சுற்றுச்சூழல் சிதைந்து நாம் அழிவின் தொடக்கத்தில் உள்ளோம் ஆனால், நீங்கள் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்”, “நாம் இன்னும் மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம், ஆனால் இப்போது நடந்து கொண்டிருப்பதே தொடர்ந்தால் அது சாத்தியமல்ல. நெருக்கடியை நெருக்கடி போல் கருதாவிட்டால் எதுவும் நடக்காது” — கிரேட்டா தன்பெர்க்

“வேறொருவர் வெளியிடும் கார்பனுக்காக நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கிறோம்.” — மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத்

’’கடல் மட்டம் இந்த நூற்றாண்டின் இறுதியில் 2 மீட்டர் உயரம் கூட அதிகரிக்கலாம் என்பதை மறுக்க இயலாது. அதுதான் எங்களுடைய உண்மையான மோசமான எதிர்காலம்” — ஆன்டிகுவா மற்றும் பார்படாசின் பிரதிநிதி டயான் பிளாக்-லெய்ன்

மன்னார் வளைகுடாவின், தூத்துக்குடி குழுவில் 4 தீவுகள் உள்ளன அதில் விலங்கு சல்லி தீவும், கீழக்கரை குழுவில் உள்ள பூவரசன்பட்டி ஆகிய 2 குட்டி தீவுகள் கடலில் மூழ்கிவிட்டன.

1986 ஆம் ஆண்டு 16 ஹெக்டேராக இருந்த வான் தீவின் பரப்பளவு தற்போது 5 ஹெக்டேராக சுருங்கி இருக்கிறது என்றும் இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் வான் தீவு முற்றிலும் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது — மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் சார்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

மேற்கண்ட சொல்லாடல்கள் உலகின் பல பகுதி மக்களின், புவி வெப்பம் உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் வெளிப்பாடு.

புவிவெப்பமயமாதல்…
கணக்கீடும்… காக்கும் நடவடிக்கைகளும்….

சுற்றுச்சூழல் மாசுபடுவதால் மனித குலம் மட்டுமல்ல, விலங்கினங்களும், தாவர இனங்களும் அழிவுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால், இயற்கைச் சமநிலை இழந்து, பருவ காலங்கள் மாறி கடலில் ஆழிப் பேரலைகளும், கடும் புயல்களும், வரலாறு காணாத வெப்பமும், வறட்சியும் ஏற்படுகின்றன.

உலக அளவில் இதற்குக் காரணமாகப் பார்க்கப்படுவது புவிவெப்பமயமாதலும் அதற்குக் காரணமான கார்பன்(கரியமில வாயு) அதிக அளவு வெளியேற்றமும், பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரிப்பும் ஆகும். தொழிற் புரட்சி காலமாகிய 1850 லிருந்து இன்று வரை புவியின் சராசரி வெப்பம் 1.0 டிகிரிக்கு மேல் உயர்ந்துள்ளதாகவும் அதை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

புவி வெப்ப உயர்வு எவ்வாறு கணக்கிடப்படுகிறது …

உலகின் பல்லாயிரம் வெப்பமானிகள் காற்று மண்டலத்தின் வெப்பத்தை அளக்கின்றன. இந்த வெப்பமானிகள் தரையிலிருந்து குறைந்தபட்சம் 1.5 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளன. இந்த வெப்ப அளவுகள் தரவுத் தொகுப்புகளாக சேர்க்கப்படுகின்றன. கடலின் வெப்பம் வேறு விதமாக அளக்கப்படுகிறது. முதலில், துறைமுகங்களில் மட்டுமே அளக்கப்பட்ட (அதுவும், 1 முதல் 20 மீட்டர் ஆழத்தில்) வெப்பம், இன்று கப்பல்கள் மூலம் ஆழ்கடல் பகுதிகளிலும் அளக்கப்பட்ட வண்ணம் உள்ளது. உலகின் நிலப்பகுதியில், மக்கள் தொகையைப் பொறுத்து, பல்வேறு வழிகளில் அளக்கப்படுகின்றன. உலக காலநிலைக் கழகம், (WMO) ஒவ்வொரு தளத்திலும் (குறிப்பாக, நிலப் பகுதிகள்), 24 மணி நேர அதிகபட்ச, மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை போன்ற அளவுகள் ஒரு தரவுத் தொகுப்பாகச் சேமிக்கப்படுகிறது.

