The politics of tamil short story (Progressive Writers) by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 2 : ச.தமிழ்ச்செல்வன்

இரண்டாம் அலை

பாரதி பாடியது மணிக்கொடி

காந்தி ஏந்தியது மணிக்கொடி

காங்கிரஸ் உயர்த்தியது மணிக்கொடி

சுதந்திரப் போராட்ட வீரர்களை

உற்சாகமூட்டியது இம்மணிக்கொடி 

என்ற முழக்கத்தோடு 30களில் தாயின் மணிக்கொடி பாரீர் என்கிற பாரதியின் வரியிலிருந்து சொல்லெடுத்து “மணிக்கொடி” இதழ்  பயணம் துவக்கியது.30களின் பிற்பகுதியில் ‘மணிக்கொடி’இதழுக்கு பி.எஸ்.ராமையா பொறுப்பேற்ற பின்னர்,அது சிறுகதைக்கான  இதழாகவே  மலர்ந்தது.தஞ்சையில் விவசாயக்கூலிகள் வயல் வெளிகளில் பண்ணையார்களின் சாட்டையடிக்கும் சாணிப்பாலுக்கும் இரையாகிக்கொண்டிருந்த அதே காலத்தில் மணிக்கொடி இதழ்,பண்ணையார்கள் மற்றும் மிராசுகளின் மீது ‘அநியாய வரி’ விதிக்கும் அரசை எதிர்த்துக் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தது.மிகப்பெரும் சுரண்டலும் ஒடுக்குமுறையும் விவசாயக்கூலிகளான தாழ்த்தப்பட்ட மக்களின் மீது  சமகாலத்தில் நிகழ்ந்துகொண்டிருந்த போது அதைக் ‘கண்டுக்காம’ விடுவதும் ஓர் அரசியல்தான் என்று சொல்ல நமக்கு உரிமை உண்டு.

Image result for bharathi

மணிக்கொடியின் இரண்டாம் கட்டமான  சிறுகதைக்காலத்தில் தமிழின்  மகோன்னதமான சிறுகதைப் படைப்பாளிகள் அதில் கதைகள் எழுதினார்கள்.கும்பகோணத்தையும் மாயவரம்,தஞ்சையையும் மையமாகக் கொண்டு வாழ்ந்த இவர்கள் இந்த பண்ணையடிமை வாழ்க்கையின் மீது தங்கள் பார்வையைத் திருப்பவில்லை.ஆனாலும் ,மிக முக்கியமான பல பண்பாட்டு அரசியல் கூறுகளை இப்படைப்பாளிகளின் சிறுகதைகள் கொண்டிருந்தன.

“கலை, தர்ம சாஸ்திரம் கற்பிக்க வரவில்லை….பத்துத்தலை ராவணனும், ஆறுதலை சுப்பிரமணியனும் உடற்கூறு நூலுக்குப் புறம்பான அபத்தமாக இருக்கலாம்: ஆனால் ஒரு கொள்கையை, இலட்சியத்தை உணர்த்தக்கூடியது. அதுதான் கலையின் லட்சியம்” என்றார் அக்காலத்தின் உச்சபட்சக் கலைஞனாக உருவெடுத்த புதுமைப்பித்தன்.

எந்த இஸத்திற்குள்ளும் தன் மனதைப் பதியனிடாமல் சுத்தமான இலக்கியவாதியாகத்தான் அவர் இருக்க விரும்பினார்.

“கொள்கை என்பது உயரத் தூரத்தில் தூக்கிப்பிடித்த தீபந்தம் போல் எட்ட இருப்பதாலேயே வெளிச்சம் விழுகிறது.அது எட்ட இருப்பது அவசியம்” என்று தெளிவான பார்வை கொண்டிருந்தார்.ஆனாலும் தன் சமகாலத்து நிகழ்வுப்போக்குகளுக்குத் தன் படைப்புகளில் முகம் கொடுக்க அவர் தயங்கியதில்லை.

Image result for முதலாளித்துவம்

அவர் இயங்கிய 1930-40 காலம் என்பது உலக அளவில் முதலாளித்துவம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருந்த காலகட்டம். உலகப் பொருளாதாரப் பெரு மந்தம் எனப்பட்ட The Great Depression காலகட்டம் அது. ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் சுமையை மூன்றாம் உலக நாடுகளின் மீது இறக்கி வைக்க, அது எளிய மக்களை மேலும் வறியவராக்கி மூச்சுத்திணற வைத்துக்கொண்டிருந்த காலம். நகரங்கள் எனும் பெரும் சந்தைகள் எழுந்துகொண்டிருந்த காலம். முதலாளித்துவத்துக்கு மாற்றாக சோவியத் நாடு ’திட்டமிட்ட பொருளாதாரம், இயற்கை வளங்கள் பொதுவுடைமையில்’ என்கிற நடப்பை முன்வைத்து முன்னேறிக்கொண்டிருந்த காலமாகவும் இருந்தது.

” பட்டணத்திலே மாவிலைகூட காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.”என்ன,மாவிலைக்குமா விலை?” என்று பிரமித்துப்போகாதீர்கள்! மாவிலைக்கு விலையில்லை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால்,மரத்தில் ஏறிப்பறித்து,வீடு தேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி இந்த ‘உழைப்பின் மதிப்பை’ அந்த இலையின் மீது ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும்.இதுதான் விலை என்பது”

என்று புதுமைப்பித்தன் தன்னுடைய விநாயக சதுர்த்தி என்கிற சிறுகதையில் எழுதுகிறார். கூலி, விலை, லாபம்  போன்றவற்றின் அடிப்படைகளை விளக்கும் மார்க்ஸியப் பார்வையை உள் வாங்கியவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.

குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளிகளை வைத்து அதிக நேரம் வேலை வாங்கி அந்த உபரி உழைப்பில்  உருவாகும் சொத்தைத் தனக்கான லாபமாக முதலாளி எடுத்துச் செல்லும் முதலாளித்துவப் பொருளாதார அடிப்படைகளைப்பற்றிக்கூட வெளிப்படையாகத் தன் கதைகளில் எழுதினார். ’தியாக மூர்த்தி’ சிறுகதைக்கு உள்ளேயே அதை வைத்து எழுதுகிறார்:

“ பொருளாதார மந்தம் என்று நீட்டி முழக்கிச் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அடித்து விளாசுகிறார்களே, அதுவும் வந்தது. அதைப்பற்றிய தத்துவங்கள், காரணங்கள் எல்லாம் உமக்கும் எனக்கும் பத்திப் பத்தியாக நுணுக்கமாக எழுதத்தெரியும்:பேசவும் தெரியும்.ராமனுஜலு நாயுடுவுக்குத் தெரிந்தது போல் நமக்கு ஸ்பஷ்டமாகத் தெரியாது…..அவருடைய  சிக்கனக்கத்தி விழுந்தது. பத்துப்பேர் வெளியே போக வேண்டியிருந்தது. அதில் ராமசாமிப்பத்தரும் ஒருவர். கெஞ்சினார்கள்: கூத்தாடினார்கள். பத்துரூபாய்-பாதிச் சம்பளம்-கொடுத்தால்கூடப் போதும் என்றார்கள். ராமானுஜுலு நாயுடு சத்திரம் கட்ட வரவில்லையே!” என்று எழுதும் புதுமைப்பித்தன் நல்ல பால் கறக்கும் மாட்டை கண்ணும் கருத்துமாகக் கவனிப்பதும் மாடு கிழடாகி, வறண்டு போய்விட்டால் தோல் விலைக்கு வந்தால் சரிதான் என்று தள்ளி விடுவதையும்போலத்தான் முதலாளி தொழிலாளியை நடத்துவான் என அக்கதையில் விளக்குவார். வேலையிழந்த தொழிலாளியான ராமசாமி பத்தர் கதையின் முடிவில் முதலாளி தனியாக இருக்கும்போது பணத்தைப் பறிக்க முயன்று கைதாகிச் சிறை செல்கிறார். அதைப்பற்றி எழுதும்போது தொழிற்சங்கத்தையும் ஒரு இடி இடிக்கிறார் புதுமைப்பித்தன்.

“பலவந்தத் திருட்டுக் கேஸாகியது. ஆறு மாசக் கடுங்காவல். பத்தர் பாடு கவலையற்ற சாப்பாடு. எந்தத் தொழிலாளர் சங்கம் திருட்டுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு இந்த மாதிரி உதவி செய்ய முடியும்?நியாயமான உலகமல்லவா?”

Image result for puthumaipiththan

பொருளாதாரப்பார்வை போல சாதியம்,பெண்ணடிமைத்தனம் குறித்தும் புதுமைப்பித்தனின் கதைகள்  மிகக்கூர்மையான மொழியில் பேசுகின்றன. அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளை, வாழ்வின் முரண்பாடுகளை, சமூகத்தின் கையாலாகத்தனத்தை, தமிழ்ச்சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையை புதுமைப்பித்தன் அளவுக்குச் சிறுகதைகளில் உரித்துத் தொங்கப்போட்டவர்கள் யாருமில்லை.

”கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதானய்யா பொன்னகரம் ” என்று பொன்னகரம் கதையை முடிக்கிற தொனி.’நாசகாரக் கும்பல்’கதையில் தன் சொந்த சாதியைக்  குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் தர்மாவேசம் அவருக்கிருந்தது.

” அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித்தொழில் நடக்கிறது. மனிதர்களா, மிருகங்களா? நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்லின் ஷர்ட்டு,உங்கள் ஷெல் பிரேம் கண்ணாடி! எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான். ரொம்ப ஜம்பமாக, நாஸூக்காகக் கண்ணை மூட வேண்டாம். எல்லாம் அந்த வயிற்றுக்காகத்தான்” என்று வாசகரின் மூஞ்சியிலறையும் தொனி.(கவுந்தனும் காமனும் –சிறுகதை) இதுதான் புதுமைப்பித்தனின் தனித்த முத்திரை.இப்படி பளிச்சென்று இருந்தது புதுமைப்பித்தனின் கதைகளின் அரசியல்.

`கு.ப.ரா’ என்றழைக்கப்படும் கு.ப.ராஜகோபாலனைப் பற்றி யார் பேசினாலும் முதலில் வந்து விழும் வார்த்தைகள், `ஆண்-பெண் உறவுதான் அவர் எழுத்தின் சாராம்சம்’ என்பதுதான். “பெண்ணின் சித்தத்தை இருளாக்கும் உணர்ச்சிகளையும், கருவாக நின்றுவிட்ட வேட்கைகளையும், வெகுநுட்பமாகவும் அநாயசமாகவும் படம் பிடிப்பதில் நிகரற்றவன். பெண் மனதைச் சித்திரிப்பதில்  வல்லவன்” என்பது கு.ப.ரா-வின் நெருங்கிய சகாவான கரிச்சான் குஞ்சுவின் கூற்று.
பெண்கள் மற்றும் பெண் மனம் பற்றி அதிகம் எழுதிய கு.ப.ரா., பெண் அடிமைத்தனத்துக்கு எதிரான உணர்வுகொண்டவர். `அவள் இஷ்டம்’ என்றொரு கட்டுரை, அவர் பெண் விடுதலை குறித்துக்கொண்டிருக்கும் கருத்தை வெளிப்படுத்துகிறது. பெண் அடிமையாகவில்லை. அவள் அடிமையும் ஆக மாட்டாள். ஆகவும் முடியாது.

இதுவரையில் அவள் அடிமைபோல இருக்க இசைந்தாள். அவ்வளவுதான். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற வேலிகளை ஆண் மகன் போட்டா பெண்களைக் கட்டுப்படுத்த முடியும்? அவளாகவே அந்த அடைப்புக்குள் போய் புகுந்துகொண்டு அந்த அடைப்பையே தன் கோட்டையாக்கிக்கொண்டாள்.  ஆனால், இப்போது அந்த வாழ்க்கை அவளுக்குப் பிடிக்கவில்லை. அது சலித்துப்போய்விட்டது. புதுமை வேண்டுகிறாள். விடுதலை கேட்கிறாள். அந்த ஆட்டம் போதும் இனிமேல் வேண்டாம் என்று அதிலிருந்து விலகி, ஒருகாலத்தில் தானே வேண்டாம் என ஒதுக்கிய சுதந்திரத்தை அடைய விரும்புகிறாள். வேண்டாம் என்கிறாள் பெண். ஆணுக்கு யாதோர் ஆட்சேபனையும் இருக்க முடியாது என்று எண்ணுகிறேன்.

கரிச்சான் குஞ்சு சொன்னதுபோல கு.ப.ரா அப்பாவிதான். இந்தப் பகுதி வாசிக்க வித்தியாசமாக இருந்தாலும் வரலாற்றிலிருந்து துண்டித்து பெண் விடுதலையை  கற்பனை வெளியில் செதுக்கிப்பார்ப்பதாகவே இருக்கிறது.அன்றைய நிலையில் அவரது பெண் அரசியல் அவ்வளவுதான் இருந்திருக்க முடியும்.

மரணம், வாழ்வின் நிச்சயமின்மை, ஆண்-பெண் உறவு ஆகியவற்றைப் பற்றியே தன் எல்லாக் கதைகளிலும் எழுதியவர் மௌனி.

இவ்வளவு பலவீனங்களுடனான மௌனியின் எழுத்து, ஏன் காலம்காலமாக விதந்தோதப்பட்டு வருகிறது என்பது ஒரு முக்கியமான கேள்வி. என்னுடைய வாசிப்பில் மௌனியின் கதைகளில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை.ஒருவித தீவிர மனநிலையில் எல்லாக் கதாபாத்திரங்களும் பேசுவதும், கதையின் போக்கில் இயல்பாகத் தெறித்து விழும் சில நுட்பமான வரிகளுமே அவருக்கு இத்தகைய ஓர் இடத்தைத் தந்ததாக உணர்கிறேன்.அவர் தொடர்ந்து கொண்டாடப்படுவதன் பின்னணியில் தமிழ்ச்  சிறுகதை உலகத்தின் அரசியல் ஏதேனும் இருக்கிறதா என்றும்  இனி பார்க்க வேண்டும்.

Image result for puthumaipiththan

என்னுடைய வாசிப்பில் ந.பிச்சமூர்த்தியின் கதைகளில் எப்போதுமே எளிய உழைப்பாளி மக்களும் நடுத்தரவர்க்கத்துப் பாவப்பட்ட ஜனங்களுமே கதாபாத்திரங்களாக வருகிறார்கள். ஆனால், அவர்கள் புதுமைப்பித்தனின் கதைகளில் வருவதைப்போல சமகால இருப்பின் தன்னுணர்வோடு கதைக்குள்  வாழாமல், ஒரு தத்துவநிலையில் வாழ்வை நோக்குகிறவர்களாக ஆகிவிடுகிறார்கள்.  ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய விவரணைகளில் ஒரு மேல்சாதிப் பார்வை அல்லது தொனி அவர் கதைகளில் உண்டு என்றபோதும், நேற்றைய மனிதர்களை நேற்றைய சூழலில் வைத்தே பார்க்க வேண்டும் என சமாதானம் கொள்ளலாம்.  சமகாலவாழ்வில் பேச வேண்டியதைப் பேசாமல் விடுவதும் ஓர் அரசியல்தானே?

தமிழ்ச் சிறுகதை வரலாற்றை எழுதுகிறவர்களானாலும் சரி, தமிழின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்துப் போடுகிறவர்களானாலும் சரி, இணையத்தில் சிறுகதைகளைப் பதிவேற்றம் செய்யும் இணையதளக்காரர்களானாலும் சரி, ஞாபகமாகத் தவிர்த்துவிடும் ஒரு பெயர் தொ.மு.சி. ரகுநாதன்.இந்தத் தவிர்ப்பில் ஓர் அரசியல் இருக்கத்தான் செய்கிறது.அவர் ஒரு கட்சி சார்ந்த கம்யூனிஸ்ட்.

காவல்துறை துரத்திவரும் தொழிற்சங்கத் தலைவரைக் காப்பாற்றுவதற்காகத்தன் மடியில் பால் குடித்துக்கொண்டிருந்த தன் குழந்தையின் கால்களைப் பிடித்துத் தூக்கிப் படிக்கட்டில் அதை ஓங்கி அடிக்கிறாள் ஒரு தொழிலாளிப் பெண்மணி..  தலை சிதறி குழந்தை இறந்துவிடுகிறது. காவல்துறை திகைத்து நிற்கையில் தலைப்வர் தப்பி விடுகிறார்.இது ரகுநாதன் எழுதிய ‘நீயும் நானும்’ கதையின் மையப்புள்ளி.இப்படியுமா ஒரு தாய் செய்வாள்?என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.அப்போது  ரகுநாதன் ”சிவபெருமானுக்கு பிள்ளைக்கறி சமைத்துக் கொடுத்த தாயை கொண்டாடுவீர்கள்.என் உழைப்பாளி வர்க்கத்தாய் செய்வதை ஏற்க மாட்டீர்களா? ”என்று அதிரடியாகப் பதிலளித்தார்.கம்யூனிஸ்ட் தலைவர் கே.பாலதண்டாயுதம்  தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் நடந்த ஓர் உண்மைச்சம்பவத்தைத் தொட்டு எழுதப்பட்ட கதை இது.ரகுநாதன் கதைகளில்தான் முதன்முதலாக கம்யூனிஸ்ட்டுகள்  தலைகாட்டுகிறார்கள்.

1940-களில் கலாசாரக் காவலர்கள் யாரும் தமிழகத்தில் தலையெடுத்திருக்கவில்லை. ஆதலால், பாஞ்சாலியின் கர்ணன் மீதானஆறாவது காதலை முன்னிறுத்தி ரகுநாதன் எழுதிய ‘வென்றிலன் என்றபோதும்’ என்கிற சிறுகதையை முன்வைத்துக் கலவரம் ஏதும் வெடிக்கவில்லை. இந்தக் கதையும் ரகுநாதனும் தப்பினார்கள்.

பிரசாரக் கதைகள் எழுதியவர் எனச் சொல்லி, நவீன இலக்கியவாதிகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கும் ஒரு சிறுகதை எழுத்தாளர் அண்ணா.

அவர் சிறுகதை எழுதத் தொடங்கிய காலம் தமிழ்ச் சிறுகதை அதன் வண்ணங்களோடும் வனப்புகளோடும் முகிழ்த்து வந்த ஒரு காலம். ஆகவே, அண்ணாவுக்குச் சிறுகதை வடிவம் பற்றிய தன்னுணர்வு நிச்சயமாக இருந்திருக்கிறது எனலாம். பிற மணிக்கொடி எழுத்துக்காரர்களைப்போல உரத்த குரலைத் தவிர்த்து உள்ளடங்கிய மொழியில் அகத்தின் போக்கைக் கதையாக்கும் லட்சியம் அண்ணாவுக்கு இல்லை. கதை, நாடகம், மேடைப்பேச்சு,  சினிமா என எல்லா ஊடகங்களையும் தன் அரசியல் லட்சியத்துக்கு சேவைசெய்யும் கருவிகளாக மாற்றும் அவசியம் அண்ணாவுக்கு இருந்தது.

ஆகவே, சிறுகதையின் வடிவ நேர்த்தி, சொல்வதைவிடச் சொல்லாமல் விடவேண்டியதன் அவசியம், வார்த்தைச் சிக்கனம் போன்ற அம்சங்களைவிட, வாசகருக்கு தன் கருத்து போய்ச் சேர வேண்டும் என்ற அக்கறையே அவருடைய சிறுகதையின் அடிநாதமாக இருக்கும். மன ஓட்டங்களைவிட சம்பவங்களை அடுக்கிச் சென்று தான் வலியுறுத்த நினைத்த கருத்தை நோக்கி வாசகரை அழைத்துச் செல்வதில் அவருடைய ஒவ்வொரு சிறுகதையும் வெற்றிபெற்றது . அண்ணாவின் கதைகளில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகள், பகுத்தறிவுப் பிரசாரம், பெண்ணடிமைத்தன எதிர்ப்பு போன்ற அன்றைய கொதிநிலைப் பிரச்னைகள் பாடுபொருளாக ஆகியிருந்தன.அண்ணாவின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு பிற இந்திய மொழிகளுக்குச் சென்றால் மிக முக்கியமான சமூகச் சீர்திருத்தக் கதைகளாக வரவேற்புப்  பெறும் எனத் தோன்றுகிறது. தமிழ்ச் சமூக வாழ்வின் கொந்தளிப்பான காலகட்டத்தின் பிரச்னைகளை எந்தவித மூடாக்கும் இல்லாமல் பேசும் கதைகள் இவை.

சி.சு.செல்லப்பாவின் கதைகளில் நிலவும் காலம் என்பது தமிழகத்தில் பெரு நிலவுடமையாளர்களாகப் பார்ப்பனர்கள் இருந்த ஒரு காலம்.  இடைநிலைச் சாதிகள் நில உடமையாளர்களாக இன்னும் எழுந்து வந்திராத நேரம். ஆகவே, பெரும்பாலும் அவர் கதைகளில் பண்ணையார்களாக, மிராசுகளாகப் பிராமணர்களே இருப்பார்கள். அவர்களின் நிலங்களில் கூலி வேலை செய்பவர்களாக மேய்ப்பவர்களாக பண்ணை பார்க்கிறவர்களாக இடைநிலைச் சாதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். பண்ணையார்களின் முன், அவர்களின் பவ்யமும் அடங்கிப் பதில் பேசுவதும் அதைப் பண்ணையார்கள் அவர்களுக்கே உரிய மேதாவித்தனத்துடன் எதிர்கொள்வதுமான அன்றைய வாழ்வியல் கூறுகள் செல்லப்பாவின் கதைகளில் விரிவாகப் பதிவாகியிருப்பதைக் காணலாம்.

அவர், சாதிகளைக் கடந்த மனித சாரத்தைத்தான் எழுதினார். ஆனால், அன்றைய காலத்து வாழ்க்கையை அதன் யதார்த்தம் பிசகாமல் எழுதியதில் காலத்தின் சாதியக் கட்டுமானம்குறித்த பதிவாகவும் கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவருடைய ‘வாழ்க்கை’ சிறுகதை, இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அடிப்படையில் காந்தியவாதியான  சி.சு.செல்லப்பாவிடமிருந்து  இதற்குமேல் எந்த அரசியலையும்  எதிர்பார்ப்பது நியாயமில்லை.

நான்காம் வகுப்பு வரை மட்டுமே ...

எழுத்தாளர் தி.ஜ.ரங்கநாதன்

சிறுகதையின் அரசியலைப்பேசும்போது தி.ஜ.ரங்கநாதனை மறந்து விட முடியாது.நவீன இலக்கியவாதிகளில் பலர் அவரை ஏற்றுக்கொள்ளாதபோதும் மஞ்சரியில் ‘மூலதனம்’நூலின் சுருக்கத்தை வெளியிட்ட அவரை என்னால் விட முடியாது.பிரச்சாரம்,கலை கலைக்காக என்கிற வாதம்தான் சிறுகதையின் அரசியலின் சாரமாக நெடுங்காலம் இருந்துள்ளது.

“கதை என்னடா கதை? ஒருமுறை திறந்த கண்களோடு உன் வீட்டுத் தெருவில் நடந்துவிட்டு வா. கதைக்கோ கட்டுரைக்கோ விஷயம் கிடைச்சாச்சு! ஊர்வலம், கறுப்புக்கொடி, சட்டத்தின் தடை, எதிர்ப்பு, லத்திசார்ஜ், துப்பாக்கிச் சூடு இவையெல்லாம் தெருவில் நடக்கும் சரித்திரமின்றி வேறென்ன?

போட்டோக்களிலும் ஒருவித கலைச் சுவையை அனுபவிக்க முடியும் என்று நம்பும் கோஷ்டியைச் சேர்ந்தவன் நான். எனவே, என் கதைகள் அத்தனையும் பெரும்பாலும் முழுவதுமோ அல்லது பெரும்பகுதியோ பிரத்தியட்ச நிகழ்ச்சிகள்.

கலைஞன் நமக்கு அழகைக் காட்டுவது மாத்திரம் அல்ல, அநேக சமயங்களில் அதைக் காண நம்மைச் சித்தப்படுத்தியும்விடுகிறான். குதிரையின் கண்களில் ஒரு மறைப்பைப் போட்டு ஓட்டுகிறார்கள் பாருங்கள். அதே மாதிரி கலைஞனும் நம் கண்களை நேர்வழியில் திருப்புகிறான். மறைக்க வேண்டியதை மறைத்து, விளக்க வேண்டியதை விளக்கி, திருத்த வேண்டியதைத் திருத்தி, மெருகு கொடுப்பது கலைஞனின் நுட்பம்.

கலையிலே பிரசாரம் இருக்கலாமா… கூடாதா? இதைப் பற்றி ஒரு பெரிய விவகாரம் இருந்தாலும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்.; இருந்தாலும் இல்லாவிட்டாலும், கலை கலையாகவே இருப்பது அவசியம்.  நாம் எழுதும் கதை, கதையாயிருக்க வேண்டும். அதாவது சுவாரஸ்யம் நிறைந்திருக்க வேண்டும். இப்படி எழுதப்படாததால்தான் அநேகக் கதைகளை ஜனங்கள் ரசிக்காமல் தள்ளுகிறார்கள். கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க ரசமாக இருந்ததா என்ற ஒரே பரீட்சைதான், நல்ல கதைக்கு முக்கியம். மற்ற லட்சணங்கள் எல்லாம் அதற்கு உதவுபவையே.” என்பது தி.ஜ.ர.வின் கலைக்கொள்கை.

பிரத்தியட்சம் என அவர் குறிப்பிடும் யதார்த்தம்தான் அவர் கதைகளின் பலம். அவர் சென்னை வாழ்க்கையில் அன்றாடம் காணும் கைரிக்‌ஷா இழுக்கும் அவலம் அவரை மிகவும் பாதித்து, அது பற்றிக் கதைகளும் கட்டுரையும் எழுதியிருக்கிறார்.திராவிட இயக்கக் கருத்துக்களைப் பரப்பியவாராகவும் ஒரு முகம் அவருக்குண்டு.

பி.எஸ். ராமையாவின் துணிவு...- Dinamani

எழுத்தாளர் பி.எஸ்.ராமையா

ராமையா திட்டமிட்டுச் சிறுகதை மணிக்கொடியைப் பயிர் செய்தார்.அவரே எதிர்பாராத அளவு ஒரு இலக்கிய சக்தியாக அவர் கையில் மணிக்கொடி வளர்ந்தது.இந்த இலக்கிய சக்தி பணக்காரனுடனோ பழமையுடனோ நின்று திருப்தி அடையவில்லை. ஏழையையும் தனிமனிதனையும் சமூகத்தையும் தத்துவங்களையும் உண்மைக்கண்களோடு பார்க்கும் ஒரு போக்காக அமைந்ததுதான் அதன் சிறப்பு என்று கூறலாம்” என்று 1965இல் வெளியான பி.எஸ்.ராமையா மணிவிழா மலரில் ந.பிச்சமூர்த்தி எழுதுகிறார்.

புதுமைப்பித்தன் உள்ளிட்ட தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளிகளுக்கு மேடை அமைத்துக் கொடுத்த பெருமை பி.எஸ்.ராமையாவுக்கு உண்டு.

அந்தக்காலத்தில்,மணிக்கொடி எழுத்தாளர்களுக்கும் ஆனந்த விகடன் எழுத்தாளர்களுக்கும் இடையே ஒரு சீனப்பெருஞ்சுவரே எழுப்பப்பட்டிருந்தது.கல்கிக்கும் புதுமைப்புத்தனுக்கும் இடையே ஒரு பனிப்போரே நிகழ்ந்துகொண்டிருந்தது.ஜனரஞ்சக எழுத்தைப் பிரதிபலிப்பவராக –வாசகனுக்கு வால் பிடித்துச் செல்பவராக கல்கி மணிக்கொடிக்காரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.ஆனால் மணிக்கொடி ஆசிரியராகவே பணியாற்றிய ராமையாவுக்கு ஆனந்த விகடன் பற்றி அத்தகைய உணர்வு இருக்கவில்லை.

தன்னுடைய சிறுகதைத்தொகுப்பின் முன்னுரையில் இவ்விதம் குறிப்பிடுகிறார்:“ 1933-ம் ஆண்டு மறுமலர்ச்சி இலக்கிய சரித்திரத்தில் ஒரு எல்லைக்கல்.அந்த ஆண்டில் ஆனந்த விகடன் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு ஒரு பெரும்பணி செய்தது.அந்தப் பத்திரிகையில் முதல் முறையாகச் சிறுகதைப்போட்டி ஒன்று நடத்தினார்கள்.அந்தப் போட்டியே தமிழ் படிப்பவர்களை இலக்கிய வகைகளில் சிறுகதைக்குரிய இடத்தையும் மதிப்பையும் பற்றிச் சிந்திக்கச் செய்தது….”

சிறுகதை என்கிற புதிய (1930களில்) இலக்கிய வடிவத்தைப் பரவலாக அறிமுகம் செய்தது ஆனந்த விகடன் என்கிற நெகிழ்வுப் பார்வை அவருக்கு இருந்திருக்கிறது.மணிக்கொடியிலிருந்து வெளியேறிய பிறகு ஆனந்த விகடனில் வாரம் ஒரு  சிறுகதை எழுதினார் பி.எஸ்.ராமையா. இப்படி ஒரு இலக்கிய அரசியலை ராமையா முன்னெடுத்தார் என்பது முக்கியம்தான் எனக்கருதுகிறேன்.

க.நா.சுப்ரமண்யம் 10 | க.நா ...

எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியன்

க.நா.சுப்பிரமணியன் அவர்கள் அவ்வப்போது வெளியிடும் சிபாரிசுப்பட்டியலில் தவறாது இடம் பெறும் நாவலாக ந.சிதம்பரசுப்பிரமணியனின் இதயநாதம் இருக்கும்.

ந.சிதம்பர சுப்பிரமணியன் நம்பிய,அவரைப் பாதித்த,அவரை ஆட்கொண்ட  மூன்று விஷயங்கள் என காந்தியம்,சங்கீதம்,அத்வைதம் ஆகியவற்றைக் கூறலாம். இம்மூன்றுக்கும் தன்னுடைய எழுத்துக்களில் உரிய இடம் அளித்துவிட்டார்.இம்மூன்றுக்கும் அப்பால் அவருக்கு இந்திய வாழ்வின் பாரம்பரியம் அது புனிதமெனக்கொண்டாடும் அநேக அம்சங்களின் மீதும் விமர்சனமே இல்லாத ஆழ்ந்த மரியாதை உண்டு.அவருடைய எல்லாக்கதைகளிலும் இதை நாம் காண முடிகிறது. அவர்காலத்து எழுத்தாளர்கள் எவரையும்விடப் பிற்போக்கான சடங்குகள் சாத்திரங்களுக்கு அடிபணிந்துபோய்விடுகிறவராகவே அவர் படைப்புகள் வழி அவரை நாம் அடையாளம் காண்கிறோம்.

1930-40 களில் 15 வயதுக்குழந்தைகளைப் பார்த்துக் காதல் கொள்வது சாதாரணமாகவும் இயல்பாகவும் இருத்து போலும்.மௌனியும் 13 வயதுக்குழந்தை மீது மையல் கொள்பவனைப்பற்றி “அழியாச்சுடர்”கதையில் எழுதினார்.ந.சிதம்பரசுப்பிரமணியனும்  15 வயதுச் சிறுமி மீதே நாயகனை மையல் கொள்ள வைக்கிறார்.ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் குழந்தைதானே என்று நமக்கு இன்று இதை வாசிக்க சற்று அதிர்ச்சியாகவே இருக்கிறது.பால்ய விவாகம் என்கிற பாரம்பரியத்திலிருந்து 15 வயதுப்பெண் என்றாவது வந்தார்களே என்று ஆற்றுப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

'ந.சிதம்பரசுப்பிரமணியன்... இவர் போல கதையைத் தொடங்கவும் முடிக்கவும் யாராலும் முடியாது!' - கதைசொல்லிகளின் கதை பாகம் 12

எழுத்தாளர் ந.சிதம்பரசுப்பிரமணியன்

மணிக்கொடி வந்துகொண்டிருந்த காலத்தில் எழுதியவரானாலும் மணிக்கொடிக்கொடிப்பக்கமே தலை வைத்துப்படுக்காத ஒரு எழுத்தாளராக வாழ்ந்தவர் எஸ்.வி.வி எனப் புகழ் பெற்ற எஸ்.வி.விஜய ராகவாச்சாரி. ஆங்கிலத்தில் எழுதிப் புகழ்பெற்ற பின்னர் தமிழுக்கு எழுத வந்தவர் எஸ்.வி.வி. மணிக்கொடிக்காரர்கள் மறுதலித்த கல்கியால் கல்கியின் வேண்டுகோளால் தமிழில் கதை எழுத வந்தவர் எஸ்.வி.வி.. ஆனால்,அ.மாதவய்யாவைப்போலவோ பாரதியைப்போலவோ தன் எழுத்திலோ வாழ்க்கையிலோ சாதியத்துக்கு எதிராக அவர் இயங்கியதாகவோ எழுதியதாகவோ தடயம் இல்லை.

ரசிப்பதற்கான எழுத்து என்கிற ஒரே வகையில் அவரது பயணம் போய்க்கொண்டிருந்தது. அவருக்கு வக்கீல் தொழில் ஓடவில்லை.அதற்குத் தான் பிராமணராகப் பிறந்ததுதான் காரணம் என்று குறிப்பிடுகிறார்.”பிராமணிய அடையாளங்களையும் அதன் மிச்சங்களையும் நாங்கள் எப்போதோ விட்டொழித்தும் எங்களுக்குப் பிராமணப்பட்டம் வேண்டாம் என்று தொண்டை கிழியக்கத்தியும்  அது எங்கள் இனத்தின் மேல் நாசமாய் ஒட்டிக்கொண்டிருக்கிறது.சில பரம்பரைச் சொத்துக்கள் நம்மை விட்டுப்போகாது” என்று அவர் குறிப்பிட்டதாக வாசந்தி தன்னுடைய ”எஸ்.வி.வி எனும் ரஸவாதி” என்கிற நூலில் குறிப்பிடுகிறார்.

சமகால தலைவர்களை கதைமாந்தர்கள் ...

எழுத்தாளர் கல்கி

”கல்கியினால் சிறுகதை தமிழ் மண்ணில் இரண்டறக்கலந்தது.அந்த அத்திவாரத்தின் மீதே சிறுகதை கட்டியெழுப்பப்பட்டுச் சிகரமும் அமைக்கப்பட்டது..அச்சிகர வளர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் மணிக்கொடிக்குழுவினர்”என்று தமிழறிஞரும் இடதுசாரி சிந்தனையாளருமான இலங்கைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.ஆனாலும் மணிக்கொடி குழுவினரும் அதைத்தொடர்ந்த சிற்றிதழாளர்களும் கல்கியை ’அகல உழுதவர்’ ’தழுவல் கதைகள் எழுதியவர்’ என்ற அடைமொழியுடனே குறிப்பிடுவர்.

காந்திஜியின் கொள்கைகளை,சமூக சீர்திருத்தக் கருத்துக்களை,மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து உறுதியுடன் எழுதினார் கல்கி.அன்றைய தேதியில் அது முக்கியமான அரசியல் முன்னெடுப்புத்தான்.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனராலாக 1948 முதல் 1950 வரை பொறுப்பிலிருந்தவரும் 1952 முதல் 1954 வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும் 1955இல் பாரத ரத்னா விருதைப்பெற்ற முதல் இந்தியருமான மூதறிஞர் ராஜாஜியை ஒரு சிறுகதை எழுத்தாளராக இலக்கிய உலகம் போற்றுவதில்லை.  அறிஞர் அண்ணாவுக்கு நேர்ந்த  கதிதான் மூதறிஞருக்கும் ஏற்பட்டது.மதுவிலக்குப் பிரச்சாரம், தீண்டாமை ஒழிப்பு போன்ற அன்றைய காங்கிரஸ் கட்சியின்  நடவடிக்கைகளுக்குத் துணையாகப் பிரச்சாரம் செய்யும் நோக்குடன் நிறையக் கதைகள் எழுதியவர் ராஜாஜி.அவர் எப்போதுமே ஓர் ஒழுக்கவாதி. ஆகவே சிறுகதை உள்ளிட்ட எந்தப் படைப்பானாலும் அவசியம் ஒரு நீதி இருக்கவேண்டும் என்பதை அவர் வற்புறுத்துவார்.   அதனால் அவருடைய கதைகளில் பிரச்சார தொனி சற்றுத் தூக்கி நிற்கும்.ஆனால் ’சபேசன் காப்பி ’போல அத்தகைய பிரச்சாரம் ஏதுமில்லாத வாழ்க்கைக்கதைகளையும் அவர் சுவைபட எழுதியிருக்கிறார்.

ராஜாஜி என்னும் மகத்தான ஆளுமை!| Dinamalar

மூதறிஞர் ராஜாஜி

காஞ்சிப் பெரியவரைச் சந்தித்த இரு அனுபவங்களைப்பற்றி அநுத்தமா எழுதிய உணர்ச்சிகரமான கட்டுரை ஒன்று இணையத்தில் காணக்கிடைக்கிறது.ஆகவே இவர் அக்கரையில் நிற்பவர் என்று புறந்தள்ளுவது நியாயமில்லை.40’களில் வாசிப்பும் ,இலக்கியப்பரிச்சயமும் வாய்க்கப்பெற்ற உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த பெண்கள்தாம் ஆரம்பத்தில் எழுத வந்தனர்.அதிலும்தான் எத்தனை பேரால் தொடர்ந்து எழுத முடிந்தது.அன்றைய சமூகத்தின் பிடிக்குள் நின்று கொண்டே இலக்கியம் படைக்க வேண்டியிருந்த்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

இந்துக் குடும்பங்கள் வலியுறுத்தும் பெண் கடமைகள்,ஆச்சாரங்கள்,அடங்கி நடத்தல்,,கணவர் பணிவிடை,குடும்பப் பெருமை,குடும்ப மானம், ஈருடல் ஓருயிராக வாழ்தல்  இத்யாதி விஷயங்கள் உயர்வானவை என நம்பி வாழ்ந்து ,அதையே தன் எழுத்திலும் கொண்டாடிய ஆளுமை அநுத்தமா.பெண் உரிமை,பெண் விடுதலை போன்ற விஷயங்கள் அவருக்குத் தெரியாமலிருக்க முடியாது.2003 வரை வாழ்நத அவர் நிச்சயம் அறிந்திருப்பார்.எனினும் குடும்ப எல்லையைத் தாண்டாத வாழ்வும் எழுத்துமே அவருக்கானவை.

தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர் ...

வர்க்கப் போராட்டத்தை அழகியல் குறையாமல் கலையுணர்ச்சி த்தும்பத் தமிழில் எழுதிய முதல் படைப்பாளி   கு. அழகிரிசாமிதான்.அவரது ”வெறும் நாய்” என்கிற கதையே அதற்குச் சான்று.சுயரூபம் போன்ற கதைகளில் பசியை உணர வைத்திருப்பார். வறுமை,வேலையின்மை,ஆண்-பெண் சமத்துவம்,கல்வி மறுக்கப்பட்ட சமூகம் என பல விஷயங்களைத் தெளிவான சமூகப்பார்வையுடன் பிரச்சாரத்தொனி சிறிதும் இல்லாமல் தன் கதைகளில் முன் வைத்த கு.அழகிரிசாமியும் அவரது பால்யகால நண்பர் கி.ராஜநாராயணனும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்திருந்தார்கள். ரகுநாதனுடன் நெருக்கமான தோழமையுடன் இருந்தவர்கள்.

கம்யூனிஸ்ட்டுகளான தொ.மு.சி.ரகுநாதன், வ.விஜயபாஸ்கரன் ஆகியோர் நடத்திய இலக்கிய இதழ்களான  சாந்தி,சரஸ்வதியில் கிருஷ்ணன் நம்பியின் ஆரம்ப காலப்படைப்புகள் வெளியாகின.அவரது கதைகளைக் கேட்டு வாங்கி தோழர் ப.ஜீவானந்தம் ‘தாமரை’இதழில் பிரசுரித்துள்ளார்.தொடர்ந்து கலைமகள், சதங்கை,ஆனந்த விகடன்,கணையாழி,தீபம் போன்ற பல இதழ்களிலும் எழுதினார். “சமூக ஏற்றத் தாழ்வுகளில் அவருக்குக் கோபம் இருந்தது.குடும்பத்துக்கு உள்ளோ வெளியிலோ அநீதியான காரியங்கள் நடைபெறுகிறபோது அவர் மிகுந்த கோபம் அடைந்திருக்கிறார்.ஆனால் தனிநபராக அவரால் கதை, கவிதை எழுதுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாமல் போயிற்று.” என்று சுந்தரராமசாமி குறிப்பிடுகிறார்.

சுதந்திர தினம் (ஆகஸ்ட் 1951 ...

இந்த இடத்தில் கிருஷ்ணன் நம்பியின் எழுத்து பற்றிப் பட்டியல் மன்னர் க.நா.சு.எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது. “ அவர் கதைகளை நான் தமிழில் நல்ல கதைகள் என்று வெளியிடுகிற பட்டியலில் சேர்ப்பதில்லை என்று அவருக்கு வருத்தம்தான் என்பது எனக்குத் தெரியும்.அவர் தன் சிறுகதைகளில் ஒரு நல்ல தரத்தை எட்டியவர் என்பது எனக்குத் தெரியும்.அந்தத் தரத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு தரத்தை அவரால் எட்ட முடியாமல் போனது, அவருடைய முற்போக்குச் சிந்தனை இருட்டினால்தான் என்றும் எனக்கு நினைப்பு.”   முற்போக்குச் சிந்தனைகளை இருட்டெனக் கண்ட க.நா.சு.வின் பட்டியலில் கிருஷ்ணன் நம்பியின் கதைகள் இடம்பெறாமல் போனதில் வியப்பொன்றும் இல்லை.

”உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” என்பது எழுத்தாளர் லா.ச.ராமாமிருதத்தின் புகழ்பெற்ற கூற்று.ஒரு பேச்சுக்காக இதை அவர் சொல்லவில்லை.உண்மையிலேயே அதற்கான அவருடைய தவத்தின்,முயற்சியின் விளைவுதான் அவருடைய எழுத்துக்கள்.ஆனால் அப்படிப்பட்ட பொசுக்கும் மொழியில் என்ன எழுதினார் என்பது நம் கேள்வி. தமிழ்ச் சிறுகதையின் எல்லைகளை விரித்துச் சென்ற மனவெளிப் பயணி லா.ச.ரா.புதுமைப்பித்தனைப்போல சமூக யதார்த்தங்களைத் தன் படைப்புகளில் அடித்து விளாசியவரல்ல லா.ச.ரா.

Author Introduction - La Sa Ra – Tamil Audio Books – Podcast – Podtail

எழுத்தாளர் லா.ச.ரா என்ற ராமாமிர்தம்

சமூகப் பிரச்னைகளை அவருடைய கதைகளில் அவர் அதிகம் பேசியதில்லை.ஆனால்,சமகாலத்தை அறியாதவர் அல்லர் அவர். விருதுகள் பற்றிய ஒரு கேள்விக்கு அவர் சொன்ன பதில் அதற்குச் சான்று.

”விருதுகள் என்று கணக்கிட்டால் பத்து, பன்னிரெண்டு வாங்கியிருக்கிறேன். சாகித்ய அகாதமி, கலைமாமணி… இப்படியே போய் கொண்டே இருக்கும். சங்கராச்சாரியார், பெரியவர், ஒரு விருது கொடுத்திருக்கிறார். நான் கொஞ்சம் அதனை பெரியதாகத்தான் நினைக்கிறேன். அவருக்கும் இலக்கியத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய எழுத்தில் ஆன்மிகத்தின் சாயல் இருப்பதால், அவர் கொடுத்திருக்கிறார்.

அப்பறம் ஞானபீட விருதுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப் பட்டிருக்கிறேன். நான் பிராமணன், அந்தத் தொந்தரவு வேறு இருக்கிறது. எனவே இங்கே தி.மு.க. ஆட்சியில், எனக்கு எந்த விருதும் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஜெயலலிதா இருந்ததால் கலைமாமணி கிடைத்தது.”அவருடைய உளவியலையும் அதனுள் ஓடிய அரசியலையும் இக்கூற்று காட்டுகிறது.

விந்தன் | இது தமிழ்

எழுத்தாளர் விந்தன்

“இருப்பவனைப் பற்றி எழுதி, அவன் பணத்துக்கு உண்மை இரையாவதை விட,இல்லாதவனைப்பற்றி எழுதி அவன் அன்புக்கு உண்மை இரையாவதே மேல்” என்னும் கொள்கையுடன் நாற்பது ஆண்டுகாலம் எழுதி எழுதியே பலரின் தூற்றுதலுக்கும் ,சிலரின் போற்றுதலுக்கும் ஆளானவர் விந்தன் என்று அவரது நண்பரான திரு.மு.பரமசிவம் குறிப்பிடுவதுதான் எழுத்தாளர் விந்தனின் வாழ்க்கையின் சாரம்.

அவர் கம்யூனிஸ்ட் கட்சியிலோ வேறு எந்தக் கட்சியிலுமோ உறுப்பினராக ஒருபோதும் இருந்ததில்லை.ஆனாலும் தன்னை ஒரு எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதை விடத் தொழிலாளி என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைபவன் என்று திரும்பத் திரும்பக் கூறி வந்தார். ஒரு கம்யூனிஸ்ட்டைப்போலவே இந்த சமகால வாழ்வைப் பார்த்தார்.விமர்சித்தார்.எழுதினார்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி தன்னுடைய தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூலில் விந்தனைப்பற்றிக் குறிப்பிடும்போது, ’40களில் திமுக எழுத்தாளர்கள் யாரைக் கதை மாந்தர்களாக ஆக்கினார்களோ அவர்களேதான் விந்தனின் கதை மாந்தர்களாகவும் வந்தார்கள்.

ஆனால் திமுக எழுத்தாளர்கள் எல்லாப்பிரச்னைக்கும் காரணம் பார்ப்பனீயம் என்று ஒற்றைத்தீர்வை முன் வைத்தபோது விந்தன் பொருளுடமையே பிரச்னைகளின் அடிப்படை என்கிற சித்தாந்த்ததை நம்பியவர் என்பதால் வர்க்க பேதத்தை முன்னிலைப்படுத்தி அதற்குள் சாதியையும் கொண்டு வந்தார் எனக் குறிப்பிடுவார். அவர் அடிக்கடி சொல்வாராம் “வாழ்ந்தாலும் ’லோ சர்க்கி’ளோடுதான் வாழ்வேன்,செத்தாலும் லோ சர்க்கிளோடுதான் சாவேன்!” அவ்வாறே அவர் வாழ்வும் மரணமும் அமைந்தது.

மா.அரங்கநாதன்: கவித்துவ லயிப்பு ...

எழுத்தாளர் மா.அரங்கநாதன்

மா.அரங்கநாதன் சைவ சித்தாந்தத்தை உள்வாங்கிய  பார்வை கொண்டவர்.அவருடைய கதைகளில் இதன் தாக்கத்தைக் காணலாம். ஆனால்,வைதீக எதிர்ப்பு என்பதே அவர் உள்வாங்கியிருக்கும் சைவ சித்தாந்தத்தின் சாரம் என்பதையும் அதுதான் அரங்கநாதன் நிற்கும் இடம் என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம். அவருடைய எல்லாக்கதைகளுமே புதிர்களை நோக்கியிருப்பினும் சமகால வாழ்வைப் பகடி செய்யவும் அவை தவறுவதில்லை.

இந்துத்துவம் ஒற்றைப் பண்பாட்டை நம் மீது திணிக்கும் இக்காலத்தில் மா.அரங்கநாதன் முன் வைக்கும் ”வைதீக எதிர்ப்பு சைவத்தை ” நாம் நிராகரிப்பது நல்ல யுத்த தந்திரமாக இருக்காது.சாதிக்கு எதிராகவும் நிற்கின்றது அவரது பார்வை.

ஜி.நாகராஜன் 10 | ஜி.நாகராஜன் 10 - hindutamil.in

எழுத்தாளர் ஜி.நாகராஜன்

கம்பீரமான தன் உடலையும் உள்ளத்தையும் குடியாலும் கஞ்சாப்புகையாலும் மெல்ல மெல்லத் தானே சிதைத்துக்கொண்டு, வருங்கால எழுத்தாளர்களுக்கெல்லாம் ஓர் எச்சரிக்கையாகத் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட, ஜி.நாகராஜன்,தமிழின் முன்னுதாரணமில்லாத மகத்தான படைப்பாளி. .யாரும் அதுவரை எழுதியிராத பாலியல் தொழிலாளிகள்,சமூகத்தின் பார்வையில் குற்றச்செயல் புரிந்து பிழைப்பவர்கள் போன்ற விளிம்புநிலை மனிதர்களின் அக உலகைத் தமிழ்க் கதைப்பரப்பில் விரித்த ஒப்பற்ற படைப்பாளி.

”ஜி.நாகராஜன் பற்றிய இன்னொரு பிரமிப்பூட்டும் விசயம்,முகத்தோற்றத்தில் கூட அவர் தன் சாதி அடையாளத்தைக் களைந்துவிட்டிருந்தது.பேச்சு,உடை,சிந்தனை,உணர்வு,நடத்தை, செயல்,உணவு, வாழ்க்கை முறை என எல்லாவற்றிலும் பிரக்ஞை பூர்வமாக சாதியத்தன்மைகளைக் கடந்துவிடப் பிரயத்தனப்படுவதும், அவ்வாறாகக் கடந்துவிட்ட ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதும் சாத்தியம்தான்.

ஆனால், அவர்களுடைய தேர்வாக இல்லாத,பிறப்பால் அமைந்த முகத்தோற்றத்தில் அதை களைந்துவிடுவது அபூர்வமென்றே நினைக்கிறேன்.ஆனால் அப்படியான ஒரு அபூர்வமாகத் தன்னை ஆக்கிக்கொண்டவர் ஜி.என்.ஸ்டாலின் மீசையும் ராணுவ முடிவெட்டும் வஸ்தாதுகளின் உடற்கட்டும் மட்டுமல்ல.முகத்தில் உருவேற்றிக்கொண்ட முரட்டுத்தனமும் சேர்ந்து சாதியத்தின் எவ்விதச் சாயலும் இல்லாமல்,அதை அறவே துடைத்துவிட்ட மனிதர் அவர்.”என்பது ஜி.நாகராஜன் பற்றி சி.மோகன் தீட்டும் சித்திரம்.

சதத் ஹசன் மாண்ட்டோ எழுதிய தேசப்பிரிவினைக் காலத்துக் கதைகளும் ஜி.நாகராஜனின் கதைகளும் ஒரே அலைவரிசையில் இயங்குவதை நாம் மீண்டும் மீண்டும் காண முடியும்.
வை.மு.கோதை நாயகி அம்மாள், ருக்மணி பார்த்தசாரதி,குமுதினி,லட்சுமி,கோமகள்,,கமலா சடகோபன், அநுத்தமா, எம்.எஸ்.கமலா, எஸ்.கமலாம்பாள், என்று பல படைப்பாளிகள் அக்காலத்தில் எழுதினாலும் அவர்களின் கதைகள் குடும்ப எல்லையைத் தாண்டாதவையாகவே இருந்தன..

குடும்பத்திற்குள் உருவாகும் சிக்கல்கள்,குழந்தை வளர்ப்பில் பிரச்னை,கணவனின் சந்தேகம் இப்படியான விஷயங்களே.அதிகம் போனால் பெண் பார்த்து ஒதுக்கும் கொடுமை,வரதட்சிணை,சீர் செய்வது  தொடர்பான பிரச்னை ஆகியவற்றை இவை தாண்டுவதில்லை.அன்றைக்கு அவர்களால் அப்படித்தான் எழுத முடிந்தது.…ஆனால் கமலா விருத்தாச்சலம் (புதுமைப்பித்தனின் இணையர்) இப்பட்டியலில் தனித்து ஒளிரும் படைப்பாளியாக பெண் மனதின் நுட்பமான அசைவுகளை,பெண் குரலைப் பதிவு செய்திருக்கிறார்.

வானத்து அமரன்! | Read Book Reviews | Buy Tamil ...

எழுத்தாளர் கமலா விருத்தாச்சலம்

ஒரே ஒரு சிறுகதை எழுதிச் சிறுகதை வரலாற்றில் இடம் பெற்ற மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திராவிட இயக்கத் தூண்களில் ஒருவர். தேவதாசிகளின் வாழ்க்கை முறை,அவலங்கள்,அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு எவையெல்லாம் உதவியாயிருந்தன என்பதையெல்லாம் பேசுகின்ற “”தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்” என்கிற நாவலை அவர் 1936இல் எழுதினார்.

இப்பேர்ப்பட்ட தலைவர் ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறார் என்பது சிறுகதை வரலாற்றில் குறிப்பிடத்தக்க செய்தியல்லவா? 1945இல் தமயந்தி என்கிற கதையை அண்ணா அவர்கள் நடத்திய ‘திராவிட நாடு’ இதழில் ஐந்து வாரங்கள் தொடராக எழுதியுள்ளார்.ஆரிய/திராவிட அரசியலையும் பார்ப்பனரல்லாதோர் அரசியலையும் இக்கதையில் முன் வைத்தார்.

ஆ.மாதவனின் கதைகளின் பொதுவான உள்ளடக்கமாக பாலியல் வரம்பு மீறல் இருக்கிறது.அவர் கடைத்தெரு மக்களையும் அடித்தட்டு மக்களையும் பற்றித்தான் பேசுகிறார்.ஆனால் அவர்களின் வாழ்வியல் அவரின் கதைக்களனாவதில்லை.கதையின் போக்கில் தற்செயலாக அது வெளிப்படும்.திமுக உறுப்பினராக இருந்து இளமைக்காலத்தில் பணியாற்றிய அவர் பின்னர் அதன் போக்குப் பிடிக்காமல் விலகியவர். ஜி.நாகராஜன் அழுத்தமாகத் தீட்டிய புழக்கடை வாழ்க்கையை இவர் மெல்லிதாகத் தீட்டியிருக்கிறார் என்று சொல்லத்தோன்றுகிறது. கடைத்தெருவில் மூட்டை தூக்குபவர்கள்,பிச்சைக்காரர்கள், வேசிகள், தெருப்பொறுக்கிகள், சிறுதொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்க்கையைத் தான் அவர் தீட்டியிருக்கிறார். திருவனந்தபுரத்தின் சாலைத்தெருவில் அமைந்த செல்வி ஸ்டோர்ஸ் என்னும்  கடையில் அமர்ந்தபடி அவர் நம்மை நோக்கிப் பேசுகிறார்.உள்ளதை உள்ளபடி எந்தப்பக்கமும் சார்பு நிலை எடுக்காமல் எழுதிச்செல்கிறார்.

எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தனுக்கு ...

எழுத்தாளர் ஜெயகாந்தன்

ஜெயகாந்தனின் சிறுகதை வரலாற்றை எழுதுபவர்கள் சில கட்டங்களாக அவரது சிறுகதைப் பயணத்தைப் பிரிக்கிறார்கள்.கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து வழ்ந்த காலத்தில் எழுதியவை எல்லாம் எளிய அடித்தட்டு வர்க்க மனிதர்களைப் பற்றிய கதைகள்.அடுத்த கட்டமாக சரஸ்வதி இதழில் எழுதத்துவங்கிய காலத்தில் பாலியல் பிரச்னைகளைத் தொட்டுக் கடுமையான வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்திய கதைகள்.ஆனந்த விகடனில் எழுதத்துவங்கிய பிறகு பரந்த வாசகர்களை நோக்கி உரத்த குரலில் பேசிய கதைகள் எனப் பல பரிமாணங்களில் அவரது சிறுகதைகள் பயணிக்கின்றன.இன்னொரு முக்கிய வகைமை பிராமணக் குடும்பங்களில் நிலை கொண்டு பேசிய கதைகள்.திராவிட இயக்கத்தார் கண்மூடித்தனமாக பிராமண எதிர்ப்பைப்பேசியதால் அதற்கு எதிரான மனநிலையில் ஜெகே பிராமணக்கதைகளை எழுதியதாகவும் கருதுவோர் உண்டு.

அவர் இலக்கியப் படைப்புகளைப் படைத்ததோடு நில்லாமல், அப்படைப்புகளை முன் வைத்துத் தன் பரந்துபட்ட வாசகர்களோடு இடையறாத உரையாடல்களை நிகழ்த்தி வந்தார்..தன்னுடைய நூல்களின் முன்னுரைகளை அத்தகைய விவாதங்களுக்கான தளமாகப் பயன்படுத்திக்கொண்டார்.அது போதாதென்று தமிழகம் முழுவதும் பயணம் செய்து மக்களிடம் இலக்கியக் கூட்டங்களில் விரிவாக உரையாற்றினார்.எப்போதும் ஒரு அரசியல் பிரச்னையைக் கையிலெடுத்து உரத்த குரலில் கதைகளில் பேசியவர் ஜெயகாந்தன்.அது கடைசியில் ஜெயஜெய சங்கர என்று அந்த அரசியலையும் முன்னெடுத்தது வரலாறு.

தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் குறைந்த எண்ணிக்கையில் கதைகள் எழுதினாலும் மறுக்க முடியாத சிறுகதையாளர்களாகத் திகழும் வரிசையில் கிருத்திகாவும் என்றென்றும் இருப்பார்.ஜெயமோகன் குறிப்பிடுவதுபோல ஆண் மைய அரசியலை நோக்கிக் கேலியுடன் புன்னகைக்கும் ஒரு அரசியல் அவர் கதைகளில் உள்ளுறையாக இருக்கும்.

”இலக்கியம் தனிமொழி யன்று.உரையாடல்.உரையாடல் எனும்போது,நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது சிந்தனையின் நிழல்.காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவைப்படுவது போல படைப்பாளிக்கு ஒரு வாசகன் தேவை.’நான் எனக்காக எழுதுகிறேன்’என்று சொல்வதெல்லாம், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதாகும். இலக்கியம்,மனிதன்  சமுதாயத்தோடு  கொள்கின்ற  உறவுகளை  நிச்சயப்படுத்தும் உணர்ச்சிகளின் பரிமாற்றம் ” என்கிற தெளிவான பார்வையுடன்  தன் படைப்புப் பயணத்தைக் கடந்த  55 ஆண்டுகளாகத் தொய்வின்றித் தொடர்பவர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி.

Noted writer and playwright Indira Parthasarathy tells how he got ...

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி

உணர்வுத்தளத்தில்  துவங்கும்  அவரது கதைகள் அறிவார்ந்த தளத்திலான உரையாடலாகவும் விவாதமாகவும் உருமாற்றம் கொள்வதை  நாம் காணலாம்.இது இந்திராபார்த்தசாரதி அவர்களின் எழுத்தின் சாரம் என்று சொல்லலாம். மத்தியதர வர்க்கம்,உயர் மத்திய தர வர்க்கம் அதிலும் குறிப்பாக டெல்லியில் உயர் பதவிகளில் இருக்கும் வர்க்கத்தினர் இவர்களைக் கதாபாத்திரமாக்கி அதனூடாக  ஒட்டுமொத்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் வாழ்வையும் வாழ்வின் சாரத்தையும் அவ்வர்க்கத்தின் அறத்தின் வீழ்ச்சியையும்  சொல்ல முயற்சிப்பவை அவரது சிறுகதைகள் எனச் சொல்லலாம்..

ஜானகிராமனின் நாவல்கள், சிறுகதைகள் எல்லாமே அவர் பிறந்த தஞ்சை ஜில்லாவின் மத்திய தர பிராமணர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பவை, அந்த வாழ்க்கை கொண்ட மதிப்புகளின் உச்சங்களையும் சீர்கேடுகளையும் பிரதிபலிக்கும் ஆவணம் என்றும் ஒரு நோக்கில் சொல்லலாம். ஜானகிராமன் படைக்கும் உலகம் லக்ஷிய வாதிகளால் நிறைந்தது. அவர்கள் தாம் தமக்கு விதித்துக்கொண்டுள்ள லக்ஷியங்களைக் காக்க எப்போதும் வாழ்க்கையின் வதைக்கும் யதார்த்தங்களையும், சூழ்நிலையையும் போராடிக்கொண்டே யிருக்க வேண்டியிருக்கிறது.” என்பது அவரைப்பற்றிய வெங்கட் சாமிநாதன் அவர்களின் சித்தரிப்பு.அதில் உடன்படலாம்.

writermaanee: தி. ஜானகிராமன்

எழுத்தாளர் தி. ஜானகிராமன்

தஞ்சை விவசாயக்கூலிகள் சாட்டையடியும் சாணிப்பாலும் தின்று கொண்டிருந்த காலத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் அதுபற்றி எதுவுமே எழுதாமல் மேல்தட்டு வர்க்கத்து வாழ்க்கையையே வியந்து வியந்து எழுதிக்கொண்டிருந்தார்கள் என்கிற விமர்சனம் தி.ஜானகிராமன் மீதும் உண்டு.என்றாலும் எளியவர்கள் மீது பரிவும் சாய்மானமும் கொண்டவராக அவரது சிறுகதைகள் அவரை அடையாளப்படுத்துகின்றன.அதற்கு நல்ல உதாரணம் ‘சிலிர்ப்பு’ கதை.

புஞ்சை கிராமத்து வாழ்க்கையே ந.முத்துசாமியின்   எல்லாக் கதைகளிலும் வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படுவதைக் காண்கிறோம்..சென்னை நகர வாழ்க்கை சார்ந்தும் ஓரிரு கதைகள் எழுதியுள்ளார்.புஞ்சை வாழ்க்கை என்பது ஒரு பணக்கார விவசாயியாக இருக்கும் பிராமணக்குடும்பத்தின் பையனாகப் பிறந்த சிறுவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. அவருடைய புகழ்பெற்ற ’நடப்பு’ கதையில் உயிர் காத்த பெரியவர் கண்ணுசாமியை கதைசொல்லி அவன் இவன் என்று ஏகவசனத்தில் குறிப்பிடுவது இன்றைய வாசகர்களாகிய நமக்கு கடுமையாக உறுத்தும் சாதி அரசியலாகிறது.மகனைக்காத்த கண்ணுசாமிக்கு பண்ணையார் தன் சொத்தில் ஒரு சிறு பகுதியைக்கூட எழுதி வைக்கிறேன் என்று சொல்லவில்லை.மாசம் ஒரு கலம் நெல்தான் தருகிறேன் என்கிறார்.ரொம்ப கணக்குப்பார்த்துத்தான் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் பண்ணை என்று நமக்குத் தோன்றுகிறது.

போட்டோகிராபிக் யதார்த்தம் என்பதாக ந.முத்துசாமியின் கதைகள் 40களின் புஞ்சை கிராமத்து வாழ்க்கையை விமர்சனமின்றிப் படைத்துக்காட்டுகின்றன என்று சொல்லலாம்.

பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் ...

எழுத்தாளர் அசோகமித்திரன்

பெரும்பாலும் அசோகமித்திரனின் கதை மாந்தர்கள் ஹைதராபாத்,சென்னை ஆகிய இரு பெரு நகரங்களில் வாழ்பவர்கள்.அந்நகரங்களில் வாழும் கீழ் மத்தியதர மக்களும் உழைப்பாளி வர்க்கமும்தாம் அவருடைய கதை மாந்தர்கள்.கிட்டத்தட்ட ஜெயகாந்தன் படைப்புகளில் புழங்கிய வெளிதான் இவருடையதும்.ஆனால் ஜெயகாந்தன் சத்தமாகப் பேசினார்.அசோகமித்திரன் சத்தமே இல்லாமல் ஒடுங்கிய குரலில் கதை சொன்னார்.அவருடைய நாவல்களில் நான் சற்றும் சந்திக்காத ஒரு சிறு சலிப்பை முதன் முதலாக அவருடைய சிறுகதைகளை வாசிக்கையில் நான் அடைந்தேன் என்பது உண்மை.பின்னார் தொடர்ந்து வாசிக்க வாசிக்க அவருடைய சிறுகதைகளில் காணப்படும் ஒரு ‘சாதாரணத்தன்மை’ மற்றும் அபூர்வமான ஓர் எளிமை சிறுகதைகளில் எவருக்கும் சித்திக்காத ஒரு கலை நுட்பம் என்பது பிடிபட ஆரம்பித்தது.

பல பரிமாணங்களையுடையது அவரது எழுத்து என்பதை அறிந்திருந்தாலும் ,வறுமையைப் பாடிய கலைஞன் என்றே அவரைக் குறிப்பிட நான் ஆசைப்படுகிறேன்.வாசகனை ஈர்க்க எந்த மெனக்கெடலையும் செய்யாத இயல்பான எழுத்தின் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்வையே ஒவ்வொரு கதையிலும் பேசுகிறார்.எந்தத் தீர்வையும் அவர் முன் வைப்பதில்லைதான்.எதை நோக்கியும் அவர் கதைகள் நம்மை அழைத்துச் செல்லவில்லைதான்.ஆனாலும் அவருடைய மனிதர்கள் யார்?எளிய மனிதர்கள்.நகர்ப்புற வாழ்வில் உழலும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் உதிரிப்பாட்டாளி வர்க்கத்தினர்.

இறுதிவரை அவர் தன் பிராமணாள் பாஷையை விடவில்லை.நன்னா இருக்கேளா என்றுதான் கேட்பார்.தான் பிரமணனாகப் பிறந்ததால் அவமதிக்கப்பட்டதாகவும் வஞ்சிக்கப்பட்டதாகவும் ஒரு உணர்வு அவருக்கு இருந்தது.அதில் ஓர் அரசியல் பார்வை அல்லது தெளிவு அவருக்கு இருக்கவில்லை என்கிர விமர்சனம் அவர்மீது இருக்கிறது.

அதையும் கணக்கில் கொண்டே நான் கூற விரும்புகிறேன்.அவர் இல்லாமையைப் பேசிய கலைஞன்.பொருளாதாரக் காரணங்களால் வாழ்விழந்த மனிதர்களைப் பற்றிப் பேசிய கலைஞன்.தனக்குள் பயணம் போவதாகப் பம்மாத்துப் பண்ணாமல் புற உலகோடு மன உலகங்களை இணைக்கத் தன் எழுத்தில் முயன்ற கலைஞன்.

எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு - இல ...

எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராமின் கதைகளைப் பேசும்போது பாலியல் வேட்கையை எடுத்தியம்பிய கதைகள் என்றே கூடுதலாக நாம் பேசிவிட்டோமென்று படுகிறது.பசியை அறிந்த கலைஞன்.பசியைப் பாடிய கலைஞன் என்று எம்.வி.விக்கு இன்னொரு முகம் இருப்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.அவருடைய ‘வயிறு பேசுகிறது’ ‘மழை’ போன்ற கதைகள் சான்றாக அமையும் கதைகள்.பைத்தியக்காரப் பிள்ளை கதை எளிய சௌராஷ்டிரா நெசவாளி மக்களின் துயர்மிகுந்த வாழ்வைப் பேசும் அபூர்வமான கதையல்லவா?அழகுகளை மட்டுமின்றி மனைத மனதின் குரூரங்களையும் பேசும் கதையாகவும் அது அமைகிறது.

பிரமிள்: அருவங்கள் - சார்வாகன் & ஹரி ...

எழுத்தாளர் சார்வாகன்

கொள்வார் இல்லாததால் கொடுக்காமல் போன கலைஞன் சார்வாகன்.இவருடைய எழுத்தைப் போலவும் இல்லாத தனித்துவத்துடன் மிளிரும் அவரது கதைகளை வாசிக்கையில் இந்த ஏக்கம் நம் மனதில் படர்கிறது.ஓர் இடதுசாரியாக காலம் முழுதும் வாழ்ந்து மறைந்தவர் சார்வாகன்.அவரது சிறுகதைகள் வாழ்வின் புதிர்களைப் பேசுகின்றன.அறிவியல் பார்வையுடன் அறிவியலுக்கும் பண்பாட்டுக்கும் இடையிலான உரையாடலைப் பேசுகின்றன.தன் பெயருக்கேற்ப லோகாயதக்கருத்துக்ளை கதைகளுக்குள் முன் வைத்தவர் சார்வாகன்.”நடக்க முடியாதவள் ” கதை அவரது மிக முக்கியமான கதை.நோயுற்ற பெண்ணின் மன உலகைப் பேசும் அபூர்வமான கதை.அதிகம் பேசப்படாத பண்பாட்டு அரசியலைப் பேசியவர் சார்வாகன்.

மின்னம்பலம்:சிறப்புக்கட்டுரை ...

எழுத்தாளர் சுந்தர ராமசாமி

தமிழ்ச்சிறுகதை வரலாற்றின் இரண்டாம் அலையின் மீது மேலெழும்பி வரும் ஒரு முகம் சுந்தரராமசாமியினுடையது.அவர் எழுதத் துவங்கிய காலத்தில் தோழர் ஜீவாவுடனான நெருக்கத்தினால் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்திருந்தார்.ரகுநாதனின் சாந்தி இதழில்தான் எழுதத் துவங்கினார்.உணவும் உணர்வும் ,கோவில் காளையும் உழவு மாடும்,பொறுக்கி வர்க்கம்,முதலும் முடிவும் போன்ற ’முற்போக்கு’க் கதைகள் இவை.இக்கதைகளில் எழுதியது போன்ற ஊர்ப்பிரச்னைகளை அவர் பின்னர் எழுதவில்லை.க.நா.சுவுடன் பின்னர் ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக அவருடைய பார்வையின் தாக்கம் சு.ரா.மீதும் விழுந்ததால் அவருடைய இலக்கியக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. இலக்கியத்தில் தரம் பற்றிய கவலையும் அக்கறையும்  அதிகமானது.

சீதை மார்க் சீயக்காய்த்தூள் கதையில் வரும் ஓவியனைப்போல  சு.ராவின் நிலைப்பாடு மாறியது.என்னைப்போன்ற இளைஞர்கள் பலரும் 70-80 களில்  சு.ரா.பால் ஈர்க்கப்பட்டது இத்தரம் பற்றிய கிறக்கத்தினால்தான் என்பேன்.ஸ்டாம்பு ஆல்பம்,நாடார் சார் போன்ற கதைகளில் குழந்தைகளின் உலகத்தை நுட்பமாகப் படைத்தார் சு.ரா.பிரசாதம்,சன்னல்,ரத்னாபாயின் ஆங்கிலம்,முட்டைக்காரி  எனப் பல அபூர்வமான கதைகளைப் படைத்த சு.ரா. போதை,வாசனை,பல்லக்குத் தூக்கிகள்,பிள்ளைகெடுத்தாள் விளை போன்ற கதைகளுக்காகக் கடுமையான விமர்சனத்துக்காளானார். சாதியப் பிடிமானத்திலிருந்து விடுபட முடியாத கதைகள் என்கிற தாக்குதலுக்கு ஆளான கதைகள் இவை.இந்த விமர்சனங்களால் தன் இறுதிக்காலத்தில் மனம் துவண்டுபோயிருந்தார் சு.ரா.

சு.ராவின் கருத்துலகையும் கதை உலகையும் ஆய்வு செய்த அறிஞர் ராஜ்கௌதமன் இப்படித் தொகுக்கிறார்:

“சோசலிசம்,யதார்த்தவாதம்,புனைவியல்,நவீனத்துவம்,பின் நவீனத்துவம்,அடுத்து பிராமண ஆதரவு,பிராமண எதிர்ப்பு,மிருகப்புணர்ச்சி ஓசை,’ஆனந்த அல்குல்’, விபச்சாரிகள்,சாதியம்,தலித்தியம்,பெண்ணியம், இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றிய பகடிகள்,இந்துக்கலாச்சாரம்,பிரம்மச்சரிய,ஆரண்யக,சந்நியாச ஆஸ்ரமங்கள், கோவில் கோபுரக்கலசம்,சாத்வீக நெறி,கிரகஸ்தத்தில் பிரம்மச்சர்ய வாழ்க்கை,ஜவுளிக்கடை,பள்ளிக்கூடம், கன்னியாகுமரிக்கடல், அம்பி,பாலு,தகப்பனார்…ஆகியவை சு.ரா.வின் உலகம்!”

எல்லா அரசியலுக்கும் செவி கொடுத்த எழுத்து எனச்சொல்லலாமா என்று தோன்றுகிறது.

தியாகிகளால் அதிகாரத்தைக் கையாள ...

எழுத்தாளர் கி.ராஜநாராயணன்

கரிசல் இலக்கியம் என ஒரு புதிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதன் சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டவர் கி.ராஜநாராயணன்.அவருடைய எழுத்து வாய்மொழி இலக்கியத்தையும் எழுத்து இலக்கியத்தையும் இணைக்கும் பாலமாக அமைந்தது.கரிசல்காட்டு விவசாயிகளின் வாழ்வை விஸ்தாரணமாகச் சொன்ன முதல் கலைஞன்.அன்றைய நாட்களில் இடைசெவலில் கம்யூனிஸ்ட் கட்சியைத்துவக்கிய முன்னோடிகளில் ஒருவராக இருந்தவர். தோழன் ரங்கசாமி , கரண்டுபோன்ற கதைகள் அதற்குச் சான்றாக நிற்கின்றன.வட்டார மொழி அரசியலை சிறுகதைக்குள் அழுத்தமாக முன் வைத்த கி.ரா வின் கதைகள் முற்றிலும் கிராமத்து வாழ்வை,அதன் பொருளாதாரத்தை அதன் பண்பாட்டை முன் வைத்த அரசியல் கதைகளாகும்.

இனி மூன்றாவது அலை…விரிவாக…

தீராத பக்கங்கள்: வலைப்பக்கத்தில் ...

எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் 

முந்தைய தொடர்கள்:

தொடர் 1 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்- 1 : எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 2 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 2 : ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 3 ஐ வாசிக்க

தொடர் 3 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 4 ஐ வாசிக்க

தொடர் 4 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்



தொடர் 5 ஐ வாசிக்க

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 6 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-6 : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 7 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 8 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-8: பிரபஞ்சன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 9 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-9: லிங்கன்– ச.தமிழ்ச்செல்வன்



தொடர் 10 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 11 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 12 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 13 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-13: அம்பை – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 14 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 15 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. மதுசுதன்

    மிகநீண்ட கட்டுரையாக இருப்பினும் தமிழ்ச் சிறுகதையின் தடங்களை அதன் அரசியல் உட்பிரவாகத்தையும் மிகச்சிறப்பாக பிரதிபலித்திருக்கும் கட்டுரை இது.தமிழ்ச்சிறுகதையின் நீண்ட பயணத்தை என்னைப்போன்ற இளம் தலைமுறையினர் அதன் ஆழ அகளங்களை மிகநுட்பமாக அறிந்நுகொள்வதற்கான ஒரு வரலாற்று ஆவணமாக இத்தொடர் அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

    முன்பெல்லாம் ஏதேனும் சந்தேகம் என்றால் நீங்கள் எழுதிய ‘என் சகப்பயணிகள்’ தொகுப்பை புரட்டுவது வாடிக்கை.அப்படித்தான் தஞ்சை பிரகாஷ் குறித்த ஒரு குழப்பம் இருந்தபோது மேற்கண்ட நூலை ஒருதரம் புரட்டியபிறகே ஒரு தெளிவு கிடைத்தது.அது போல இனி இந்த தொடர் இறுதியில் புத்தகமாக வரும் போது பெரும் பயணாய் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *