சுற்றுச்சூழலும் கடல்சார் வணிகமும் – இல.சுருளிவேல்
” வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்;
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்” என்ற மகாகவி பாரதியின் பாடல் வரிகள் 1961 ஆம் ஆண்டு வெளியான கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் வரும். அந்தப் பாடல் வரிகள் சுதந்திர தாகத்தையும் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதில் அன்றைய காலகட்டத்தில் இந்தியர்களுடைய ஏக்கம் எவ்வாறு இருந்தது என்பதை உணர்த்துகிறது. கிழக்கே வங்கக்கடல், தெற்கே இந்திய பெருங்கடல் மேற்கே அரபிக் கடல் என்று மூன்று பக்கமும் கடல் பகுதியை கொண்ட தீபகற்ப நாடு இந்தியா. இதன் பரப்பளவு 2.02 மில்லியன் சதுர கி.மீ. கடற்கரை நீளம் 8,118 கி.மீ. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 2.04 விழுக்காடு மீனவர்கள். மீன் வளம் சார்ந்த அனைத்து மக்களுக்கும் மற்றும் தொழிளார்களுக்கும் வாழ்வாதாரத்தை வழங்கி வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. மேலும் உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் அந்நிய செலவாணி வருவாயை பெருக்குகின்றது, 2019 -2020 புள்ளிவிபரப்படி மீனவர்கள் மக்கள்தொகை 28,063,538 ஆகும். அதில் கடல் சார் மீனவர்கள் 17.62 விழுக்காட்டினர். இந்தியா முழுவதும் 3461 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் பின்தங்கியே உள்ளன.
மனித நாகரீகம் கடற்கரை பகுதிகளில் தான் தோன்றியது என்பதற்கான சான்றுகள் பல உள்ளன. வரலாறு தொடங்கிய காலம் முதல் இன்று வரை கடல் சார்ந்த நடவடிக்கைகளில் இந்தியா முதன்மை இடத்தில் உள்ளது. அதாவது சுதந்திரத்திற்கு முன்பிருந்தே உணவுப்பாதுகாப்பில், பன்னாட்டு வாணிபத்தில், கடற்படையில் சிறந்த நாடாக விளங்கியதற்கான சான்றுகள் பல உள்ளன. அதனை சங்ககால இலக்கியங்கள் மட்டுமின்றி பல உலக வரலாற்று சான்றுகளிலிருந்தும் அறிந்து கொள்ள முடியும்.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்தியர்கள் தனியாக கப்பல் விட தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்போதும் 1912 இல் வ.உ.சிதம்பரனார் நீராவி கப்பலை விட்டார். பின்பு, முதன் முதலாக 1919 ஆம் ஆண்டு சிந்தியா ஸ்டீம் நேவிகேஷனின் “எஸ்.எஸ். லாயல்டி” என்ற இந்தியாவிலேயே இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட முதல் கப்பல் மும்பையிலிருந்து லண்டனுக்கு சென்றது. இதனை தற்சார்பு இந்தியாவிற்கான முதல் வித்து என்று சொல்லாம். கடல் வழிகள் ஆங்கிலேயர்களால் கட்டுப்படுத்தப்பட்ட போது இந்தியாவின் கப்பல் வரலாற்றில்/ கடல் வாணிப வரலாற்றில் இது ஒரு முக்கியமான மைல்களாகும். இதன் முக்கியத்துவம் கருதியே 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி முதல் தேசிய கடற்சார் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் உலகெங்கிலுள்ள அனைத்து கண்டங்களுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை மக்களுக்கு தெரிவிக்கவும், கடல்வளத்தின் முக்கியத்துவம் கடல்பாதுகாப்பு வீரர்களுக்கு, கடல்சார் அனைத்து தொழிலார்களுக்கும் மற்றும் மாலுமிகளுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த தினம் முக்கியத்துவம் பெறுகிறது.
சுற்றுச்சூழலும் கடல் மீன் உற்பத்தியும்:
உலக அளவிலான மீன் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 8.92 விழுக்காடு ஆகும். மீன் வளர்ப்பில், உற்பத்தியில் முதல் ஐந்து இடத்தில் இருந்தாலும், மீன் நுகர்வில் மற்ற நாடுகளை விட பின்தங்கியே உள்ளோம். நிலவளம், நீர்வளம், மனித வளம் நிறைந்த நம் நாட்டில் உணவு, ஊட்டச்சத்து, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் பின்தங்கி இருப்பதுதான் கசப்பான உண்மை. இந்நிலை மாற வேண்டும்.
ஒருபுறம், காலநிலை மாற்றம் முக்கியமாக சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் காரணமாக மனிதர்களுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. மற்றொருபுறம், மனிதனின் பொறுப்பற்ற செயல்களின் காரணமாக கடல் வளம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நகர்மயமாதல், மனித கழிவுகள் கடலில் கலத்தல், தொழிற்சாலை கழிவுகள், தேவைக்கு மிகுதியாக மீன் பிடித்தல், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல், அதிக நெகிழிப்பயன்பாடு, நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கிழைக்கும் பொருட்களை பயன்படுத்துதல், கப்பல்களில் இருந்து வெளியேறும் எண்ணெய் கசிவு போன்ற பல காரணங்கள் கடல் மீன் உற்பத்திக்கும், மீனவர்களின் வாழ்வாதாரங்களுக்கும் பெரிய சவாலாக இருக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் எண்ணூர் மற்றும் பழவேற்காடு ஆகிய பகுதிகளில் காக்கா ஆழிகள் கடற்கரை பகுதிகளில் அதிகம் ஆக்கிரமிப்பு செய்து வருவதால் இறால்கள் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதாகவும், மீனவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவது சுற்றுசூழலுக்கும், கடல்சார் வாணிபத்திற்கும் மிகப்பெரிய சவாலாகும். இந்நிலை தொடரும் போது மீனவர்களுக்கான வாழ்வாதாரம் பாதித்து இறால் உற்பத்தி, மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மிகவும் குறையும். நமது பொறுப்பற்ற செயல்பாடுகளின் காரணமாக கடல்நீர் குடிநீரில் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
1980-81 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடல் மீன் உற்பத்தியின் பங்கு 64 விழுக்காடாக இருந்தது. பின்பு 1990-91 ஆம் ஆண்டு 60 விழுக்காடாக குறைய தொடங்கியது. தற்போது 2022-23 ஆம் ஆண்டு கடல் மீன் உற்பத்தி 25 விழுக்காடாக இருக்கிறது. உள்நாட்டு மீன் உற்பத்தி 75 விழுக்காடு. கடல் மீன் உற்பத்தி தொடர்ந்து குறையும் பொது மீனவர்களும், பொதுமக்களும் அதிகம் பாதிக்கப்படுவர். பூமியின் மொத்த நிலப்பரப்பில் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. அவற்றை பாதுகாப்பதில் அரசிற்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. மத்திய மாநில அரசின் பல்வேறு முயற்சிகளின் காரணமாக உள்நாட்டு நீர்நிலைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு மீன் உற்பத்தி நடைபெற்றுவருகிறது. அதனால் உள்நாட்டு மீன் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதேசமயம் கடல் மீன் உற்பத்தி நாட்டின் உணவு பாதுகாப்பிற்கும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும், மீன் ஏற்றுமதிக்கும் பெரு பங்கு வகிக்கிறது. அதனால் கடல் வளத்தை பாதுகாப்பதற்கு அரசு தனிக் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம். 2022-23 ஆம் ஆண்டு மீன் ஏற்றுமதி 17,35,286 டன்கள் ஆகும். இதன் இந்திய பண மதிப்பு ரூபாய் 63,969.14 கோடியாகும். ஏற்றுமதி அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது நாட்டிற்கு நன்மையை தந்தாலும் மக்களின் மீன் நுகர்வு அதிகரிக்கப்பட வேண்டும்.
கடல் பொருளியலின் முக்கியத்துவம்:
கடல் என்பது இயற்கை தந்த நன்கொடை இதனை பொருளியலின் இலவச பொருள் (Free Good) என்பார்கள் இதனை பயன்படுத்தி பல்வேறு உற்பத்தி நடவடிக்கைகள் நடைப்பெறுகிறது. எந்த ஒரு கடல்சார் பண்ட பணி உற்பத்திக்கும் கடல் வளம் மிக அவசியமான ஒன்றாகும். உப்பு சேர்காமல் எந்த ஒரு உணவும் தயாரிக்க முடியாது; கடல் உணவு பொருட்கள் இன்றி மனிதன் மட்டும் அல்லாமல் எந்த உயிரினங்களும் இல்லை; கடல் இன்றி பன்னாட்டு வர்த்தகம் நடைப்பெறாது: கடல் இன்றி இயற்கை இல்லை: கடல் இன்றி இந்தியாவிற்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறாக கடல் உணவுப்பாதுகாப்பிற்கும் நாட்டின் பாதுகாப்பிற்க்கும் முக்கியதும் பெறுகிறது. எந்த ஒரு உற்பத்திக்கு நிலம் உழைப்பு தொழில் முனைவு மூலதனம் மிக அவசியமாக இருகிறது. கடல் மீன் உற்பத்திக்கு நிலம் கடலாகவும், உழைப்பு மீனவர்களாகவும், மீன்பிடி உபகரணங்கள் மூலதனமாகவும், மீன் சார்ந்த தொழிலில் ஈடுபடுவோர் தொழில் முனைவோராகவும் இருந்து மீன் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகிறது. இறுதியாக உற்பத்தி செய்யப்பட்ட மீன்கள் விற்பனை வழியாக நுகர்வோரை சென்று அடைகிறது.
புவியின் மொத்த நிலப்பரப்பில் பெரும் பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தில் கடல்சார் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தத்துறை நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதிலும், பல்வேறு சமூக மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதிலும், பொருளாதார நடவடிக்கையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. தற்போது நாட்டில் 13 பெரிய துறைமுகங்களும், 205 சிறிய அளவிலான துறை முகங்களும் இருக்கின்றன. இந்த துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் அதிக அளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் வருவாய் பெருக்கத்திற்கு மூலகாரணமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் உலகளவில், கப்பல் மறுசுழற்சியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது பொருளாதார வளர்ச்சியின் சாதனையை எடுத்துக் காட்டுகிறது. மனிதனுக்கு உணவையும் வருமானத்தையும் எல்லா உயிர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித்தருகிறது. கடல் போக்குவரத்து மூலம் அனைத்து நாடுகளையும் இணைக்கிறது, கடல் போக்குவரத்து என்பது ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகான முக்கியமான உள்கட்டமைப்பு ஆகும். இதனை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் நிர்வகிக்கிறது. நாட்டின் முன்னேற்றத்தில் இந்த துறை முக்கியத்துவம் பெருகிறது. அரசு பல எதிர்கால திட்டங்களையும் தீட்டி வருகிறது. அதில் ஒன்று சாகர்மாலா திட்டம். கடல்சார் இந்தியா பார்வை 2030 இன்படி, சாகர்மாலா திட்டம் கடலோரப்பகுதியில் வாழும் மக்களுக்கு, கடல்சார் உற்பத்தி பண்டங்களை விரைவில் கொண்டு செல்லும் வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பிரதமமந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (PMMSY) ஒரு அங்கமாகும். இது மீன்வள மேம்பாட்டுக்கான ஐந்தாண்டுத் திட்டமாகும். அதாவது 2020-21 முதல் 2024-25 வரையான திட்டமாகும். இது நாட்டில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் முதன்மையான திட்டமாகும். சாகர்மாலா திட்டத்தின் முக்கிய நோக்கம் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்திற்கான செலவுகளை குறைப்பதாகும்.
சீனா மற்றும் இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மீன் உற்பத்தியாளராக திகழ்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் வளர்ப்பு மீன் உற்பத்தியில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டு உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது மகிழ்ச்சி தரும் விஷயம். நாட்டில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மீன் புரத்திற்கான தேவைகள் பன்மடங்கு அதிகரித்து வருவதால் வளங்களின் நிலையான வளர்ச்சிக்கான தேவை முன்பை விட அதிகமாக உள்ளது.
கடல் வளத்தை பாதுகாப்பதில் ஒற்றுமைப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கலாம். மீனவர்கள் தங்களது ஒற்றுமை மூலம் சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு மீன் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடலாம். கடல் உயிரினங்கள் பாதிக்காத வகையில் துறைமுகங்கள் கட்டலாம். சுற்றுலாப்பயணிகள் பொறுப்புடன் செயல்படும்வகையில் அதிகம் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளலாம். வள்ளுவர் சொன்னது போல “மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்”. நமது கடல் சார்ந்த மண் வளத்தையும் நீர் வளத்தையும், நிழல் தரும் காடுகளை பாதுகாப்பதன் மூலம் நீண்டகால நன்மையைப் பெற முடியும். இன்றைய உலகமயமாதல் சூழலில் சுற்றுப்புற சூழல் பாதிப்பு பெரிய நிறுவனங்களை விட சிறு, குறு மீன் விற்பனையாளர்கள் அதிகம் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை உள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட மீன்களை விற்பனை செய்வதில் அதிகம் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்படையும் போது அதிகம் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இறுதியாக நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கடல்வளத்தை, அதுசார்ந்த சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிக அவசியமாகும்.
கடல்வளம் இந்தியாவின் உயிரோட்டமாக இருக்கிறது. அந்த கடல்வளத்தை சமூகப்பொறுப்புடன் முழுமையாக பயன்படுத்தி, கடல்வாணிபத்தை ஊக்குவித்து, கடல்சார் தொழிலாளர் நலனை பாதுகாத்து வலுவான சுயசார்பு இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதி மேற்கொள்வோம்.
கட்டுரையாளர் :
முனைவர் இல.சுருளிவேல்
முனைவர் இல.சுருளிவேல் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர். அவர் முதுகலையில் கணிதப் பொருளியல் பட்டம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும், பொருளியல் துறையில் முனைவர் பட்டம் காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகத்திலும் பெற்றுள்ளார். முனைவர் பட்ட ஆய்வு “உணவுப் பாதுகாப்பு” சம்பந்தமானது. இவர் மத்திய ஆராய்ச்சி நிலையங்களில் திட்டப் பணி அனுபவம் பெற்றுள்ளார். மீன்வளப் பொருளியல், புள்ளியியல், சமூக பொருளாதார ஆய்வு போன்றவைகளில் விருப்பமுள்ளவர். வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், இணைய இதழ் போன்ற சமூக ஊடகங்களில் பேசுவது எழுதுவதை தொடர்ந்து கொண்டிருப்பவர் . தற்போது தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக பொன்னேரி வளாகத்தில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்வளப் பொருளியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாக குழு உறுப்பினராகவும் உள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Very usefull sir .. And
Thank you for this current information. …