உலகில் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை மாறுபட்டாலும், சில ஆயிரம் கி,மீ. தூரங்களுக்குப் பெரிதாக 24 மணி நேரத்தில் அதிக மாற்றம் இருப்பதில்லை – இதை ஒரு மாத மற்றும் வருட அளவில் எடுக்கப்பட்ட தரவுகள் உணர்த்துகின்றன. பூமியின் சராசரி வெப்பநிலையைக் கணிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. பூமத்திய ரேகை அருகே உள்ள பகுதிகளில், ஒரு டிகிரி அட்ச ரேகைக்குள் உள்ள நிலப்பரப்பு, பூமத்திய ரேகைக்கு வடக்கிலும், தெற்கிலும் வேறுபடும். அதுவும் துருவங்கள் அருகே ஒரு டிகிரிக்கான நிலப்பரப்பு மிகவும் குறைவு. இதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இத்துடன், பல்வேறு செயற்கைக் கோள்கள், பூமியின் காற்று மண்டல மற்றும் நிலம்/கடல் இவற்றின் வெப்பநிலையை அளந்து கணித்த வண்ணம் தரவுகளை அனுப்பிக்கொண்டே இருக்கின்றன இவற்றை எல்லாம் ஒன்றிணைத்துக் கணிக்கப்பட்ட வெப்பமே ”பூமியின் சராசரி வெப்பம்”.

உலக அளவில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையிலான கொள்கைகளை உருவாக்கவும், அரசாங்கங்களுக்கு அறிவியல் ரீதியிலான தகவல்களை வழங்குவதற்கும், 1988ம் ஆண்டு உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தால், ஐ.பி.சி.சி. என்ற ( Intergovernmental Panel on Climate Change) அமைப்பு தொடங்கப்பட்டது. காலநிலை மாற்றத்திற்கான அறிவியல் அடிப்படை குறித்தும்(1),காலநிலை மாற்றத்தின் தாக்கம், தகவமைத்தல் குறித்தும்(2), காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்துவது குறித்தும்(3) ஆய்வு செய்யும் வகையில் மூன்று பணிக்குழுக்களாகச் செயல்படுகிறது. 1990,1995,2001,2007 மற்றும் 2014 ஆண்டுகளில் ஐந்து அறிக்கைகள் வந்த நிலையில் தற்போது ஆறாவது அறிக்கை வெளிவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி,2022 இறுதி வாரத்தில் வெளிவந்த ஐ.பி.சி.சி யின் ஆறாவது அறிக்கை மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது, இந்த அறிக்கையானது 3400 ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் 60000 க்கும் மேற்பட்ட கருத்துக்களைப் பெற்று 270 அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டது. அந்த அறிக்கையின் முக்கியமான செய்தி புவி வெப்பமாதலைக் குறைக்க நாம் கடந்த காலங்களில் எடுத்த மற்றும் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும், இந்நிலை நீடித்தால் புவி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவைத் தாண்டும்போது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள இதுவரை நாம் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகள் பயனற்றுப் போவதோடு அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகும் என்று சுட்டிக்காட்டுகிறது.

பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் மாற்று நடவடிக்கைகளில் ஒற்றுமை இல்லா நிலையையும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது . அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த, சமத்துவமிக்க நடவடிக்கைகள் மட்டுமே நீடித்த மற்றும் நிலையான மாற்றத்திற்கு உதவும் என இவ்வறிக்கை கூறுகிறது.

புவிவெப்பமயமாதலால் ஏற்படும் பிரச்சினைகளைக் கட்டுக்குள் கொண்டுவர உலக அளவில் ஐக்கிய நாடுகள் சபை 1992 தொடங்கி இன்றுவரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. பசுமை இல்ல வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளில் இருந்து பூமியைப் பாதுகாக்கவும்1994 ல் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற கட்டமைப்பு(UNFCC) உருவாக்கப் பட்டது . இந்த அமைப்பிற்கான செயலாக்க முடிவுகளை எடுக்கும் உச்ச பட்ச அமைப்பாக உலக நாடுகளை இணைத்து COP (Conference Of Parties) அமைக்கப்பட்டது. COP உறுப்பினர்கள் 1995 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் (கொரோனா காலத்தில் ஓர் ஆண்டு தவிர) சந்தித்து வருகின்றனர்.

பாரிஸ் ஒப்பந்தம் (COP 21):

2015ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற COP 21வது மாநாடு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, டிசம்பர் 12ஆம் தேதி பிரான்ஸ் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை 194 நாடுகள்(193 நாடுகளுடன் ஐரோப்பிய யூனியன்) ஏற்றுக் கொண்டன.இந்த ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்த ஒப்பந்தத்தில் இருந்து அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விலகினார். ஆனால், அவரை தொடர்ந்து அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் தான் பதவி ஏற்ற முதல் நாளிலேயே மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் இணைந்தார்.

அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்….

உலகளவில் வெப்பம் அதிகரிப்பதை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் குறைக்க வேண்டும் என்றும் தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்த அளவிலிருந்து சராசரியாக இரண்டு டிகிரி உலக வெப்பமயமாதலைக் குறைப்பதை இது இலக்காகக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாடும் தனது கார்பன் வெளியேற்ற இலக்கை ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பரிசீலிக்க வேண்டும்.

கியோட்டோ ஒப்பந்த அணுகுமுறையான Cap and Trade என்ற கோட்பாட்டைக் கைவிட்டு அதற்குப் பதிலாக நிகர பூஜ்யம் (Net Zero) என்ற கோட்பாட்டிற்கு மாறியது. மனித செயல்பாடுகள் காரணமாக வெளியிடப்படும் பசுமைக்குடில் வாயுக்களை முழுமையாக மரங்கள், மண், கடல்பகுதிகள் இயற்கையாக உறிஞ்சி எடுக்கும் வகையில் செயல்படுத்துவதை நிகர பூஜ்யம் என்று சொல்லப்படும். அத்தகைய நிகர பூஜ்ய நிலையை ஏற்படுத்த 2050-2100 ஆண்டுக்குள் செயல்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.மேலும் நிகர பூஜ்யத்தை நடைமுறைப் படுத்த வளரும் நாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை வளர்ந்த நாடுகள் ஏற்க வேண்டும் என்பதும் கொள்கையளவில் ஏற்கப்பட்டது.

காலநிலை மாற்ற செயல்பாடுகளுக்காக வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். இதன்மூலம் ஏழைநாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறவும் ஏதுவாக இருக்கும்.
பாரிஸ் மாநாட்டிற்கு முன்பு வளர்ந்த நாடுகளுக்கு அதிகப் பொறுப்பு என்று அதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக Common but differentiated responsibility என்ற வாசகம் சேர்க்கப்பட்டது. அத்துடன் பருவநிலை நீதி (Climate Justice) என்ற வாசகமும் சேர்க்கப்பட்டது அதாவது பருவநிலை மாற்றத்திற்கான செயல் திட்டத்தில் பருவநிலை நீதி (Climate Justice) கடைப்பிடிக்கப்படும் என்பதே அந்த வாசகத்தின் சாரம்.

கொரோனா காலகட்டத்திற்குப் பின் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற மாநாடுகள் குறித்து….

COP 26

2021ம் அண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் COP 26 என்ற பெயரில் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாநாடு இரண்டு வாரங்கள் நடைபெற்றது, இதில் உலகம் முழுவதுமுள்ள 200 நாடுகள் கலந்து கொண்டன.
இந்த மாநாட்டில் மனித சமூகத்திற்கும், உலகின் சமநிலைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கியமான தலைப்புகளில் மிக விரிவான விவாதங்கள் உலகத் தலைவர்களால் முன் வைக்கப்பட்டது.

அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இத்தாலி தொடங்கி சிறிய சிறிய நாடுகள் வரை தங்களது தரப்பு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இந்த மாநாட்டில் முன்வைத்தது.

இம்மாநாட்டில் மிக முக்கியமாக நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக முடிவிற்கு கொண்டு வருவது தொடர்பாக எடுக்கப்பட்டதுதான் அதிக கவனத்தை ஈர்த்தது.

இதுதொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்களாக ‘பசுமை வாயுவை அதிக அளவில் வெளியிடும் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருவது; பருவநிலை மாற்றங்களைச் சமாளிக்க வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு உதவுவது’ போன்றவை முக்கிய அம்சங்கள் ஆகும்.

இதற்கான முன்னெடுப்பாக முதலில் ‘படிப்படியாக நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது’ என்பது முடிவெடுக்கப்பட்டு இருந்தநிலையில், இந்தியா தலைமையில் வளரும் நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தது, குறிப்பாக நிலக்கரி திட்டங்களுக்கான மானியங்களை வழங்குவதை அரசுகள் நிறுத்த வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பது பொருளாதாரத்தில் வளர்ந்து வரக்கூடிய நாடுகளுக்கு பெரும் சவாலான விஷயம் என எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து ஒப்பந்தத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி குறிப்பாக ‘படிப்படியாக நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது’ என்பதற்குப் பதிலாக ‘படிப்படியாக நிலக்கரி பயன்பாட்டைக் குறைப்பது’ என்ற நிலைப்பாடானது எட்டப்பட்டது.

அதேசமயம் பசுமைகூட வாயுக்கள் அதிகளவில் உமிழும் மற்றொரு புதைபடிம எரிபொருளான கச்சா எண்ணெய்க்கு மாற்றுப் பொருள் குறித்ததோ அல்லது அதன் உபயோகத்தைக் குறைப்பது குறித்ததோ முடிவு எடுக்கப்படவில்லை.

COP 27

2022, நவம்பர் 6-ம் தேதி எகிப்து நாட்டிலுள்ள ஷார்ம் எல் ஷேக் நகரில் COP27 மாநாடு தொடங்கி இரண்டு வாரங்கள் நடைபெற்றன. அதில் தொழில்மயமான வளர்ந்த பணக்கார நாடுகள் ஏற்படுத்தும் சூழலியல் மாசுபாட்டால் வளரும், ஏழை நாடுகளே அதிகமாக பாதிக்கப்படுவதாகவும், 2009-ம் ஆண்டு டென்மார்க்கில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில், வளரும் மற்றும் ஏழை நாடுகள் பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறைப்பதற்காகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காகவும் வளர்ந்த பணக்கார நாடுகள் 2020-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவதாக உறுதியளித்திருந்தன.

ஆனால், 2022-ம் ஆண்டான தற்போதுவரை பணக்கார நாடுகள் அந்த நிதியை ஏழை நாடுகளுக்கு வழங்கவில்லை என்றும் அதை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இங்கிலாந்து தவிர ஏனைய நாடுகள் நிதி வழங்குவது குறித்த உறுதி கொடுக்கப்படாமலேயே மாநாடு முடிந்தது.

COP 28

உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக கருதப்பட்ட 2023ம் ஆண்டில் COP-28ஆவது உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 12-ஆம் தேதி வரை நடைபெற்றது.மாநாட்டின் முக்கிய அம்சமாக இழப்பு நிதியைப் பணக்கார நாடுகள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. கனடா, ஜப்பான், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நிதியை அறிவித்தன.

வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு இழப்பு நிதி அளிப்பதோடு, அந்நாட்டு மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் சூழலைப் பாதுகாக்கும் நவீனத் தொழில்நுட்பங்கள் வழங்குவதன் மூலம், புதிய பாதிப்புகளைத் தடுப்பதோடு, ஏற்கனவே ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

நமது நாட்டில்…..

2021 கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் காலநிலை மாற்றத்திற்கு நமது வாழ்க்கை முறையும் முக்கிய காரணம் என்று பேசிய பிரதமர் மோடி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை நாம் அமைத்துக் கொள்ள முன் வர வேண்டும் என்றார். மேலும், பருவநிலை மாற்றத்தின் சவாலைச் சமாளிக்க ”பஞ்சாமிர்தம்” என்ற ஐந்து முக்கிய உறுதிமொழிகளையும் அவர் வழங்கினார்,அவை…

— 2070க்குள் கார்பன் வெளியேற்றம் முற்றிலும் இல்லாமல் இருப்பது உறுதிப்படுத்தப்படும்

— 2030-ஆம் ஆண்டிற்குள் புதைப்படிவப் பொருட்களின் மூலமாக அல்லாத மின்சார உற்பத்தியின் அளவு 500 ஜிகாவாட் ஐ எட்டும்

— 2030-க்குள் இந்தியா தனது கார்பன் அடர்த்தியை 45 சதவீதமாகக் குறைக்கும்

— 2030-க்குள் இந்தியா தனது மின் தேவையில் 50 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யும்

— 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு பில்லியன் டன்கள் அளவிற்கு கார்பன் வெளியேற்றம் குறைக்கப்படும் என்று கூறினார்.

2022, COP 27 மாநாட்டில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், “உலக நாடுகள் காலநிலை மாற்றத்தைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளின் வேகம் போதாது. உலகெங்கும் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் பெரிய ஆபத்தாக இருக்கின்றன.” என்று கூறினார்.

2023 COP 28ல் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு அலிடிஹாட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “காலநிலை மீதான உலகின் லட்சியங்கள் அதிகரித்துள்ளன. அதற்குப் பொருந்தக்கூடிய வகையில் நிதி ஒதுக்கீட்டில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான், தற்போதைய சந்திப்பு பயனுள்ளதாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்தப் பேச்சுகளுக்கு முரணாக நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட 2023 மற்றும் 2024 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் கால நிலை மாற்றத்திற்கான செயல் திட்டத்திற்கு சில ஆயிரம் கோடிகளே ஒதுக்கப்பட்டுள்ளது, 2070ம் ஆண்டில் கார்பன் சமநிலையை அடைய 105 லட்சம் கோடி தேவை என்றும் ஆண்டிற்கு 2.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தால்தான் அது சாத்தியமாகும் என்று ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீருக்கான குழுமத்தின் (அரசு சாரா நிறுவனம்) ஆய்வு அறிக்கை கூறுகிறது.

மேலும் நம் நாட்டின் அதிக மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் அனல் மின் நிலையங்களை உடனடியாக மூடுவது நமது நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் அனல் மின் நிலையங்களை அதிக திறன் கொண்டதாகவும், குறைந்த கார்பன் உமிழ்வைக் கொண்டவையாக மாற்றும் நவீனமயமாக்கல் செய்யப்படவேண்டும். குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கக் கூடுதல் அரசு மானியம், குறைந்த மின்னாற்றலைப் பயன்படுத்தும் பொருட்களைக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்வது, மின் பகிர்மான இழப்பைக் குறைப்பது ஆகியவை முக்கியம் ஆகும். மேலும் நமது நாடு உலக அளவில் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதில் மூன்றாம் இடத்தில் உள்ள நாடு, இங்குத் தனியார் வாகனங்களை நெறிப்படுத்துவது, பொது போக்குவரத்தை மேலும் அதிகப்படுத்துவது இன்றியமையாமையது, இது போன்ற உடனடி நடவடிக்கையே பிரதமரின் பஞ்சமிர்த திட்டத்தை செயல்படுத்த உதவும். ஆனால் அதற்கான நீண்ட கால செயல் திட்டங்களோ அதற்கு உண்டான நிதி ஒதுக்கீடோ இல்லை.

மேலும் மாற்று எரிபொருட்களுக்கான ஆய்வுகள், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் கனிம உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளை வரைமுறைப் படுத்தல், மாசுக்கட்டுப்பாட்டு சட்டங்களைத் திடமாக நடைமுறைப்படுத்தல் போன்றவை முக்கியமானது.ஆனால் மத்திய அரசோ தனியார் பெரும் நிறுவனங்களுக்காகச் சட்டங்களை இயற்றுவதோடு மட்டுமல்லாமல், உள்நாட்டு உற்பத்தி என்ற பெயரில் கட்டுக்கடங்காத அனுமதி மற்றும் பொருளாதார சலுகைகளையும் அள்ளி வழங்குகிறது, இதனால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கிறது.

இதன் காரணமாக நாட்டின் பல இடங்களில் மக்கள் இயக்கங்கள் இதற்கு எதிரான போராட்டங்களை நடத்தித் தீர்வு காணும் சூழல் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அரசு செயல்பாடுகள் தனியார் பெரும் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கும் சூழலில், மக்கள் திரட்சி மூலமாகவோ அல்லது சட்ட ரீதியிலோ சில தீர்வு கிடைத்துள்ளது.

நமது நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் சட்டங்கள்…

சுற்றுச்சூழல் நிர்வாகம் என்பது சுதந்திரம் கிடைத்து 25 வருடங்களுக்கு பிறகுதான் முறையாகத் தொடங்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம்மில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கலந்துகொண்டு நாட்டிற்கு வந்த பிறகு சுற்றுச்சூழல் நிர்வாகம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தேசிய சுற்றுச்சூழல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு பிரதமர் தலைமையில் தொடங்கப்பட்டது. 1972 இல் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழலுக்கான தனித் துறையானது 1980 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது.

1974 இல் நீர் குறித்த சுற்றுச்சூழல் சட்டங்களும் 1981 இல் காற்று குறித்த சுற்றுச்சூழல் சட்டங்களும் அதே 1981 இல் வனப் பாதுகாப்புச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை முழுமையாக உள்ளடக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 இல் அமலுக்கு வந்தது.

சுற்றுச்சூழல் மேம்பாடு பற்றி 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டில் சுற்றுச்சூழலுக்கான கொள்கை மற்றும் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. 1992 ஆம் ஆண்டு வெளியான அறிவிப்பின்படி 32 துறைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதீப்பாடானது (Environmental Impact Assessment) கட்டாயமாக்கப்பட்டது. சுற்றுச்சூழல் தொடர்பாக அனுமதியளிக்கும் குழுக்கள் ஒவ்வொரு துறைக்கும் அமைக்கப்பட்டு, அவற்றை நிர்வாகம் செய்யும் அனைத்து அதிகாரமும் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது.

கடற்கரைப் பகுதி மேலாண்மை, மலைப் பகுதி பாதுகாப்பு, கழிவு மேலாண்மை (பயோ மெடிக்கல், பிளாஸ்டிக், அபாயகர கழிவுகள்) உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாட்டு வாரியங்கள் கொண்ட சுற்றுச்சூழல் நிர்வாக அமைப்பைக் கடைப்பிடிக்கும் நாடாக இந்தியா 1996 ஆம் ஆண்டு உருவானது.

2006 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் திருத்தங்களை ஏற்படுத்த வரைவு அறிக்கையை 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அரசு அறிவித்தது. அதன்படி சுரங்கம் மற்றும் நதிக்கரைப் பகுதிகள் உள்ளிட்ட சிக்கலான துறைகள் உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களில் சுற்றுச்சூழல் குறித்து அனுமதியளிக்கும் கூடுதல் அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கியது. 2016 ஆம் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத் திருத்தம் மூலம் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் குறித்து அனுமதியளிக்கும் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

உச்ச நீதி மன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலமும் உயர் நீதி மன்றங்கள் மூலமும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு முறையான தீர்ப்புகள் வழியாக நீதி வழங்கப்பட்டன. எனினும், தற்போது அனைத்தும் பின்னோக்கிச் செல்கின்றன.

கடந்த இரு பத்தாண்டுகளில் நாடு முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பெரும் நிறுவனங்களுக்குச் சாதகமாக கொண்டுவரப்பட்டன, அவற்றை எதிர்த்து போராட்டம் மூலமும், சட்ட ரீதியிலும் ஒரு சில பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் காணப்பட்டாலும், தொடரும் பிரச்சனைகளும் உள்ளன, மேலும் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட EIA 2020 மசோதாவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் நிலுவையில் உள்ளது. ஆனால் அதில் உள்ள பல பாதக அம்சங்கள் அரசாணை மூலம் பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் தொழிற்சாலைகளைக் கட்டமைப்பது அல்லது பராமரிப்பது என்ற சிந்தனையோடு அரசு சட்டங்களை இயற்றி கண்காணிப்பதன் மூலம்தான் உலகநாடுகளுக்கு நாம் வழிகாட்ட முடியும்

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் மரம் நடும் விழாக்கள், கருத்தரங்கம், சுற்றுச்சூழலை பற்றிய உரையாடல்கள் நடைபெற்று முடிந்துவிடும், அத்துடன் முடிந்துவிடக் கூடியது அல்ல சுற்றுச்சூழல் பாதுகாப்பு. தொடர் கண்காணிப்பு மூலம் சுற்றுச்சூழலைக் காப்போம், எதிர்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம்.

கட்டுரையாளர்;

V Sethuraman Environment Article

வ.சேதுராமன்
ஒருங்கிணைப்பாளர்
சூழலியல் உபகுழு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
[email protected]

காவிரி டெல்டாவின் விவசாயி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் மற்றும் சூழலியல் உபகுழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சைக் கோட்ட பொதுச் செயலாளர், வேளாண் பிரச்சினைகளை முன் வைத்து கட்டுரைகள் எழுதுவது, தொலைகாட்சி விவாதங்களில் பங்கேற்பது, காவிரி டெல்டாவின் வளமைக்கு எதிர் நடவடிக்கையாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மன்னார்குடி மீத்தேன் திட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு அறிவியல் இயக்க, திருவாரூர் மாவட்டதின் சார்பாக அறிவியல் பூர்வமான வாதத்தை கருத்து கேட்பு கட்டத்தில் முன் வைத்தது, தொடர்ந்து காவிரி டெல்டாவின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கண்டறிந்து மக்கள் முன் கொண்டு செல்வது என தொடரும் பணிகள்..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *