எப்படி நிமிர்ந்து பார்ப்பேன்?
– ச.சுப்பாராவ்
கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்பவர்கள் ஒரே காரணத்திற்காக சேர்ந்து வாழ்கிறார்கள். ஏதோ கட்டி வைத்துவிட்டார்கள், சேர்ந்து இருப்போம் என்பதாகத் தான் அது இருக்கும். ஆனால், கணவன் மனைவியாக இருந்து பிரிபவர்களுக்கு ஒரு கோடி காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஜோடிக்கும் அதற்கென்றே பிரத்யேகமான ஒரு பிரதான காரணம். அதைச் சுற்றி இதர துணைக் காரணங்கள். இப்படியும் நடக்குமா? என்று நம்மை வியக்க வைக்கும் காரணங்களும் அதில் இருக்கும். இதற்கெல்லாமா? என்று நம்மை நினைக்க வைக்கும் காரணமும் இருக்கும். எனினும், காரணம் எதுவானாலும், அந்த காரணம் சம்மந்தப்பட்டவர் மனதில் ஏற்படுத்தும் நிரந்தரக் காயம் தான் எல்லோருக்குமே பொதுவான காரணம்.
அப்படியான கோடியில் ஒரு காரணத்திற்காக விவாகரத்து கேட்டு அந்தப் பெண் தன் தாயாரோடு வந்து உட்கார்ந்திருக்கிறாள். அவளது தாயார் என் நண்பரோடு பணிபுரிபவர். அலுவலகம் வர சங்கடப்படுகிறார்கள் என்றார் நண்பர். வீட்டுக்கு வரச் சொன்னேன். இப்போது வீட்டின் முன்னறையில் என் வீட்டு அலுவலக மேஜைக்கு முன்பாக.
பொதுவாக, மருத்துவரிடமும், வக்கீலிடமும் எதையும் மறைக்காமல் சொல்லிவிட வேண்டும் என்பார்கள். மூன்று நாட்களாக வயிற்றுப் போக்கு, இரண்டு நாட்களாக காய்ச்சல், ஆறுமாதமாக முழங்கால் வலி போன்ற பிரச்சனைகளில் மருத்துவரிடம் மறைக்க என்ன இருக்கிறது? ஏதோ ஒரு ஃப்ளோவில் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். நடைமுறையில் வக்கீலிடம் தான் மறைப்பதற்கு நிறைய இருக்கும். மறைக்காமல் சொல்ல வேண்டும் என்றாலும், எங்கு ஆரம்பிப்பது என்ற தயக்கமும் இருக்கும்.
அவர்கள் சுவரில் மாட்டியிருந்த என் பேரனின் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சாதாரண உயரம், சாதாரண பருமன். சாதாரண நிறம், சாதாரண சுடிதார், சாதாரண கைப்பை என்று மிகவும் சாதாரணமான பெண். அம்மா அவளது அக்கா போல் இருந்தார். சிறுவயதிலேயே திருமணம் ஆகிவிட்டது போலும். நான் படத்தைக் காட்டி, “பேரன், நாலு வயசாகுது. சென்னைல இருக்காங்க,“ என்றேன். அவர்கள் புன்னகை செய்தார்கள்.
“ரமேஷ் பாபு சொன்னாரு உங்க டாட்டருக்கும், மாப்பிள்ளைக்கும் ஒத்து வரல்ல. டைவர்ஸ் பண்றது பத்தி பேசணும்னு சொன்னார். நீங்க அவர் பிராஞ்சுலதா வொர்க் பண்றீங்களா?“ என்று பனிக்கட்டியை உடைத்தேன். அம்மா , “ஆமா. ஆக்சுவலா அவரு எங்க ஹஸ்பெண்டோட ஃபிரண்ட். இவ ஸ்கூல்ல படிக்கும் போதே என் ஹஸ்பெண்ட் இறந்துட்டாரு. நா கம்பாஷனேட் அப்பாயிண்ட்மென்ட். ரமேஷ்பாபு சார் தான் அப்பலேர்ந்து ரொம்ப ஹெல்ப்,“ என்றார்.
