டியலிட்டு பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் உலகளவில் மட்டுமல்லாமல் கேரளா, தமிழ்நாடு, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலுள்ள பறவைகள் சரணாலயங்களிலேயே இதன் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வெண்முதுகுக் கழுகு (White-rumped Vulture, Gyps bengalensis)

சுற்றுச்சூழலும் பறவைகளும் (Environment and bird in india ) - முனைவர் வெ.கிருபாநந்தினி | https://bookday.in/

இப்பறவை மலைப் பகுதிகளில் இறந்த விலங்குகளை உண்டு காட்டை சுத்தப்படுத்தும் சுகாதாரப் பணியாளர்களாக செயல்படுகிறது. தமிழ் நாட்டில் முதுமலை சத்தியமங்கலம், ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில் வாழ்கின்றன.

வெண்முதுகுக் கழுகளின் எண்ணிக்கை 1990 களுக்கு முன் உலகம் முழுவதும் சரியாக இருந்தது. அதன் பிறகு வேகமாக குறைந்தது. குறிப்பாக இந்தியாவில் மிக வேகமாக குறைந்தது. கிட்டதட்ட 99 % அழிந்த பின்னர் ஆபத்தான பேரவிழிற்குள்ளான (Criticaly Endangered) நிலையில் இருப்பதாக அறிவித்தனர். பல கட்ட அய்வுகளுக்கு பின் கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு 2000 ஆம் ஆண்டுகளில் கால்நடைகளுக்கு வலி நிவாரணியாக வழங்கப்படும் டைக்ளோஃபெனாக் என்ற மருந்துதான் காரணம் என கண்டறியப்பட்டது. இந்த மருந்தை கால்நடைகள் பயன்பாட்டுக்கு மட்டும் 2006 ஆம் ஆண்டு முதல் தடை செய்யபட்டுள்ளது.

மேலும் வருடத்திற்கு ஒரு முறை ஒரு முட்டை மட்டுமிட்டு இனப்பெருக்கம் செய்வதால், பூச்சிக்கொல்லிகளின் பயன்படுத்துதல், காலநிலை மாறுபாடு, காடழிப்பு, காட்டுத் தீ என பல்வேறு சுற்றுச்சூழல் மாற்றங்களினால் இந்த அளவிற்கு வேகமாக அழிந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ் நாட்டில் மட்டும் கடந்த 2 வருடங்களாக இதன் எண்ணிக்கை மீண்டு வருகிறது. பாம்பே இயற்கை வரலாற்றுக் கழகம், கோவை மாவட்டத்தில் உள்ள சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாற்று ஆய்வு மையம், அருளகம் என்ற தன்னார்வ அமைப்பு போன்ற நிறுவனங்களின் பல ஆய்வு முடிவுகளின் மூலம், இறந்த கால்நடைகளை அப்புறப்படுத்துதல், இறக்கும் வனவிலங்குகளை கழுகளுக்கு உணவாக வழிசெய்தல், விழிப்புணர்வு நிகழ்வுகள் போன்ற தொடர் செயல்பாடுகளே காரணம். இதே செயல்பாடுகள் தொடர்ந்தாலும் இன்னும் முழுமையாக மீண்டு வந்து சமநிலையை அடைய பல வருடங்கள் ஆகலாம்.

தொல்லையாக மாறிய பறவையினங்கள்

விலங்கு-மனித மோதல் பற்றி கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பறவைகளினால் மனிதர்கள் பாதிப்பு பற்றி பரவலாக பேசியிருக்க வாய்ப்பு குறைவு.

ஆம் எண்ணிக்கையில் அதிகரித்து மனிதர்களுக்கு தொல்லை அல்லது ஆபத்து எனக் கூறப்படும் பறவையினங்களும் உள்ளன. தமிழ் நாட்டில் உள்ள மொத்த பறவை இனங்களில் 25 வகை அதாவது 2 சதவிகிதம் (2%) பறவையினங்கள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. அதில் முக்கியமாக சிட்டுக் குருவி (House Sparrow), தூக்கனாங் குருவி (Baya Weavers), கிளியினங்கள் (Parakeets), மயில் (Peafowl), புறா இனங்கள் (Doves), திணைக்குருவி யினங்கள் (Munias) ஆகிய பறவையினங்கள் பயிர்களை சேதப்படுத்துவதாக ஆய்வாளர்கள் பதிவுசெய்துள்ளனர்.

இவற்றில் மக்களிடையே அதிக விவாதத்திற்குள்ளான பறவைகளான புறா மற்றும் மயில்கள் பற்றி மட்டும் இங்கு பேசுவோம்.

சுற்றுச்சூழலும் பறவைகளும் (Environment and bird in india ) - முனைவர் வெ.கிருபாநந்தினி | https://bookday.in/
மாடப் புறா

புறாக்களில் பல இனங்கள் உண்டு குறிப்பாக மாடப் புறா புறாக்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துவருகிறது. இந்த இனம் இந்தியா முழுவதும் பரவி காணப்படுகிறது. இவை தானியங்களை உண்டு வாழ்கிறது. விவசாய நிலங்களில் விதைத்த தினை, முதிர்ந்த கடுகு மற்றும் சூரியகாந்தி விதை போன்றவற்றை உண்கிறது. மேலும் நாற்றங்கால் படுக்கைளில் உள்ள முளைத்த விதைகளையும் உண்ணும் பொழுது விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். நெல் பயிர் மட்டும் கிட்டதட்ட 10 முதல் 15 % சதவிகிதம் வரை சேதமடைவதாக ஆய்வு கூறுகிறது. விவசாயிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளான பட்டாசு வெடித்தல், சப்தம் எழுப்புதல், மின்னும் காகிதங்கள், துணிகள், சி.டி கேசட்டுகளை கட்டி தொங்க விடுதல் போன்ற பல்வற்றை செயல்படுத்துகின்றனர். மேலும் புறாக்களுடன் மேலும் சில பறவையினங்கள் போட்டிக்கு வந்துவிட்டன.

அதனால தற்போது புறா நகரங்களில் நவீன கட்டிடங்களாக மாறிய மாடி வீடுகளிலும் வாழ மட்டுமில்லாமல் இனப்பெருக்கத்திற்காகவும் தகவமைத்துக் கொண்டது. இதனால் அதன் எச்சங்கள் மற்றும் இறகுகளால் சுற்றுச்சூழல் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. இந்த செயல் பல வகைகளில் மக்களுக்கு இடையூறாக இருந்த போது ஆங்காங்கே பேசி வந்ததை தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளபட்டன. அதன் அடிப்படையில் இவற்றை Pest என அறிவித்தனர் விஞ்ஞானிகள்.

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தொடர்ந்து மனிதர்களுக்கு மூச்சுத் தின்றல், நுரையீரல் பாதிப்பு என பல உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படுகின்றன என உலகம் முழுவதும் பல ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை மீனா அவர்களின் கணவர் இறப்பிற்கு அவர்கள் வீட்டிற்கு அருகிலிருந்த புறாக்களின் எச்சமும், இறகும் காரணம் என பல மருத்துவர்கள் சமூகவளைதளங்களில் பேசினார்கள். இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வீடுகளில் புறாக்கள் வருவதை தடுப்பதற்காகவே பால்கனிகளில் வலைகள், வலையுடன் கூடிய முன் கதவு என பலவற்றை பயன்படுத்துகின்றனர்.

இவை ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் நேர் எதிராக இந்தியாவின் வட மாநிலங்களில் முக்கிய சாலைகள் சந்திப்பு, தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரை போன்ற பகுதிகளில் பொதுமக்களே உணவளிக்கின்றனர். இதனால் புறாக்களுக்கு உணவு தேடும் சிரமம் இல்லாமல் எளிதாக உணவை உண்டு வாழ்கிறது. தானியங்களைத் தூவி உணவளிப்பது போல ரீல்சு பதிவேற்றுவதால் அனைவரிடமும் இந்த ஆர்வம் தொற்றிக்கொள்கிறது. புறாக்களின் எண்ணிக்கையுடன், தொல்லைகளும் சேர்ந்தே அதிகரிக்கின்றன.

மயில்

அடுத்து, மயில் முருகனின் வாகனம், மயில்களுக்கு உணவளிப்பது போன்ற நாடகங்ளோடு முடிந்துவிடுகிறது நமது தேசப்பக்தியும், இயற்கை மீதான அக்கரையும். அதே மயில்களை நஞ்சிட்டு கொல்லும் பொழுதோ, அச்செய்தியை செய்தித் தாள்களில் படிக்கும் பொழுதோ நமது தேசப் பறவை என்றோ கடவுள் என்றோ யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

மயில் காடுகள் மற்றும் வயல் பகுதிகளில் வாழ்பவை. இது தானியங்கள், புழு, பூச்சிகள், ஊர்வன என அனைத்தையும் உணவாக உட்கொள்ளும். மயில் புதர்களில் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை.

மயிலின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதாகவும் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவதாகவும் பேசுகிறோம். உணவுச் சங்கிலியில் மயிலுக்கு அடுத்தபடியாக இருப்பவை அதன் முட்டைகள் மற்றும் குஞ்சுகளை உண்ணும் தரை வாழ் உயிரினங்களான புதர்களில் வாழும் உடும்பு, கீரி, பாம்புகள், குள்ளநரி.

விளை நிலங்கள், காடுகளுக்கு அருகில உள்ள நிலங்களில் வீடுகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் என அனைத்தும் வந்த பிறகு வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க மதில் சுவர்கள், கம்பி வேலிகள், மின்சார வேலிகள் என அமைத்தனர். இதன் விளைவாக புதர் காடுகள் அழிந்தது, அதன் தொடர்ச்சியாக புதர்ச்செடிகளை நம்பி வாழ்ந்து வந்த தரை வாழ்விகளின் எண்ணிக்கைகளும் குறைந்து போனதால் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

சுற்றுச்சூழலும் பறவைகளும் (Environment and bird in india ) - முனைவர் வெ.கிருபாநந்தினி | https://bookday.in/

திருவாரூர் மாவட்டத்தில் எனது கள ஆய்வின் போது மக்களிடம் உரையாடியதில் “பயிர்கள் உண்பதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இது உண்பது போக மீதமிருந்தால் நாங்கள் சமாளித்துக்கொள்வோம். ஆனால் உண்ண வரும்பொழுது வயல்களில் விளைந்த பயிர்களை மிதித்து வீன் செய்வது யாருக்குமே பயனில்லாமல் செய்துவிடுகிறது“ என்று வருத்ததுத்துடன் பதிவு செய்தனர். இதனால் குறைந்த நிலம் வைத்துள்ளவர்களும், குத்தகைக்கு வேலை செய்பவர்களும் அதிக பொருளாதாரச் சிக்கலுக்கு உள்ளாகும் பொழுது சிலர் இம்மாதிரி விஷம் வைத்து கொல்கின்றனர்” என்றும் பதிவுசெய்தார்கள்.

காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி மயில்களை கொல்வது தண்டணைக்குரிய குற்றம். ஆனாலும் அதன் இறப்பும் தொடர்கிறது, எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சில பகுதிகளில் இதுபோன்று நடப்பதால் ஒரு சிலர் இதைப் பயன்படுத்தி சொத்து தகராறு காரணமாக மயில்களைக் கொன்று அருகில் உள்ள நிலத்தில் வீசப்படுவதும் நடக்கிறது.

சுற்றுச்சூழலும் பறவைகளும் (Environment and bird in india ) - முனைவர் வெ.கிருபாநந்தினி | https://bookday.in/

மேற்கண்ட உதாரணமான 4 பறவையினங்களின் எண்ணிக்கை சமநிலையற்று போனதற்கும் அதன் விளைவுகளுக்கும் காரணம் சுற்றுச்சூழல் பாதிப்பு. ஆந்திர மாநிலத்தில் கள ஆய்வின் போது ரோஜா தோட்டத்தின் உரிமையாளரிடம் விசாரித்த பொழுது அவர் பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதில்லை என்று சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. ஏன் என்று கேட்ட பொழுது அதிர்ச்சி நீங்கி குற்ற உணர்வு மேலோங்கியது காரணம் பூச்சிக்கொல்லி துர்நாற்றத்தாலும், அதன் வண்ணங்கள் மலிந்துவிடவதாலும் பூக்களை வாங்குவது குறைந்து வருவதால் தற்போது செடியில் பூச்சிக்கொல்லி அடிப்பதில்லை என்ற தகவல் அதிர்ச்சியாகவே இருந்தது.

நமது வயிற்றுக்குள் சென்று பல உடல் கோளராருகளை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை ஆனால் அலங்காரத்துக்கு பயன்படும் பூக்களுக்கு பிரச்சனைகள் வரக்கூடாது என்று நினைப்பது என்ன மாதிரியான மனநிலை?

தீர்வுகள் இதற்கெல்லாம் உடனடியான விடையோ, தீர்வு எதுவும் இல்லை!

காலநிலை மாற்றத்திற்கு காரணமான கார்பனை உள்வாங்கி பாதிப்பை குறைக்கும் காடுகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கு பறவைகளுக்கு இருக்கும் நிலையிலும் அதன் மீதான அக்கரை மிகக் குறைவாகவே உள்ளது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அனைத்து நிலங்களையும் தொடர்ந்து கண்கானித்தல்.

அழிந்துவரும் உயிரினங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் சேர்த்து எண்ணிக்கையில் அதிகரிக்கும் பறவைகளையும் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்துதல்.

ஆய்வுகளில் அப்பகுதி மக்களையும் (மலை வாழ் மக்கள், பழங்குடியினர், விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள்) இணைத்து சிந்தித்தல். இம்முயற்சி அனைவருக்குமான திட்டங்களை செயல்படுத்துதல், பிரச்சனைகளின் ஆரம்பத்திலேயே கண்டறிந்து தீர்வு காணுதல் போன்றவற்றிற்கு உதவும்.

சில நேரங்களில் பறவை ஆராய்ச்சியாளர் என்ற அறிமுகப்படுத்தும் பொழுதோ அல்லது அசைவ உணவு உண்ணும் பொழுதோ என்னிடம் கேற்கும் கேள்வி நீங்க சிக்கன் சாப்பிட மாட்டீங்களா?; பறவை ஆராய்ச்சியாளர் எப்படி சிக்கன் எல்லாம் உண்கிறீர்கள்? இது வேற டிபார்ட்மென்ட், அது வேற டிபார்ட்மென்ட் என்று சூழல் காரணமாக நகைச்சுவை பதிலுடன் கடந்தாலும் இன்னும் இவை பற்றிய புரிதல் இல்லை என்பதையே இந்தக் கேள்விகள் உணர்த்துகின்றன.
அதனால் குழந்தைகளுக்கு பல்லுயிரினம், பல்லுயிரனச் சமநிலைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது அவசியம். இயற்கை கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வின் முக்கியத்துவம் அவை இரண்டையும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே வகுப்பறை பாடமாக மட்டுமல்லாமல் களத்திற்கு அழைத்து சென்று சுற்றுச்சூழலை பறவைகளை நேரடியாக கவனிக்க வைத்து அதன் முக்கியத்தவத்தை கற்றுத்தருவது மட்டுமே எதிர்காலத்தில் தலைமுறையினரை காப்பாற்றும்.
மனித உரிமைகளும் சுற்றுச்சூழலும் பின்னிப் பிணைந்துள்ளன; பாதுகாப்பான, சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழல் இல்லாமல் மனித உரிமைகளை அனுபவிக்க முடியாது; மனித உரிமைகளை நிறுவுதல் மற்றும் மதிக்காமல் நிலையான சுற்றுச்சூழல் நிர்வாகம் இருக்க முடியாது. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை 100 க்கும் மேற்பட்ட அரசியலமைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த உறவு பெரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுற்றுச்சூழல் அரசியலை பேசுபொருளாகவும், சாமானிய மக்கள் விமர்சிக்கும் விதமாகவும், மக்கள் இயக்கமாகவும் மாற்றுதல் தீர்வை தேடுதலுக்கான மற்றொரு வழி.

ஆராய்ச்சியாளர்கள் எப்பொழுதுமே பறவை எண்ணிக்கை குறைந்துவிட்டது, பாதித்துவிட்டது என்றே பேசுகிறார்கள். பன்றி யானை போன்ற மற்ற வன விலங்குகள் ஏற்படுத்தும் பிரச்சனைகளை மட்டுமே பேசுகிறார்கள். பறவைகளினால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதில்லை என்ற விமர்சனத்திற்கான பதிலாகவும் இக்கட்டுரை இருக்கலாம்.

தரவுகள்

1. Birdlife International (2023). Species factsheet : Anhinga melanagster.
Downloaded from http://www.birdlife.org on 13 June 2024.

2. Blair, R. B. (1999). Birds and butterflies along an urban gradient: surrogate taxa for assessing
biodiversity?. Ecological applications, 9(1), 164-170.

3. Chaudhary, A., Subedi, T. R., Giri, J. B., Baral, H. S., Bidari, B., Subedi, H. E. M., … & Cuthbert, R. J.
(2012). Population trends of Critically Endangered Gyps vultures in the lowlands of Nepal. Bird
Conservation International, 22(3), 270-278.

4. Chellappan, M, Ranjith, M.T., Chaudhary, Vipin and Sreejeshnath, K.A. (2023). Bird pests: damage
and ecofriendly management. Annals of Arid Zone, 62(4): 361-372. doi: 10.59512/aaz.2023.62.4.11
5. Dhindsa, M.S., Saini, H.K. (1994). Agricultural ornithology: an Indian perspective. J. Biosci., 19,
391–402. https://doi.org/10.1007/BF02703176

6. Govind, S.K. and Jayson, E.A. (2018). Damage to paddy Oryza sativa by Indian Peafowl Pavo
cristatus near Chulannur Peafowl Sanctuary, Kerala, India. Indian BIRDS, 14(5): 149-150.

7. Grimmett, R., Inskipp, C. and Inskipp, T. (2011). Birds of the Indian subcontinent. Oxford University
Press, New Delhi. pp. 528.

8. Harris, E., de Crom, E.P., Fouche, J. and Wilson, A. (2018). Comparative study on the short-term
effects of audio and visual raptor presence on a pigeon population, with a view towards pest control.
International Journal of Pest Management, 6: 31-39. https://doi.org/10.1080/09670874. 2018.1542185.

9. Islam, M.Z. and Rahmani, A.R. (2004). Important Bird Areas in India: Priority Sites for Conservation.
Indian Bird Conservation Network: Bombay Natural History Society and Birdlife International. (UK),
xviii+1133pp.

10. Johnston, R. F. & Janiga, M. (1995). The Feral Pigeons, Oxford University Press, ISBN 0195084098,
London

11. Kalaiselvan, K., & Ramesh, N. (2014). Population status and distribution pattern of Indian Blue
Peafowl (Pavo cristatus L.) in Thuraiyur area of Trichy District, Tamilnadu, Southern India. J.
Sci, 8(1), 44-49.

12. Kale, M., Dudhe, N., Kasambe, R., Chakane, S., & Bhattacharya, P. (2012). Impact of urbanization on
avian population and its status in Maharashtra state, India. International Journal of Applied
Environmental Sciences, 7(1), 59-76.

13. Krimowa, Symone (2012). Pigeons and People: Resource Ecology and Human Dimensions of Urban
Wildlife. Open Access Te Herenga Waka-Victoria University of Wellington. Thesis.
https://doi.org/10.26686/wgtn.16999663.v1

14. Niangthianhoi, S.L. & F.A. Khudsar (2015). The nesting success of the Oriental Darter Anhinga
melanogaster (Aves: Suliformes: Anhingidae) in the Yamuna Biodiversity Park, New Delhi,
India. Journal of Threatened Taxa,7(14): 8148–8153; http://dx.doi.org/10.11609/jott.2430.7.14.8148-
8153

15. Prakash, V., Green, R. E., Pain, D. J.,Ranade, S. P., Saravanan, S., Prakash, N.,Venkitachalam, R.,
Cuthbert, R.,Rahmani, A. R. and Cunningham, A. A.(2007). Recent changes in populations of resident
Gyps vultures in India. J. BombayNat. Hist. Soc.,104:129–135.

16. Sashikumar C., Palot M.J. (2002). Wetlands and waterfowl of Kerala, India – an over view. In:
Rahmani A.R., Ugra G. (Eds.), Birds of Wetlands and Grasslands. Proceedings of the Salim Ali
centenary seminar. Bombay Natural History Society, Pp. 147–153.

17. SoIB (2020). State of India’s Birds, (2020). Range, trends and conservation status.
The SoIB Partnership, 50 pp.

18. Zacharias V.J., Gaston A.J. (2003). Survey of Kerala wetlands, India. OBC Bulletin, 37: 15.

19.https://books.google.co.in/books?hl=en&lr=&id=c1WRDwAAQBAJ&oi=fnd&pg=PA215&dq=pigeon
+as+a+pest+to+humans+in+cities&ots=8g0SR0qfW1&sig=Bbz4kYjHipmfABpzzahN3DOoGPw&red
ir_esc=y#v=onepage&q=pigeon%20as%20a%20pest%20to%20humans%20in%20cities&f=false

20. https://epubs.icar.org.in/index.php/AAZ/article/view/138097.

21. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/explained-saving-the-vultures-of-tamil-
nadu/article66037132.ece.

22. https://www.unep.org/explore-topics/environmental-rights-and-governance/what-we-do/advancing-
environmental-rights/what#:~:text=Environmental%20rights%20are%20composed%20of,used%20to%20achieve%20
substantial%20rights).&text=Substantive%20are%20those%20in%20which,enjoyment%20of%20the%

கட்டுரையாளர் :

சுற்றுச்சூழலும் பறவைகளும் (Environment and bird in india ) - முனைவர் வெ.கிருபாநந்தினி | https://bookday.in/

முனைவர் வெ.கிருபாநந்தினி பறவைகள் ஆராய்ச்சியாளர், சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு ஆய்வு மையத்தில் முனைவர் பட்ட ஆய்வை முடித்துள்ளார். இந்திய மாநிலங்களில் இறந்த பறவைகள் பற்றி 2011 முதல் 2021 வரை ஆய்வு மேற்கொண்டார். தற்போது தமிழ் நாடு வனத்துறை, விழுப்புரம் மாவட்டத்தில் பறவைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சுற்றுச்சூழல் அரசியல் மற்றும் பறவைகள் பற்றி பல்வேறு தளங்களில் செயல்படுகிறார்.

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. Dr. B. RAM MANOHAR

    மிகவும் சிறப்பான கட்டுரை!வாழ்த்துக்கள்!சில நுணுக்கம் நிறைந்த, பறவைகள் வாழ்வியல் பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் கட்டுரையாளர், குறிப்பிட்ட தகவல்கள் பற்றி தொடர்புடைய அரசு துறை கவனம் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
    Dr. B. RAM MANOHAR, CHENNAI -73

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *