இயற்கைக்கு நமது இரட்சிப்பு தேவையில்லை
கைமீறி செல்வதற்கு முன்னர் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்
‘தி அபோகாலிப்ஸ் ஆஃப் எர்த்’ போன்ற கற்பித்த புனைக்கதைகள் அல்லது திரைப்படங்கள் எல்லா உயிரிகளும் அழிந்து போகும் ஊழியிறுதி பேரழிவு உலகத்தை சித்தரிக்கின்றன. உயிரிற்ற கிரகமாக பூமி மாறிவிட்ட சூழலை சித்தரித்தாலும், அதிலும் சில மனிதர்கள் (ஹோமோ சேப்பியன்ஸ்) உயிர்வாழ முயற்சி செய்கிறார்கள் என கதை நகர்கிறது. உலகமே அழிந்தாலும் ஒரு சில மனிதர்களாவது தப்பி நிலைத்து நிற்பார்கள் என்பது போல இந்த கதையமைப்பு உள்ளது. போலி நம்பிக்கையை நம்முள் விதைக்கிறது.
ஆனால் இது அறிவியல் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. நம்மை விட அதி சிக்கல் சூழலையும் தாங்கி நிலைத்து நிற்கும் வேறு உயிரினங்கள் உள்ளன. உயிரற்ற கிரகம்போல பூமி உருவாகி, மனித இனம் முற்றிலும் அற்றுப்போனாலும், எக்கினிஸ்கஸ்( Echiniscus) இனத்தைச் சார்ந்த பாசி பன்றிக்குட்டி என்கிற மெதுநடையன் (டார்டிகிரேட்ஸ் Tardigrade) நுண்ணுயிரி நிலைத்து நிற்கும். பாசி பன்றிக்குட்டி என்கிற இந்த நுண்ணுயிரி மீ வெப்ப நிலை; அழுத்த மாறுபாடு நிலை ஏன், விண்வெளியில் சூழலைக் கூட தாங்கி வளர்கிறது. எனவே நமக்கு முன்னர் பாசி பன்றிக்குட்டி அழிந்து அற்றுப்போகும் வாய்ப்பு மிகமிக குறைவு. இதுபோல வேறுசில உயிரிகளும் நிலைத்து நிற்கும். எனவே இயற்கைக்கு எந்த இரட்சிப்பும் தேவையில்லை.
ஸ்டீபன் ஜே கோல்ட் எழுதிய ‘வொண்டர்ஃபுல் லைஃப்’ புத்தகத்தின் புகழ்பெற்ற வரிகளை நாம் நினைவு கூற வேண்டும். “(இயற்கை மற்றும் பரிணாமத்தின்) டேப்பை ஒரு மில்லியன் முறை ரீப்ளே செய்யுங்கள் … மறுபடியும் ஹோமோ சேப்பியன்ஸ் போன்ற உயிரி எதுவும் மீண்டும் உருவாகுமா என்பது சந்தேகமே” என்கிறார். காலநிலையும் புவியின் உயிர்சூழலும் வெகுவாக மாற்றம் அடைந்தால் மனித இனம், செழிப்பதற்க்கும், உயிர்வாழ்வதற்கும் தேவையான சரியான நிலைமைகள் மீண்டும் உருவாகாது. இது நிச்சயம்.
வால்-இ அறிவியல் புதின திரைப்படத்தில் பூமியிலிருந்து வெளியேறி விண்கலங்களில் தஞ்சம் புகுந்தால் மட்டுமே அழிவிலிருந்து மீள முடியும் என்ற நிலையில், மனிதர்கள் பூமியை விட்டு விண்கலங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் பின்னணியில் நமது மனதை நெருடும் வண்ணம் பூமியில் மறுபடியும் மரக்கன்று ஒன்று துளிர்த்து வளரும் காட்சி வருகிறது. விட்டுச் சென்ற ரோபோக்கள் கண்காணிப்பில் உள்ள பூமியில் மறுபடி வாழத் தகுந்த நிலை உருவாவது போல இந்த திரைப்படம் சித்தரிப்பது போலி கற்பனாவாதம் ஆகும். மனிதன் விலகி ஓடும் அளவுக்குப் பூமியின் நிலை மாறிவிட்டால் மறுபடி மனிதன் வாழும் படியான கிரகம் புத்துருவாக்கம் பெரும் என்பது பகல் கனவு மட்டுமல்ல; ஆபத்தான கற்பனா வாதம்.
சூழலமைப்பு அதாவது சூழ்நிலைத்தொகுப்பில் உள்ள அனைத்து உயிரினங்களும் அதன் உயிரியல் காரணிகள் ஆகும். அதே போல் அந்த சூழ்நிலைத்தொகுப்பில் உயிரற்ற பொருள்கள், நிலைகள் எல்லாம் , அதாவது மண் தன்மை, வெப்ப நிலை, போன்றவைகள் உயிரற்ற காரணிகள் ஆகும். உயிரியல் மற்றும் உயிற்ற காரணிகள் காலபோக்கில் இயல்பாகவே மாற்றம் அடைகின்றன என அறிவியல் நிருபித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை எனவும் இவை நமக்கு அறிவுறுத்துகின்றன. மெல்ல மெல்ல மாற்றங்கள் நடந்தாலும், அல்லது விரைவாக மாற்றங்கள் நடந்தாலும் நல்ல செய்தி என்னவென்றால் வெவேறு உயிரியல் காரணிகள், அதாவது உயிரினங்கள் அற்றுப்போகின்றன அல்லது தகவமைத்துக்கொண்டு பரிணாம வளர்ச்சி கண்டு நீடிக்கின்றன.
பரிணாமம் என்பது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு- இது ஒவ்வொரு பண்டய (தொல்), புதிய மற்றும் எதிர்கால உயிரினங்களின் தோற்றத்திற்கு காரணம் மட்டுமல்ல, சில உயிரினங்கள் ஏன் இன்று நீடித்து உள்ளன, மற்றவை அற்று அழிந்து போனது ஏன் என்பதையும் விளக்குகிறது. பொதுவாக, பரிணாமம் என்பது காலப்போக்கில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது. உயிரியலில் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசும்போது, அது அடிப்படையில் காலப்போக்கில் ஒரு உயிரியின்(அல்லது ஒரு உயிரினத்தின்) மரபணுப் தொகுதியில் ஏற்படும் மரபணு மாற்றத்தைக் குறிப்பிடுகிறோம்.
மரபணுவியல் -அடிப்படைகள்

பரிணாம உயிரியலின் சில எளிய அடிப்படைகளை அறிய வேண்டிய நேரம் இது. நான் உள்ளே நுழைவதற்கு முன், நமது பூமியை ‘மனிதனை மையமாகக் கொண்ட’ (மானுட மைய) முறையிலும் இயற்கையை மையமாகக் கொண்ட முறையிலும் வேறுபடுத்திப் பார்க்கும்போது, சூழலியல் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஒருவர் உண்மையிலேயே பாராட்ட முடியும் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். மானுட மையக் கருத்து அல்லது சிந்தனையானது விஞ்ஞான ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் உலகைப் பார்ப்பதற்கான முற்றிலும் சரியான வழி அல்ல. இருப்பினும், ஒரு விதிவிலக்கான நேர்வு உள்ளது, இது நம் சொந்த நலன் சார்ந்தது. இந்த கட்டுரையின் முடிவில் இதைக் குறித்து மேலும் நாம் விவாதிப்போம். இப்போதைக்கு, உயிரியல் குறித்த எளிய செய்திகளை காண்போம். இந்த கட்டுரையில் நீங்கள் ‘உயிரினங்கள்’ என்று படிக்கும் போது, உங்களுக்குப் பிடித்தமான பூச்செடியைச் சுற்றித் திரியும் புத்திசாலித்தனமான திறமையான தேனீக்கள், உங்கள் ரொட்டி அல்லது பிரெட் தயாரிக்கும் ஈஸ்ட் (சாக்கரோமைசெட்டேல்ஸ்-Saccharomycetales) , இட்லி மாவை நொதித்து புளிக்க செய்யும் நுண்ணுயிரிகள், மழைக்காடுகளை இயங்க வைக்கும் கம்பீரமான யானைகள், பாலை தயிராக மாற்றும் நுண்ணுயிர் லாக்டோபாகில்லி (lactobacilli) முதலிய நமக்கு தேவையான அல்லது விருப்பமான உயிரினங்களைப் குறித்து மட்டும் நீங்கள் நினைக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பெருச்சாளி, ஓநாய், வெட்டுக்கிளிகள், பாசி பன்றிக்குட்டி, இதுவரை நாம் அறிந்த மற்றும் இன்னமும் இனம்காணத பக்டீரியாக்கள், வைரஸ்கள் என நாம் அவ்வளவாகச் சிந்திக்காத அல்லது அருவெறுப்பாகக் காணும் எல்லா உயிரிகளையும் நினைவில் கொள்ளுங்கள். இதற்க்கு இன்னம் சுவைகூட்ட இன்று முழுவதும் அற்று அழிந்துபோன டோடோக்கள், டைனோசர்கள், நியாண்டர்தால்கள் போன்ற உயிரினங்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
அனைத்து உயிரினங்களும் உயிரணுக்களால் (செல்கள்) ஆனவை. உயிரணுக்கள் உயிரின் கட்டுமானத் தொகுதிகள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். செல்களுக்குள் நியூக்ளியஸ் என்று ஒன்று உள்ளது, அதில் மரபணு பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு தனி உயிரணுவும் ஆர்என்ஏ எனப்படும் அதன் சொந்த மரபணுப் பொருளைக் கொண்டுள்ளது (அல்லது அதன் நிலையான சுய-பிரதி பதிப்புஎடுக்கும் ஆற்றல் கொண்டடிஎன்ஏ வை கொண்டுள்ளது ). இந்த மரபணு பெரும்பாலும் கார்பன், நைட்ரஜன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் அணுக்களின் கூட்டு மூலக்கூறு ஆகும். செல்களுக்கு சமிக்கைகளை அளித்து அந்த உயிரியின் வளர்ச்சி, உயிரிவாழ்வு, இனப்பெருக்கம் முதலியவற்றை இயக்கம் ஆணைத்தொடர் என நாம் கற்பிதம் செய்துக்கொள்ளலாம்.
எல்லா உயிரினங்களுக்கும் இதே ஆணைத்தொடர்கள் மட்டுமே இருந்தால் இருந்தால், அவற்றுள் ஏன் இவ்வளவு வேறுபாடுகள் உள்ளன? ஏனென்றால், ஒவ்வொரு உயிரியிடமும் சற்றே வேறுபட்ட மரபணு தொடர் உள்ளது. அதாவது, அவர்களின் டிஎன்ஏ பொதிவு சற்றே ஒன்றுக்கொன்று மாறுபடும். இதனாலேயே ஒரு வண்ணத்துப்பூச்சி வைரஸைப் போல தோற்றமளிக்காது அல்லது நடந்து கொள்ளாது. மேலும் நாய் ஈனும் நாய்க்குட்டிகள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்காது. டிஎன்ஏ மாறுபாடுகள் ஒரே உயிரினத்தை சார்ந்த இரண்டு உயிரிகளிடமும் இருக்கும், வெவ்வேறு உயிரினங்களுக்கு இடையேயும் உள்ளன. மரபணுக்கள் எனப்படும் டிஎன்ஏவின் சிறப்பியல்பு துணுக்கு எண்ணற்ற சாத்தியமான மாறுபாடுகளைக் கொண்டுள்ளன. மனித முடி நிறத்திற்கு காரணமாக அமையும் 11 மரபணுக்களில் மட்டும், 13 வேறுபாடுகள் உள்ளன. எனவே, நம் பெற்றர்கள் நமக்கு எந்த அளித்த மரபணு தொடரில் எந்த தொகுப்பு முடி நிற மரபணுக்கள் உள்ளன என்பதைப் பொருத்து நமது முடியின் தன்மை, நிறம் எல்லாம் மாறுபடும். (மரபணுத் தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது தான் மரபுப்பேறு (inheritance) எனப்படும்).
ஆனால் இந்த மரபணு வேறுபாடுகளுக்கு என்ன காரணம்? பில்லியன் கணக்கான மூலக்கூறுகள் ஒரு மரபணுவை உருவாக்குகின்றன. இந்த மூலக்கூறுகளில் எதாவது ஒன்றில் ஏற்படும் சிறு மாற்றம் கூட மரபணுவின் வேதியியல் பண்புகளில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்கூடும். இந்த மூலக்கூறு மாற்றங்கள் எல்லா நேரத்திலும் நிகழ்கின்றன; இதனை நாம் மரபணுவியலில் மரபணுத் திரிபு (அல்லது மரபணுச் சடுதிமாற்றம் அல்லது மரபணுத் திடீர்மாற்றம்) என்று அழைக்கிறோம். இதுபோன்ற திரிபுகள் ஒரே உயிரினங்களுக்குள் உள்ள உயிரிகளுக்கு இடையேயும் உயிரினங்களுக்கு இடையேயும் மரபணு வேறுபாட்டை உருவாக்குகின்றன. மரபணு வேறுபாட்டிற்கு திரிபுகள் மட்டுமே காரணமா? இல்லை, மீளிணைவு (recombination) போன்ற பிற காரணங்களும் உள்ளன. சில நாய்க்குட்டிகளைப் பெற்றெடுத்த நாயின் உதாரணத்தைப் பார்ப்போம். இந்த நாய்குட்டிகளில் வேறுபாடும் உள்ளது சில ஒற்றுமைகளும் உள்ளன. உண்மையில், இந்த நாய்க்குட்டிகள் எதுவும் தங்கள் பெற்றோரின் சரியான அச்சுஅசல் நகலாக இருக்கப் போவதில்லை. சில உடலமைப்புக்கள் ஒன்றுபோல பெற்றோரின் உடலமைப்பு ஒத்து இருந்தாலும் அவற்றின் வேறு அம்சங்களில் வேறுபாடு இருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு நாய்க்குட்டி தாயின் காது வடிவத்தையும் மற்றொரு நாய்க்குட்டியின் காது தந்தையின் காது போலவும் இருக்கலாம். தாய் மற்றும் தந்தையின் மரபணுக்கள் மீளிணைவு கொள்ளும்போது, உருவாகும் கருவின் மரபணு தொடரில் பெற்றோர் இருவரின் மரபணுவின் கலவை உருவாகிறது. இரண்டு மரபணு தொடரில் சில மாற்றங்களும் இரண்டுக்கும் இடையே சில பரிமாற்றங்களும் பெற்றோர் இருவரின் மரபணுவின் வெவ்வேறு அளவுகளில் சேர்க்கைகளுடன் நடைபெறுகின்றன. உருவாகும் கருவின் மரபணுப் பொருளைச் சுற்றி நிகழும் இந்த மாற்றத்தை மரபணு மீளிணைவு என்று அழைக்கிறோம், அடிப்படையில் அடுத்த தலைமுறைக்கு மரபணுக்களைக் கடத்தும் போது நடக்கும் மரபணுப் பொருட்களின் பரிமாற்றமாகும். எனவே தான் குட்டிகள் தாய் தந்தையின் சில குனாங்களை பெற்றிருந்தாலும் வேறுபாட்டுடன் உள்ளன. அதே போலக் குட்டிகளிடமும் மரபணு அளவிலும், அதன் தொடர்ச்சியாக உடலியல் அளவிலும் வேறுபாடுகள் உருவாகிறது.
ஒரு நாய்க்குட்டி மரபுப்பேறாகப் பெறும் மரபணுக் கலவை (மரபுமுத்திரை அல்லது மரபணுவமைப்பு (Genotype) அது சில வெளித்தோற்ற அமைப்பு க்களை (Phenotype) வெளிப்படுத்துகிறது. ஆனால் நாய்கள் போன்ற உயிரினங்கள் பாலியல் ரீதியாக இனப்பெருக்கம் செய்கின்றன. பாலினமற்ற முறையில் இனப்பெருக்கம் செய்யும் பாக்டீரியா போன்ற இனங்களில் அடுத்த தலைமுறைக்கு மரபணு பரிமாற்றம் எப்படி இருக்கும்? பக்டீரியா போன்ற பாலினமற்ற இனப்பெருக்கம் செய்யும் உயிரிகளிலும் ஒருவகை மீளிணைவு நடைபெறுமா? பதில் ஆம்! இது பாலுறவு சாரா மரபணு கடத்தல் (gene transfer) எனப்படும் செயல்முறை மூலம் நிகழ்கிறது. இந்த மரபணு பொறிமுறை தொடர்ச்சியாக தான் பக்டீரியாவில் பல்-மருந்து எதிர்க்கும் தன்மை (multi-drug resistance) கொண்ட மரபணு உருவாகிறது. இரண்டு பாக்டீரியாக்கள் இடையே இணைப்பு ஏற்பட்டு மரபணு கடத்தல் நிகழ்கிறது. இந்த இரண்டு பாக்டீரியாவில் ஒன்று ஒன்று நன்கொடையாளராகவும் மற்றொன்று பெறுநராகவும் செயல்படுகிறது. இரண்டு பாக்டீரியாக்களுக்கு இடையே ஒரு துளை உருவாகிறது. நன்கொடையாளரின் மரபணு தொடர் டிஎன்ஏ நகலெடுக்கப்பட்டு பெறுநருக்கு அளிக்கப்படுகிறது. பேரளவான மரபியற் பல்வகைமை (genetic diversity) பெறுவதற்கு வெவ்வேறு உயிரினங்களில் ஏராளமான வழிமுறைகள் உள்ளன. நான் அவற்றை எல்லாம் இங்கே விளக்கிப் பட்டியல் செய்யபோவதில்லை. ஆனால் இது குறித்து மேலும் அறிய ஆர்வமாக இருந்தால், சித்தார்த்த முகர்ஜியின் ‘தி ஜீன்’ போன்ற புத்தகங்களைப் படிக்கத் தயங்க வேண்டாம். நான் முன்னிலைப்படுத்த விரும்பும் விஷயம் என்னவென்றால், இயற்கையானது மரபியற் பல்வகைமை கொண்டுவருவதற்கான பல வழிகளைக் கையாள்கிறது என்பதாகும்.
தக்கன பிழைத்தல், இயற்கை தேர்வு மற்றும் சிற்றினத் தோற்றம்
ஒரு உயிரினத்தின் (அல்லது தனி உயிரி) மரபணு அமைப்பு அது எவ்வளவு சூழல்தகவமைவுப் பொருத்தம் கொண்டுள்ளது என்பதை தீர்மானிக்கிறது. உயிரினத்தின் தனித்தனி உயிர்களிடையேயும் பல்வேறு உயிரினங்கள் இடையேயும் சூழல்தகவமைவுப் பொருத்தம் மீது இயற்கையான தேர்வு செயல்படுகிறது எனவும் இதன் தொடர்ச்சியாக பரிணாம படிநிலை வளர்ச்சி ஏற்படுகிறது எனவும் சார்லஸ் டார்வின் கண்டுபிடித்தார்.
இயற்கைத் தேர்வு என்பது பரிணாம வளர்ச்சியின் பல வழிமுறைகளில் ஒன்று மட்டுமே என்பதை நாம் இப்போது அறிவோம். எனினும் அனைத்து இயற்கை தேர்வு பொறிமுறைகளை குறித்து இங்கு நாம் விவரிக்கப்போவதில்லை. நானும் எனது மாணவர்களும் வகுப்பறையில் பயன்படுத்தும் ஜிம்மர் மற்றும் எம்லெனின் Evolution: Making Sense of Life எனும் நூலிலும், ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய ‘தி கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த்’ முதலிய நூல்களிலும் வியக்கவைக்கும் படியான பல்வேறு பரிணாம இயற்கை தேர்வு பொறிமுறைகளை குறித்து படிக்கலாம். ஒரு உயிரியின் அல்லது ஒரு உயிரினத்தின் இனப்பெருக்க திறனை விவரிக்கத் தான் டார்வின் ‘பொருத்தம்’ (fitness) என்ற சொல்லை உருவாக்கினார். பயன்படுத்தினார். மரபணு தொகுப்பின் அளவு மற்றும் அதில் உள்ள கலவை உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில், சில உயிரினங்களில் மற்றவற்றை விட வேகமாகப் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
‘டார்வின்’, ‘பரிணாமம்’ ‘இயற்கை தேர்வு’ என்ற உடனேயே பலர் ‘வலியது செழிக்கும் / வாழும்’ (தக்கனப் பிழைத்தல்) என்ற சொற்றொடரைப் பற்றி நினைக்கிறார்கள். இதுவரை இந்த சொற்றொடரை நீங்கள் எப்போதாவது பயன்படுத்தியிருந்தால் அதை நிறுத்த வேண்டிய நேரம் இது. இந்த சொற்றொடர் அறிவியல் ரீதியக தவறானது / பிழையானது ஆகும். “தக்கன உயிரி கூடுதல் சூழல்தகவமைப்பு பொருத்தம் கொண்டு இருக்கும்” என்ற சொற்றொடர் சற்றே சரியானதாக இருக்கும். ஏன் எனில் ‘சூழல் பொருத்தம்/ தக்கன’ என்பது ஒப்பிட்டு அளவு ஆகும். சூழல், அந்த உயிரி வாழும் காலம், எந்தெந்த உயரினங்கள் அந்த சூழலில் உள்ளன என்பது போன்றவற்றோடு ஒப்பீட்டு தான் தனி உயிரியின் சூழலமைப்பு பொருத்தத்தை குறித்து பேசமுடியும். மேலும் இன்று உயிரியல் பார்வையில் தக்கனவாக இருக்கும் ஒரு உயிரி வேறொரு சூழலில் தக்கன நிலை இழந்து பொருத்தம் குறைந்து போகலாம். உயரினங்கள் பரிணாம வளர்ச்சியை அடைந்து கொண்டே இருக்கிறது; உயிரியும் காலபோக்கில் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. குறிப்பிட்ட கணத்தில் உங்கள் தயிரில் உள்ள பாக்டீரியாக்கள், உங்கள் தோட்டத்தில் உள்ள பறவைகள், உங்களைச் சுற்றியுள்ள மரங்கள் மற்றும் அதன் கிளைகளில் குதிக்கும் குரங்குகள், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வரை, இந்த கிரகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் சம அளவு பரிணாம வளர்ச்சி அடைந்தவை தான்; இவை எல்லாம் காலபோக்கில் (எதோ காரணத்தால் அற்று அழிந்து போகாமல் இருந்தால்) மேலும் தொடர்ச்சியாக பரிணாம படிநிலை வளர்ச்சியை அடைந்து கொண்டே தான் இருக்கும்.
மனிதர்கள் குரங்கைவிட பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் அல்ல, நாம் குரங்கிலிருந்து வந்தவர்களும் அல்ல. ஒரு குரங்கு திடீரென்று மனிதனாக மாறக்கூடிய ஹாரி பாட்டர் மாயாஜாலம் அல்ல இயற்கை. பரிணாம படிநிலை வளர்ச்சி எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி புதைபடிவ ஆய்வுகள் மற்றும் பிற அறிவியல் சான்றுகள் மூலம் நாம் அறிவோம். மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனைப் போன்ற இனங்கள் மற்றும் குரங்குகள் ஒரு பொதுவான மூதாதையரிடம் இருந்து வந்தன (இதை X என்று அழைப்போம்) அவை மனிதர்களாகவும் குரங்குகளாகவும் கிளையின.
மரபணு வேறுபாட்டை உருவாக்கும் திரிபுகள், மீளிணைவு பிற பொறிமுறைகள் தொடர்ச்சியாக X உயிரினத்தின் தனித்தனி உயிரிகளிடத்தில் மென்மேலும் மரபணு வேறுபாடுகள் ஏற்பட்டது. இந்த மரபணு வேறுபாட்டுப் பரவல் தொடர்ச்சியாக X என்கிற தொல் உயிரினம் பல்வேறு கிளை உயிரினங்களாக பிரிந்தது. இந்த கிளை உயிரினகளில் மென்மேலும் உபகிளைகள் உருவாயின. இப்படி பல்வேறு புதிய புதிய உயிரினங்கள் தோற்றம் கொள்ளும் சமயத்தில் ஒரு கிளையிலிருந்து மனிதன் எந்த உயிரினமும் குரங்கு என்ற உயிரினமும் உருவாயின.
உயிரின் தோற்றுவாயிலில் பொதுவான உலகளாவிய மூதாதை உயிரினம் ஒன்று இருந்தது என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். விஞ்ஞானிகள் இந்த கருதுகோள் உயிரினத்திற்கு ஒரு சிறந்த பெயரை உருவாக்கியுள்ளனர். அதுதான் லூக்கா- LUCA -Last Universal Common Ancestor – அதாவது இறுதி பொது மூதாதை உயிரினம். லூக்கா உயிரினம் பரிணாமம் அடைந்து பல்வேறு ஒர் செல் உயிரி கிளைகளாக பரிணாமம் அடைந்தது. அந்தக்காலத்தில் உருவான சில தொல் ஒரு செல் உயிரிகள் இன்றும் உலகில் உள்ளன. எடுத்துக்காட்டாக சில பாக்டீரியா, வைரஸ் வகைகள் மற்றும் மைட்டோகாண்ட்ரியா தொல் உயிரிகளின் சில எடுத்துக்காட்டுகள் ஆகும். மேலும் கூடுதல் தொகுப்பு கொண்ட உயிரிகள் உருவாயின (கூடுதல் தொகுப்பு உள்ளதாலேயே கூடுதல் பரிணாம வளர்ச்சி அடைந்தவை எனக் கருதக்கூடாது) இதன் தொடர்ச்சியாக பல செல் உயிரிகள் தோன்றின. எடுத்துக்காட்டாகப் பல செல் தாவர உயிரிகள் அந்தகால பூமியின் கடல் போன்ற நீர்நிலைகளில் பரிமாணம் அடைந்தன. அதன் பின்னர் லார்வா போன்ற உருவ அமைப்பு கொண்ட நுண்ணிய விலங்கு உயிரிகள் உருவாயின. இதற்கு அடுத்து மீன் இனம் உருவானது. இங்கே ஒரு செய்தியை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். ‘மீன்’ என்ற உயிரினம் கடலில் தோன்றியதன் பொருள் அதற்கு முன்பு இருந்த நீர் வாழ தாவரங்கள் அற்று அழிந்துபோயின என்பது அல்ல. மற்ற உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தது போலவே தொல் தாவர உயிரிகளும் பரிணாம வளர்ச்சியைக் கண்டன. அதே சமயத்தில் சில வகை தாவரங்கள் புதிய சூழ்நிலையை தாக்குபிடிக்க முடியாமல் அற்று அழிந்துபோயின; அதே போல சில மீன் வகைகளும் அற்று அழிந்து போயின. இதே விதி இன்றுவரை, இன்றுள்ள உயிரிகள் உட்பட எல்லா உயிரிகளுக்கும் பொருந்தும்; காலபோக்கில் சில உயிரின வகை அற்று அழிந்து போகுமல் புதியன உருவாகும், தொல் இனம் சில புதிய புதிய வடிவில் பரிணாம வளர்ச்சி அடையும். நீர் வாழ உயிரிகளில் சில நிலத்துக்கு செல்ல முடிந்தது. நிலத்திலும் சுவாசிக்கும் அமைப்பு உருவானது. இதன் தொடர்ச்சியாக நிலத்தில் தாவரங்களும் விலங்குகளும் பூஞ்சைகளும் தோன்றின. ஒரு வியப்பான செய்தி; பார்வைக்குத் தாவரம் போல இருந்தாலும் பூஞ்சைகள் தாவரத்தை விட விலங்கு வகைக்கு நெருக்கமானவை. இத காலகட்டத்தில் தொன்மையில் உருவான பாக்டீரியா, வைரஸ்கள், கடற்பாசிகள் மற்றும் பிற உயிரினங்கள் அனைத்தும் கூட பரிணாம வளர்ச்சி பெற்று புதிய வகை உயிரினங்களாக பரிணாம படிநிலை வளர்ச்சி அடைந்து வந்தன என்பது உங்கள் கருத்தில் இருக்கும் என நாம் நம்புகிறேன்.
பிரபஞ்சத்தின் பரிணாமும் பூமியில் உயிரினங்களின் தோற்றமும்
உயிரியல் பரிணாமம் மட்டும் தான் தாக்கம் ஏற்படுத்துகிற அல்லது வியப்பை ஏற்படுத்துகிற பரிணாமம் என்ற கருத்தை உங்களிடம் ஏற்படுத்த விழையவில்லை. பிரபஞ்சத்தின் பரிணாமமும் திகைப்பையும் மலைப்பையும் ஏற்படுத்தக்கூடியது. உலகின் உள்ள உயிரினங்கள் எல்லாம் பிரபஞ்சத்தை ஒப்பிடும்போது வெறும் தூசு மட்டுமே. உயரியல் பரிணாம வளர்ச்சியோ, பிரபஞ்ச பரிணாம வளர்ச்சியோ இரண்டும் நமது கட்டுப்பாட்டில் இல்லை. பண்டைய சில நூல்கள் பிரபஞ்சம் படைக்கப்பட்டது; ஒப்புயர்வற்ற படைத்தவர் ஒருவர் (அல்லது பலர்) உள்ளனர் எனக்கூறுகிறது. இந்தப் படைத்தவருக்கு மனித குணங்களை, உருவத்தைச் சாயலை அளித்துத் தான் இந்த நூல்கள் பேசுகின்றன.
ஆனால் பிரபஞ்சம் சுமார் 14 பில்லியன் ஆண்டுகள் பழமையானது, பூமியில் முதல் உயிரினம் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, டைனோசர்கள் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிரகத்தை ஆண்டபோது, மனிதர்கள் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் பரிணாமம் அடைந்தபோது, இது எப்படி சாத்தியமாகும்? பிரும்மாண்டமான இந்தத் தொன்மை வாய்ந்த பிரபஞ்சத்தில் கடைசியில் வந்து சேர்ந்தவர்கள் தான் மனிதர்களாகிய நாம். ஆனால் நம்மில் சிலர் நமக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டு முழுமையன பார்வையை அடைய மறந்துவிடுகிறோம்.
நல்ல செய்தி என்னவென்றால், இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய தரவுகளையும் மெய்களையும் ஆய்ந்து அறியக்கூடிய ஆக்கப்பூர்வமான மனங்களும் நம்மிடம் உள்ளன. அறிவியல் அறிவைப் பயன்படுத்தி சான்றுகளைத் திரட்டி, சரிபார்த்து அறிவை செழுமை செய்யும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அற்று அழிதல் நிகழ்வுகளும் புதிய உயிரினங்களின் தோற்றமும்
பேரழிவு நிகழ்வுகள் பூமிக்கு ஒன்றும் புதிதல்ல. எடுத்துக்காட்டாக ஒரு உயிரிக்கு மாசு வேறொரு உயிரிக்கு வரமாக அமையலாம். பூமியின் இளம் வயதில், துவக்க நிலையில் நீரில் உருவான சயனோபாக்டீரியா சூரிய ஒளியின் ஆற்றலை எடுத்துக்கொண்டு நீர் மூலக்கூறுகளைப் பிரிக்கும் வழியை உருவாக்கியது. இந்தப் பொறிமுறையை நாம் அறிவோம்; இது என்ன? ஆம், ஒளிச்சேர்க்கை! ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றலைப் பெற்ற இந்தப் பாக்டீரியாக்கள் ஆக்ஸிஜனை கழிவுகளாக வெளிபடுத்தியது; அதாவது ஆக்சிஜனை வெளியிட்டு அந்தக் கால பூமியை ‘மாசு’ செய்தது. அந்தக் கால பூமியில் வாழ்ந்த பெரும்பாலான உயிர்வளி வேண்டா (anaerobic) உயிரிகளுக்கு ஆக்சிஜன் தேவையில்லை; ஏன் ஆக்சிஜன் செறிவான வளிமண்டலம் அவற்றுக்கு மூச்சுமுட்டச் செய்யும். ஆயினும் சயனோபாக்டீரியா பல்கிப்பெருகி வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு கூடியது; இதன் தொடர்ச்சியாக அதுவரை பெரும்பான்மை நிலையில் இருந்த உயிர்வளி வேண்டா (anaerobic) உயிரிகள் நசிந்து போயின. ஆனால் அந்தக் கால ஆக்சிஜன் மாசு பிற்காலத்தில் மனிதன் உட்பட பல உயர் ஒழுங்கமைப்பு கொண்ட உயிரிகள் பரிணாம் அடைய வழிவகுத்தது. இதன் தொடர்ச்சியாக உயிர்வளி வேண்டா உயிரிகள் அனைத்தும் அற்று அழிந்து விட்டனவா? இல்லை. இன்றும் ஆக்ஸிஜன் இல்லாத சில மூலைமுடுக்குகளில் பூமியில் இன்னமும் இந்தவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. நம்மை போன்ற உயிர்வளிவேண்டுகிற (aerobic) உயிர்களுக்கு அத்தியாவசியமான ஆக்ஸிஜன் மூலகூறை (O2) முற்றிலும் வளிமண்டலத்திலிருந்து அகற்றும் படியான எதோ ஒன்றை செய்கிறோம் எனக்கொள்வோம். அதன் தொடர்ச்சியாக ஆக்சிஜன் தேவைப்படும் உயிரிகள் ஆற்று அழிந்துபோகும்; அந்த இடத்தை உயிர்வளி வேண்டா உயிரிகள் பற்றிச் செழிக்கும். இதன் தொடர்ச்சியாகப் பல்வேறு உயர் ஒழுங்கமைப்பு கொண்ட உயிர்வளி வேண்டா உயிரிகள் கூடப் பரிணாமம் அடைய வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழலில் அங்கும் இங்கும் உயிர்வளி வேண்டும் உயிரினங்களில் சில, அதன் சூழல் பொருத்த தன்மைக்கு ஏற்ப, தப்பி பிழைக்கும். அதிலும் புதுவகை உயிரினங்கள் உருவாகும்.
இதுவரை, இந்த உலகம் ஐந்து மிகப்பெரும் பேரழிவு நிகழ்வுகளைக் சந்தித்துள்ளது எனப் புதைபடிவ பதிவுகள் நமக்குக் காட்டுகின்றன. இவை காலநிலை மாற்றம், விண்கல் தாக்குதல் போன்ற நிகழ்வின் விளைவாக ஏற்பட்டவை. ஆர்டோவிசியன்-சிலூரியன் (Ordovician-Silurian) பேரழிவு 440 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வின் போது அந்தகாலத்தில் வாழ்ந்த சிறு கடல் வாழ உயிரிகள் அற்று அழிந்தன. டெவோனியன் (Devonian) பேரழிவு 365 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இந்த அழிவில் மேலும் பல வெப்பமண்டல கடல் இனங்கள் அற்று அழிந்துவிட்டன. பின்னர், பெர்மியன்-ட்ரயாசிக் (Permian-Triassic) பேரழிவு 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதுதான் இதுவரை நிகழ்ந்த பேரழிவுகளில் பெரும் பிரளய பேரழிவு எனக்கருதப்படுகிறது. முதுகெலும்பு உயிரிகள் உட்பட பற்பல உயிரினங்களை பாதித்தது. சுமார் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ட்ரயாசிக்-ஜுராசிக் (Triassic-Jurassic) பேரழிவு முதுகெலும்புள்ள க்ரூரோடார்சி போன்ற நிலத்தில் ஆதிக்கம் செலுத்திய இனங்களின் அற்று அழிவை ஏற்படுத்தியது. இந்த அழிவின் தொடர்ச்சியாக டைனோசர்கள் பல்கி பெருகி பலவேறு சிற்றினங்களாக பரிணமிக்க உதவியது. அதுவரை நிலப்பரப்பில் உள்ள உணவுவை ஆக்கிரமித்திருந்த க்ரூரோடார்சி போன்ற உயிரிகள் அகன்றதன் தொடர்ச்சியாக இந்த உணவு வாய்ப்பு டைனோசர்கள் போன்ற உயிரிகளுக்குக் கிடைத்தது. இது டைனோசர்கள் போன்ற உயிரியாங்களின் வளர்சிக்கு வழிவகுத்தது. சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ்-டேர்ஷியரி (Cretaceous-Tertiary கே-டி) பேரழிவு ஏற்பட்டபோது (பறவை அல்லாத) டைனோசர்கள் அழிந்து போகும் நேரம் வந்தது. இந்த நிகழ்வுக்கான ஆதாரம் முதலில் வால்டர் அல்வாரெஸ் மற்றும் சக ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. பூமிக்கு அடியில் அந்த காலகட்டத்தை சார்ந்த பாறை- மண் அடுக்கில் அசாதாரண அளவு இரிடியம் உலோகம் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்தத் தடயங்களிலிருந்து அஸ்டிராய்டு எனும் சிறுகோள் அளவு விண்கல் பூமியை தாக்கியது என அனுமானம் செய்தனர். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகப் பல்வேறு வகை உயிரினங்கள் உட்பட, பறவை அல்லாத டைனோசர்கள் உயிரினங்கள், அற்று அழிந்து போயின. ஆனால் பறக்கும் திறனுள்ள டைனோசர்களுக்கு என்ன ஆனது? அவை பறவைகளாகப் பரிணமித்துள்ளன. டைரனோசொரஸ் ரெக்ஸ் (டி-ரெக்ஸ்) க்கும் டைனோசர் ஸ்டெகோசொரஸ்க்கும் இருக்கும் மரபணு நெருக்கதைவிட டைரனோசொரஸ் ரெக்ஸ்கும் கோழிக்கும் கூடுதல் நெருக்கமான தொடர்புடையது என்பதை மேரி ஸ்விட்சர் மற்றும் அவரது சகாக்கள் கண்டுபிடித்தனர். K-T அழிவு நிகழ்வு சுமார் 50 சதவீத தாவரங்கள் மற்றும் விலங்குகளை அழித்துவிட்டது. மீதமுள்ள 50% சில உயிரிகள் தான் தற்போது நம்மைச் சுற்றி நாம் காணும் (மனிதர்கள் உட்பட) உயிரிகளாகப் பரிணாம வளர்ச்சியடைந்தன.
மனிதர்கள் மற்றும் ஆறாவது பேரழிவும்
ஆறாவது பேரழிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இது மனிதர்களின் கைவரிசையா? மனித இனத்தை நாம் கூட்டாகக் குறை கூறக் கூடாது. ராஜஸ்தானில் வறண்டு கிடக்கும் நிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயிகள் போதுமான தண்ணீர் அல்லது மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை, அவர்கள் வாழ்நிலையில் அவற்றை வீணாக்குகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் கால்நடையாகப் பயணம் செய்கிறார்கள்; அவர்கள் குடிசைகளில் வாழ்கின்றனர்; அவர்கள் மக்காத பொருட்களைப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை அல்லது மிகமிக குறைவாகத் தான் பயன்படுத்துகிறார்கள். அவர்கள்மீதும் சேர்த்து குற்றம் சுமத்துவது இரக்கமற்றது, ஏனென்றால் அவர்கள் உண்மையில் ஒரு பாரிய பேரழிவை நோக்கிய போக்கின் ஆரம்பகால பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக உள்ளனர். உண்மையில், நகரத்தில் வசிக்கும் தொழிலாளர் வர்க்கம் கூட (குறிப்பாக வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்கின்றனர்; வளங்களை அதிகமாக நுகர வாய்ப்பு வசதியே இல்லை; வாங்கும் சக்தியும் இல்லை. ஏப்ரல் 2024 நிலவரப்படி, உலக மக்கள்தொகையில் சுமார் 700 மில்லியன் மக்கள் கடும் வறுமையில் வாழ்கின்றனர். இவர்களில் சுமார் 90% பேர் சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் வாழ்கின்றனர். தீவிர சீர்திருத்தம் அல்லது புரட்சி ஏற்படாத வரை இந்த எண்ணிக்கை வரும்காலங்களில் அதிகரிக்கும். தேசிய மற்றும் உலகத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மையான அரசியல் தலைவர்கள் புவியின் சுற்றுச்சூழலைப் பேணுவது பற்றி எந்த அக்கறையும் காட்டுபவர்களாக இல்லை. இந்தியா கேட் அருகே நூற்றாண்டு பழமையான மரங்களைப் பாஜக அரசு எப்படி அழித்தது என்பதற்கு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், இது இந்தியாவில் பெரும் நகர்ப்புறங்களில் எஞ்சியிருக்கும் மிகச் சில பசுமை வெளிகளில் ஒன்று. அங்குத் தான் டெல்லியில் ஓரளவு சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். இப்போது அதுவும் போய்விட்டது. அந்தச் சாலையை அழகுபடுத்துவதற்காக அந்த மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால், அந்தப் பகுதியில் நில அமைப்பு பாதிக்கப்பட்டு அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கிவிடுகிறது.
நம்மைச் சுற்றியுள்ள வாழிடங்களை அழகுபடுத்துதல் என்றாலே மரங்களை வெட்டுதல், பூந்தோட்டம் அமைதல், கான்கிரீட் செய்யப்பட்ட நிழல் சாலை போன்ற பைத்தியக்காரத்தனமான முதலாளித்துவ பார்வையில் நாம் சிக்கிவிடுகிறோம் என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. நமக்கு என்ன நேர்ந்தது? அமெரிக்காவில், மக்கள் தங்கள் வீட்டு முன்புறம் உள்ள புல்வெளிகளை வெட்டி சீர்செய்வதில் பெரும் ஆர்வமாக இருப்பதை நான் காண்கிறேன். புல்லைவிட அளவில் பெரிதாக வளரும் புதர்கள், செடிகள் மரங்கள் முதலிவற்றை வெட்டி ஒரே அளவில் புல்தரை ஏற்படுத்துவதில் பெரும் பிரயத்தனம் காண்பிக்கின்றனர். புல்லும் செடியும் புதரும் வளரும் சமச்சீரற்ற தன்மை அசிங்கமாக உள்ளது என்ற கருத்தே அழகியலாக மேலோங்கியுள்ளது. அழகுணர்ச்சி, சீர்நிலை என்ற பெயரில் தமது வீட்டு தோட்டத்தில் தொந்திரவு செய்யாத தேனீக்களை அப்புறப்படுத்த தயங்குவது இல்லை. சுற்றி ஓடும் அணில்களைக் கொல்ல விஷம் தெளிக்கவும்; வெட்டுக்கிளிகள் போன்ற சிறு பூச்சிகள் கூட வீட்டு தோட்டத்தில் பறந்து வாழ்வதை அனுமதிப்பது இல்லை. அதே சமயம், பன்மடங்கு பிளாஸ்டிக் பொருட்களை வாங்குகிறார்கள்; அவர்கள் மீண்டும் பயன்படுத்தவோ அல்லது மறுசுழற்சி செய்வதோ இல்லை; அவர்கள் தண்ணீரை வீணாக்குகிறார்கள். அடிப்படையில், எந்தச் சமநிலையும் இல்லை.
இது போன்ற வாழ்வியல் நடத்தை மூன்றாம் உலக நாடுகளில் ஒப்பீட்டளவில் குறைவாகவே நிகழ்கிறது, குறிப்பாக நுகர்வு பண்பாடு கூடுதலாக தாக்கம் செய்யாத சமூகங்களில் இயல்பாகவே நாம் பயன்படுத்திய காகிதம், கண்ணாடி ஜாடி, பிளாஸ்டிக் கவர்கள் போன்றவற்றை மறுசுழற்சி செய்கிறோம். நமது இந்த இயல்பு நடத்தை பல அமெரிக்கர்களுக்கு மிகவும் வினோதமாகக் காட்சி தருகிறது.
அழகு என்றால் என்ன? சுத்தமான காற்று சுகாதாரமான குடிநீர்; எந்தக் குழந்தையையும் பசியுடன் படுக்கைக்குச் செல்ல விடாமல் காப்பது; தோட்டத்தில் மின்மினிப் பூச்சிகளைப் கண்டு களிப்பது; சுற்றியோடும் அணில்கள் பூமியில் விதைக்கும் விதைகளிலிருந்து பல்வேறு செடி கொடிகள் துளிர்விட்டு வளர்ந்து பல வண்ணங்களில் பூக்களை பூப்பது; பறவைகளும் தேனீக்களும் இந்தப் பூவிலிருந்து தேனை பெற்று அயல் மகரந்த சேர்கை செய்வது. காலையில் புலர்ந்ததும் இந்த பறவைகள் எழுப்பும் சப்தம். இவை தான் அழகு.
கடந்த 500 ஆண்டுகளில், மனித நடவடிக்கைகளால் டோடோ பறவை போன்ற 869 உயிரினங்கள் அழிந்து போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நம்மிடம் தரவுகள் உள்ளன. முந்தைய K-T அழிவு காலத்தில் அறியப்பட்ட இழப்புகளின் விகிதத்தைவிட இன்று ஏற்படும் இந்த அழிவு விகிதம் கூடுதலாக இருப்பதாக நார்மன் மியர்ஸ் எனும் உயிரியலாளர் கணக்கீடு செய்துள்ளார். இது நம்மால் கடந்த காலத்தில் இனம் கண்டு பதிவு செய்யபட்ட உயிரினங்களில் நசிவு. இன்னும் நாம் இனம் காணாத பற்பல உயிரினங்கள் மலைகள் காடுகள் கடல்களில் உள்ளன. இங்கும் ஏராளமான உயிரினங்கள் நசிந்து கொண்டிருகின்றன. ஆழ்கடல் சுரங்க நிறுவனங்கள் இப்போது உலோகங்களுக்காகக் கடல் படுகைகளை அகற்றி வருகின்றன. அவர்களின் இயந்திரங்கள் ஒரு நொடியில் பில்லியன் கணக்கான உயிரினங்களை வெளியேற்றுகின்றன! பெரிதாக செய்திகளில் பேசப்படும் அனந்த் அம்பானியின் வனதாரா யானைகள் காப்பகத்தை எடுத்துக்கொள்வோம். இயற்கையை பாதுகாக்க நம்மில் சிலரிடம் உள்ள மிகமிக தவறான பார்வைக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. இயற்கையைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, அதைத் தனியாக விட்டுவிடுவது அல்லது பல ஆண்டுகளாகக் கல்வி மற்றும் புரிதலுள்ள நிபுணர்களின் மேற்பார்வையில் ஒப்படைப்பது. துரதிர்ஷ்டவசமாக, பணத்தால் மட்டும் அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாது. அந்தச் சரணாலயம் உண்மையில் அந்த யானைகளுக்கான சிறைச்சாலை. ஒப்பீட்டளவில் வறண்ட நிலத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்குப் பதிலாக மழைக்காடுகள் போன்ற யானைகளின் இயல்பான வாழ்விடங்களில் இடையூறு இல்லாமல் வாழ விடுவதே சால சிறந்தது. காடுகளில் அதன் இயல்பான உணவை உண்டு வாழ அனுமதிக்காமல் அரிசியும் பருப்புமா அதன் உடலுக்கு உகந்தது? பண குவியல் இடையே வாழும் இவர்கள் மெய்யாகச் சூழல் மீது ஆர்வம் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அவர்கள் இயற்கையைத் தொந்தரவு செய்யாமல் அழகாகப் பாதுகாக்க சூழலியல் நிபுணர்களின் முயற்சிகளுக்கு நிதியளித்திருப்பார்கள்.
ஒவ்வொரு நாளும் 137 வகையான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சிகள் அல்லது வருடத்திற்கு 50,000 இனங்கள் காடழிப்பு காரணமாக அழிந்து நசிந்து வருகிறது. மழைக்காடுகளை அழிப்பதால் ஆண்டுக்கு 4,000 முதல் 6,000 இனங்கள் இழப்பு ஏற்படுவதாக மழைக்காடு பாதுகாப்பாளர்கள் மதிப்பிடுகின்றனர். பொட்டானிக் கார்டன்ஸ் கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் (BGCI) இன் 2021 அறிக்கையின் அடிப்படையில், உலகின் 30% மர இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன, மேலும் 440 இனங்களில் ஒவ்வொன்றுக்கும் தற்போது 50க்கும் குறைவான தனி உயிரிகளை மட்டுமே காடுகளில் உள்ளன. இந்த எண்ணிக்கையானது அழிவுஅபாய நிலையில் உள்ள பாலூட்டிகள், பறவைகள், நில-நீர் வாழ் உயிரினங்கள், ஊர்வனவற்றின் கூட்டு எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம். 2022 ஆய்வின்படி, 40% நில-நீர் வாழ் உயிரினங்கள், 25% பாலூட்டிகள், 21% ஊர்வன மற்றும் 13% பறவைகள் தற்போது அழியும் அபாயத்தில் உள்ளன. உலக வனவிலங்கு நிதியம் (WWF) 1970ல் இருந்து உயிரினங்களின் எண்ணிக்கை சராசரியாக 69% குறைந்துள்ளது என்றும் கண்டறிந்துள்ளது. தற்போதைய உயிரினங்களின் அழிவு விகிதம் இயற்கையான அழிவு விகிதத்தை விட 1,000 முதல் 10,000 மடங்கு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்! பிரபல ஆக்ஸ்போர்டு உயிரியலாளரான ராபர்ட் மே “மனிதகுலம் tதனக்குள் தீர்வை இனம் காணும் முன்பாக, நாம் பெற்ற பல்லுயிர்த்தன்மையின் பெரும்பகுதி மறைந்துவிடும்” என குறிப்பிடுவது நினைவில் கொள்ளத்தக்கது.
தற்போது, உலகின் 16% நிலமும், அதன் 7% தண்ணீரும் மட்டுமே ‘பாதுகாக்கப்பட்ட’ பகுதிகளுக்குள் வருகின்றன. இங்கே கூட, உயிரினங்கள் வாழ முடியாது. சில விலங்குகளுக்கு கொடுக்கப்பட்ட சிறிய மைதானங்களைவிட அதிக இடம் தேவை. உதாரணமாக, கிர் சரணாலயத்தில் உள்ள சிங்கங்கள் இடப்பற்றாக்குறை காரணமாக, ஆபத்தான வாழ்விடமான கடலோரப் பகுதிக்கு நகர்கின்றன. சைபீரியாவில் இருந்து சென்னைக்கு வரும் புலம்பெயர் பறவைகள் (அங்குள்ள கடுமையான குளிர்காலத்திலிருந்து தப்பிக்க) சதுப்பு நிலங்கள் குப்பை கொட்டும் இடமாக மாறியதால் இப்போது எங்கும் செல்ல முடியாத நிலை! சில ஆண்டுகள் முன்னர்வரை கூட, பதின்ம வயதினராக இருந்த சமயத்தில், நானும் என் உறவின சிறார்களும் அந்தப் பறவைகளைப் பார்த்து ரசிப்போம். ஆனால் இப்போது மூக்கை மூடிக்கொள்ளாமல் அந்தச் சாலையைக் கடக்க முடியாது. பறவைகள் மீது அக்கறை இல்லாவிட்டாலும், சாலை மற்றும் காற்று முழுவதும் மாசுபடுவதால், மனிதர்களுக்கு காற்றில் பரவும் மற்றும் சுவாச நோய்களை உண்டாக்குகிறது என்பதை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். நம் குழந்தைகள் அந்தக் காற்றை சுவாசிக்கக் கூடாது – குறைந்தபட்சம் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும்.
நமது இனத்தின் மேல்தட்டு வர்க்கம் மற்ற உயிரினங்களில் தொடர்ந்து தலையிட்டு அழிவை ஏற்படுத்தும் அதே வேளையில், அவர்கள் தங்கள் இனத்தின் உறுப்பினர்களையும் துன்புறுத்துகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வளங்களைக் கட்டுப்படுத்தும் 10% மனிதர்கள்தான் நாம் எதிர்கொள்ளும் இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுக்குக் காரணம். இந்த 10% பேர் மனித சமுதாயத்தின் எஞ்சியவர்கள் இல்லாமல் மேலும் மற்ற உயரினங்கள் இல்லாமல் வாழ முடியாது என்பதை உணரவில்லை. கோவிட்-19 தொற்றுநோயை எடுத்துக் கொள்ளுங்கள். வைரஸ் ஏழைகளை மட்டும் தாக்கியதா? ஒருவர் எவ்வளவு பணக்காரர் என்பது முக்கியமல்ல. தடுப்பூசி போடுவதற்கும், பரவலைத் தடுப்பதற்கும், மற்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கும் உலகம் முழுவதும் ஒன்றிணைந்தபோதுதான் தொற்றுநோயைத் தடுக்க முடிந்தது. தொற்றுநோய் முடிந்துவிட்டாலும், கொரோனா வைரஸ் அழிந்துவிடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்; அது நம்மைச் சுற்றி இன்றும் பல்கி பெருகி பரிணாமம் அடைந்து வருகிறது. ஆயினும் நம்மில் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டோம்; நமது குழந்தைகளுக்கும் அளிப்போம் என்பதால், 2019-2021 இல் தாக்கியது போல் இனி இந்த வைரஸ் நம்மைத் தாக்க முடியாது.
இயற்கைக்கு நாம் தேவையா? சூழல் நெருக்கடியில் நமது பாத்திரம் என்னவாக இருக்க வேண்டும்?

நமக்கு இயற்கை தேவை. பூமியின் கடந்த கால வரலாற்று எடுத்துக்காட்டுக்கள் மற்றும் தற்பொழுதைய போக்குகள் இதை தெளிவாக்கியுள்ளன என்று நம்புகிறேன். கடலில் எண்ணெய் கசிவு நமக்கு விரும்பத்தக்கதல்ல, ஏனென்றால் நமக்குத் தேவையான வாழ்விடங்களையும் வளங்களையும் மாசு செய்து அவற்றை நாம் இழக்க நேரிடும். ஆனால் மரினோபாக்டர், ஓசியானோஸ்பைரல்ஸ், சூடோமோனாஸ், அல்கானிவோராக்ஸ் போன்ற கடல் பாக்டீரியாக்களுக்கு, பெட்ரோலியத்தில் உள்ள உட்பொருள்கள் சுவையான விருந்து. அவற்றுக்குக் கடலில் எண்ணெய் கசிவு அதிர்ஷ்டம் தரும் லாட்டரி. இது அணுக்கழிவு மாசு மற்றும் அணு விபத்து பகுதிக்கும் பொருந்தும். இவை நமக்குப் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களைத் தோற்றுவிக்கும். ஆனால் ஜெம்மா ரெகுவேரா Gemma Reguera) மற்றும் அவரது ஆய்வுக்குழுவினரால் இனம் காணப்பட்ட ஜியோபாக்டர் எனும் கடற்பாசி வகை உயரி உருவாக்கும் ஸ்பான்ஜ் போன்ற பொருள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் யுரேனியத்தை உறிஞ்சும் என்கிறது.
கிட்டத்தட்ட 4 பில்லியன் ஆண்டுகளாகப் பூமியில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. நாம் இல்லை என்றால் கூட எதாவது வகை உயிரினங்கள் பூமியில் தொடர்ந்து வாழும். எனவே மனித நடவடிக்கைகள் உருவாக்கி வரும் கடுமையான தட்பவெப்ப நிலைகள், கொடுமையான சூழல் மாசுகளிருந்து இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். பாலைவனங்களில் வெள்ளப்பேருக்கு ஏற்படுகிறது;அதே சமயம்கடந்த காலங்களில் நல்ல மழை பொழிவு பிரதேசங்கள் தற்போது வறட்சி நிலையைச் சந்திக்கின்றன. கடந்த காலங்களில், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கூட, அமெரிக்கா, வடக்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள பெரும்பாலான வீடுகள் மற்றும் இந்தியாவில் இமயமலைத் தொடரில் உள்ள பகுதிகளில் மின்விசிறிகள் தேவை இருக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளில் இந்தபகுதிகளில் வீசும் அனல் மற்றும் வரலாறு காணாத வெயில் மக்களை அந்த இடங்களில் மின்விசிறிகளை வாங்க வைத்துள்ளது. இப்போது இந்தச் சூழலில் பூமத்திய ரேகைக்கு அருகில் வாழும் மக்களைக் கற்பனை செய்து பாருங்கள்; அங்கு வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. இந்த மாற்றங்களின் தாக்கம் மனிதர்களுக்கும் உகந்ததல்ல. ஏன் எனில், இந்த உயர் வெப்ப நிலையால் பனிப்பாறைகள் உருகி, அங்கு வாழும் உயிரினங்கள் துயரடைகின்றன. உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகிறது; நீரின் உப்புத்தன்மையை குறைக்கிறது. கடலில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், கடல்நீரில் உப்பு அளவு மாறுவதன் தொடர்ச்சியாக எப்படி சில மீன் இனங்கள் (உள்ளூர் மக்கள் பல நூற்றாண்டுகளாக உட்கொண்டிருக்கும் மீன்கள் போன்றவை) அழிந்து போகின்றன என்பதை சமீபத்திய கடல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றான. எனினும் இந்த மாறிய உப்புநிலைக்கு பொருத்தமான புதிய உயிரிகளும் கடலில் பரிணாமம் அடைந்து வருகின்றன. உயரும் கடல் மட்டம் கடற்கரையின் விளிம்புகளை அரிக்கிறது. நிலத்துக்கு அடியில் இருக்கும் நல்ல நீரோடு கடலின் உப்பு கலப்பு ஏற்படுகிறது. இது அந்தப் பகுதியில் குடிநீர் வளத்தை அச்சுறுத்துகிறது. அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் இடம்பெயரும் நிர்பந்தம் உருவாகிறது.
மனிதநல அக்கறை மைய கண்ணோட்டத்தில், நமது சொந்த நலனுக்காகக் காலநிலை மாற்ற சூழ்நிலையைச் சரிசெய்ய வேண்டும். காலநிலையில் ஏற்படும் கடுமையான மாற்றங்களின் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு அயல் உயிரினங்கள் உருவாகின்றன. எடுத்துக்காட்டாக உயர்ந்து வரும் வெப்பம் சில வைரஸ் இனங்கள் பல்கி பெருக வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது;. ஆனால் அந்த வைரசை தாங்கி வாழும் ஆற்றலை நாம் பெற்றிருகிரோமா? இல்லை என்று தான் சொல்லவேண்டும். இந்த வகை வைரஸ்களை நமது நோயெதிர்ப்பு மண்டலம் சந்திக்கும்போது திகைத்து மலைத்துத் திக்குமுக்காடி போய்விடும்.
முதலாளித்துவ அமைப்பிலிருந்து விலகி, வளங்களைச் சமமாக மறுபகிர்வு செய்வதன் மூலமும், பெரிய நிறுவனங்கள் எல்லா இடங்களிலிருந்தும் வளங்களைக் கொள்ளையடிப்பதற்குப் பதிலாக உள்ளூர் மக்களை வளங்களை நிர்வகிக்க அனுமதிப்பதன் மூலமும் மட்டுமே அதிக துன்பம் இல்லாமல் உயிர்வாழ மனித இனத்துக்குச் சிறிதளவு வாய்ப்பு உள்ளது. முறையான வள மேலாண்மை ஒரு திறமையான தீர்வு. ஒவ்வொருவரின் தேவைக்கும் போதுமான அளவு வளங்கள் உள்ளன; ஆனால் முதலாளித்துவ லாபவெறி பேராசைக்கு எல்லை இல்லை.
உதாரணமாக, விவசாயிகள் அல்லது மீனவ மக்கள் தங்கள் நிலம் அல்லது கடலின் விதிகளை அறிந்திருக்கிறார்கள்; தங்கள் பகுதி வளமாக நிலைத்து நிற்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆனால் முதலாளித்துவ முறை லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொள்கிறது. விளைச்சலை நிலையானதாக அதிகரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆதரவும் தேவை. இனப்படுகொலையை ஊக்குவிக்கும் ஏவுகணைகளை உற்பத்தி செய்வதை விட அல்லது பெரும்பான்மையான மக்கள் கேட்காத அல்லது தேவையில்லாத கோவில் மசூதி சர்ச் போன்றவற்றை கட்டுவதை விட உயிரியல் போன்ற அறிவியல் ஆராய்ச்சிக்கு அரசுகளிடமிருந்து அதிக நிதி செல்ல வேண்டும் என்பதே இதன் பொருள். நமது வாழ்விடத்தைப் பாதுகாக்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும், ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் நோக்குடன் நடத்தப்படும் ஆய்வுகளை மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் அரசாங்கத்திடம் பிச்சை எடுக்கும் நிலையே உள்ளது எனபது தான் உண்மை. மெய்யான பிரச்சனைகள் மீது ஆய்வு செய்ய நிதி ஒதுக்குவதில் கவனத்தை ஈர்ப்பதில் நாம் அரிதாகவே வெற்றி பெறுகிறோம்.
எடுத்துக்காட்டாக, டாக்டர். ரெகுவேரா (யுரேனியத்தைஉறிஞ்சும் பாக்டீரியா பொறிமுறையைக் கண்டுபிடித்தவர்) அல்லது கேடலின் கரிகோ (இவர் நியூக்ளியோசைடு அடிப்படை மாற்றங்களை கண்டுபிடித்ததன் மூலம் கோவிட்-19க்கு எதிராக பயனுள்ள mRNA தடுப்பூசிகளை உருவாக்க முடிந்தது) முதலியோர் தமது ஆய்வு பயனைத் தரும் எனக் காட்டிய பிறகுதான் ஆய்வுக்கான சீரான நிதி வளத்தைப் பெற முடிந்தது. இந்தப் போக்கு மாற வேண்டும், ஏனென்றால் நமது உயிர்வாழ்வதற்கு அடிப்படை அறிவியல் முக்கியமானது. இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாக உறிஞ்சி சிலரை பெரும் பணக்காரர்களாக ஆக்கும் போக்குக்குப் பதில் விவசாயத் தொழிலாளர்கள், கடலோர மற்றும் வன சமூகங்கள், அடிப்படை அறிவியல் முயற்சிகளை ஆதரிப்பது தான் சிறந்த அரசின் இலக்காக இருக்கவேண்டும்.
உதாரணமாக, இயற்கை சமநிலை மற்றும் மறுசீரமைப்புக்கான உரிமையை உள்ளடக்கிய ஏழு ‘தாய் பூமி’ உரிமைகளின் தொகுப்பை ஈவோ மோரேல்ஸின் பொலிவிய அரசாங்கம் (அமெரிக்காவில் 500 ஆண்டுகால கடுமையான அநீதிக்குப் பிறகு) அவர்களது அரசியலமைப்பில் இணைத்துள்ளது. இது போன்ற சட்டங்கள், வரைமுறைகள் கூடுதல் தேவை. இடது சாரி கேரள அரசு (அதன் பசுமை கேரளா இயக்கத்தின் மூலம்) இயற்கையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல வனங்களை அதன் போக்கில் விட்டுவிடுவது; வனவிலங்கு வேட்டையாடுவதை கடுமையாகத் தடுத்து நிறுத்துவது போன்ற நடவைகைகளை எடுத்துவருகிறது. உதாரணமாக, பல தலைமுறைகளாக யானைகளுடன் வாழும் அனுபவமுள்ள உள்ளூர்வாசிகள் அல்லது வனவிலங்குகள் குறித்த நிபுணத்துவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்கள் மட்டுமே யானைகளைப் பராமரிக்க முடியும். மற்றவர்கள் யாரும் அவர்களுக்கு அருகில் செல்லக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. இவையெல்லாம் சரியான திசைவழியில் செல்லும் போக்குகள்.
டேவிட் குவாமென் போன்ற உயிரியலாளர்கள், பூமியானது வெறும் ஐந்து ஆறு மனித தலைமுறைகளில் ‘களைகளின் கிரகமாக’ இருக்கும் என்று கணித்துள்ளனர். மனிதனை போலவே விரைவாக இனப்பெருக்கம் செய்யும், சுறுசுறுப்பாக துடித்து இயங்கும், வாய்ப்பு கிடைத்த இடங்களை எல்லாம் ஆக்கிரமிக்கும் தன்மை கொண்ட காகம், வெட்டுக்கிளிகள், கட்டையாக உயரமாக வளரும் புற்கள், எலிகள்,காட்டு மரச்சுண்டெலி, பாசி பன்றிக்குட்டி போன்ற நுண்ணுயிரிகள், பல்வேறு வகை பக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்ற உயிரினங்களின்பல்கி வாழும் உலகமாக பூமி மாறிவிடும் என்கிறார். இந்த சூழல் மனிதர்கள் வாழ்வதற்கு சங்கடமான இடர் மிகுந்த வாழ சூழலாக இருக்கும். இதற்கிடையில் தற்போது பூமியில் உள்ள பல்லுயிர்களில் பெரும்பகுதி அற்று நசிந்துபோயிருக்கும். அத்துடன் அந்த தாவரங்கள் உயிரினங்கள் தம்மிடம் கொண்டிருந்த அனைத்து மரபணு மற்றும் மருந்து வளங்களையும் இழந்திருப்போம். இதுவரை சந்திக்காத வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்கொள்வோம். ஆற்றல் ஆதாரங்களாக நாம் பயன்படுத்தும் பெரும்பாலான தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழிந்துவிடும் அல்லது மிகவும் ஆபத்தான அழிவு நிலையில் இருக்கும்.
நாம் பழகிப் பரிச்சயமான அழகியல் ரீதியாக இனிமையான இயற்கை காட்சிகள் மறைந்து நமது இருப்பின் அழகியல் மந்தமாக்கிவிடும். ஏற்கனவே இந்தக் காட்சிகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம். மிகவும் பின்தங்கிய வறுமை நிலையில் உள்ள இரண்டு பில்லியன் ஏழைகளின் வாழ்க்கை நசிவடைந்து அவர்கள் உயிர்வாழ முடியாமல் கூடப் போகலாம். இதே போக்கு தொடர்ந்தால் இருக்கும் வளங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டு வருவதால், காலபோக்கில் அனைவரும் சிறிதுசிறிதாக ஏழைகளாக மாறிவிடுவோம். பல்லுயிர் இன்மையினால் தனிமை வரும். இயற்கை அழகு அழிவதால் அசிங்கமான இடமாகப் பூமி மாறிவிடும். ஆனால் இயற்கை இதுகுறித்து கவலைப்படப்போவதில்லை. உலகம் இருண்டுவிடாது. அங்கே புதிய பரிணாம படிநிலை வளர்ச்சி ஏற்படும். புதிய உயிரினங்கள் தோன்றும். இந்தப் புதிய சூழலுக்கு பொருத்தம் கொண்ட உயிரிகள் வளர்ச்சியைக் காணும். உருப்பெறும் இந்தப் புதிய உயிரினங்கள் மனிதர்களுக்குச் சாதகமாக இருக்கும் எனக் கூற முடியாது; ஏன் சவாலாகக் கூட இருக்கலாம். பாக்டீரியா, சிற்றினங்கள் பரிணாமம் அடையும் வேகத்தில் மனிதர்களாகிய நாம் பரிணாமம் அடைவது எளிதல்ல. காலப்போக்கில் உலகில் மாறிவரும் சூழல் மனிதர்களுக்குப் பொருத்தமற்றதாக மாறி மனித இனமே அழிந்து போகலாம்.
யானை தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்வதை போலத் தான் வெளியிடும் ஆக்சிஜன் தனக்கே ஆபத்தாக முடியும் எனச் சைனோபக்டீரியா அறிந்திருக்கவில்லை. வளிமண்டலத்தில் ஆக்சிஜன் ‘மாசு’ (சைனோபக்டீரியா பார்வையில்) கூடிகூடி ஒருகட்டத்தில் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்த சைனோபக்டீரியா போன்ற உயிர்வளி தேவையற்ற உயிரினங்கள் அற்று அருகி உலகில் சில இடங்களில் மட்டும் இன்று மிச்சம் உள்ளன. நல்ல காலமாக மனிதர்களுக்கு வெறும் மரபணு பரிணாம வளர்ச்சி மட்டும் இல்லை. மனித சமுதாயத்தில் சமூக மற்றும் கலாச்சார பரிணாமம் என்று ஒன்று உள்ளது. இதுதான் ஒரே நம்பிக்கை கீற்று. மனித பார்வையில் இருண்ட, சாதகமற்ற கிரகமாக பூமி மாறாமல் இருக்க சிறு வாய்ப்பு உள்ளது என்றாலும் அதை நாம் பயன்படுத்த வேண்டிய தருணம் இது. இப்போதுள்ள காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்தி, மேலால் மெல்ல முன்பு இருந்த சாதகமான காலநிலைக்கும் சுற்றுசூழல் நிலைக்கும் திரும்புவதற்கு இன்னும் தாமதமாகவில்லை. கிரகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்தவல்ல ஓசோன் படல ஓட்டை சாவலை நாம் சந்தித்துள்ளோம். தரைபரப்பு அருகே நாம் சுவாசிக்கும் உயரத்தில் வளிமண்டலத்தில் ஓசான் நமக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் பூமியின் மேற்பரப்பில் இருந்து 15-30 கிமீ மேலே உள்ள அதன் அடுக்கு சூரியனிலிருந்து தீங்கு விளைவிக்கும் (மனிதர்கள் போன்ற உயிரினங்களுக்கு) புற ஊதா கதிர்வீச்சைத் தடுக்கிறது. குளோரோபுளோரோகார்பன்கள் (CFCகள்) போன்ற சேர்மங்களால் ஓசோன் படலம் தொடர்ந்து சிதைந்து கொண்டே இருந்தது. மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் கருவிகள் அதன் அடுக்கில் ஒரு ‘துளை’ உருவாதை தெளிவாக காட்டின, அந்த துளை வளர்ந்து பெரிதாகிக்கொண்டே இருந்தது. 1987 இல் இறுதி செய்யப்பட்ட மாண்ட்ரீல் நெறிமுறையில் உலகநாடுகள் கையெழுத்திட்டனர். இது ஓசோன் படலத்தைப் பாதிக்கும் பொருட்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு (ODS) மூலம் அடுக்கு மண்டல ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் வழியே முதலாளித்துவ லாபவெறிக்கு கடிவாளம் இட்டு ஓசான் படலத்தைத் தீங்கு செய்யும் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் பயன்பாட்டை படிப்படியாக தடுத்து நிறுத்தினார்கள். இதன் விளைவு இன்று என்ன தெரியுமா? துளை மெதுவாக சிறியதாகி வருகிறது. ஓட்டை அடைபட்டு வருகிறது. எனவே, நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும், ஆனால் தாமதமாகிவிடும் முன் அதைச் செய்ய வேண்டும்.
நம் முன்னர் தலையாய சவால் உள்ளது என ஏற்றுக்கொள்வது தீர்வுக்கான முதல் படி. டிரம்ப் போன்ற தலைவர்கள் பருவநிலை மாற்றம் மெய்யல்ல என இன்னமும் கூறும்போது, நாம் என்ன செய்ய முடியும்? எளிமையாக நாம் அதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்கலாம். அதன் மூலம் அதுபோன்ற எண்ண ஓட்டம் உடையவர்களை ஆட்சி அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுக்கலாம். மிக முக்கியமாக லீ பிலிப்ஸ் கூறுவது போல சுற்றுசூழல் பாதுகாப்பதில் “நாம் முன்னேற வேண்டும்… இயற்கையின் பொருட்டு காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு மற்றும் மாசுபாடு போன்ற பிரச்சனைகளை சரிசெய்து, கற்பித்த சமநிலைக்கு திரும்வது அல்ல நம் நோக்கம். நமக்காக.” ஆம் மனிதகுலத்தின் இருப்பு இன்று நாம் என்ன செய்யபோகிறோம் என்பதில் தான் உள்ளது.
தொகுப்பாக
ஊழியிறுதி உலகழிவு கருப்பொருள் திரைப்படங்களுடன் இந்த கட்டுரையைத் துவங்கினேன். இவற்றைவிட சிறந்த ஊழியிறுதி உலகழிவு திரைப்படம் “Don’t Look Up” எனும் ஹாலிவுட் திரைப்படம். இந்தத் திரைபடத்தில் வரும் ஒரு காட்சி சம்பவத்தை விவரித்து இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். இந்தத் திரைப்படத்தில் ஒரு ஆபத்தான பாரிய விண்கல் பூமியைத் தாக்குவதைப் பற்றிக் கவலைப்படாத ஒரு பாத்திரம் உள்ளது. உலக செல்வந்தர்களில் ஒருவரான அவர் உயர் தொழில்நுட்ப மேம்பட்ட கேப்சூலை உருவாக்கியுள்ளார். அதில் அமர்ந்து கொண்டால் பூமி அழிந்தாலும் இடிபாடுகள் சுனாமி எல்லாவற்றிலிருந்தும் தப்பி பிழைக்கலாம். திரைப்படத்தில் விண்கல் பூமியை தாக்குகிறது; அவரும் அந்தக் கேப்சூலில் தஞ்சம் அடைகிறார். விண்கல் தாக்கிப் பூமி அழிகிறது. பேரழிவு நிகழ்வுகள் நடந்து முடிகின்றன. சில காலம் கடந்தபின்னர் பாதுகாப்பு கேப்சூலிலிருந்து வெளிவருகிறார். உலகில் அவரைத் தவிர எல்லோரும் மடிந்து விட்டனர் எனக் காண்கிறார். இடிபாடுகளுக்கு அடியிலிருந்து வெளிவரும் அவர் செய்யும் முதல் விஷயம், தனது ஸ்மார்ட்போனை வெளியே இழுத்து, “நான் பூமியின் கடைசி மனிதன்” என்று ட்வீட் செய்வது தான். நமது மேல்தட்டு வர்க்கத்தினரின் வீண் தற்பெருமைக்கும் முட்டாள்தனத்துக்கும் உச்சம் இதுதான்.

காலநிலை மாற்றம் நமது இருப்பை கேள்விக்குள்ளக்குகிறது. மனிதர்களாகிய நமக்கு மகிழ்ச்சியான செய்தியோ இல்லையோ; மற்ற உயிரினங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், மனிதர்கள் உட்பட மூன்றில் இரண்டு பங்கு உயிரினங்களை அழிக்கும் ஒரு பேரழிவு நிகழ்வு ஏற்பட்டாலும், சில உயிரினங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். அந்தச் சில உயிரினங்கள் காலப்போக்கில் பரிணாம படிநிலை வளர்ச்சி அடைந்து பற்பல உயிரினங்கள் தோன்றி பூமி முழுவதும் பரவி வாழும். பேரழிவுக்குப் பின்னர் இந்த மீட்பு நிகழ்வு ஏற்பட சுமார் 5-10 மில்லியன் ஆண்டுகள் எடுக்கும். நமக்கு இது நீண்ட காலமாகத் தோன்றலாம். ஆனால் பூமியின் பரிணாம வரலாற்றை எடுத்துக்கொண்டால் இது வெறும் ஒரு கணம் மட்டுமே. பேரழிவுக்குப் பின்னர் -உலகம் -இயற்கை -முடிவுக்கு வராது; அது மிகமிக வித்தியாசமான கோளாக இருக்கும்.
கடவுளைக் காப்பாற்றுகிறேன் என்று சிலர் சகமனிதர்களுக்கு துன்பம் விளைவிப்பது போலத் தான் இயற்கையை காப்பாற்றுவோம் என்ற வீண் தற்பெருமை அறைகூவலும். இயற்கைக்கு நமது இரட்சிப்பு தேவையில்லை. நாம் தான் ஒன்றுகூடி அழிவிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் :
முனைவர் வந்தனா ரேவதி வெங்கடேஸ்வரன்
( ஹென்றி ஃபோர்டு ஹெல்த் ஆய்வு நிறுவனத்தில் உயிரியல் தகவல் வல்லுநர்/கணக்கீட்டு உயிரியலாளர்)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