“ நானும், ரமேஷ்பாபுவும் ஸ்கூல்ல ஒண்ணா படிச்சோம். அவன் அப்பவே பேங்க் வேலைக்கு போயிட்டான். நா உங்க பிராஞ்ச் அட்வகேட் பேனல்ல இருக்கேன். லோன் பேப்பர்ஸ் எல்லாம் ஒபீனியனுக்கு அனுப்புவாங்க. ஒரு தரம் பிராஞ்சுக்கு வந்தப்ப புது மேனேஜர் வந்திருக்காருன்னாங்க. யாருன்னு பாத்தா இவன். நா உஙகள பிராஞ்ச்ல பாத்த மாதிரி தெரியல்ல. அஃப்கோர்ஸ், நா எப்பவாவது தான் பேங்குக்கு வருவேன்.“ என்றேன். இது மாதிரி ஏதாவது பேசினால்தான் அவர்களது இறுக்கம் சற்று குறையும்.
“நா போன அக்டோபர்ல தா இந்த பிராஞ்சுக்கு வந்தேன். அதுக்கு முன்னாடி விளக்குத்தூண் பிராஞ்ச்ல இருந்தேன்,“ என்றார் அவர்.
“என்ன பிராப்ளம்னு ஃப்ரீயா சொல்லுங்க. என்ன செய்யலாம்னு பாப்போம்,“ என்றேன். அவர் ஆரம்பித்தார்.
பெரியவர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம் தான். திருமணப் படங்கள், திருமணத்திற்கு முன். திருமணத்திற்குப் பின் என்று எடுத்த படங்கள், அவர்கள் தேன்நிலவிற்கு டார்ஜ்லிங் போன படங்கள் – அவள் தேயிலை பறிக்கும் பெண்ணாக வேடமிட்டபடி, டார்ஜ்லிங்கின் பொம்மை ரயிலில், நேபாள எல்லையில் என்று நிறைய படங்கள். எல்லா படங்களிலும் அவன் கலைந்த தலையும். தாடியுமாக இருந்தான். சற்று பருமனாக உடல்வாகு. இன்றைய தலைமுறை ஏன் இப்படி இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. எனக்கு நான் ஜுனியராக இருந்த நாட்கள் நினைவிற்கு வந்தன. கிட்டத்தட்ட குருகுல வாசம்தான். சீனியர் மாமி மருத்துவமனை போக குதிரை வண்டி பிடித்துக் கொண்டு வரவேண்டும். காப்பிக் கொட்டை வாங்க இந்தியா காப்பி ஹவுஸில் வரிசையில் நிற்க வேண்டும். பால் கார்டு வாங்க மற்றொரு நாள் வரிசையில் நிற்க வேண்டும். சீனியரின் தாயாருக்கு ஹிண்டு பேப்பரை உரக்க வாசித்துக் காட்ட வேண்டும். இத்தனைக்கும் நடுவில், தினமும் முகச்சவரம் செய்து கொள்ள வேண்டும்.
வாரா வாரம் நகம் வெட்டிக் கொள்ள வேண்டும். எவ்வளவு ஒட்ட வெட்டிக் கொண்டாலும், “என்னடா, தலை காடு மாதிரி இருக்கு? நாராயணன் கடைல தானே வெட்டற? ஏன் இப்படி கடனுக்கு பண்ணி விடறான்?“என்பார் சீனியா். என் காலத்தில் சிறுவயதினர் குண்டாக இருந்தால் கூச்சப்படுவார்கள். இன்று ஐ எம் அ ஃபுட்டீ… என்று நான்கடி நீள தோசையை சாப்பிடுவதை, பெரிய ஜாடியில் இரண்டு லிட்டர் பழச்சாறு குடிப்பதை ரீல்ஸ் எடுத்துப் போடுகிறார்கள். இவனது தாடிக்கும், காடு போன்ற தலைமுடிக்குமே, பெண்ணைத் தந்திருக்கக் கூடாது ! அதையும் தலை வாராதவனுக்கு !
பெரியவர்கள் பார்த்து செய்து வைத்த கல்யாணமல்லவா? ஏகப்பட்ட செலவு. மாப்பிள்ளைப் பையன் பிறந்த போது சாக்லேட் வாங்கித் தந்த செலவு முதல் பெண் பார்க்க வந்த ஓலா செலவு வரை துல்லியமாக கணக்கிட்டு வாங்கி விட்டார்கள்.. எல்லாம் உங்கள் பெண்ணுக்குத் தானே ! மாப்பிள்ளைப் பையன் நிறைய நிபந்தனைகள் வேறு போட்டு விட்டான். அவற்றில் முக்கியமானவை மூன்று. முதலாவது, பெண் சைவ உணவிற்கு மாற வேண்டும். ஒன்றும் பிரச்சனையில்லை. இத்தனை படித்த மாப்பிள்ளை, சிறு வயதிலேயே மிக உயர்ந்த வேலையில் இருக்கும் மாப்பிள்ளை முக்கியமா? மட்டன், சிக்கன் பிரியாணி முக்கியமா? இரண்டாவது கார் டிரைவிங் கற்றுக் கொள்ள வேண்டும். மாப்பிள்ளையின் நிபந்தனை நியாயமானதுதானே.
நாளைக்கு குழந்தை பிறந்தால், அதை கராத்தே, வயலின், ஃபரீ ஸ்டைல் டான்ஸ், டிராயிங், புட்பால், ஸ்கேட்டிங், பள்ளிப் பாடத்திற்கான டியூஷன், நீட் கோச்சிங், ஐஐடி கோச்சிங், முடிந்தால் ஒரு குதிரையேற்றம் அலலது யானையேற்ற வகுப்பு என்று வரிசையாக பல்வேறு வகுப்புகளில் சேர்த்து விடும் போது, உயர் பதவியில் இருக்கும் மாப்பிள்ளையால் எப்படி இந்த வகுப்புகள் அனைத்திற்கும் குழந்தையை கொண்டு விட்டுக் கூட்டி வர முடியும்? இவள் தானே வேலையை விட்டு விட்டு, காரை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு வகுப்ப வாசலிலிலும் காத்திருக்க வேண்டும்? மூன்றாவது, இவளுக்கு பின்பாகம் சற்று பெருத்திருப்பது போல் இருக்கிறது. இப்போது நன்றாக இருந்தாலும், பிள்ளை பெற்ற பின் அசிங்கமாகி விடும். அப்போது குறைக்க நினைத்தாலும், நடைமுறையில் முடியாது. எனவே ஜும்பா டான்ஸ் வகுப்பிற்குப் போய் பின்பாகத்தைக் குறைக்க வேண்டும். இவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
மாப்பிள்ளை எதிர்காலம் பற்றி சின்ன சின்ன விஷயங்களைக் கூட யோசிப்பவராக இருக்கிறார். உலகிலேயே இளம் வயது குண்டர்கள், இளம் வயது சக்கரை நோயாளிகள் இருப்பது இந்தியாவில் தானாமே… இப்படி ஏதாவது வகுப்பில் சோ்ந்தால் தான் ட்ரிம்மாக இருக்க முடியும். ஜும்பா டான்ஸில் சேர்வதில் ஒரு பிரச்சனையும் இல்லை. பெண்ணின் தாயார் பள்ளி, கல்லூரியில் படித்த காலங்களில் வேலை இல்லாத பெண்கள் வீட்டில் டியூஷன் எடுத்தார்கள். இப்போது டியூஷன் எடுப்பது குடிசைத் தொழிலல்ல. அது கார்ப்பரேட் நிறுவனமாக நடத்தப்படுவது. நாடு முழுக்க, எல்லா தினசரி செய்தித்தாள்களிலும் அவ்வப்போது முதல் பக்கத்தில் விளம்பரம் செய்யுமளவு வசதி உள்ளவர்களால் மட்டுமே நடத்த முடிவது.
இப்போது வேலை இல்லாப் பெண்கள் எல்லோரும் தெருவுக்குத் தெரு பியூட்டி பார்லர் நடத்துகிறார்கள். ரவிக்கை தைத்து ஆரி ஒர்க் செய்கிறார்கள். பொட்டீக் என்கிறார்கள். இன்னும் வசதியான பெண்களுக்கு இந்த டான்ஸ் வகுப்பு. அவர்கள் பகுதியிலேயே நான்கைந்து டான்ஸ் வகுப்புகள் உள்ளன. அதில் சுமாரான கட்டணம் உள்ள ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள். அங்கிருந்த கலா மாஸ்டர் சோப்பைக் கரைப்பது போல் உன் பின்பக்கத்தைக் கரைத்து விடலாம் என்று செல்லமாக பின்பக்கம் தட்டினாளாம். ஒரு கல்யாணத்திற்காக எவ்வளவு மானம் கெட்டுப் போக வேண்டியதாக இருக்கிறது என்று சிங்கமுத்து குரலில் மனதில் சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் செய்திருக்கிறாள் அந்தப் பெண்.
இது போன்ற துயரக் கதைகளை சொல்ல ஆரம்பிப்பது தான் கஷ்டம். சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் எனில், இத்தனை நாட்களாக யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டுமே என்ற அடிமனதின் ஆழத்தில் இருக்கும் ஏக்கம், துக்கம் காரணமாக தங்கு தடையின்றி அவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் முகம் பார்த்து கேட்பது தான் கஷ்டம். நான் வழக்கம் போல அவர் முகத்தைப் பார்க்காது, குனிந்து அவர் சொல்வதை குறிப்புகள் எடுத்துக் கொண்டு, என் சங்கடத்தைக் குறைத்துக் கொண்டேன்.
கார் ஓட்டக் கற்றுக் கொண்டு, சைவ உணவாலும், ஜும்பா நடனத்தாலும் உடல் சற்று இளைத்த அந்தப் பெண் ஒரு சுபயோக, சுபதினத்தில் அவன் மனைவியானாள். முதலிரவிலேயே பிரச்சனை ஆரம்பித்து விட்டது. இப்போது அவன் கோரிக்கை நேர் எதிர்ப்பதமாக மாறி விட்டது. நீ ஷேப் இல்லாமல் இருக்கிறாய், உனக்கு மார்பே இல்லை என்று ஆரம்பித்து விட்டான். ஆரம்பத்தில் அவள் அவன் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏதேனும் சிரித்தபடி பதில் சொன்னாள். பிறகு பதில் சொல்லாமல் இருந்தாள். ஆனால், அவனுடன் இருக்கும் நேரங்கள் முழுவதும் அவன் அதைத் தவிர வேறெதுவும் பேசவில்லையாம்.
டீவி பார்த்தால் அதில் வரும் பெண்களோடு ஒப்பிடுவது. பத்திரிகைகளில் வரும் படங்களோடு ஒப்பிடுவது. எதிரில் வரும் பெண்களோடு ஒப்பிடுவது. அவளுக்கு எப்படி இருக்கு பாரு. உனக்கு தா ஒண்ணுமே இல்ல.. நாளுக்கு நாள் அவனது வக்கிரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அடுத்த கட்டமாக இவளோடு இருக்கும் நேரங்களில் எல்லாம் மொபைலில் பெண்களின் நிர்வாணப் படங்களைக் காட்டிக் காட்டி ஒப்பிடுவது. இவ தா பொம்பள… நீ ஆம்பள மாதிரி இருக்க… என்பது. டென்னிஸ் கோர்ட் என்பது. இருவருக்கும் பெங்களூருவில் வேலை. இந்தப் பெண் டார்ச்சர் தாங்காது ஒரு நாள் அவனுக்குத் தெரியாமல், தன் அலுவலகத்திற்குப் பக்கமாக இருக்கும் ஒரு பிஜியில் குடியேறி விட்டாள். இத்தனைக்கும் கல்யாணம் ஆகி ஆறு மாதம் தான் ஆகிறது.
தாயார்க்காரி படபடவென்று பொரிந்து தள்ளிக் கொண்டிருக்கிறாள். “இந்தப் பையன்தான் இவளுக்கு பின்னம்பக்கம் பெருசா இருக்குன்னு சொன்னான். ஜீம்பா டான்ஸ் ஆடி கொறைக்கணும்னு சொன்னான். சைவம்தான் சாப்பிடணும்னு வேற கண்டிஷன் போட்டுட்டான். அப்ப ஒடம்பு எளைக்கத்தானே சார் செய்யும் ? அப்பறம் உனக்கு மேல ஒண்ணுமே இல்லன்னா என்ன அர்த்தம்? டெய்லி அசிங்க அசிங்கமா படத்த காமிச்சு, இவளுக்கு எப்படி இருக்கு, ஒனக்கு எப்படி இருக்குன்னு பாருன்னா, எப்படி இருக்கும்? அப்படியும் இவளுக்கு ஒண்ணும் ரொம்ப மோசமா இல்ல. எங்கூடப் பொறந்த அண்ணன்ட்ட சொல்ற மாதிரி சொல்றேன். நீங்களே பாருங்க சார். எல்லா நார்மலான பிள்ளைங்களுக்கும் இருக்கற மாதிரி தானே சார் இவளுக்கும் இருக்கு?“ என்றாள் கண்களில் கண்ணீர் மின்ன.
நான் அந்தக் குழந்தையை எப்படி நிமிர்ந்து பார்ப்பேன்?
எழுதியவர்:-
– ச.சுப்பாராவ்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமை….